ஸ்ரீரங்கத்தில் மாப்பிள்ளை பெருமாளுக்கு தீபாவளி கொண்டாட்டம்: பெரியாழ்வார் செய்யும் விசேஷ சீர்!

பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கத்தில் விமரிசையாக நடைபெறும் தீபாவளி ஜாலி உற்சவத்தின் ரகசியம்.
ஸ்ரீரங்கம் தீபாவளி - Mappillai Perumal
ஸ்ரீரங்கம் தீபாவளி - Mappillai Perumal
கே.எஸ்.கிருஷ்ணவேனி

"கே.எஸ்.கிருஷ்ணவேனி, வைஷ்ணவ் கல்லூரியின் முன்னாள் மாணவி. கல்கி, மங்கையர் மலர், விகடன் போன்ற இதழ்கள் மற்றும் நாவல்களை படித்து, எழுதும் ஆர்வமும் மேலோங்க, 1992-ல், சமையல் குறிப்புகள் குறித்த சிறு கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். அவை 'மங்கையர் மலர்' ​​இதழில் தொடர்ந்து வெளியாகின. மேலும் பல இதழ்களில் எழுதிப் பல பரிசுகளை வென்றுள்ளார். 'பட்டிமன்றங்களில்' பங்கேற்ற அனுபவமும் உண்டு. தற்போது கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார். ஆர்வம் மிக்கவர். பல்வேறு பிரிவுகளில் பல தலைப்புகளில் சுவாரஸ்யமான கட்டுரைகளை எழுத வல்லவர். மிக விரைவாக எழுதவும் கூடியவர்."

Updated on: 

தீபாவளி என்றாலே மாப்பிள்ளைகளுக்கு கொண்டாட்டம்தான். அதுவும் புது மாப்பிள்ளை என்றால் கேட்கவே வேண்டாம். பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கத்தில் ஒவ்வொரு வருடமும் ஸ்ரீரங்கநாதர் தீபாவளி கொண்டாடும் விதம் நம்மை ஆனந்தத்தில் ஆழ்த்தும்.

பெரியாழ்வாரின் மகளான ஆண்டாளை ஸ்ரீ ரங்கநாதர் திருமணம் முடித்ததால் இத்தலத்தில் பெருமாள் 'மாப்பிள்ளை' ஆகக் கருதப்படுகிறார். அந்த வகையில் மாமனார் தன் மாப்பிள்ளைக்கு சீர் செய்யும் ஐதீகத்தின்படி இங்கு தீபாவளித் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஸ்ரீரங்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளித் திருநாள் மிகவும் விமர்சையாகவும், தனித்துவமான பாரம்பரியத்துடனும் கொண்டாடப்படுகிறது.

தீபாவளிக்கு முதல் நாள் மாலை மேளதாளத்துடன் மூலவரான பெரிய பெருமாளுக்கு நல்லெண்ணெய் சாத்துவது வழக்கம். எண்ணெய் அலங்காரம் (தைலக் காப்பு) செய்ததும் கோவிலில் பணிபுரியும் சிப்பந்திகளுக்கும் நல்லெண்ணெய், சீயக்காய்த்தூள் பெருமாள் சார்பாக வழங்கப்படும்.

அத்துடன் கோவிலில் இருக்கும் ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள் சன்னதிகளுக்கும் நல்லெண்ணெய், சீயக்காய், விரலி மஞ்சள் பெருமாள் சார்பாக அந்தந்த சன்னதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

அன்று இரவு உற்சவரான நம் பெருமாளுக்கும் எண்ணெய்க்காப்பு அலங்காரம் செய்யப்படும். தீபாவளித் திருநாள் அன்று அதிகாலையில் ரங்கநாயகி தாயாருக்கும், ஆழ்வார் ஆச்சாரியர்களுக்கும் எண்ணெய் அலங்காரம் செய்யப்படும். ரங்கநாயகி தாயாருக்கு சிறப்பு பூஜைகளும், ஆச்சாரியர்களுக்கு மரியாதைகளும் செய்யப்படுகின்றன. அனைவரும் புத்தாடையும், மலர் மாலைகளும் அணிந்து காட்சி தருவார்கள்.

எண்ணெய்க்காப்பு மற்றும் திருமஞ்சனம்:

ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாத சுவாமி திருக்கோவிலில் தீபாவளி திருநாளன்று அதிகாலையில் தாயார் மற்றும் ஆழ்வார், ஆச்சாரியர்கள் சன்னதிகளில் எண்ணெய் அலங்காரம் செய்யப்பட்டு திருமஞ்சனம் நடைபெறும். அதைத்தொடர்ந்து நம்பெருமாள் மற்றும் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனமும் புத்தாடை அணிவிக்கப்பட்டு, மலர் மாலை சூட்டி அலங்காரம் செய்வதும் வழக்கம்.

ஸ்ரீரங்கம் தீபாவளி - Mappillai Perumal
ஸ்ரீரங்கம் தீபாவளி - Mappillai Perumal

அலங்காரம் முடிந்ததும் ஆழ்வார்கள், ஆச்சாரியர்களின் உற்சவ மூர்த்திகள் அனைவரும் புறப்பட்டு மூலஸ்தானத்திற்கு கிழக்கில் உள்ள கிளி மண்டபத்துக்கு வந்து பெருமாள் வருகைக்காக காத்திருப்பார்கள்.

தீபாவளி சீர்வரிசை:

இந்த சமயத்தில் பெரியாழ்வார் சார்பில் மாமனார் முறையாக ரங்கநாதப் பெருமாளுக்கு தீபாவளி சீர்வரிசை பட்டுப்புடவை, தாம்பூலம், பட்சணங்கள் தருவதற்காக பெரியாழ்வாரும் காத்திருப்பார். உற்சவர் நம் பெருமாள் சந்தன மண்டபத்திற்கு எழுந்தருளும்போது அங்கு அவருக்கு திருமஞ்சனம் நடைபெற்றதும் சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சி தருவார். இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் முடிந்த பின்பு ஸ்ரீ ரங்கநாதரை மாப்பிள்ளையாகக் கொண்ட பெரியாழ்வார் தீபாவளி சீர் தரும் நிகழ்ச்சி நடைபெறும்.

ஜாலி (சாளி உற்சவம்) அலங்காரம்:

நம் பெருமாள் திருவடிகளைச் சுற்றி சீர்வரிசையான நாணய முட்டைகள் அழகாக வைக்கப்படும். வேதபாராயணங்கள் முழங்க, மங்கள வாத்தியம் இசைக்க இந்த ஜாலி அலங்காரம் நடைபெறும். ஜாலி அலங்காரம் என்பது ஆயிரம் ஒரு ரூபாய் நாணயங்களை இரண்டு புதிய கைலிகளில் மூட்டையாகக் கட்டி பெருமாளுடைய திருவடிகளில் சமர்ப்பிப்பதாகும்.

பெரியாழ்வார் சார்பில் அரையர்கள் நம் பெருமாளின் திருவடிகளைச் சுற்றி நாணய முட்டைகளை சீராக வைப்பார்கள். நாணய மூட்டைகளுக்கு 'சாளி' என்று பெயர்.

இதையும் படியுங்கள்:
திருப்பதி ஏழுமலையான் கண்கள் ஏன் மூடப்பட்டிருக்கிறது? வியாழன், வெள்ளியின் ரகசிய அலங்காரங்கள்!
ஸ்ரீரங்கம் தீபாவளி - Mappillai Perumal

நாணய மூட்டைகளை தீபாவளிச் சீராக பெரியாழ்வார் சமர்ப்பிப்பதால் 'சாளி உற்சவம்' என்று அழைக்கப்பட்ட இந்த உற்சவம் நாளடைவில் 'ஜாலி உற்சவம்' என்று ஆகிவிட்டது. இதற்குப் பிறகு பெருமாள் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்.

கிளி மண்டபத்தில் காத்திருக்கும் ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள் அனைவருக்கும் பெருமாள் சந்தனம், தாம்பூலம், பழங்கள், மலர் மாலைகள், நறுமணப் பொருட்கள், புது வஸ்திரம் ஆகியவற்றை தீபாவளிப் பரிசாக கொடுப்பது வழக்கம். ‌ இந்த நிகழ்வுகளை தீபாவளித் திருநாளில் கண்ணாரக் காண்பவர்களுக்கு ஆடைகளுக்கோ, பணவரவிற்கோ தட்டுப்பாடு சிறிதும் ஏற்படாது. குடும்பத்தில் மகிழ்ச்சியும் செல்வமும் நிலைக்கும்.

பெருமாளுக்கு செய்யப்படும் சிறப்பு அலங்காரங்கள் மற்றும் மாலை நேர ஜாலி உற்சவத்தைக் கண்ணாரக் கண்டு இந்தப் பிறவியின் பயனை பெறுவோம்.

இதையும் படியுங்கள்:
ஒரே நாளில் 9 நவகிரக ஆலய தரிசனம்: பலன்களும் வழிபாட்டு முறைகளும்!
ஸ்ரீரங்கம் தீபாவளி - Mappillai Perumal