திருநீறின் மறைபொருள்: சிவபெருமானின் 5 பசுக்களும் அற்புத பலன்களும்!

ஆன்மீக ஆற்றல் தரும் விபூதியின் ஐவகை பெயர்கள் மற்றும் அதன் 18 புனித இடங்களின் ரகசியம்!
திருநீறு பெருமை - Vibhuthi Benefits
திருநீறு பெருமை - Vibhuthi BenefitsImage credit - Gemini
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

திருநீறு பெருமை:

விபூதி (திருநீறு) என்பது ஆன்மீகச் சிறப்புமிக்க புனிதப் பொருளாகும். இதன் ஐவகை பெயர்கள் விபூதி, பசிதம், பஸ்பம், சாரம் (க்ஷாரம்), ரட்சை என்பதாகும். சிவபெருமான் ஐந்து வகையான பசுக்களை தோற்றுவித்ததாகவும், அந்த பசுக்களின் சாணத்திலிருந்து ஐந்து வகையான திருநீறு உருவாக்கப்பட்டதாகவும் கூறப்படப்படுகிறது.

விபூதியின் ஐவகைப் பெயர்கள்:

விபூதி:

உபநிஷதங்கள் மற்றும் சமய நூல்களின்படி திருநீறு ஐந்து முக்கிய பெயர்களால் அழைக்கப்படுகிறது. இந்த ஐந்து பெயர்களும் சிவபெருமானின் ஐந்து முகங்களில் இருந்து தோன்றிய ஐந்து ஆன்மீகப் பசுக்களின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் ஆன்மீகத் தன்மைகளை குறிக்கின்றது. பஞ்ச பசுக்களில் நந்தை என்ற பசு சிவபெருமானின் சத்யோஜாத முகத்தில் இருந்து தோன்றியதாக கூறப்படுகிறது. கபில நிறத்தைக்கொண்ட இந்த பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீற்றுக்கு 'விபூதி' என்று பெயர். இது வாழ்வில் செல்வத்தையும் மேன்மையையும் தரவல்லது.

பசிதம்:

சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பத்ரை என்ற பசு இது. சிவபெருமானின் வாமதேவ முகத்தில் இருந்து தோன்றியது. வெண்மை நிறம் கொண்டது. இதன் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு பசிதம் என்று அழைக்கப்படுகிறது. இது உடலை பிரகாசிக்க செய்வது.

பஸ்மம்:

சுரபி என்ற பசுவானது சிவனுடைய அகோர முகத்தில் இருந்து வெளிப்பட்டது. இந்த பசுவின் நிறம் வெண்மை நிறம். இதன் சாணத்தில் இருந்து தயாரிக்கப்படும் திருநீறு பஸ்மம் என்று அழைக்கப்படுகிறது. பாவங்களை எரித்து சாம்பலாக்குவது.

சாரம் (க்ஷாரம்):

பஞ்ச பசுக்களில் ஒன்றான சுசீலை சிவனது தத்புருஷ முகத்தில் இருந்து தோன்றியது. வெண்மை நிறத்தில் காணப்படும் இந்த பசுவின் சாணத்தில் இருந்து தயாரிக்கப்படும் திருநீற்றுக்கு சாரம் என்று பெயர். ஆபத்துக்களில் இருந்து காப்பது.

ரட்சை:

பஞ்ச பசுக்களில் ஒன்றான சுமனை சிவனது ஈசானிய முகத்தில் இருந்து தோன்றியதாகும். சிவப்பு நிறம் கொண்ட இந்த பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு ரட்சை என்று அழைக்கப் படுகிறது. தீயசக்திகளிடமிருந்து பாதுகாப்பு அளிப்பது.

திருநீறு பெருமை - Vibhuthi Benefits
திருநீறு பெருமை - Vibhuthi BenefitsImage credit - Gemini

சிவபெருமான் தோற்றுவித்த ஐந்து (பஞ்ச) பசுக்களின் சாணத்திலிருந்து ஐந்து வகையான திருநீறுகள் உருவானதாக ஆன்மீக நூல்கள் கூறுகின்றன. இவை தமிழில் திருநீறு, காப்பு, மருந்து என்றும் அழைக்கப் படுகிறது. மனதை தூய்மைப்படுத்தும் திருநீறு நிலையான செல்வத்தையும், தீவினைகளை ஓடச் செய்வதிலும், கடன் இல்லாத வாழ்வைத்தருவதிலும் நிகரற்றது.

திருநீறு அணியும் இடங்கள்:

உடலில் திருநீறு அணியக்கூடிய இடங்களாக 18 இடங்கள் குறிப்பிடப்படுகின்றன. நெற்றி, மார்பு, தொப்புளுக்கு சற்று மேல், தலை நடுவில் அதாவது உச்சியில், இடது தோள், வலது தோள், இடது கையின் நடுவில், வலது கையின் நடுவில், இடது மணிக்கட்டு, வலது மணிக்கட்டு, இடது இடுப்பு, வலது இடுப்பு, இடது கால் நடுவில், வலது கால் நடுவில், முதுகுக்குக் கீழே, கழுத்து முழுவதும், வலது காதில் ஒரு பொட்டு, இடது காதில் ஒரு பொட்டு என்று 18 இடங்கள் திருநீறு அணியக் கூடிய இடங்களாக குறிப்பிடப்படுகிறது.

பன்னிரு திருமுறைகளில் குறிப்பிடப்படும் விபூதியின் பெருமைகள்:

சூலை நோயால் (கடும் வயிற்று வலியால்) துடிதுடித்துக் கொண்டிருந்த அப்பர் சுவாமிகள் தனது தமக்கையார் கையால் விபூதியைப் பெற்றவுடன் வலி நீங்கப்பெற்று சைவத்திற்கு மாறி பெரும் தொண்டாற்றினார்.

சமண சமயத்தைச் சார்ந்த கூன் பாண்டியன் என்னும் மன்னன் தீராத வெப்பநோய் காரணமாக தவித்துக் கொண்டிருந்த பொழுது அவன் மனைவி மங்கையர்க்கரசியார் சிவபெருமானை வேண்ட அவள் கனவில் சிவன் வந்து திருஞானசம்பந்தரை கண்டு வந்தால் நோய் நீங்கும் என்று கூற,

இதையும் படியுங்கள்:
ஒரே நாளில் 9 நவகிரக ஆலய தரிசனம்: பலன்களும் வழிபாட்டு முறைகளும்!
திருநீறு பெருமை - Vibhuthi Benefits

மங்கையர்கரசியார் திருஞானசம்பந்தரை தரிசித்து வேண்ட, "மந்திரமாவது நீறு, வானவர் மேலது நீறு" என்று தொடங்கும் திருநீற்றுப் பதிகம் பாடி விபூதியை கூன் பாண்டியனின் உடலில் பூசியதும் நோய் நீங்கி கூன் பாண்டியன் சைவத் தொண்டு ஆற்றினான். இப்படி திருநீறின் மகிமைகள் நிறைய உள்ளன.

விபூதி நோய்களை நீக்கும் அருமருந்தாகவும், சிவத்தொண்டிற்கு வழிகாட்டியாகவும், சிவ சிந்தனை மேலிடுவதற்கு உதவும் சாதனமாகவும் விளங்குகிறது. நீங்காத செல்வங்களை அதாவது ஐஸ்வர்யங்களை வழங்கும் விபூதியை அணிவோம்! இறையருளால் வேண்டியவற்றைப் பெறுவோம்!

இந்தத் தொகுப்பை வாசிப்பதன் மூலம் திருநீறு அணிவதன் உண்மையான ஆன்மீகப் பெருமையையும், உடலின் 18 இடங்களில் அதை முறைப்படி அணிவதால் கிடைக்கும் ஆரோக்கியம், நேர்மறை ஆற்றல் மற்றும் இறை அருளையும் பெறலாம்.

இதையும் படியுங்கள்:
மனிதர்களிடம் சொல்ல முடியாத கஷ்டமா? மதுரைக்கு அருகில் கண்ணீரைத் துடைக்கும் ஒரு அதிசய சிவதலம்!
திருநீறு பெருமை - Vibhuthi Benefits
logo
Kalki Online
kalkionline.com