“உங்களைக் கொல்லப் போகிறார்கள்” என எச்சரித்தும், மேடையேறிய ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின்!

நாஜி அச்சுறுத்தல்களையும் கொலை மிரட்டல்களையும் மீறி 10,000 பேர் முன்பு பேசிய ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் உத்வேகம் தரும் தைரிய வரலாறு.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் | Albert Einstein
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் | Albert EinsteinImage credit: Gemini AI
முனைவர். த. சரவணக்குமார்

முனைவர் த.சரவணக்குமார், மதுரை தியாகராசர் கல்லூரியில் இயற்பியல் உதவிப் பேராசிரியர். நானோகிரிஸ்டல் ஆய்வில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர்; Q1 தரவரிசை இதழில் ஆய்வுக் கட்டுரை வெளியிட்டுள்ளார். அறிவியலை எளிமையாக விளக்குவதோடு, கவிஞர், பாடலாசிரியர், நாட்டுப்புறப் பாடகராகவும் இயங்குகிறார்.

Updated on: 
Kalki Strip
Kalki Strip

வாழ்வில் ஒரு சிறிய சவால் வந்தாலே நாம் மனம் தளர்ந்துவிடுகிறோம். ஆனால், உயிரனுக்கே ஆபத்து வந்தபோதும், நாஜி மிரட்டல்களையும் கொலை மிரட்டல்களையும் எதிர்கொண்டு, 10,000 பேர் முன்னிலையில் கம்பீரமாக உரை நிகழ்த்தினார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்! பயத்தை விட தான் நம்பிய கொள்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, உலகிற்கு இணையற்ற தைரியத்தைக் கற்றுக்கொடுத்த இந்த மாமேதையின் வியக்க வைக்கும் வரலாறு இதோ!

உயிருக்கே ஆபத்து வந்தபோதும், தான் நம்பிய அறிவுச் சுதந்திரம், தனிமனிதச் சுதந்திரம், சகிப்புத்தன்மை மற்றும் நீதியைப் பாதுகாக்க வேண்டும் என்ற கருத்துக்கு பின்வாங்காமல் நின்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்; தன்னம்பிக்கையுடன் வாழ நினைக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு பெரிய பாடம்!

அன்று லண்டனில் ஒரு முக்கியமான நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

உலகம் முழுவதும் புகழ்பெற்ற ஒரு விஞ்ஞானி அந்த நிகழ்ச்சியில் பேச இருந்தார்.

அவருடைய பெயர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

நம்மில் பலர் வாழ்க்கையில் ஒரு சிறிய பிரச்சினை வந்தாலே மனம் தளர்ந்து விடுகிறோம்.

“என்னால் முடியுமா?”, “மற்றவர்கள் என்ன சொல்வார்கள்?”, “தோல்வி வந்துவிட்டால் என்ன செய்வது?” என்ற எண்ணங்கள் நம்மைத் தடுத்து நிறுத்துகின்றன.

ஆனால் வாழ்க்கையில் சில மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு முன்னால் பிரச்சினைகள் மலைபோல் நின்றாலும், அவர்கள் முன் எடுத்து வைத்த காலை பின்வைக்கவே மாட்டார்கள். அதுதான் வைராக்கியம். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

1879-ம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்த ஐன்ஸ்டீன், 1905-ம் ஆண்டு வெளியிட்ட ஆய்வுகளால் இயற்பியலையே புதிய பாதையில் அழைத்துச் சென்றார். சார்பியல் கோட்பாடு உள்ளிட்ட அவரது பணிகள் உலக அறிவியலின் பார்வையை மாற்றின. ஒளிமின் விளைவு குறித்த ஆய்வுக்காக 1921-ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது; அந்தப் பரிசை அவர் 1922-ம் ஆண்டு பெற்றார்.

ஆனால் ஒரு கட்டத்தில், அவரது அறிவைவிட அவரது அடையாளமே அவருக்கு ஆபத்தாக மாறியது. ஹிட்லரின் நாஜி ஆட்சி அதிகாரத்திற்கு வந்தபோது, யூதரான ஐன்ஸ்டீன் கடுமையான எதிர்ப்பையும் அச்சுறுத்தல்களையும் சந்தித்தார். அவரது குடும்பத்தினரின் குடியிருப்பு சோதனையிடப்பட்டது; அவரது சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அவர் ஜெர்மனிக்குத் திரும்பாமல் வெளியேறினார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், 1933-ம் ஆண்டு லண்டனில் உள்ள ராயல் ஆல்பர்ட் அரங்கில் ஐன்ஸ்டீன் உரையாற்றவிருந்தார்.

அப்போது ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு ஒரு பெயரில்லாத தகவல் வந்தது.

“ஐன்ஸ்டீனைக் கொலை செய்ய சதி நடக்கிறது!”

அந்தத் தகவலைக் காவல்துறை அலட்சியப்படுத்தவில்லை. உடனடியாக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. நிகழ்ச்சி தொடங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே, ராயல் ஆல்பர்ட் அரங்கைச் சுற்றியுள்ள சாலைகளில் நூற்றுக்கணக்கான காவலர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.

இப்போது ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்.

உங்களுக்கு ஒரு கொலை மிரட்டல் வந்தால், அடுத்ததாக நீங்கள் என்ன செய்வீர்கள்?

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் | Albert Einstein
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் | Albert EinsteinGemini AI Image

“நிகழ்ச்சியை ரத்து செய்து விடுங்கள்” என்று சொல்வீர்களா?

“எனக்கு உயிர்தான் முக்கியம்” என்று வீட்டிற்குள் சென்று கதவைப் பூட்டிக் கொள்வீர்களா?

அல்லது, “இப்போது இந்த இடத்திற்குச் செல்ல வேண்டாம்” என்று பின்வாங்கி விடுவீர்களா?

ஆனால் ஐன்ஸ்டீன் அங்கே சென்றார்.

அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

10,000-க்கும் மேற்பட்ட மக்கள் முன்னிலையில் பேசினார்.

அதற்குப் பின்னால் இருந்தது வெறும் துணிச்சல் மட்டுமல்ல.

தான் நம்பிய கருத்துகளின் மீது அவருக்கு இருந்த அசைக்க முடியாத நம்பிக்கை.

அவர் பயத்தைவிட தனது கருத்துக்கு அதிக மதிப்பு கொடுத்தார்.

தைரியம் என்றால் பயமே இல்லாமல் இருப்பது அல்ல. பயம் இருந்தாலும், செய்ய வேண்டியதைச் செய்வதுதான் உண்மையான தைரியம்.

நம்முடைய வாழ்க்கையிலும் இதேதான்.

ஒரு மாணவனிடம் “உன்னால் இந்தத் போட்டித் தேர்வில் வெற்றி பெற முடியாது மிகவும் கடினம்” என்று சிலர் சொல்லலாம்.

ஒரு இளைஞனிடம் “இந்த வேலை உனக்குக் கிடைக்காது” என்று சொல்லலாம்.

ஒரு பெண்ணிடம் “நீ தனியாக இதைச் சாதிக்க முடியாது” என்று சொல்லலாம்.

ஒரு ஆசிரியரிடம் “உங்கள் முயற்சியால் என்ன பெரிய மாற்றம் வந்துவிடப் போகிறது?” என்று கேலி செய்யலாம்.

இதையும் படியுங்கள்:
லாட்டரி அன்று முதல் இன்று வரை சுவாரஸ்யமான தகவல்கள்...!
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் | Albert Einstein

அப்போது நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது ஒன்றுதான்.

மற்றவர்கள் நம்முடைய எதிர்காலத்தை முடிவு செய்ய முடியாது.

இன்று நம்மைப் பார்த்து சிரிப்பவர்கள் நாளை நம்முடைய வெற்றியைப் பார்த்து வியக்கலாம்.

ஆனால் அதற்காக முதலில் நாம் நம்மை நாமே நம்ப வேண்டும்.

ஐன்ஸ்டீனின் வாழ்க்கை நமக்குச் சொல்வது அறிவியலைப் பற்றிய பாடம் மட்டும் அல்ல.

சூழ்நிலை உன்னைப் பயமுறுத்தலாம்.

மற்றவர்கள் உன்னைத் தடுக்கலாம்.

உலகமே உனக்கு எதிராக நிற்கலாம்.

ஆனால் நீ நம்பும் நல்ல பாதையில் தொடர்ந்து நடக்கத் துணிந்தால், உன் வாழ்க்கையும் ஒருநாள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக மாறும்.

இதையும் படியுங்கள்:
ஓட்டுநர் உரிமம் இருக்கா? இந்த 15 இலக்க எண் எதை குறிக்குது தெரியுமா?
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் | Albert Einstein

அதிமானாக இருப்பதை விட மதிமானாக இருப்பதை விட உத்தமனாக இருந்து எதற்கும் துணிந்து இந்த உலகம் என்னும் மேடையில் இயங்கிக்கொண்டே இருக்கவேண்டும்..

வெற்றி பெறுவதற்கு முதலில் உலகத்தின் நம்பிக்கை தேவையில்லை.

நம்மீது நமக்குள்ள நம்பிக்கையே போதும்!

இதுதான் ஐன்ஸ்டீனின் வாழ்க்கை நமக்குக் கற்றுக் கொடுக்கும் மிகப்பெரிய பாடம்.

வாசிப்பவர்கள் தங்களின் நிஜ வாழ்க்கைச் சவால்கள் மற்றும் தடைகளைத் தாண்டி, எத்தகைய அச்ச நிலையிலும் அசைக்க முடியாத தன்னம்பிக்கையுடன் தங்கள் லட்சியத்தை நோக்கி உறுதியாக முன்னேறும் மன உறுதியைப் பெறுவார்கள்.