
ஓமன் ஐந்தாயிரம் வருடங்களுக்கு முன் பசுமையான தேசமாக இருந்ததன் ஆதாரங்கள் இருக்கின்றன. இப்பொழுதோ ஓமன் வறண்ட சீதோஷ்ணம் கொண்டு உள்ளது.
ஓமனின் தலைநகரான மஸ்கட்டில் ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை வெயில் கொளுத்தும் காலம். சுலபமாக 100 டிகிரி கடக்கும். ஆனால் அதே நேரத்தில், ஓமனின் மூன்றாவது பெரிய நகரான சலாலாவில் ‘காரீஃப்” என்று அழைக்கப்படும் மழைக்காலப் பருவத்தில் மலைகள் எப்பொழுதும் மூடுபனியால் சூழப்பட்டே காட்சி தருகின்றன! நம் ஊர் குற்றாலம் போல் மலைகளில் நீர்வீழ்ச்சிகள் தோன்றுகின்றன. சுற்றுலா செல்வதை பெரிதும் விரும்பும் இப்பிரதேச மக்கள் குளிர்ச்சி தேடி தோஃபார் மாநில தலைநகரான சலாலாவிற்கு செல்கின்றனர்.
சாலை வழியாக செல்வதென்றால் மஸ்கட்டில் இருந்து 1047 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சலாலாவை அடைய பத்திலிருந்து பன்னிரண்டு மணி நேரமாகும். இதே தூரத்தை விமானத்தில் சென்றால் 90 நிமிடங்களில் அடைந்துவிடமுடியும்.
நாங்கள் ஓமன் ஏர்வேஸ் மூலம் சலாலா அடைந்தோம். ஓமன் ஏர்வேஸ் விமானங்களில் எண் 13 கொண்ட இருக்கை வரிசைகள் இல்லை. ஏதோ நம்பிக்கை.
சலாலா அடைந்ததும் நாங்கள் ஏற்பாடு செய்திருந்த ட்ராவல்சில் இருந்து வந்த வழிகாட்டி எங்களை புன்முறுவலுடன் வரவேற்றார்.
விமான நிலையத்தில் இறங்கிய எங்களை மஸ்கட்டின் அதே சூடு தான் எதிர்கொண்டது. 'இங்கேயுமா இப்படி' என்று எண்ணிய எங்களை அலி என்ற பெயர் கொண்ட எங்கள் வழிகாட்டி மர்மப்புன்னகையுடன் வண்டியில் ஏற்றிச்சென்றார்.
சாலை ஓரங்களில் தென்னை மரங்கள் வரிசையாகத் தென்பட்டன. சிறிது தூரம் கடந்ததும் மலைப் பிரதேசத்தை அடைந்தோம். மஸ்கட் சாலை ஓரங்களில் பேரிச்சை மரங்களே தென்படும். வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்ட வண்ணம் மலைகளில் சூழ்ந்திருந்த மூடுபனியை கிழித்துக் கொண்டு விரைந்த வண்ணம் இருந்தன.
சலாலாவில் இருந்து 27 கிலோ மீட்டர் தூரத்தில் பெய்ட் ஜார்பிஜ் என்ற இடம் உள்ளது. இங்கு தான் பழைய வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள - இஸ்லாமியர்களால் இறைதூதரக கருதப்பபடும் - யோபுவின் கல்லறை அமைந்துள்ளது. யோபு ஔஸ் என்று அழைக்கப்படும் இடத்தை சொந்த இடமாக கொண்டவராக கருதப்படுகிறது. மிகுந்த துயரங்களுக்கும் இன்னல்களுக்கும் உள்ளான யோபுவின் குடும்பம் இந்த கல்லறையின் அருகில் ஓடும் ஒரு நீரோடையில் குளித்து சரும நோய்களில் இருந்து குணம் பெற்று இழந்த செல்வத்தை மீண்டும் பெற்றதாக புத்தகங்கள் கூறுகின்றன.
மழைச்சாறலில் நடந்து யோபுவின் கல்லறையை அடைந்தோம். இந்தக் கல்லறையின் வெளியே யோபுவின் காலடித்தடத்தின் பதிவிருப்பதாக நம்பப்படுகிறது. இந்த மிகப்பெரிய காலடித் தடம் கடந்து சென்றால் 4.5 மீட்டர் நீளத்தில் 1.5 மீட்டர் அகலத்தில் யோபுவின் கல்லறை அமைந்துள்ளதை காணலாம். 210 வருடங்கள் வாழ்ந்ததாக நம்பப்படும் யோபு மிகப்பெரிய சரீரம் கொண்டவராக இதில் இருந்து நம்பப்படுகிறார்.
இந்தக் கல்லறை மலை மேல் அமைந்துள்ளது. பின்னர் மலையில் இருந்து இறங்கி சாம்பிராணி அருங்காட்சியகத்தை அடைந்தோம்.
சாம்பிராணி, மரங்களில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை பிசின் ஆகும். புகை போடுவதற்கு உபயோகப்படும் சாம்பிராணி மூன்று தரத்தில் கிடைக்கிறது. உயர்ந்த ரகத்திலான சாம்பிராணி வெள்ளை நிறத்தில் இருக்கிறது. இந்த சாம்பிராணிப் பசையை 10 மணி நேரம் குடிநீரில் ஊற வைத்து அந்த தண்ணீரை வடிகட்டி குடித்தால் உடல் வாதைகள் நீங்கும் என்கிறார்கள். மேலும் இந்த சாம்பிராணி பிசினை சுயிங்கம் மெல்லுவது போல் வாயில் போட்டு சுவைக்கிறார்கள். இந்த சாம்பிராணியில் இருந்து தைலமும் சோப்பும் தயாரிக்கப்படுகிறது.
இந்த அருங்காட்சியகத்தின் பெயர் தான் சாம்பிராணி அருங்காட்சியகமே தவிர உள்ளே பலவித கப்பல்களின் மாதிரிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஓமனின் பிரதான தொழில்களில் ஒன்று கப்பல் கட்டுதலும் கப்பல் சீரமைப்பதும்.
இந்த அருங்காட்சியகத்தில் முகமது நபி அவர்கள் அந்நாளைய ஓமன் சுல்தானுக்கு இஸ்லாமியராகும் படி அழைப்பு விடுத்த கடிதம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
இரவு ஓய்வெடுத்த பின் அடுத்த நாளுக்கு தயாரானோம்.
தர்பாத் என்று அழைக்கப்படும் நீரோடைகள் காண திட்டம். இந்தியர்களுக்கு இது சாதா நீரோடைகளாக இருப்பினும் இம்மக்கள் தங்கள் குடும்பத்துடன் இங்கு பெரிதும் உவகையுடன் வந்து நேரம் செலவிடுகிறார்கள்.
மலைகளில் தோன்றும் சுனைநீர்களில் இங்கு தண்ணீர் பெரிதாக ஓடுகிறது. மக்கள் படகு சவாரி செய்து மகிழ்கிறார்கள். இங்கு செயற்கை நீரூற்றுகளும் நிறுவப்பட்டுள்ளன.
தர்பாத் நீர்சுனைகள் அருகே கரும்பு சாறும் கிடைக்கிறது. குடித்துவிட்டு தொல்லியல் எச்சங்கள் இருக்கும் சும்ஹாரம் பகுதியை அடைந்தோம். போகும் வழியெங்கும் நூற்றுக்கணக்கான ஒட்டகங்கள் கூட்டம் கூட்டமாக சாலை ஓரங்களில் தென்பட்டன.
இந்த ஒட்டகங்கள் சிறிய உடலமைப்புடன் பழுப்பு நிறத்தில் தென்பட்டன. வேகமாக ஓடக்கூடிய இவை, ஒட்டகப் பந்தயங்களில் உபயோகப்படும் வகைகள். இவ்வகை ஒட்டகங்கள் தவிர்த்து வெள்ளை நிறம் மற்றும் கறுப்பு நிற ஒட்டகங்களும் இருக்கின்றன. பாலைவனங்களில் தென்படும் கறுப்பு ஒட்டகங்களே பாலைவனக் கப்பல்களாய் பயன்படுகின்றன. ஒட்டகத்தின் பாலும் மாமிசமும் இப்பகுதி மக்களால் பெரிதும் விரும்பி உண்ணப்படுகிறது.
யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய தளமாக பட்டியலிடப்பட்ட தளங்களில் சம்ஹுரம் ஒன்றாகும். சலாலாவை ஒட்டி அமைந்துள்ள சாம்பிராணி வர்த்தக இடங்களில் சம்ஹூரமும் பிரசித்தமான துறைமுகம் ஆகும். ஒட்டகங்களுக்கு பிடிக்காத சமாச்சாரங்கள் ஈக்களும் கொசுக்களும். மழைக்காலங்களில் ஈக்களும் கொசுக்களும் பெருகி விடுவதால் இவற்றை தவிர்க்க ஒட்டகங்கள் மலைப்பிரதேசங்களில் இருந்து நிலப்பகுதிக்கு இறங்கிவருகின்றன.
சம்ஹூரம் பார்த்துவிட்டு தோஃபார் மாநிலத்தின் முன்னாள் தலைநகரான மிர்பாத் பார்வையிட்டோம். மிர்பாத் ஒரு இயற்கை துறைமுகம். போர்ச்சுகீசியர் படையெடுப்பின்பொழுது ஓமானியர்கள் அவர்களை எதிர்த்துப் போரிட்ட கதைகள் இன்றும் பேசப்படுகின்றன.
ஹோட்டலுக்கு திரும்பும் வழியில் இயற்கைக்கு எதிரான ஒரு காட்சியைப் பார்த்தோம். குறிப்பிடப்பட்ட ஒரு இடத்தில் இயற்கையின் நியதியான புவி ஈர்ப்பை எதிர்க்கும் ஒரு நிகழ்வைப் பார்த்தோம். குறிப்பிடப்பட்ட இடத்தில் வாகனங்களின் மோட்டாரை அணைத்துவிட்டால் அவ்வாகனங்கள் இயற்கையை எதிர்த்து எதிர் திசையில் தானாக பயணிக்கின்றன. நிலத்துக்கு கீழே இயங்கும் காந்தசக்தியே அவ்வாகனங்களை இயக்குவதாக நம்பப்படுகிறது. வழிகாட்டியின் வார்த்தைகள் படி இது போன்ற இடங்கள் இத்தாலியிலும் தென் அமெரிக்காவிலும் இருக்கின்றனவாம்.
மூன்றாவது நாள். சலாலாவின் முக்செயில் கடற்கரையை அடைந்தோம். இங்கு அலைகள் ஆக்ரோஷத்துடன் வந்து கரையில் மோதுகின்றன. ப்ளோ ஹோல் (Blow Hole) என்று அழைக்கப்படும் துவாரங்கள் கடற்கரையின் ஓரத்தில் ஒரு பாறையில் அமைக்கப்பட்டுள்ளன. அலைகள் வந்து மோதும் பொழுது இந்த துவாரங்களீல் நீர் ஊற்று போல் பொங்கி பாய்கிறது.
இந்த முக்செயில் கடற்கரை எதிரே சுண்ணாம்புக் கல் மலைகள் தென் படுகின்றன.
பின்னர் மதிய உணவிற்குப்பின் சாம்பிராணி மார்க்கெட் அடைந்தோம். இங்கு வரிசையாக சோமாலியா, ஏமன் மற்றும் ஓமன் நாட்டு வியாபாரிகள் கடைகள் வைத்து சாம்பிராணி விற்கின்றனர்.
சாம்பிராணியை சலாலா ஞாபகமாக வாங்கிக்கொண்டு சலாலா விட்டுக் கிளம்பினோம். ஓமன் செல்வோருக்கு ஏமன் தேசத்து அருகில் உள்ள சலாலா மறக்க முடியாத சுற்றுப்பயணமாக அமையும்.