

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே தாமிரபரணி ஆற்றின் கரை ஓரமாக அமைந்துள்ள பழமையான கோவில் குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில். இந்த கோவில் ராமாயண காலத்தோடு தொடர்புடையது.
ராவணன் சீதையை சிறை பிடித்து சென்ற போது சீதை தன் கழுத்தில் கிடந்த முத்து மணி மாலையை வீசிய இடம் தான் இந்த குரங்கணி முத்து மாலை அம்மன் கோவிலாகும்.
சீதை தன் கழுத்தில் கிடந்த இந்த மாலையை வீசிய போது அந்த இடம் பிரகாசமாக ஜொலித்தது. இதனைக் கண்ட அந்த ஊரைச் சார்ந்த பனை அடியான் என்பவர் முத்து மணி மாலையை கண்டெடுத்து ஊர் பொதுமக்கள் சார்பாக இந்த இடத்தில் ஒரு சிறிய கோவிலை கட்டினார்.
அன்றிலிருந்து இந்த அம்மன் கோவில் நோய் தீர்க்கும் அம்மனாக போற்றப்படுகிறது. இதன் அருகில் உள்ள தாமிரபரணி நீரே இக்கோவில் தீர்த்தமாக வழங்கப்படுகிறது.
ஆனித் திருவிழா மிக சிறப்பாக நடைபெறும். தைத்திரு மாலை பூஜை மிகச் சிறப்பாக நடைபெறும்.
அம்மன் கருவறையில் நான்கு கரங்களுடன் கையில் கிளியுடன் காட்சியளிக்கிறார். இங்குள்ள அம்மனை வழிபட்டால் பாவ விமோசனம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சீதா தேவியை ராமன் மீட்க சென்ற போது வானர சேனைகள் அணிவகுத்து நின்ற இடம் தான் இந்த பகுதி ஆகும். குரங்குகள் அணிவகுத்து சென்றதால் இந்த இடம் குரங்கணி என பெயர் பெற்றது. சீதாதேவியின் முத்துமாலை விழுந்த இடம் என்ற காரணத்தால் முத்துமாலை என பெயர் பெற்றது.
நவாப் ஆட்சி காலத்தில் இந்த கோவிலை ஒட்டி உள்ள சுற்றுப்புற சுவர் தாமிரபரணி நதிநீரை மறைப்பதால் அதை நேர் செய்வதற்காக தனது குதிரையில் பரிகாரங்களுடன் இந்த இடத்திற்கு வந்தார். கோவிலின் சுற்றுச்சுவரை அகற்றும்படி கூறினார். அங்குள்ள மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அங்குள்ள மக்கள், "நீங்கள் இதை அகற்றினால் உங்களை முத்துமாலை அம்மன் கேள்வி கேட்பார்" என்றார்கள். உடனே நவாப், "நான் அந்த அம்மனை மூன்று முறை அழைக்கிறேன் அவர் வருகிறாரா என்று பார்ப்போம்" என்றார்
அதன்படியே நவாப் 'முத்து மாலை அம்மன்' என மூன்று முறை சத்தமாக கூறினார். உடனே கருவறையில் இருந்து பயங்கரமான இடி சத்தம் கேட்டது. இந்த அதிர்ச்சியில் நவாப்பும் குதிரையும் மயங்கி சரிந்தனர்.
பின்னர் கோவில் பூசாரி கோவில் தீர்த்தத்தை இவர்கள் மீது தெளித்து மயக்கத்தில் இருந்து எழுப்பினார்.
தன் தவறை உணர்ந்த நவாப் சுற்றுச் சுவரை அகற்றாமல் மேலும் தன் தவறுக்காக இந்த கோவிலுக்கு இரண்டு மண் குதிரைகளை காணிக்கையாக வழங்கினார்.
1957 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடந்தது. அம்மனின் இடப்புறம் நாராயணன், ஸ்ரீதேவி, பூதேவி சன்னதிகள் உள்ளன. ஆணிதிருவிழாவின்போது கருடன் வானத்தில் வட்டமிடும்.
இந்த அதிசயம் இன்று வரை நடைபெற்று வருகிறது. அம்மனுக்கு பூஜை முடிந்தவுடன் கோவில் வீடு என்ற வீட்டிலிருந்து சாம்பார் சாதம் பிரசாதமாக வழங்கப்படும். இன்றும் ஆணித்திருவிழாவின் போது மதியம் சாம்பார் சாதம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த கோவில் காலை 5 மணி முதல் ஒரு மணி வரையும் மாலை 5 மணி முதல் 8 மணி வரையும் நடை திறந்து இருக்கும்.
ஆனி மாதம் கடைசி செவ்வாய் அன்று அம்மனுக்கு சொக்க தங்கத்தால் ஆன திருமேனி அலங்காரம் செய்யப்படும். காசியில் சக்தியின் காதணி விழுந்த இடம் விசாலாட்சி கோவில் ஆனது. அதேபோன்று இங்கு சீதா தேவியின் முத்து மணி மாலை விழுந்த இடம் ஆதலால் இந்த அம்மன் முத்து மாலை அம்மன் என பெயர் பெற்றாள்.
ஆனித் திருவிழாவின் போது பக்தர்கள் மாவிளக்கு மரக்கட்டைகளால் ஆன மரபொம்மைகள், கை கால் பகுதிகள் என நேர்ச்சை கடன் செலுத்துகிறார்கள். இந்தக் கோவிலுக்கு வந்தால் நோய் நொடிகள் அகலும் பாவ விமோசனம் கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் இருந்து 3 கிலோமீட்டர் மற்றும் தென் திருப்பேரை இடத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஏரல் குரங்கணி முத்து மாலை அம்மன் கோவில்!.