அனுமனுக்கு வில்லேந்தி காட்சியளித்த நரசிம்மர்! அகோபிலம் கரஞ்ச நரசிம்மரின் அபூர்வ ரகசியம்

ஆஞ்சநேயருக்கு ஸ்ரீ ராமனாகக் காட்சி தந்த கரஞ்ச நரசிம்மரின் அற்புத மகிமைகள் மற்றும் தரிசன பலன்கள்!
கரஞ்ச நரசிம்மர் - Karanja Narasimha
கரஞ்ச நரசிம்மர் - Karanja Narasimha
Updated on

ந்திர மாநில அகோபிலத்தில் உள்ள கரஞ்ச நரசிம்மர், ஆஞ்சநேயருக்கு ஸ்ரீ ராமரின் ரூபத்தில் வில்லேந்தியபடி அருள்காட்சி தந்த தலமாக விளங்குகிறது. ஆதிசேஷன் குடைபிடிக்க, சதுர்புஜராக சக்கரம், வில், தியான முத்திரையுடன், நெற்றியில் மூன்றாவது கண்ணுடன் காட்சி தரும் இவ்வரைக் தரிசிப்பதால் எதிரி தொல்லைகள் நீங்கி, கல்வி செல்வம், மன அமைதி கிடைக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர்.

ஆஞ்சநேயருக்கு ஸ்ரீ ராமரின் ரூபத்தில் கையில் வில்லேந்தியபடி காட்சி தந்தவர் கரஞ்ச நரசிம்மர். இந்த அதிசயக் காட்சி அகோபிலம் திருத்தலத்தில் உள்ள நவகிரக நரசிம்மர் கோயில்களில் ஒன்றாக அமைந்திருக்கிறது. இங்குள்ள நரசிம்மர் சாந்த சொரூபியாக, ஆதிசேஷன் குடைபிடிக்க காட்சி தருகிறார். கரங்கள் நான்குடன் ஒரு கையில் சக்கரமும் மற்றொரு கையில் வில்லும் கொண்டு காட்சி தருகிறார்.

அஞ்சனை மைந்தன் ஸ்ரீ ராமபிரானை தியானித்துக் கொண்டிருந்த பொழுது நரசிம்மர் ராமபிரானைப் போலவே வில்லுடன் தோன்றி அவருக்கு அருள்பாலித்த இடம் இது என்று கூறப்படுகிறது. இங்குள்ள தலவிருட்சமான கருங்காலி மரத்தடியில் (கரஞ்ச மரம்) நரசிம்மர் அனுமனுக்கு காட்சியளித்ததால் இவருக்கு ஸ்ரீ கரஞ்ச நரசிம்மர் என்ற திருநாமம் நிலைபெற்றது.

இத்திருத்தலத்து இறைவனை தரிசிப்பது எதிரிகள் தொல்லைகளைப் போக்கி, மன அமைதியைத்தரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும்.

ஆஞ்சநேயர் எப்போதும் தன்னை ராமரின் சேவகனாகவே முன்நிறுத்திக் கொண்டவர். ராமாவதாரம் முடிந்து போன நிலையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள அகோபிலம் திருத்தலத்தில் கரஞ்ச மரத்தடியில் (கருங்காலி மரம்) அமர்ந்து ராம நாமத்தை ஜெபித்துக் கொண்டிருந்தார். அப்போது நரசிம்மர் வலது கையில் சக்கரமும், இடது கையில் வில்லும் கொண்டு ஆதிசேஷன் படமெடுத்து குடை பிடிக்க அனுமனுக்கு காட்சி தந்தார்.

இதைக்கண்டு திகைத்த அஞ்சநேயர் "நீர் எம் இறைவன் ராமர் போலத் தோற்றமளிக்க முயற்சித்தாலும் நீர் ராமர் அல்ல என்று கூற உடனே ராமனாக வில்லேந்திய அழகிய கோலத்தில் நரசிம்மர் அனுமனுக்குக் காட்சி தந்தார். அனுமன் இந்தக் காட்சியில் மனம் மகிழ்ந்தார்.

கரஞ்ச நரசிம்மர் - Karanja Narasimha
கரஞ்ச நரசிம்மர் - Karanja Narasimha

ஆதிசேஷன் குடை பிடிக்க பத்மாசனத்தில் அமர்ந்து உள்ளார் கரஞ்ச நரசிம்மர். இவர் சதுர்புஜங்கள் கொண்டு வலது மேல் கரத்தில் சக்கரம், இடது கரத்தில் வில், கீழ் வலது கரத்தில் தியான முத்திரை ஆகியவற்றைக் கொண்டு காட்சி தருகிறார்.

மூன்றாவது கண் (த்ரி நேத்திரம்) கொண்டிருப்பது இவரது தனி சிறப்பு. இந்த மூன்றாவது கண்ணான நெற்றிக்கண் மூலம் தன்னை மட்டுமல்லாமல் நவ நரசிம்மர்களையும் தன்னுடைய நெற்றிக்கண் திரை மூலமாகவே ஆஞ்சநேயருக்குக் காட்டி அவரை மகிழ்வித்திருக்கிறார். ஞான மூர்த்தியான இவரை தரிசித்தால் கல்வி செல்வம் பெறலாம். மேல் அகோபிலத்தில் உள்ள நரசிம்மர்கள் ஆலயங்களில் கரஞ்ச நரசிம்மர் கோவில் தான் முதலாவதாகவும் எளிதாகவும் தரிசிக்க கூடியது.

அகோபில க்ஷேத்திரம் நரசிம்ம அவதாரம் நிகழ்ந்த தலமாகும். இங்கு பிரகலாதனுக்கு காட்சி கொடுத்ததால் மூலவர் பிரகலாத வரதன் எனப்படுகிறார். மலைக்கோயிலில் பிரகலாதனுக்காக நரசிம்மர் வெளிப்பட்ட "உக்ர ஸ்தம்பம்" உள்ளது. 'அகோ' என்றால் 'சிங்க', 'பிலம்' என்றால் 'குகை'. அகோபிலம் எனும் திவ்ய தேசத்தில் நரசிம்மர், அகோ பலம் என சிறப்பித்து சொல்லும் விதத்தில் அழகாக சேவை சாதிக்கிறார்.

இதையும் படியுங்கள்:
தமிழ்நாட்டின் 'தட்சிண அகோபிலம்' ஆவணியாபுரம் நரசிம்மர் கோவில் அதிசய ரகசியங்கள்!
கரஞ்ச நரசிம்மர் - Karanja Narasimha

இரண்யனை சம்ஹாரம் செய்தபோது, நரசிம்மரைப் பணிந்து நின்ற தேவர்கள் அனைவரும் 'அகோ பலம்' அதாவது ஆச்சரியம் மிக்க பலம் கொண்டவர் என்று சொல்லி வணங்கினார்கள். திருமங்கை ஆழ்வார் 10 பாசுரங்களால் இத்திருத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளார்.

கீழ் அகோபிலத்தில் லக்ஷ்மி நரசிம்மராக அருள் புரியும் பிரகலாத வரதர், ஆதிசேஷன் குடைபிடிக்க, சங்கு சக்கரதாரியாக தேவியை இடக்கரத்தால் அணைத்தபடி காட்சி தருகிறார். திருப்பதி வெங்கடேசப் பெருமாள் திருமணத்திற்கு முன்பு இங்கு வந்து வழிபட்டு ஆசி பெற்று சென்றதாக ஐதீகம். அவருக்கும் இங்கு தனிச் சன்னதி உள்ளது. மேல் அகோபிலத்தில் மலைச்சாரல்களில் ஒன்பது நரசிம்மர்கள் அருள்புரிகின்றனர்.

ஜ்வாலா நரசிம்மர், அகோபில உக்ர நரசிம்மர், மாலோல நரசிம்மர், க்ரோட நரசிம்மர், கரஞ்ச நரசிம்மர், பார்கவ நரசிம்மர், யோக நரசிம்மர், சத்ரவட நரசிம்மர், பாவன நரசிம்மர் ஆகிய 9 நரசிம்ம மூர்த்திகளை தரிசிக்கலாம். இவர்களில் வாயு மைந்தனுக்கு காட்சித் தந்தவர்தான் கரஞ்ச நரசிம்மர்.

இதையும் படியுங்கள்:
இரணியனை வதம் செய்த அந்தத் தூண் இப்போதும் இருக்கிறதா? அஹோபிலம் சொல்லும் வரலாறு!
கரஞ்ச நரசிம்மர் - Karanja Narasimha

எப்படி செல்வது?

சென்னையில் இருந்து கடப்பாவுக்கு ரயில் அல்லது பேருந்து மூலம் செல்லலாம். அங்கிருந்து அல்லகட்டா என்னும் ஊர் வழியாக அகோபிலத்துக்கு பேருந்தில் பயணம் செல்லலாம். பேருந்தோ அல்லது தனியார் வாகனமோ எதுவாக இருந்தாலும் மேல் அகோபிலத்தின் குறிப்பிட்ட பகுதி வரை மட்டுமே செல்ல முடியும். அதன் பிறகு நடைப்பயணம்தான்.

இக்கட்டுரையை வாசிப்பதன் மூலம் அகோபில திவ்ய தேசத்தின் முதல் தலமான கரஞ்ச நரசிம்மரின் முழுமையான வரலாற்றுப் பின்னணியை உணர்ந்து, எதிரி பயம் நீங்கி, கல்வியிலும் வாழ்விலும் சிறந்த ஞானத்தையும் மன அமைதியையும் பெறுவதற்கான வழிபாட்டு முறைகளைத் துல்லியமாக அறிந்துகொள்வீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com