மன்னர்கள் செல்ல பயப்படும் புத்தநீல்கண்டா கோவில்: நீரில் மிதக்கும் விஷ்ணு சிலையின் மர்மம்!

நேபாள மன்னர்களை நடுங்க வைத்த சாபம் என்ன? புத்த நீல்கண்டா கோவிலின் ஆச்சரியமூட்டும் ரகசியங்கள் இதோ!
புத்த நீல்கண்டா கோவில் - Floating Vishnu Statue
புத்த நீல்கண்டா கோவில் - Floating Vishnu Statue
கே.எஸ்.கிருஷ்ணவேனி

"கே.எஸ்.கிருஷ்ணவேனி, வைஷ்ணவ் கல்லூரியின் முன்னாள் மாணவி. கல்கி, மங்கையர் மலர், விகடன் போன்ற இதழ்கள் மற்றும் நாவல்களை படித்து, எழுதும் ஆர்வமும் மேலோங்க, 1992-ல், சமையல் குறிப்புகள் குறித்த சிறு கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். அவை 'மங்கையர் மலர்' ​​இதழில் தொடர்ந்து வெளியாகின. மேலும் பல இதழ்களில் எழுதிப் பல பரிசுகளை வென்றுள்ளார். 'பட்டிமன்றங்களில்' பங்கேற்ற அனுபவமும் உண்டு. தற்போது கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார். ஆர்வம் மிக்கவர். பல்வேறு பிரிவுகளில் பல தலைப்புகளில் சுவாரஸ்யமான கட்டுரைகளை எழுத வல்லவர். மிக விரைவாக எழுதவும் கூடியவர்."

Updated on: 

நேபாளத்தின் காட்மாண்டு நகரில் உள்ள புத்த நீலகண்டா (Budha nilkantha Temple) கோவில் மன்னர்கள் செல்ல பயப்படும், நீரில் மிதக்கும் மகாவிஷ்ணு சிலை அமைந்துள்ள விசித்திரமான கோவில் இது. சுமார் 1300 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான வரலாற்று சிறப்புமிக்க இக்கோவில் இன்றும் சில மர்மங்களையும் ஆச்சரியங்களையும் உள்ளடக்கியுள்ளது.

பெருமாளை நின்ற கோலத்தில், கிடந்த கோலத்தில், அமர்ந்த கோலத்தில், ஏன் சயன கோலத்தில் கூட பல இடங்களில் தரிசித்திருப்போம். ஆனால் வெட்ட வெளியில், நீரில் மிதந்தபடி ஆதிசேஷன் மீது சயனத்திருக்கும் கோலத்தை தரிசித்து இருக்க மாட்டோம்.

அப்படிப்பட்ட பெருமாளை தரிசிக்க வேண்டும் என்றால் நேபாளத்தில் உள்ள புத்தநீல்கண்டா மகாவிஷ்ணு கோவிலுக்கு செல்லவேண்டும். பசால்ட் வகையைச் சேர்ந்த கல்லால் உருவாக்கப்பட்ட இந்த சிலை பல நூற்றாண்டுகளாக இயற்கை மாற்றங்களையும் காலத்தின் சோதனைகளையும் கடந்து இன்று வரை அற்புதமாக காட்சியளிக்கிறது.

அனந்தசயன கோலத்தில் காணப்படும் மகாவிஷ்ணுவின் நான்கு கரங்களிலும் சங்கு, சக்கரம், கதாயுதம் போன்றவற்றை ஏந்தி காணப்படுகிறார். இவரை இந்துக்கள் மட்டுமல்லாமல் பௌத்தர்களும் புனிதத்தலமாக எண்ணி வணங்குகின்றனர். நேபாளத்தின் காட்மாண்டு அருகே சிவபுரி மலை அடிவாரத்தில் உள்ள புத்தானிகந்தா (புத்தாநீல்கண்டா) கோவிலில் உள்ள மகாவிஷ்ணு சிலை நீரில் மிதப்பது போன்ற தோற்றத்தில் அமைந்துள்ளது. நேபாள மன்னர்கள் இக்கோவிலுக்குச் செல்ல தயங்கியதாக கூறப்படும் நம்பிக்கை இதனை மேலும் விசித்திரமானதாக மாற்றுகிறது.

இதையும் படியுங்கள்:
குலதெய்வமும் இஷ்டதெய்வமும் ஒன்றா? குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி!
புத்த நீல்கண்டா கோவில் - Floating Vishnu Statue

புத்த நீல்கண்டா கோவில் சிறப்புகள்:

ஒரே கருங்கல்லில் வடிக்கப்பட்ட சுமார் 5 மீட்டர் (14 அடி) நீளம் உள்ள பிரம்மாண்ட மகாவிஷ்ணு சிலை ஆதிசேஷன் மீது பள்ளி கொண்ட கோலத்தில் நீர்நிலையில் அமைந்துள்ளது. சிலை நீரில் மிதப்பது போன்று தோற்றமளித்தாலும் அது நீருக்கடியில் உள்ள பீடத்தின் மீது தாங்கப்பட்டுள்ளது.

சிலையானது, ஆதிசேஷன் தன் உடம்பை முறுக்கி வளைத்திருப்பது போலவும், ஆதிசேஷனின் பல நாகத் தலைகள் விஷ்ணுவுக்கு குடையாக விரிந்திருப்பது போலவும், பகவான் விஷ்ணு தன்னுடைய ஒரு காலை மற்றொரு கால்மேல் போட்டு படுத்துக்கொண்டு ஓய்வெடுப்பது போலவும் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இது சுமார் 7ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாகக் கூறப்படுகிறது. குளத்தின் நடுவே அமைந்துள்ள இந்த சிலை தண்ணீரில் மிதப்பது போன்ற மாயத் தோற்றத்தைத் தருகிறது. இக்குளத்தின் நீர் கோசைகுண்டா ஏரியுடன் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது. இச்சிலை ஏழாம் நூற்றாண்டில் இந்தப் பகுதியை ஆண்ட விஷ்ணு குப்தா என்ற மன்னனால் நிறுவப்பட்டது.

புத்த நீல்கண்டா கோவில் - Floating Vishnu Statue
புத்த நீல்கண்டா கோவில் - Floating Vishnu Statue

சிலையின் பெயரில் 'புத்த' என்ற சொல் இருந்தாலும், இது கௌதம புத்தரைக் குறிக்கவில்லை. "பழைய நீலகண்டன்" என்ற பொருளிலேயே புத்தநீலகண்டா என்று அழைக்கப் படுகிறது. தினமும் இவருக்கு அர்ச்சனைகளும் அபிஷேகங்களும் நடந்த வண்ணம் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசியில் வரும் ஹரிபோதினி ஏகாதசி இங்கு மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து இவரை தரிசிக்கின்றனர். இந்நாளில் விஷ்ணு பகவான் யோக நித்திரையில் இருந்து விழித்து கொண்டு உலக நலனுக்காக அருள்புரிவதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
திருப்பதி ஏழுமலையான் கண்கள் ஏன் மூடப்பட்டிருக்கிறது? வியாழன், வெள்ளியின் ரகசிய அலங்காரங்கள்!
புத்த நீல்கண்டா கோவில் - Floating Vishnu Statue

மன்னர்கள் செல்ல பயப்படுவதன் காரணம்:

17ஆம் நூற்றாண்டில் ஆண்ட மன்னர் பிரதாப் மல்லாவுக்குக் (King Pratap Malla) கண்ட கனவு அல்லது முன்னறிவிப்பு காரணமாக, நேபாள மன்னர்கள் இக்கோவிலுக்குச் சென்றால் மரணம் அல்லது துன்பம் நேரும் என்ற நம்பிக்கை உருவானது. நேபாள மரபின்படி, நாட்டை ஆளும் மன்னர்கள் மகாவிஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்பட்டனர்.

ஒரே இடத்தில் இரண்டு விஷ்ணுக்கள் (மன்னரும், சிலையும்) நேருக்கு நேர் சந்திக்கக் கூடாது என்ற நம்பிக்கையே இந்தப் பயத்திற்கு காரணமாக அமைந்தது. இக்கோவிலுக்கு செல்ல முடியாததால் மன்னர் பிரதாப் மல்லா தனது அரண்மனைக்கு அருகில் உள்ள பாலாஜு (Balaju) பூங்காவில் இதே போன்ற ஒரு மாதிரிச் சிலையை நிறுவி வழிபட்டார்.

அன்று முதல் நேபாள மன்னர்கள் எவரும் இந்த மூலவர் கோயிலுக்குள் நுழைவதில்லை. மாற்று ஏற்பாடாக அமைக்கப்பட்ட பாலாஜு பகுதியில் உள்ள ஒத்த சிலையில் வழிபாடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. நேபாளம் இந்து மன்னர் ஆட்சியின் கீழ் இருந்தவரை ஒரு இந்து மன்னர் கூட இந்தக் கோவிலுக்குச் சென்றதில்லை என்று கூறப்படுகிறது.

தரிசன நேரம்:

அதிகாலை ஆரத்தி வழிபாட்டைக் காணவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் காலை வேளையில் செல்வது சிறப்பு.

எங்குள்ளது?

நேபாள நாட்டின் தலைநகர் காட்மண்டுவிலிருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்திய மக்கள் நேபாளம் செல்வதற்கு விசா தேவையில்லை. செல்லுபடியாகும் பாஸ்போர்ட் அல்லது வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தால் போதுமானது.

இதையும் படியுங்கள்:
குடுமியான்மலை இசைக் கல்வெட்டு: 1300 ஆண்டு பழமையான பல்லவர் கால இசை அதிசயம்!
புத்த நீல்கண்டா கோவில் - Floating Vishnu Statue