
இந்திய புராணங்கள் அழியாப் புகழ் பெற்றவர்களாக சிலரைக் குறிப்பிடுகிறது. இவர்கள், ‘சிரஞ்சீவிகள் அதாவது நீண்ட காலம் வாழ்பவர்களாகக் கருதப்படுகிறார்கள். இவர்கள் இந்தக் கலியுகத்தின் இறுதி வரை பூமியில் நிலைத்திருப்பதாக நம்பப்படுகிறது. அவர்களைக் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
அஸ்வத்தாமா: மகாபாரதத்தின் அழியாத சிறந்த போர் வீரன் என்று அறியப்படும் அஸ்வத்தாமா, துரோணரின் மகன். இவர் அவருடைய வீரத்திற்கும், அவரை அலைந்து திரிய வைக்கும் சாபத்திற்கும் பெயர் பெற்றவர். பரத்வாஜ முனிவரின் பேரன் இவர். கிருபாசாரியாருடைய தங்கை கிருபிதான் இவருடைய தாய். அஸ்வத்தாமா என்றால் குதிரையின் குரல். பிறந்தபோது இக்குழந்தை குதிரையின் குரலில் அழுததால் இப்பெயர் உண்டானது. மகாபாரதப் போரின் முடிவில் அஸ்வத்தாமா பாண்டவர்களைப் பழிவாங்க நினைத்து பிரம்மாஸ்திரத்தை பயன்படுத்தினார். இதனால் பல உயிர்கள் பலியாயின. இதைக்கண்ட கிருஷ்ணர் அஸ்வத்தாமாவுக்கு சாபம் கொடுத்து, என்றும் சிரஞ்சீவியாக இருக்கச் செய்ய, அதன்படி இன்றும் பூமியில் நிம்மதியின்றி அலைந்து கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.
வேத வியாசர்: பராசரர் - மச்சகந்தி என்று அழைக்கப்படும் சத்யவதி ஆகியோருக்கு கங்கை ஆற்றில் அமைந்த தீவுத்திட்டில் கருத்த மேனியுடன் பிறந்ததால், ‘கிருஷ்ண த்வைபாயனர்’ என்று பெயர் பெற்றவர். வேதங்களையும் உபநிடதங்களையும் பல சாகைகளாகப் பிரித்து அவற்றைத் தொகுத்து வழங்கியதால் இவர் வேத வியாசர் என்று அழைக்கப்படுகிறார். இந்து மதத்தின் முக்கிய நூல்களில் ஒன்றான மகாபாரதம் என்ற புகழ் பெற்ற இதிகாசத்தை எழுதிய மாமுனிவர். சிறந்த ஞானம் மற்றும் அறிவு ஆகியவற்றுடன் தொடர்புடைய மிகச்சிறந்த முனிவர் என்று போற்றப்படுபவர். சிறந்த ஆன்மிக குருவாகக் கருதப்படும் இவர், மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று போற்றப்படுகிறார். இந்து மதத்தின் முக்கிய அம்சங்களை விளக்கும் பதினெண் புராணங்களை எழுதியவர்.
விபீஷணன்: விபீஷணன், ராமாயண காவியத்தில் வரும் ஒரு முக்கியமான கதாபாத்திரமாகும். ராவணனின் சகோதரனான விபீஷணன் நீதிக்கு பெயர் பெற்றவர். ஸ்ரீராமரின் மீது பக்தி கொண்டவர். ராவணனை எதிர்த்து நியாயத்தின் பக்கம், அதாவது ராமனின் பக்கம் நின்றவர். விபீஷணனின் மனைவி சரமை. இவர்களது மகள் திரிசடை, சீதை அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த பொழுது சீதைக்கு ஆறுதலாக இருந்தவள்.
நீதி, நியாயத்தின்படி வாழும் விபீஷணன், சீதையை அசுரன் ராவணன் கடத்திய பொழுது அவளை விட்டுவிடுமாறு எவ்வளவோ எடுத்துக் கூறியும் அதை ஏற்றுக்கொள்ள மறுத்ததால் ஸ்ரீராமனிடம் அடைக்கலம் புகுந்து அவருக்கு உதவினார். ராவணனுக்கு எதிராக நடந்த போரில் ராவணன், கும்பகர்ணன் போன்ற அனைவரும் இறந்ததும் விபீஷணனை இலங்கையின் அரசனாக ஸ்ரீராமர் முடிசூட்டினார். அரக்கர் குலத்தை சேர்ந்தவரானாலும் சிறந்த நீதிமானாகவும், தர்ம சிந்தனை உடையவராகவும் விளங்கிய விபீஷணன் சிரஞ்சீவியாகப் போற்றப்படுகிறார்.
மகாபலி சக்கரவர்த்தி: அஷ்ட சிரஞ்சீவிகளில் ஒருவராகப் போற்றப்படும் மகாபலி சக்கரவர்த்தி அசுர குலத்தைச் சேர்ந்தவர். பிரகலாதனின் பேரனும், விரோசனனின் மகனுமான இவர் சிறந்த கொடை வள்ளலாகத் திகழ்ந்தவர். கேரளாவில் புகழ் பெற்ற ஓணம் பண்டிகையின் மூலம் அவர் இன்றும் கொண்டாடப்படுகிறார். ஓணத்தின் பொழுது தனது மக்களை சந்திக்க வரும் இவர், மகாவிஷ்ணுவிடம் சிறந்த பக்தி கொண்டவர்.
மகாபலி தன்னுடைய வெற்றிகளைக் கொண்டாட அஸ்வமேத யாகம் செய்து கொண்டிருந்தபொழுது வாமனர் அவரை அணுகி மூன்றடி மண் கேட்க, வாமனரின் உண்மையான சொரூபத்தை உணர்ந்த சுக்கிராச்சாரியாரின் எச்சரிக்கையையும் மீறி, மகாபலி மூன்றடி மண் தருவதாக ஒப்புக்கொள்ள, முதல் அடியால் விண்ணுலகத்தையும், இரண்டாவது அடியால் மண்ணுலகத்தையும் அளந்த வாமனன், அடுத்த அடியை எங்கு வைக்க வேண்டும் என்று கேட்டபொழுது, அவரை மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று உணர்ந்த மகாபலி, தனது தலையை அவருக்குக் கொடுத்து பாதாளத்திற்கு சென்றார். வாமன அவதாரத்தின்போது மகாவிஷ்ணு அவரிடம் வரம் கேட்கச் சொன்னபொழுது, ஒவ்வொரு ஆண்டும் தனது மக்களை பார்க்க வர வேண்டும் என்று கேட்க, அதன்படி கேரளாவில் ஓணம் பண்டிகையின் பொழுது மகாபலி சக்கரவர்த்தி தனது மக்களைப் பார்க்க வருவதாக ஐதீகம்.
பரசுராமர்: மகாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமர், ஒரு சிறந்த போர் வீரர் மற்றும் பிராமணர். இவர் தன்னுடைய ஆயுதத் திறமைக்கும், தர்மத்தை மீட்டெடுப்பதில் சிறந்த பங்கும் பெற்றவர். இவர் ஜமதக்னி - ரேணுகா தம்பதியரின் மகனாவார். பரசு என்றால் கோடரி என்று பொருள். இவர் கடும் தவம் புரிந்து சிவபெருமானிடமிருந்து கோடரியைப் பெற்றவர். தன்னுடைய தந்தை ஜமதக்னி முனிவர் வளர்த்த தேவலோகப் பசுவை கவர்ந்து சென்ற கார்த்தவீர்யார்ஜுனனைக் கொன்றவர். பீஷ்மர், துரோணர் மற்றும் கர்ணன் போன்றவர்கள் இவரது சீடர்களில் புகழ் பெற்றவர்கள்.
பரசுராமரின் தாய் ரேணுகா தேவியின் மனதில் ஏற்பட்ட சிறு சஞ்சலத்தை தன்னுடைய தவ வலிமையால் அறிந்த ஜமதக்னி, கடும் கோபம் கொண்டு அவள் தலையை வெட்டி வீழ்த்தச் சொல்ல, தந்தையின் சொல்லைத் தட்டாத பரசுராமர், தாயின் சிரம் கொய்தார். பிறகு தந்தையிடமே வரம் பெற்று தாயின் உயிர் மீட்டார். இன்றும் படவேடு முதலான தலங்களில் ரேணுகா தேவி என்னும் திருநாமத்துடன் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறாள். கடல் கொந்தளித்தபொழுது இவர் அதனை அடக்கி கொங்கணக் கடற்கரைப் பகுதிகளை காத்தார் என்பது நம்பிக்கை. கேரளா பரசுராமரின் பூமி என்று நம்பப்படுகிறது. இங்கு பரசுராமருக்கென்று தனிக் கோயில் உள்ளது. மார்கழி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் ஆண்டுதோறும் பரசுராமர் ஜயந்தி கொண்டாடப்படுகிறது.
கிருபாசாரியார்: கிருபாசாரியார் என்பவர் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களின் ஆசிரியர். இவருடைய பாரபட்சமற்ற தன்மை மற்றும் தற்காப்பு திறமைக்காகப் பெயர் பெற்றவர்.
அனுமன்: ஸ்ரீராமரின் சிறந்த பக்தர். இவர் ராமரிடம் கொண்ட பக்திக்கும், விசுவாசத்திற்கும் பெயர் பெற்றவர். ஸ்ரீராம நாமம் எங்கு உச்சரிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் இவர் வீற்றிருப்பதாக நம்பப்படுகிறது.
மார்கண்டேயர்: சிவ பக்திக்கும், ஈசனின் அருள் பெற்று மரணத்திலிருந்து தப்பித்து, என்றும் பதினாறாகத் திகழும் மார்கண்டேயர் எட்டாவது சிரஞ்சீவி என்றும் அழைக்கப்படுகிறார்.