திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் கோவில் ரகசியம்: யானையும் சிலந்தியும் வழிபட்ட அற்புதம்!

நீர் தலமான திருவானைக்காவலின் வரலாறு மற்றும் திருநீறிட்டான் மதிலின் சுவாரசியமான உண்மை கதைகள்!
ஜம்புகேஸ்வரர் கோவில் - Jambukeswarar Temple
ஜம்புகேஸ்வரர் கோவில் - Jambukeswarar Temple
ஸ்ரீவித்யா பசுபதி

எழுத்தாளர், ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுகதைகள் கவிதைகள் எழுதியுள்ளேன். பதினைந்து தொடர்கதைகள் எழுதியுள்ளேன். மூன்று நூல்கள் வெளியிட்டுள்ளேன். பல சிறுகதைப் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளேன். சராசரி மக்களின் உணர்வுகள் சார்ந்த சிறுகதைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம். புதுமைப்பித்தன் விருது, கி.ஆ.பெ. விஸ்வநாதம் விருது, நம்பிக்கை நாயகி, தமிழினியாள் போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளேன்.

Updated on

ன்னை பார்வதிதேவிக்கு யோகபோக தத்துவத்தை சிவபெருமான் போதித்து அருளிய திருத்தலம் திருவானைக்கா. பஞ்சபூதத் தலங்களில் நீருக்கான தலமாக இது விளங்குகிறது. யானை சிவபெருமானைப் பூஜித்ததால் இத்தலத்திற்கு திருவானைக்காவல் என்று பெயர் வந்ததாகச் சொல்கிறார்கள். யானையும் சிலந்தியும் இங்கே இறைவனைப் பூஜித்த புராண நிகழ்வைத் தெரிந்துகொள்ளலாமா?

கயிலாயத்தில் சிவபெருமானை வணங்கி வந்த சிவகணங்களான புஷ்பதந்தன், மாலியவான் இருவருக்கும், தங்கள் தொண்டே உயர்ந்தது என்ற பெருமை இருந்தது. பெருமை கொண்டதோடு மட்டுமல்லாமல் தங்களுக்குள் ஒருவரையொருவர் சினத்துடன் சபித்துக்கொண்டனர்.

மாலியவானின் சாபத்தால் காவிரிக்கரையில் வனத்தில் யானையாகப் பிறந்தான் புஷ்பதந்தன். அங்கிருந்த வெண்நாவல் மரத்தடியில் அன்னை பார்வதி பூஜித்த சிவலிங்கத்தைக் கண்டு, அந்த லிங்கத்திற்குப் பூஜை செய்து வந்தான்.

புஷ்பதந்தன் சாபத்தால் சிலந்திப் பூச்சியாக இதே தலத்திற்கு வந்தான் மாலியவான். வெண்நாவல் மரத்தடியில் இருந்த லிங்கத்திற்கு அவ்வப்போது சூரியனின் வெப்பம் தாக்குவதைக் கண்ட சிலந்தி, வாய் நூலினால் லிங்கத்தின் மேல் வெயில் படாதவாறு பந்தல் அமைத்தது.

மறுநாள் யானை பூஜை செய்வதற்காக வந்தது. லிங்கத்தின் மேல் பந்தல் போலிருந்த சிலந்தியின் வலையை ஒட்டடை என நினைத்து கலைத்து சுத்தம் செய்தது. காவிரியில் இருந்து நீரெடுத்து வந்து அபிஷேகம் செய்து, மலர்களால் அர்ச்சித்து வணங்கிச் சென்றது. அதன்பின் வந்த சிலந்தி, மீண்டும் சிவபெருமான் மீது வெப்பம் தாக்காதிருக்க வலையால் பந்தல் அமைத்தது. இது தினமும் தொடர்ந்தது. சிலந்தி வலையால் பந்தல் அமைப்பதும், ஒட்டடை என நினைத்து யானை அதைக் கலைப்பதும் தினமும் தொடர்ந்தது.

தான் கட்டும் பந்தலை தினமும் அழிப்பது யார் என்பதை அறிய விரும்பிய சிலந்தி, ஒளிந்திருந்து கவனித்தது. யானைதான் இதற்குக் காரணம் என்பதை அறிந்து கோபம் கொண்டது சிலந்தி. ஆத்திரம் தாங்காமல் யானையின் தும்பிக்கைக்குள் நுழைந்து கடித்தது. வலி தாங்காத யானை பிளிறியபடி தும்பிக்கையை பலமுறை தரையில் அடித்தது. இதனால் சிலந்தி மாண்டது. சிலந்தி கடித்த விஷத்தால் யானையும் உயிரைவிட்டது.

ஜம்புகேஸ்வரர் கோவில் - Jambukeswarar Temple
ஜம்புகேஸ்வரர் கோவில் - Jambukeswarar Temple

யானை மறுபடி சிவகணமாகி தன் சிவத்தொண்டினைத் தொடர்ந்தது. சிவபெருமானுக்கு பந்தல் இடும் விருப்பம் நிறைவேறாததால் சிலந்தியாக இருந்து உயிரைவிட்ட மாலியவான், சுபதேவன் கமலவல்லி என்ற அரச தம்பதிக்கு மகனாகப் பிறந்தான். சிறந்த முறையில் வளர்ந்தவன், உரிய பருவத்தில் கோச்செங்கட்சோழனாக அரச பதவியேற்றான்.

முற்பிறவியின் உணர்வால் திருவானைக்கா சென்று, யானை புகாதவாறு கோயில் கட்டினான். கோச்செங்கட் சோழன் கட்டிய முதல் மாடக்கோவில் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் கோவில் ஆகும். இந்த ஆலயத்தைக் கட்டியதோடு மட்டுமல்லாது பல சிவாலயங்களையும் செப்பனிடச் செய்து, திருவிழாக்கள் நடைபெற வழிவகை செய்தார் மன்னர் கோச்செங்கட் சோழன்.

இன்னொரு சுவாரசியமான வரலாற்று நிகழ்வும் இந்த ஆலயத்தில் நிகழ்ந்துள்ளது. அதையும் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

ஒருசமயம் சேரன், பாண்டியன், மன்னன் விக்கிரமன், சோணாட்ச சோழன் ஆகிய நால்வரும் திருவானைக்கா ஆலயம் வந்து ஜம்புகேஸ்வரரை வணங்கி, ஆலயத்தில் திருப்பணி செய்ய அனுமதி வேண்டி நின்றனர்.

“நான்காம் பிராகாரத் திருமதிலைத் தவிர்த்து, ஆலயத்தின் மற்ற இடங்களில் திருப்பணிகளைச் செய்யுங்கள். நான்காம் பிராகாரத் திருமதிலை நானே கட்டுகிறேன்,” என்று அசரீரி ஒலித்தது.

இதையும் படியுங்கள்:
ஒரே நாளில் 9 நவகிரக ஆலய தரிசனம்: பலன்களும் வழிபாட்டு முறைகளும்!
ஜம்புகேஸ்வரர் கோவில் - Jambukeswarar Temple

திருப்பணிகளை மேற்கொள்ள இறைவன் ஒப்புதல் அளித்ததோடு, தானே ஒரு பிராகாரத் திருப்பணிகளைச் செய்வதாகச் சொன்னதும் சிலிர்த்தனர் நால்வரும். மளமளவென திருப்பணி வேலைகளைத் தொடங்கினர்.

இறைவனும் சித்தர் வடிவில் வந்து, நல்ல வெண்மை நிறக் கற்களால் நான்காம் பிராகாரத் திருமதில் திருப்பணிகளை ஆரம்பித்தார். சிறந்த சிற்பக் கலை நிபுணர்களான சிவகணங்கள் உதவியுடன் வேலை நடந்தது. பூமியை அகழ்ந்து, திறமையான சிற்பிகளால் பாதாளம் வரை அஸ்திவாரம் போட வைத்தார்.

பர்வத மலையில் இருந்து கற்களைக் கொண்டுவரச் செய்து, வலுவான அஸ்திவாரம் அமைத்து, அன்று மாலைக்குள்ளாகவே பாதி வேலைகள் முடிந்துவிட்டன.

சித்தர் வடிவில் வந்த பரமேஸ்வரர் கணங்களை முடுக்கிவிட்டு மிகவும் சிறப்பான முறையில் நான்காம் பிராகார மதிலைக் கட்டி முடித்தார். வேலை செய்தவர்களுக்குக் கூலியாக விபூதிப் பைகளைக் கொடுத்தனுப்பினார் இறைவன். கடைவீதிக்குச் சென்று அவர்கள் பைகளைப் பிரித்துப் பார்த்தபோது, அவரவர் செய்த வேலைக்கு ஏற்ப பொற்காசுகள் பையில் இருப்பதைக் கண்டு அனைவரும் வியந்தனர். அன்றிலிருந்து நான்காம் பிராகாரத் திருமதில் “திருநீறிட்டான் திருமதில்” என்று அழைக்கப்படலாயிற்று.

இத்தகைய சிறப்புமிக்க திருவானைக்கா ஆலயத்தில் அன்னை அகிலாண்டேஸ்வரி, இப்போதும் தினமும் இறைவன் ஜம்புகேஸ்வரரைப் பூஜிப்பதாக நம்பப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
சிவகிரி ஜமீன் வழிபட்ட தசவீராட்டாண ஆலயம்! தென்மலை திரிபுரநாதேஸ்வரர் கோவில் முழு விவரங்கள்!
ஜம்புகேஸ்வரர் கோவில் - Jambukeswarar Temple
logo
Kalki Online
kalkionline.com