‘அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்’ என்பது தெய்வப் புலவரின் திருக்குறள் மீது ஒளவையார் கொடுத்த கமெண்ட். முன்னதாக இடைக்காடரோ ‘கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்’ என்றார். (Atom - அணு என்பது ஒரு பொருளின் மிகச்சிறிய அடிப்படை அலகு ஆகும்). அணு, குண்டுடன் தொடர்புபடுத்திப் பேசப்படுவதாலேயே பெயரைக் கேட்டாலே ஒரு பயம் வந்து நம்மைத் தொற்றிக் கொண்டு விடுகிறது.
ஆனால், ‘Atomic Habits’ (அணு அளவிலான பழக்கங்கள்) என்ற இந்த நூலில், “மிகச் சிறு பழக்கங்கள் கூட தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுமானால், வாழ்வில் வியத்தகு முன்னேற்றங்களை அடைந்தே தீருவோம்” என்று ஆணித்தரமாக விளக்குகிறார் இதன் ஆசிரியர் ஜேம்ஸ் க்ளியர் (James Clear). சிறு வயதில், பேஸ்பால் பேட்டால் எதிர்பாராதவிதமாக முகத்தில் தாக்கப்பட்டு, மூக்கு உடைந்து மண்டை எலும்புகளும் பாதிக்கப்பட்டு, மரணம் வரையில் சென்று திரும்பிய க்ளியர், இந்நூலால் உலகத்தோரால் அறியப்படுகிறார்.
சிறு மாற்றங்களும் பெரும் பலன்களும்!
முதலில் நல்ல பழக்கங்களை வழக்கமாக்கிக் கொள்வதுடன், அப்பழக்கங்களில் சிறு மாற்றங்களை ஏற்படுத்தித் தொடர்வதன் மூலம் வாழ்வில் பெருமாற்றங்களை அடைந்து சிறப்புப் பெற முடியும் என்பதைப் பல உதாரணங்களுடன் அவர் விளக்குகிறார். நமது விவேகானந்தரும் விடாமுயற்சியே விரும்பியதை அடையும் வழி என்றுதான் கூறுகிறார். ‘ஆயிரம் முறை தோற்றாலும் ஆயிரத்தோராவது முறையாக முயற்சி செய்யேன்’ என்பதை, ”If you failed a thousand times, why can’t you make one more attempt?” என்கிறார்.
ஜேம்ஸ், 1% கூடுதலாக ஒரு சிலவற்றைச் செய்ய ஆரம்பித்தாலே பெருமைப்படத்தக்க மாற்றங்களை அடையலாம் என்கிறார். சேமிப்பும், உடற்பயிற்சியும் வாழ்வில் முக்கியமானவை. இன்று 10% சேமிப்பு என்றால் நாளையோ, அது முடியாவிட்டால் அடுத்த மாதமோ ஒரு சதவீதம் கூட்டுங்கள். அப்படி ஒவ்வொரு மாதமும் 1% கூட்டிக்கொண்டு வந்தால் ஒரு வருடத்தில் 12% கூடி விடும் (10+12=22). அடுத்த ஆண்டில் 22% ஆகி விடும். இந்த மாதம் 5000 ஸ்டெப் தினந்தோறும் நடக்கிறீர்கள் என்றால் அடுத்த மாதம் அதை 5050 ஆக்குங்கள். அதற்கடுத்த திங்களில் 5100 என்று மெல்ல உயர்த்தலாம்.
நம்மிடம் உள்ள மிகப் பெருங்குறையே உடனடி ரிசல்டை எதிர்பார்ப்பதுதான். அவ்வாறு இல்லாமல், முக்கிய எல்லை (Critical Threshold)யைத் தாண்டும் வரை, ரிசல்டை எதிர்பார்க்காமல் தொடருங்கள் என்கிறார் அவர். இதைக் கருத்தில் கொண்டே நம் மூதாதையர், எதையும் ஒரு மண்டலம் (48 நாட்கள்) தொடர வேண்டுமென்று சொல்லிச் சென்றார்கள்.
பழக்கங்களை உருவாக்கும் 4 படிகள்!
ஒரு குறிப்பிட்ட நிகழ்வை பழக்கமாக்கிக் கொள்ள நான்கு வழிகளைக் க்ளியர் சொல்கிறார்:
குறிப்பு (Cue)
தீராத ஆசை (Craving)
பதில் / செயல்பாடு (Response)
வெகுமதி (Reward)
ஒரு சிறிய உதாரணம் மூலமும் அதனை விளக்குகிறார். செல்போன் ரிங் ஆவது குறிப்பு. அதனை எடுத்துப் பேசி விபரங்கள் அறிந்து, பதில் சொல்லி நாம் அடையும் திருப்தியே மற்ற மூன்றுமாகும்.
ஒரு நல்ல பழக்கத்தைத் தொடர் பழக்கமாக்கிக் கொள்ள அவர் காட்டும் வழிமுறைகள் இவைதான்:
தெளிவாக அறிதல் (Make it Obvious)
ஈர்ப்பும், கவர்ச்சியும் உடையதாக்கல் (Make it Attractive)
எளிதானதாக்குதல் (Make it Easy)
திருப்திகரமானதாக்குதல் (Make it Satisfying)
ஒரு பழக்கத்தை இந்த 4 ஸ்டெப்களில் அணுகும்போது, அதன் மூலம் வெற்றியை ஒருவர் சீக்கிரமே அடையலாம்.
கெட்ட பழக்கங்களை விரட்டும் வழிகள் அதே சமயம், வேண்டாத பழக்கத்தை விரைந்து விரட்டவும் வழி சொல்கிறார்:
கண்ணுக்குத் தெரியாத ஒன்றுமில்லாததாக்குதல் (Make it Invisible)
கவர்ச்சியற்றதாக்குதல் (Make it Unattractive)
கடினமானதாக்குதல் (Make it Difficult)
திருப்தி அளிக்காததாக்குதல் (Make it Unsatisfying)
இந்த இடத்தில், இவற்றைச் சாதிப்பதற்கான, அதாவது நல்ல பழக்கங்களைத் தொடர்ந்து கடைப்பிடித்து நடத்தை ஆக்கிக் கொள்ளவும், கெட்ட பழக்கங்களிலிருந்து விடுபடவும் நமக்கு உறுதுணையாக நிற்பது ‘சுய கட்டுப்பாடு’ (Self Control). தன்னம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட சுய கட்டுப்பாட்டில் நாம் உறுதியாக நின்றோமானால், பலவற்றையும் பார் புகழ சாதிக்கலாம்.
ஒரு நல்ல பழக்கத்தை அணுவளவான, அதாவது மிகச் சிறிய மாற்றங்களுடன் தொடர்ந்து செயல்படுத்தி வந்தோமானால் அதுவே தானியங்கி செயலாக மாறி விடும். அச்செயலே அகிலத்தில் நம்மை அதி உயரத்தில் கொண்டு வைத்து விடும். இந்தப் பிறவிக்கு வேறென்ன வேண்டும்!
குறைந்தபட்ச முயற்சி விதி (The Law of Least Effort)!
நம் எல்லோருக்குமே, குறைவான உழைப்பில் மிகுதியான பலனைப் பெற வேண்டுமென்ற உந்துதல் இருந்து கொண்டே இருக்கும். அதற்கு இப்பொழுது ‘ஸ்மார்ட் ஒர்க்’ என்ற பெயரும் சூட்டி விட்டோம். அதுவும் வேண்டப்படுவதுதான். அதைச் செயல்படுத்த, அதற்கான சிறந்த சூழலை உருவாக்கிக் கொள்ள வேண்டும். நல் நடத்தையுடன் தொடர்புடையவற்றில் குறுக்கீடு அல்லது வேறு உரசல் (Friction)கள் இல்லாது பார்த்துக் கொள்ளல் அவசியம்.
தள்ளிப் போடலை (Procrastination) தவிர்த்தல்!
ஒரு புதுப் பழக்கத்தை நடைமுறைப்படுத்த சுமார் 2 நிமிடங்களே ஆகும். இருந்தாலும் அதனை நாம், எந்தக் காரணமும் இன்றியே தள்ளிப் போட்டுக் கொண்டே போவோம். அதனால் நாம் இழப்பது அதிகம் என்பதை அப்போது உணர மாட்டோம். அதையே ஒரு பய பக்தியுடன் தொடருவோமேயானால் மகத்தான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம்.
எல்லாவற்றையும் எல்லா நாளும் தொடர்வது கஷ்டமே. நடுவில் சிலவற்றுக்குச் சிறு இடையூறுகள் நேரலாம். ஆனாலும் அந்த ‘கேப்பை’ நீடிக்க விடக்கூடாது. ஒரு நாள் விடுபட்டால் அடுத்த நாளே சரி செய்து தொடர வேண்டும் - ஒரு வேளை மருந்தைத் தவற விட்டவர்கள் அடுத்த வேளை மருந்தை ஞாபகமாகச் சாப்பிடுவதைப் போல. எதையும் விரும்பிச் செய்ய ஊக்கம் (Motivation) மிக முக்கியமானது. அதனால்தான் ‘ஊக்கமது கை விடேல்’ என்றார்கள்.
“வெற்றிக்கு எதிரான மிகப்பெரிய பயமுறுத்தல் தோல்வியல்ல; சலிப்பு.” (The Greatest Threat to Success is not FAILURE but BOREDOM) ஊக்கம் இருந்தால் உழைப்பில் தாமதம் ஏற்படாது.
தொழில் வல்லுனர்கள் வாழ்க்கையில் அட்டவணை போட்டு அதன்படி நடக்கிறார்கள்; சாதாரணமானவர்களையோ வாழ்க்கை இழுத்துச் செல்கிறது. (Professionals stick to the Schedule; Amateurs let life get in the way)
‘உன் வாழ்க்கை உன் கையில்’ என்ற நாலடியாரின் இலக்கும், ஜேம்ஸ் க்ளியரின் ஆலோசனைகளும் ஒத்துப் போவதாகவே தோன்றுகிறது. எது எப்படியாயினும், அணுவளவான சிறு பழக்க மாற்றத்தால் வாழ்வில் உன்னதங்களை நிகழ்த்த முடியும் என்ற இந்த நூலின் அடிப்படையைப் பின்பற்றி வாழ்வில் அனைவரும் முன்னேறுவோம்!