

தமிழக கோயில்களில் திருச்சி ஸ்ரீ ரங்கம் ரங்கநாதன் கோயிலுக்குத்தான் வருடத்திற்கு சராசரியாக 1.6 கோடி பேர் வருகின்றனர். அதில் வெளிநாட்டு பயணிகள் மட்டுமே 2.2 லட்சம் பேர். மொத்தம் 1.65 கோடி பேர் வருகின்றனர்.
திருச்சி ஸ்ரீ ரங்கம் ரங்கநாதன் கோயில் தமிழ்நாட்டில் மிக உயரமான கோபுரம் கொண்ட கோயில் . இதன் உயரம் 238 அடி 13 நிலைகள் கொண்ட கோபுரம். உலகின் வண்ணமயமான கட்டிடங்கள் கொண்ட அமைப்புகளில் ஒன்றாக உள்ளது.
ஆற்றின் நடுவில் அமைந்த இடை குறை துருத்தி (துருத்தி என்றால் ஆற்றின் இடையில் உள்ள தீவு என்று பொருள்படும் ) என தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் இதனை வட மொழியில் ' ரங்கம் 'என்பர். இந்த ஊர் சிறந்த வைணவ தலம். இத்தலம் காவிரி ஆற்றுக்கும், கொள்ளிடம் ஆற்றுக்கும் இடையில் இருப்பதால் திருவரங்கம் என்ற பெயர் பெற்றது. கல்வெட்டில் இத்திருதலம் 'வீங்கு நீர் துருத்தி 'என்று குறிப்பிடப்படுகிறது. சோழர்கள், பாண்டியர்கள், நாயக்க மன்னர்கள், சரபோஜிகள் என்று பல பேர் திருப்பணி செய்த அற்புதமான இடம் இந்த ஸ்ரீரங்கம்.
மனிதனால் உருவாக்கப்படாமல், இயற்கையாகவே அல்லது இறைவனின் திருவிளையாடலால் தானே தோன்றிய 8 சுயம் வியக்த க்ஷேத்திரங்களில் இதுவே முதன்மையானது. வைணவத் 108 திவ்ய தேசத்தலங்களில் முதன்மையும் தலைசிறந்ததும் ஆன முதல் திவ்ய தேசம் ஆகும்.
இந்த கோயிலில் மஹாவிஷ்ணு ரங்கநாதர் என்று பெயர் தரித்து பாம்பணையில் பள்ளி கொண்டிருக்கிறார். அவர் மட்டுமே தனியாக சாய்ந்தபடி படுத்து ஆதிசேஷன் மீது உறங்கி கொண்டிருக்கிறார். மூலவர் சன்னதியின் மேல் உள்ள பிரணவ (ஓம்) வடிவ தங்க விமானம் மிகவும் புனிதமானது. இந்த பொன்வேய்ந்த அழகிய விமானத்தின் கீழ் காயத்ரி மண்டபத்துக்கு முன்பு கருவறையில் நெய் தீபங்களுக்கு நடுவே அரங்கன் பள்ளி கொண்டிருக்கிறார். அங்கே இறைவன் உறங்குவது போல காட்சி தருகிறார். எப்போதும் தனித்திருக்கும் பெருமாள் பங்குனி உத்திரம் அன்று மட்டும் தாயாருடன் ஒரு சேர அருள்பாலிக்கிறார்.
ஸ்ரீரங்கம் சாதாரண மடமல்ல. அது கோவிலும், கோவில் சார்ந்த பகுதிகளும் கொண்ட கட்டுமஸ்தான மிகப்பெரிய ஒரு நகரம். கோட்டை சுவர்களுக்கு நடுவேயும், உள்ளேயும் சித்திர வீதி, உத்தர வீதி என்று சதுரம் சதுரமாக நகரம் அமைந்திருக்க, இந்த நகருக்கு நடுவே கோயில் இருக்கிறது. சுற்றிலும் வீதிகள், நகரம், நடுவே கோயில் என்று ஸ்ரீரங்கம் மிகச்சிறப்பாக அமைந்திருக்கிறது.
கோயிலுக்குள் நுழைந்ததும் கோயிலுக்குள் நுழைவு, மண்டபத்தின் இடப்பக்கம் அழகிய கிருஷ்ணர் கோயில் இருக்கிறது. இது சமீபத்தியது. ஆனால் அதிலுள்ள சிற்பங்கள் மிக மிக அற்புதமானவை. அந்த கிருஷ்ணர் கோயிலுக்கு அருகே ஒரு மாடிப்படி இருக்கிறது. அந்த மாடிப்படியில் ஏறிப் போனால் நீங்கள் ஒரு சமதளத்திற்கு வருவீர்கள். அந்த சமதளத்திலிருந்து பார்த்தால், நாலுபக்க கோபுரங்களும், மிகப்பெரிய கோயிலின் மேற்பரப்பும், பொன்வேய்ந்த விமானமும் சூரியவெளிச்சத்தில் தகதகத்து காட்சிதரும்.
மாடியிலிருந்து கீழே இறங்கினால் இடதுபக்கம் சக்கரத்தாழ்வார் சந்நிதி. வலது பக்கம் ராமானுஜருடைய சந்நிதி. சக்கரத்தாழ்வார் இறைவனின் ஆயுதம். தீய சக்திகள் இங்கு உள்ளே நுழைய முடியாது. சக்கரத்தாழ்வாரை வணங்கி நிற்க, நமக்கு தீவினை செய்தவர்கள் அழிந்து போவார்கள். ஏவல், பில்லி சூனியங்கள் விலகிப்போய்விடும் என்று இங்குள்ள மக்கள் நம்புகிறார்கள்.
வலதுபக்கம் உள்ள ராமானுஜர் சந்நிதி மிக அற்புதமானது. இங்கே ஒரு சுதை உருவம் நகங்களோடும், கண் புருவங்களோடும், இமைகளோடும், நாசித்துவாரங்க ளோடும், வடிந்த உதடுகளோடும் அமர்ந்திருக்கிறது.
ராமானுஜர் உள்ளே உலோகச் சிலையாய் தன் உடம்பை மாற்றிக்கொண்டு அமர்ந்துவிட அதன் மீது குங்குமப்பூவால் சாந்து எழுப்பி அவரை பந்தனம் செய்திருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டாலும், அதை இல்லையென்று மறுக்கிறவர்களும் இருக்கிறார்கள்.
சிலை எப்படி இருப்பினும் ஸ்ரீராமானுஜர் மிகப்பெரிய மரியதைக்குரியவர். இந்து மதத்தின் புரட்சிக்காரர். ஈரமான மனம் உடையவர். இந்துக்களில் எல்லா ஜாதியினரும் வைணவரே என்று ஜாதி, மதபேதமற்று. தான் அறிந்த நமோ நாராயணா என்ற மந்திரத்தை கோபுரத்தில் ஏறி சகலருக்கும் சொன்ன வள்ளல். ஸ்ரீரங்கம் கோயில் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று எழுதிவைத்த அற்புதமான ஒரு மகான்.
108 வைணவ திருத்தலங்களில் முதல் திருத்தலமாக விளங்கும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாளை தரிசித்தால் அனைத்து நற்பலன்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். அதனால் புரட்டாசி மாத சனிக்கிழமை பிரார்த்தனை விஷேமானது. தாயார் சன்னதியில் உள்ள அணையா விளக்கில் தாங்கள் கொண்டு வந்த நெய்யை ஊற்றி பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர்.
வேறு எங்குமில்லாத வகையில் இங்கு ஒரு விசேஷ வேண்டுதலை பக்தர்கள் செய்கிறார்கள். அது தான் பூட்டு பிரார்த்தனை. ரங்க நாதர் கோயிலின் ஒவ்வொரு பகுதியும் விதவிதமான அதிர்வுகளை பக்தர்களுக்கு வழங்குகிறது. அதில் ஒன்று ரங்கவிலாச ஆஸ்தான மண்டபத்தில் இருக்கும் கல் கொடி மரத்தைச் சுற்றிலும், கம்பியில் விதவிதமான பூட்டுகள் தொங்குகின்றன. பல்வேறு பிரச்னைகளைத் தீர்க்க வேண்டி இங்கு பக்தர்கள் பூட்டு மாட்டுகின்றனர் . குடும்பம், வேலை செய்யும் இடம், பிஸ்னஸ் என எங்கு பிரச்னை என்றாலும் கடைசியில் அரங்கனிடம் முறையிட்டால் மட்டுமே தீர்வு என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
இந்தியாவின் மிகப்பெரிய கோவில் வளாகங்களில் ஒன்றான இது, தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்தாலும், அதன் பிரகாரங்களும் வளாகமும் மிகவும் பாராட்டத்தக்க வகையில் சுத்தமாக பராமரிக்கப் படுகின்றன. இதன் காரணமாக இக்கோயிலின் திருப்பணிகள் மற்றும் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் 2017-ஆம் ஆண்டு யுனெஸ்கோ (UNESCO) கலாச்சார பாரம்பரிய விருது வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டது.