

ஒரு ஊரில் விஜயன் என்ற செல்வந்தர் வாழ்ந்து வந்தார் . அவர் மிகவும் கணக்குப் பார்த்து செலவு செய்பவர். யாரிடமாவது ஒரு ரூபாய் கொடுத்தால் கூட "இதற்குப் பதிலாக எனக்கு என்ன கிடைக்கும்? "என்று யோசிப்பார்.
ஒருநாள் அவர் காசிக்கு யாத்திரை சென்றார். அங்கே ஒரு பெரியவர் கையில் ஒரு பழைய தட்டுடன் அமர்ந்திருந்தார். விஜயன் அவரிடம் சென்று "ஐயா, என்னிடம் நிறைய பணம் இருக்கிறது. ஆனால் அதை யாருக்காவது கொடுத்தால் என் செல்வம் குறைந்து விடுமோ என்று பயமாக இருக்கிறது. உண்மையான தானம் என்றால் என்ன?" என்று கேட்டார்.
அந்தப் பெரியவர் சிரித்துவிட்டு விஜயனிடம் ஒரு மாம்பழத்தைக் கொடுத்து ,"இதை அருகில் இருக்கும் அந்த குடிசையில் இருப்பவர்களிடம் கொடுத்துவிட்டு வா," என்றார் .
விஜயன் அந்தக் குடிசைக்குச் சென்றார். அங்கே ஒரு தாயும் மகளும் பசியுடன் அமர்ந்திருந்தனர். விஜயன் அந்தப் பழத்தைக் கொடுத்ததும், அந்தச் சிறுமி அதைத் தன் தாய்க்கு கொடுத்தாள். தாய் அதை மீண்டும் சிறுமிக்குக் கொடுத்தார். கடைசியில் இருவரும் அதை சமமாகப் பகிர்ந்து உண்டு மகிழ்ந்தனர். அவர்கள் முகத்தில் தெரிந்த அந்தத் திருப்தி விஜயனை நெகிழச் செய்தது.
திரும்பி வந்த விஜயனிடம் பெரியவர் கேட்டார் ,"இப்போது உன் செல்வம் குறைந்ததா?"
விஜயன் சொன்னார். "இல்லை ஐயா ,என் கையில் இருந்த ஒரு பழம்தான் குறைந்தது. ஆனால் என் மனதில் ஒரு பெரிய நிறைவு வந்து விட்டது."
பெரியவர் சொன்னார், "தானம் என்பது உன்னிடம் மிச்சம் இருப்பதை எறிவது அல்ல; உன்னிடம் இருப்பதைக் கொண்டு மற்றவர் முகத்தில் புன்னகையை வரவழைப்பது. நீ கொடுக்கும்போது உன் கை காலியாகலாம். ஆனால் உன் இதயம் அன்பால் நிரம்பும். அதுவே தானம்"
அன்று முதல் விஜயன் 'என்ன கிடைக்கும் என்று யோசிப்பதைத் தவிர்த்து, யாரை மகிழ்விக்கலாம்?' என்று வாழத் தொடங்கினார்.