

மனிதர்களில் பலர் சுகமாக இருக்கும்போது தங்களைப் பற்றியே சிந்திக்க நினைக்கிறார்கள். அதுவே சோதனை காலம் வரும்போது இறைவனை வேண்டுகிறார்கள். இந்த நிலை என்பது யதார்த்த நிலை.
ஆனால் சுகமாக இருக்கும்போது தர்ம சிந்தனை வளர்த்துக்கொள்ள மாட்டார்கள். அந்த எண்ணத்திற்கு மாறாக, தான் தனது என்ற சுயநலம் அவர்களுக்குள் பற்றிக்கொள்ள தொடங்கி விடுகிறது. சோதனைகள் வரும்போது இறைவனை தரிசனம் செய்து வணங்குவது மட்டுமல்லாமல், சில பிரார்த்தனைகள் செய்து நேர்த்திக்கடன் செய்ய நினைப்பதும் உண்டு. அப்போது அவர்களுக்கு இறைவன் கண் திறந்து பார்ப்பார். தங்களுடைய கஷ்டங்களை போக்கி நிவர்த்தி செய்வார் என்ற நம்பிக்கை எழுகிறது.
சிலநாட்கள் கழித்து தன்னுடைய கஷ்டங்கள் களைந்து, தான் நல்ல நிலைமைக்கு வந்த பிறகு, தான் கஷ்டப்படும்போது நேர்த்திக்கடன் வேண்டியது மறந்துபோகும். அல்லது அதனை செய்வதற்கு மனம் வராது. மறுபடியும் கஷ்டமான சூழ்நிலை வரும் போதுதான், தான் வேண்டியதை செய்யவில்லையே. அதனால்தான் இறைவன் கோபத்திற்கு ஆளாகி, அதுவே தெய்வ குத்தம் ஆகி, இப்படி மறுபடியும் இந்த சூழ்நிலை வந்து, விட்டதோ என்ற பயம் சூழ்ந்து கொள்கிறது. இப்படிப்பட்ட சந்தேகத்தை முற்றிலுமாக மறந்து விடுங்கள்.
ஒரு விஷயத்தை மட்டும் நாம் மனதில் புரிந்துகொள்ள வேண்டும். எந்த ஒரு தெய்வமும், கஷ்டப்படும்போது, வந்து என்னை வழிபாடு செய் என்று சொல்வதும் இல்லை. இன்னென்ன நேர்த்திக்கடன் செய் என்று சொல்வதும் இல்லை. இறைவன் ஒருபோதும் நம்மிடம் எதுவம் எதிர்பார்ப்பது கிடையாது. ஏனெனில் நம்மிடம் இருப்பது எல்லாம் அந்த இறைவனுக்கு உடையதுதான். அப்படி இருக்கும் போது, நீங்கள் வேண்டுதலை நிறைவேற்றாத பட்சத்தில் அதற்கு இறைவன் கோபப்பட போவதும் இல்லை.
எந்த தெய்வமும் பூஜை செய்து, ஏதாவது வேண்டுதல் செய், அப்போதுதான் நான் உங்களுக்கு பிரதி உபகாரம் செய்வேன் என்று சொல்வது இல்லை. நாம்தான் இறவனுக்கு இதை செய்கிறேன், அதை செய்கிறேன் என்று வேண்டிக்கொள்கிறோம். வேண்டுதலை நிறை வேற்றாத பட்சத்தில் எந்த தெய்வமும் சாபம் இடுவதும் இல்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள். இறைவனை பொருத்த வரை மனதார அவனை வேண்டினாலே போதும்.
ஆனால் நாம் ஒரு கஷ்டமான நிலையில் இருக்கும்போது, இறைவனிடம் மண்டியிட்டு, பிரார்த்தனை செய்து, சூரியன் பட்ட பனிபோல் உன் கருணை பார்வை பட்டு, என் கஷ்டங்களை நிவர்த்தி செய். நான் உனக்கு கைமாறு நேர்த்திக்கடன் செய்கிறேன் என்று வேண்டிக்கொண்டு, பிறகு அதனை செய்யத் தவறினால் தெய்வ குத்தம் வராதா என்று கேட்டால், அப்படி வரவே வராது என்று அடித்துச் சொல்லிவிட முடியாது. இப்படி சொல்வதன் மூலம் உங்களுக்கு முரணாக தோன்றும். தெய்வ குத்தம் வருமா? வராதா? என்ற கேள்வி எழுவதும் தெரிகிறது.
நீங்கள் வேண்டிக்கொள்ளும் எதையும் நிறைவேற்றாத போதும் உங்களுக்கு தெய்வத்தின் மூலம் எந்த பாதிப்பும் ஒருபோதும் வராது. ஆனால் மனித தர்ம சாஸ்திரம் என்ன சொல்கிறது தெரியுமா? ஒவ்வொரு மனிதனுக்கும் தன் உயிரைவிட, அவனிடம் நேர்மை, நாணயம் வாக்கு தவறாமை போன்றவை நிலையாக இருக்க வேண்டும் என்பதை ஆணித்தரமாக சொல்கிறது. மனிதனாக பிறந்தவர்களுக்கு வாக்கு சுத்தம் அவசியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
நாம் கொடுக்கும் வாக்கு தெய்த்திற்கு இருந்தாலும் சரி அல்லது சக மனிதர்களுக்காக இருந்தாலும் சரி, தவறிவிட்டால் அதற்கான தண்டனை கண்டிப்பாக உண்டு. ஆகவே நாம் கொடுக்கும் வாக்கை மதித்து, அதனை நிறைவேற்ற வேண்டும். சொன்ன சொல் தவறக்கூடாது. இதுதான் உங்களுடைய நேர்மைக்கான அடையாளம். மனித தர்மத்திற்கான அடையாளம்.
ஆகவே, நாம் நேர்த்திக்கடன் செய்யாவிட்டால் இறைவன் நமக்கு எந்த தீங்கும் செய்யமாட்டார். ஆனால் நாம் வாக்கு தவறியதற்கு, நம் நேர்மையை தவறவிட்டதற்கு மனித தர்ம சாஸ்திப்படி நமக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும். இது உண்மை.
இதையே நாம் தோசையை திருப்பி போடுவது மாதிரி, இறைவன் நம்மை வஞ்சித்துவிட்டார் என்று சொல்லிட்டு புலம்புகிறோம்.
மனிதனாக பிறப்பது அரிது என்று எல்லோருக்கும் தெரியும். ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய நேர்மையில், உண்மையாக இருப்பதில், வாக்கு தவறாமையில், ஆக மொத்தத்தில் தர்மத்தின் அடிப்படையில் வாழவேண்டும். அப்படி வாழும் மனிதனின் இதயத்தில் எப்போதும் குடிகொண்டிருப்பார் இறைவன் என்பதை மனதில் நிலைநிறுத்தி வாழப்பழகுங்கள். எந்த குறையும் வராது, வரவே வராது.