

அமாவாசை என்பது தென்னிந்தியாவில் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான வழிபாடாகும். அதுவும் ஆடி மாத அமாவாசை என்பது முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்க மிகவும் முக்கியமான நாளாகும். இந்நாளில் பித்ருக்கள் எனப்படும் முன்னோர்கள் நம்மை ஆசீர்வதிக்க பூமிக்கு வருவதாக ஐதீகம்.
மாதந்தோறும் அமாவாசை வந்தாலும் மற்ற மாதங்களில் வரும் அமாவாசைகளை விட ஆடி மாதம் வரும் அமாவாசை மிகவும் சிறப்பானது. இந்த நாளில் சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கும் காலத்தில், முன்னோர்களை நினைத்து புனித நீர்நிலைகளில் நீராடி திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தால், அவர்களின் ஆன்மா முழு திருப்தி அடைந்து, குடும்பத்திற்கு அருள் புரியும் என்பது ஐதீகம்.
இந்த ஆண்டில் ஆடி அமாவாசை வரும் ஆகஸ்ட்12-ம்தேதி புதன்கிழமை அன்று வருகிறது. அன்றைய தினம் (ஆகஸ்ட் 12-ம்தேதி) அமாவாசை திதி அதிகாலை 01:52 மணி தொடங்கி அன்றைய தினம் இரவு இரவு 12:16 மணிக்கு முடிவடைகிறது.
இந்நாளில் முன்னோர்களுக்கு நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுத்தல், பித்ரு பூஜை செய்தல் மற்றும் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குவது மிகவும் சிறப்பானதாகவும் குடும்பத்திற்கு நன்மைகளைத் தரக்கூடியதாகவும் கருதப்படுகிறது. தட்சிணாயன காலத்தின் தொடக்கத்தில் வரும் முதல் அமாவாசை இதுவாகும். இந்நாளில் பிதுர்க்காரகனான சூரியனும் மனக்காரகனான சந்திரனும் ஒரே ராசியில் இணைவதால், முன்னோர் களுக்கு செய்யும் வழிபாடுகளின் பலன் முழுமையாகக் கிடைக்கும்.
இந்த நாளில் கடலில் அல்லது நதிக்கரை போன்ற புனித நீர்நிலைகளில் நீராடி முன்னோர்களை நினைத்து எள் மற்றும் தண்ணீர் கொண்டு தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடையும். பித்ரு சாபம் மற்றும் பித்ரு தோஷங்களால் (பித்ரு தோஷம்) வாழ்வில் ஏற்படும் தடைகளும் துன்பங்களும் விலகும்.
தமிழ்நாட்டில் ராமேஸ்வரம், தேவிபட்டினம் நவபாஷாணம், மற்றும் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோவில் போன்ற இடங்களில் ஆடி அமாவாசை விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
ஆடி அமாவாசை அன்று 5 பேருக்கு, 5 விதமான பொருட்களை தானமாக கொடுக்க வேண்டும் என்பது ஐதீகம்.
அதாவது ஒவ்வொருவருக்கும் தலா ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ பாசிப்பருப்பு, ஒரு கிலோ வெல்லம், அரை கிலோ நெய், அரை கிலோ (முந்திரி + திராட்சை + ஏலக்காய் = சேர்த்து ஒருவருக்கு) என மொத்தம் ஐந்து பேருக்கு 5 பொருட்களை தானமாக கொடுக்க வேண்டும். வருடம் முழுவதும் வரும் அமாவாசை நாட்களில் பித்ருகளுக்கு தர்ப்பணம் கொடுக்க தவறி இருந்தாலோ அல்லது கொடுக்க முடியாமல் ஏதாவது தடைப்பட்டிருந்தாலோ ஆடி அமாவாசை அன்று ஐந்து பேருக்கு இந்த ஐந்து தானங்களை கொடுத்தால் பித்ரு தேஷமானது நீங்கி விடும் என்பது ஐதீகம்.
ஆடி அமாவாசை அன்று அருகில் உள்ள கோவிலுக்கு சென்று முன்னோர்களுக்காக விளக்கேற்றி வழிபடலாம். இது அவர்களுக்கு மோட்சத்தை தரும் என நம்பப்படுகிறது.
செய்ய வேண்டியவைகள்:
* அன்றைய திகம் காலையில் நீண்ட நேரம் தூங்கக் கூடாது. அதிகாலை 5 முதல் 6 மணிக்குள்ளாக எழுந்து, வீட்டில் உள்ள அனைவரும் குளித்து விடவேண்டும்.
* ஆடி அமாவாசை நாளில் அதிகாலையில் நீராடி, கடல் அல்லது நதிக்கரைகளில் முன்னோர்களுக்கு திதி மற்றும் தார்பணம் (Tarpanam) கொடுத்தல் வேண்டும்.
* தந்தை அல்லது தாய் இழந்தவர்கள் புரோகிதர் உதவியுடன் முன்னோர்களுக்கு எள் மற்றும் தண்ணீர் இறைத்து தார்பணம் கொடுக்கவேண்டும்.
* நீர் நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் கெடுத்தாலும், வீட்டில் முன்னேர்களின் படங்களுக்கு விளக்கேற்றாமல் இருக்கக் கூடாது. பூஜை அறையில் விளக்கேற்றுவதுடன், தனியாக முன்னேர்கள் படத்திற்கு முன் ஒரு அகல் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும்.
* முன்னேர்களுக்கு படையல் போடும் போது ஒற்றை இலையாக போடக் கூடாது. இரண்டு இலைகள் போட்டு தான் படையல் இடவேண்டும்.
* வீட்டில் மறைந்த முன்னோர்கள் விரும்பிச் சாப்பிட்ட சைவ உணவுகளைத் வாழை இலையில் படையலிட்டு, காகத்திற்கு உணவு வைத்த பிறகுதான் சாப்பிட வேண்டும். அதாவது படையல் வைத்த பிறகு அதில் ஒரு பகுதியை காகத்திற்கு வழங்குவது முன்னோர்களின் ஆசியைப் பெற்றுத் தரும் என்பது ஐதீகம்.
* ஆடி அமாவாசை அன்று முன்னேர்களுக்கு படையல் போட்ட உணவை வீட்டில் உள்ளவர்கள் மட்டுமே சாப்பிட வேண்டும். மற்றவர்களுக்கு கொடுக்கக் கூடாது.
* இயலாதவர்களுக்கு அல்லது ஏழைகளுக்கு உணவு, உடை மற்றும் தட்சணை வழங்குவது புண்ணியத்தைத்தரும்.
* ஆடி அமாவாசை அன்று நாய், பசு, காகம் பிற விலங்குகளுக்கு உணவு அளிப்பது முக்கியம். ஏனென்றால் அன்று முன்னோர்களின் ஆத்மாக்கள் அவற்றில் இருப்பதாக நம்பப்படுகிறது.
* இயலாதவர்களுக்கு அன்னதானம் அல்லது வஸ்திர தானம் செய்வது நன்மைகளைத்தரும்.
* அன்றைய தினம் அருகில் உள்ள சிவாலயங்களுக்குச் சென்று வழிபடுதல் நன்மைகளைத் தரும்.
செய்யக் கூடாதவை :
* ஆடி அமாவாசை அன்று காலையில் வீட்டை சுத்தம் செய்யவே, சமையல் அறையை மற்றும் பூஜை அறையை சுத்தம் செய்யவே கூடாது.
* அன்றைய தினம் பெண்கள் குளித்து விட்டுதான் சமையல் செய்ய வேண்டும். குளிக்காமல் சமையல் அறைக்குள் செல்லவே கூடாது.
* பெண்கள் தலையை விரித்து போட்டபடி இருக்கக் கூடாது.
* நெற்றியில் குங்குமம், திருநீறு இல்லாமல் இருக்கக் கூடாது.
* அன்றைய தினம் வீட்டில் வாசலில் கோலம் போடுதல் கூடாது.
* அன்று வீட்டில் மாமிசம் சமைப்பதோ அல்லது சாப்பிடுவதோ கூடாது.
* பித்ரு காரியங்கள் முடியும் வரை வீட்டில் வழக்கமான பூஜைகளைத் தள்ளிவைப்பது ஐதீகம்.
* அமாவாசை அன்று தலையில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
* செடி, கொடிகள் மற்றும் மரங்களை வெட்டுவதோ அல்லது இலைகளைப் பறிப்பதோ கூடாது.
* புதிய தொழில் தொடங்குவது மற்றும் சுப நிகழ்ச்சிகள் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
* தர்ப்பணம் செய்யும் வீடுகளில் சமையலில் பூண்டு மற்றும் வெங்காயம் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.