

தீபாவளி என்றாலே புத்தாடைகள், பலகாரங்கள், பட்டாசுகள், உறவுகளின் சந்திப்பு என மகிழ்ச்சியான தருணங்கள் நம் நினைவுக்கு வருகின்றன. ஆனால், இந்தக் கொண்டாட்டங்களைக் கடந்து நம் வீட்டு வாசலில் ஏற்றப்படும் ஒரு சிறிய அகல் விளக்கு நமக்குப் பல வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுத்தருகிறது. இருளை விரட்டும் அந்தச் சிறு ஒளி, நம் மனதிலும் நம்பிக்கையை ஏற்ற முடியுமா? இதைப் பற்றித்தான் இக்கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.
ஒரு சிறிய மண் அகல் விளக்கைப் பாருங்கள். அதில் எண்ணெய் ஊற்றி, திரியை வைத்து, தீபத்தை ஏற்றுகிறோம். அளவில் சிறியதாக இருந்தாலும், அது இருக்கும் இடத்தை ஒளிரச்செய்யும் தீபாவளி பாடம்.
அதுபோலத்தான் நம்முடைய வாழ்க்கையும்! நாம் பெரிய சாதனைகளைச் செய்தால்தான் பிறருக்கு உதவமுடியும் என்பதில்லை. ஒரு அன்பான வார்த்தை, சிறிய உதவி, ஆதரவான புன்னகைகூட ஒருவரின் வாழ்க்கையில் நம்பிக்கை ஒளியை ஏற்றிவிடும் .
அகல் விளக்கில் இருக்கும் திரி மெதுவாக எரிந்து ஒளி தருகிறது. இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது தியாகம். குடும்பத்திற்காகத் தங்கள் விருப்பங்களை ஒதுக்கிவைத்துப் பாடுபடும் பெற்றோர்கள், குழந்தை களின் எதிர்காலத்திற்காக உழைக்கும் பெரியவர்கள் என நம்மைச் சுற்றிலும் பலர் அமைதியாகத் தியாகம் செய்கிறார்கள். அவர்களுடைய அர்ப்பணிப்பை உணர்ந்து நன்றி கூறுவதும் தீபாவளியின் மகிழ்ச்சியை முழுமையாக்கும்.
இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் இருக்கிறது. ஒரு விளக்கிலிருந்து மற்றொரு விளக்கை ஏற்றினால், முதல் விளக்கின் ஒளி குறைவதில்லை. மாறாக, சுற்றிலும் ஒளி அதிகரிக்கிறது. மனிதர்களின் வாழ்க்கையிலும் இதே உண்மை பொருந்துகிறது. நம்முடைய அறிவு, அன்பு, அனுபவம் ஆகியவற்றைப் பிறருடன் பகிர்ந்து கொள்வதால் அவை குறைந்துவிடுவதில்லை. பிறரையும் வளரச் செய்வதில்தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது.
வாழ்க்கையில் சில நேரங்களில் துன்பங்களும் தோல்விகளும் இருளைப்போலச் சூழலாம். அப்போது எல்லாம் முடிந்துவிட்டதாக நினைக்காமல், ஒரு சிறிய நம்பிக்கையையாவது மனதில் ஏற்றிக்கொள்ள வேண்டும்.
இருள் எவ்வளவு அடர்த்தியாக இருந்தாலும், ஒளி தோன்றும்போது அது விலகத்தொடங்குகிறது. அதுபோலப் பொறுமையும் விடாமுயற்சியும் நம் பாதையைத் தெளிவாக்கும்.
தீபாவளியன்று வீடுகளை மட்டுமல்லாமல், நம் மனங்களையும் தூய்மைப்படுத்துவோம். தேவையற்ற கோபம், பொறாமை, பழைய மனக்கசப்புகள் ஆகியவற்றைக் கைவிட்டு, உறவுகளிடம் அன்புடன் பேசுவோம். இயற்கைக்கும் பிறரின் நலனுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் கொண்டாடுவதையும் நினைவில் கொள்வோம்.
பாட்டி, அம்மா காலத்து தீபாவளி! மறக்க முடியாத பொற்காலம்!
சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு கொண்டாடப்பட்ட தீபாவளியை நினைத்துப் பார்த்தால் இன்றைய தலைமுறையினருக்கு பல ஆச்சரியங்கள் தோன்றும்.. அன்றைய தீபாவளிக் கொண்டாட்டத்தில் ஆடம்பரத்தை விட அன்பும், விலையுயர்ந்த பரிசுகளை விடப் பாசமும் நிறைந்திருந்தன.
தீபாவளிக்கு சில நாட்களுக்கு முன்பே வீடுகளில் உற்சாகம் களைகட்டத் தொடங்கிவிடும். பாட்டி,அம்மா ஆகியோர் வீட்டிலேயே முறுக்கு, அதிரசம்,சீடை ,லட்டு போன்ற பலகாரங்களைத் தயாரிப்பாளர்கள்.. பலகாரங்கள் செய்யும் போது குழந்தைகள் அருகிலேயே நின்று கொண்டு எப்போது சாப்பிடக் கொடுப்பார்கள் என்று ஆவலுடன் காத்திருப்பார்கள். சில நேரங்களில் பெரியவர்களுக்குத் தெரியாமல் பலகாரங்களை எடுத்து சாப்பிடுவதும் உண்டு.
தீபாவளிக்கு முந்தைய நாள் வீட்டைச் சுத்தம் செய்து, வாசலில் அழகான கோலம் போட்டு, எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வார்கள்.. அதிகாலையில் எழுந்து, எண்ணெய் தேய்த்துக் குளித்து, லேகியம் சாப்பிட்டு, புத்தாடை அணிந்து பெரியவர்களிடம் ஆசீர்வாதம் பெறுவது அன்றைய வழக்கம்.
பட்டாசுகள் குறைவாக இருந்தாலும் அவற்றை கொளுத்துவதில் குழந்தைகளுக்கு இருந்த மகிழ்ச்சி அளவிட முடியாதது. உறவினர்கள் வீட்டுக்கு சென்று பலகாரங்களைப் பரிமாறிக் கொள்வார்கள். அண்டை வீட்டாருக்கும் கொடுத்து மகிழ்வார்கள். அப்போது தொலைக்காட்சியும்,கைபேசியும் இன்று போல் ஒவ்வொரு வீட்டிலும் இல்லை. நேரில் சந்தித்து பேசுவதிலும் ஒன்றாக அமர்ந்து உண்பதிலும் கிடைத்த மகிழ்ச்சி தனிதான்.
அந்த காலத்தில் வசதிகள் குறைவாக இருந்திருக்கலாம்.. ஆனால் குடும்பத்தினர் ஒன்றாக கூடி மகிழ்ந்த நேரங்கள் அதிகம்.. அந்த அன்பையும் ஒற்றுமையையும் இன்றைய தலைமுறையினருக்கும் நாம் எடுத்துச் சென்றால் ஒவ்வொரு தீபாவளியும் நம் மனங்களில் என்றும் அணையாத அகல் விளக்காக ஒளிரும்.
தீபாவளியின் உண்மையான அழகு வீட்டில் ஏற்றப்படும் விளக்குகளின் எண்ணிக்கையில் மட்டும் இல்லை; நம் உள்ளத்தில் ஏற்றப்படும் அன்பு, இரக்கம், நம்பிக்கை ஆகியவற்றில்தான் இருக்கிறது.
இந்தத் தீபாவளியில் நம்மால் முடிந்தவரை ஒருவருடைய துயரத்தைத் துடைத்து, இன்னொருவரின் முகத்தில் புன்னகையை மலரச் செய்வோம்.
ஒரு சிறிய அகல் விளக்கைப்போல, நம்மால் முடிந்த அளவுக்கு மற்றவர்களின் வாழ்க்கையிலும் ஒளி ஏற்றுவோம். அதுவே தீபாவளி நமக்குத்தரும் அழகான வாழ்க்கைப் பாடம்!