பாட்டி வீட்டுத் தீபாவளி: அந்தப் பலகார ருசியும் கூட்டுக் குடும்ப நினைவுகளும்!

கூட்டுக் குடும்பத் தீபாவளி கொண்டாட்டங்கள், பாட்டியின் கைப்பக்குவத்தில் முறுக்கு, அதிரசம் மற்றும் மறக்க முடியாத கிராமத்து நினைவுகள்.
தீபாவளி | Diwali Celebrations
தீபாவளி | Diwali CelebrationsImage credit: Chatgpt
சேலம் சுபா

சேலம் சுபா. 15 வயதில் துவங்கிய இவரது எழுத்து பயணம் தொய்வின்றி தொடர்கிறது. 200 க்கும் மேற்பட்ட தன்னம்பிக்கை கட்டுரைகள், 20 க்கும் மேற்பட்ட சிறுவர் கதைகள், எண்ணற்ற நேர்காணல்கள், பரிசு பெற்ற சிறுகதைகள், கவிதைகள் , புத்தகமாக வெளிவந்த சிறுகதைத் தொகுப்பு என இவரது எழுத்துகளின் பரிமாணம் விரிவடைந்து கொண்டே வருகிறது. தற்போது கல்கி ஆன்லைனில் தொடர்ந்து வெளிவரும் கட்டுரைகள் இவரது எழுத்துக்கு கிடைத்த அங்கீகாரம். இவரது வயது கூடினாலும், இவரது எழுத்து அன்றும் இன்றும் என்றும் இளமையின் புத்துணர்வு தரும்.

Updated on: 
MM strip
MM strip

இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கையில் நாம் தொலைத்துவிட்ட கிராமத்துத் தீபாவளியின் அசல் நினைவுகளையும், பாட்டியின் கைவண்ணத்தில் உருவான பலகாரங்களின் ரகசியங்களையும் இந்தத் தொகுப்பு கண்முன்னே கொண்டு வருகிறது. அந்த நாளின் சுவாரஸ்யமான தருணங்களையும் உறவுகளின் பாசப் பகிர்வையும் மீண்டும் முழுமையாக அனுபவிக்கத் தொடர்ந்து வாசியுங்கள்!

கூட்டுக் குடும்பத் தீபாவளி: பாட்டி வீட்டுப் பலகாரங்களும் மறக்க முடியாத நினைவுகளும்..

இன்றைய தலைமுறையினர் இழந்து வரும் அழகான நினைவுகளில் ஒன்று பாட்டி வீட்டில் தீபாவளிக் கொண்டாட்டங்கள். தாத்தா, பாட்டி, சித்தப்பா குடும்பம், பெரியப்பா குடும்பம், அத்தை மகள்கள், அண்ணன், தம்பிகள் அக்கா, தங்கைகள் என்ற அழகான கூட்டுக் குடும்பத்தின் பாசம் நேசம், பாட்டி சுடும் முறுக்கு அதிரசம் போன்ற பலகாரங்களின் தனிச்சுவை, பழைய தலைமுறையின் பழக்கவழக்கங்கள் ஆகியவை ஏறத்தாழ இன்று மறந்து விட்ட பாரம்பரியங்களுள் ஒன்று.

தீபாவளி என்றாலே புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள் எனப் பல மகிழ்ச்சிகள் நினைவுக்கு வரும். அதனுடன் இன்று புதுப் படங்கள், தொலைக்காட்சி கலைநிகழ்ச்சிகள் மற்றும் கைகளில் இருக்கும் செல்போனில் வாழ்த்து செய்திகள் என கழிகிறது.

ஆனால் கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்தவர்களுக்கு தீபாவளி என்பது இதையெல்லாம் தாண்டிய ஓர் அழகான அனுபவம். குறிப்பாக, பாட்டி வீட்டில் கொண்டாடிய தீபாவளியும், அவர் கையால் செய்யப்பட்ட பலகாரங்களும், உறவுகளுடன் கழித்த தருணங்களும் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத நினைவுகளாக மனதில் பதிந்திருக்கும்.

பாட்டி வீட்டில் தீபாவளிக் கொண்டாட்டத்தின் துவக்கமும் மறக்க முடியாத பலகார மேக்கிங்கும்.. பேக்கிங்கும்..

தீபாவளி வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே பாட்டி வீட்டில் கொண்டாட்டம் தொடங்கிவிடும். வீட்டைச் சுத்தம் செய்வதில் துவங்கி புத்தாடைகள் வாங்குவது, பலகாரங்களுக்குத் தேவையான பொருள்களைத் தயார் செய்வது என வீடே பரபரப்பாக இருக்கும்.

கூட்டுக் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை இருக்கும். ஒருவர் அரிசியை ஊறவைத்துக் காயவைத்தால், மற்றொருவர் மாவு அரைப்பார். இந்த மாவு அரைக்கும் வேலைக்கு கடைக்கு செல்ல பதின்ம வயதினர் போட்டி போடுவது வழக்கம்.

பாட்டியுடன் சேர்ந்து பெரியம்மா, அத்தை போன்ற பெரியவர்கள் பலகாரங்களைத் தயாரிக்க, குழந்தைகள் அவர்களைச் சுற்றிச் சுற்றி வருவார்கள். சமயத்தில் பெரியவர்களும் பலகாரங்களை ருசி பார்க்க அலைவதும் பாட்டியிடம் டோஸ் வாங்குவதும் அவ்வளவு ஆனந்தமாக இருக்கும்.

அந்தச் சமையலறையின் பாத்திரங்கள் உருளும் கடமுட சத்தங்களும், மணக்கும் கடலை எண்ணெயில் பலகாரங்கள் பொரிவதும், பலகாரங்கள் ஒருபக்கம் மறுபக்கம் உறவினர்களின் கலந்துரையாடலில் எழும் சிரிப்பொலியும் சேர்ந்து தீபாவளிக்கான மகிழ்ச்சியை முன்கூட்டியே வீட்டுக்குள் கொண்டுவந்துவிடும்.

இதையும் படியுங்கள்:
தையல் கடை முதல் பலகாரம் வரை - இன்றைய தலைமுறை தவறவிடும் பண்டிகை கொண்டாட்டம்!
தீபாவளி | Diwali Celebrations

ஆனால் பாட்டியின் கைப்பக்குவத்தில் உருவாகும் பலகாரங்கள் செம ருசி என்பதை மறுக்கவே முடியாது. அந்தக் காலத் தீபாவளி என்றாலே முறுக்கு, அதிரசம், சீடை, தேன்குழல், மைசூர்பாகு, லட்டு, தட்டை எனப் பலகாரங்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகும். மிஷினில் தந்து அரைத்த மாவை இரண்டு கண் மூன்று கண் சல்லடையில் சலிப்பதில் துவங்கி இத்தனைக்கு இத்தனை என்ற கணக்கில் பொட்டுக்கடலை மாவு சேர்த்து பாட்டி மாவைப் பதமாக பிசையும் விதம், அச்சில் முறுக்கைப் பிழியும் லாவகம், அதிரசத்துக்கான வெல்லப் பாகுவை பக்குவமாகக் காய்ச்சும் அனுபவம் என பலகார செய்முறைகள் ஒவ்வொன்றிலும் ஓர் தனித்துவம் இருக்கும். கை முறுக்கு வேண்டும் அதற்கெனவே உள்ள பெண்கள் அன்று மட்டும் ஆஜராகி விடுவார்கள்.

குறிப்பாக, அதிரசம் செய்வதில் பாட்டிக்கு நிகர் பாட்டிதான் என்று சொல்லும் அளவுக்குச் சிலரது கைப்பக்குவம் இருக்கும். அளவுகள் அனைத்தும் மனக்கணக்கில் இருந்தாலும், சுவையில் மட்டும் எந்தக் குறையும் இருக்காது. இன்று ரெடிமேட் குலாப் ஜாமூன் வந்துவிட்ட நிலையில் அன்று பாலை சுண்டக்காய்ச்சி பால்கோவா எடுத்து அதில் செய்யும் குலோப்ஜாமூனுக்கு இணை வேறில்லை.

பலகாரங்கள் தயாராவதற்கு முன்பே மேலே அடுக்கியிருக்கும் அதற்குரிய பாத்திரங்கள் சுத்தமாக கழுவி வெயிலில் காயும். அதில் பலகாரங்களை எடுத்து அடுக்கி வைக்கும் அழகே அழகுதான். குழந்தைகளின் பார்வையோ அந்த டப்பாக்கள் மீதுதான் இருக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமா? யாருக்கும் தெரியாமல் முக்கியமாக பாட்டிக்கு தெரியாமல் போற போக்கில் ஒரு முறுக்கையோ, சீடையையோ எடுத்துச் சாப்பிட்டுவிட்டு, ஒன்றும் தெரியாததுபோல் நிற்கும் அந்தக் குறும்பு நினைவுகள் இன்றும் பலரது மனதில் பசுமையாக இருக்கும்.

தீபாவளி | Diwali Celebrations
தீபாவளி | Diwali CelebrationsImage credit: Gemini AI

இதில் இன்னொரு விஷயமும் உண்டு. பலகாரங்கள் ருசியாக அமைந்து விட்டால் பாட்டி குஷியாகி விடுவார். இல்லையென்றால் அவ்வளவுதான் வீடே இரண்டு படும். பிரச்சனை இல்லாத சமையல் ஏது? தவறை சரி செய்ய மீண்டும் பெண்களிடையே ஆலோசனை கூட்டம் கூடும்.

எப்படியோ தீபாவளி அன்று பாட்டியின் பலகாரங்கள் பாராட்டு பெறுவது கண்கொள்ளாக் காட்சியாகி பாட்டியின் முகத்தில் வாய்கொள்ளா புன்சிரிப்பு மலரும்.

அடுத்தது தான் செமயாக இருக்கும். பின்ன வீட்டு பணியாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் துவங்கி தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் அக்கம்பக்கத்தினர் என அனைவருக்கும் வேறுபாடின்றி அந்தப் பலகாரங்களை பேக்கிங் செய்து வீட்டிலிருக்கும் சிறுவர் சிறுமியரிடம் தந்து அதை அவர்கள் கையால் தர வைப்பார்கள். இதனால் அந்தக் குழந்தைகளின் மனதில் அனைவரும் சமம் என்பதுடன் அன்புடன் பகிர்ந்து தரும் நல்ல பண்பும் வளர்ந்தது.

ஆனால் இன்று தனிக் குடித்தனம், வெளியூர் வேலை வாய்ப்பு பெருகி விட்ட நிலையில் பாட்டி வீடுகள் பொலிவிழந்து உள்ளதைக் காணமுடிகிறது. ஆனால் காலங்கள் மாறலாம். வீடுகளின் அமைப்பு மாறலாம்; தீபாவளியைக் கொண்டாடும் முறைகளும் மாறலாம். ஆனால், பாட்டி வீட்டில் கிடைத்த அன்பையும், உறவினர்களுடன் பகிர்ந்துகொண்ட மகிழ்ச்சியையும், கைப்பக்குவத்தில் உருவான பலகாரங்களின் சுவையையும் எளிதில் மறந்துவிட முடியாது.

இதையும் படியுங்கள்:
பாட்டி சொன்ன ரகசியங்கள்... இனி முறுக்கு அதிரசம் கெடாமல் இருக்கும்!
தீபாவளி | Diwali Celebrations

அதேபோல கடையில் வாங்கிய பலகாரங்கள் தீர்ந்துபோகலாம்; பட்டாசுச் சத்தங்கள் அடங்கிவிடலாம்; புத்தாடைகள் பழையதாகிவிடலாம். ஆனால், கூட்டுக் குடும்பத்தில் கொண்டாடிய தீபாவளி நினைவுகள் மட்டும் அதை அனுபவித்தவர்களுக்கு மனதின் ஓரத்தில் மறக்க முடியாத நினைவுகளாக என்றும் இனித்துக்கொண்டே இருக்கும்.

இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம், கடந்த கால நினைவுகளின் வழியாக உங்களை மீண்டும் அந்தப் பாட்டி வீட்டுப் பெருநாளுக்கு அழைத்துச் சென்று, குடும்ப உறவுகளின் உண்மையான பாசத்தையும் பாரம்பரிய பலகாரங்களின் அசல் சுவையையும் மனதுக்குள் மீட்டெடுக்க உதவும்.

logo
Kalki Online
kalkionline.com