

முதல் உலகப் போர் 1914 முதல் 1918 வரை நடந்தது.
இரண்டாவது உலகப் போர் 1939 முதல் 1945 வரை நடந்தது.
இந்த இரண்டு உலகப் போர்களின் மூலம் சுமார் 2 கோடி மக்கள் உயிரிழந்தார்கள்.
இதன் முலம் நாம் கற்று எடுக்க வேண்டிய தேவைகள் அதிகமாக இருக்கின்றன.
இப்போது ...
இஸ்ரேல்.. பாலஸ்தினம்,
இஸ்ரேல்.. லெபனான்,
ரஷ்யா.. உக்ரைன்,
அமெரிக்கா.. ஈரான் என பல போர்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
இந்த உலகத்தில் யாரும், யாருடைய உதவியையும் நாடாமல் இருக்க முடியும் என்றால், யாரும் யாருடனும் பேச வேண்டிய அவசியம் இருக்காது!
அப்படி பேச்சுக்கே இடமில்லாத போது அமைதி என்பது எளிதாக கிடைத்துவிடும் இல்லையா?
இப்படித்தான் அமைதியை நாம் அடைய வேண்டி இருக்குமா?
உலகில் எல்லோருமே பேசித்தான் காரியத்தை முடிக்க வேண்டி இருக்கிறது.
மனிதனுடைய தேவைகள் இருக்க தானே செய்கின்றன?
அவற்றைப் பெற அவன் பேசத்தான் செய்கிறான்.
இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனும், இந்த பிரபஞ்சத்தின் ஒரு அங்கமாக நினைத்தால், நம்மிடையே ஒரு நல்ல தீர்வு காண 'பாதை இல்லாத பாதையை' அமைக்க முடியும்!!!
இந்திய தத்துவஞானி 'ஜே. கே' என்று அழைக்கப்படும் ஜே. கிருஷ்ணமூர்த்தி தன் முன்னெடுப்புகளை இவ்வாறாக கூறுகிறார்.....( j krishnamurti philosophy for world peace)
நாம் சிறுவயதில் இருந்து சில கற்பிதங்களை கற்றுக்கொண்டு அதற்கு அடிபணிந்து நடக்கிறோம். அதனால் ஏற்படக்கூடிய 'பயம்' நம்முடைய சுயத்தை முன்னெடுக்காமல் நம்முடைய சுயநலத்தை முன்னெடுக்கிறது.
இதன் விளைவு பணம், புகழ், ஆசை ஆகிய மூன்று காரணிகளால் படிப்பு நம் சமுதாயத்தை ஒருங்கிணைக்காமல் ஓரங்கட்டுகிறது.
நாம் பிறரை 'மதிக்க வேண்டும்' என்கிற சமூக ஒழுக்கம் மாறி, 'போலித்தன்மை', 'பாசாங்கு' ஆகியவை கல்வி என்கிற பெயரில் விற்கப்படுவதால், அதையே நாம் விழுமியங்களாக பின்பற்றி நம்முடைய கட்டமைப்பை ஒழுங்கினமாக ஆக்கி வைத்துள்ளோம்.
எங்கே 'பயம்' இருக்கிறதோ அங்கே நம் முன் முடிவுகள் (presumption ) பிரதானப்படுத்தப்பட்டு, அதன் மூலம் 'பிளவுகள்', 'உட் பிளவுகள்' என நம் சமுதாயமானது பல கூறுகளால் - மதத்தால், மொழியால், இனத்தால், பிராந்தியத்தால் - பிளவுபட காரணமாக இருக்கிறது.
J. கிருஷ்ணமூர்த்தி ஒரு இருத்தலியல்வாதி.
அவர் தன் இருத்தலியல் வாதத்தை இவ்வாறு முன் மொழிகிறார்....
நாம் இந்த பிரபஞ்சத்தின் ஒரு அங்கம்; இந்த உலகத்தில் ஒரு குடிமகன் என்று நினைப்பு வரும்போது அங்கே தேசம் சார்ந்த சிந்தனைகள் அற்றுப் போகும்.
நம் தேவைக்காக பேசுகிறோம். அதற்கு ஒரு அடையாளம் மொழி. அடையாளம் நம்மை அழித்து விடக்கூடாது. நம்முடைய உணர்ச்சிகள் உணர்வுகளை மதித்து செயல்படும் போது மொழியானது ஒரு பயன்பாட்டு பொருளாக மாறும். மொழிப் பிரச்சனைகள் தீரும்.
மதம் சார்ந்த கோட்பாடுகள் நம் 'சிந்தனை சிறகுகளை' வெட்டி நம்மைப் பறக்க விடாமல் தடுக்கின்றன.
நம்முடைய 'கோட்பாடுகள்' நம்முடைய முன்னேற்றத்திற்கு பெரும் 'தடை கற்களாக' இருக்கினறன.
நம்முடைய 'கல்வி', அறிவு சார்ந்து இயங்குகிறது. அது 'இதயம்' சார்ந்து இயங்க வேண்டும்.
அறிவு சார்ந்து இயங்குவதால் அது அலட்சியத்தையும், அதிகாரத்தையும் வலியுறுத்துவதாக இருக்கிறது.
எப்போது நம்முடைய 'மனம்', 'உடம்பு' மற்றும் 'ஆன்மா' ஒன்று சேர நாம் வழி வகுக்கிறோமோ, அப்போதுதான் நாம் அமைதியான வாழ்க்கையை முன்னெடுக்க முடியும்.
பார்வையாளனும், பார்க்கப்படுபவனும் (observer and the observed) ஒன்றாக கலந்து அது மறையும் போதுதான் மனிதாபிமானம் திழைக்கும். அங்கே சகோதரத்துவம் உண்டாகும்.
நாம் 'கருத்து' முதல் வாதத்திற்கு இடம் கொடுக்க வேண்டும். அப்போது 'மாற்று சிந்தனைகள்' பிறக்கும்.
ஆசிரியர்கள் பணி என்பது ஒரு மாணாக்கனுடைய 'திறமையை' கண்டுபிடித்து வளர்த்து எடுப்பது.
அதை சமுதாய நலத்திற்காக பயன் அளிக்கும் வகையில் செயல் வடிவம் கொடுத்து ஊக்குவிப்பது அரசினுடைய வேலை.
எந்த மதமோ, எந்த தத்துவமோ, எந்த கோட்பாடோ ஒரு தனி மனிதனுடைய சிந்தனையை கட்டுப்படுத்தக் கூடாது.
எங்கே சுதந்திர சிந்தனை இருக்கிறதோ? அங்கே முழுமையான அறிவு வெளிப்படும்!
அதுவே உலக அமைதிக்கு (World peace) வழிகாட்டும்.
அப்போது, எல்லைகள் இல்லாத உலகம் பிறக்கும்.
இதயங்கள் விரியும் போது வார்த்தைகளுக்கு இடமே இல்லாமல் போய்விடும்.
'உலக சகோதரத்துவம்' நம்மை அழைக்கட்டும்!
அதுவே நம்மை வழி நடத்தட்டும்!!
போர்கள் இல்லாத உலகம் படைப்போம்!!