
மாதா வைஷ்ணோ தேவி கோவில் (Vaishno Devi Temple), அல்லது வைஷ்ணவ தேவி கோவில், என்பது இந்தியாவில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வைஷ்ணோ தேவி மலையில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும். சக்தி வழிபாட்டிற்கு மிகவும் பெயர்பெற்ற புனிதத் தலமான இக்கோவிலில் பிரதான தெய்வம் மாதா ராணி, வைஷ்ணவி போன்ற பெயர்களால் வழிபடப்படுகிறார்.
வட இந்தியாவில் மிகவும் போற்றப்படும் வழிபாட்டுத்தலங்களில் இதுவும் ஒன்றாகும். இக்கோவில் 5200 அடிகள் உயரத்திலும், கத்ரா என்ற ஊரிலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் (7.45 மைல்கள்) தொலைவிலும் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் சுமார் 8,00,000 பக்தர்கள் வைஷ்ணவி தேவி கோவிலுக்கு அன்னையின் அருள் வேண்டி வந்து தமது காணிக்கைகளைச் செலுத்துகின்றனர்.
வைஷ்ணோ தேவி கோயிலுக்குச் செல்ல சிறந்த நேரம்:
நீங்கள் வைஷ்ணோ தேவி கோவிலுக்கு பயணம் செய்ய திட்டமிட்டிருந்தால், நல்ல வானிலைக்கு உகந்ததாக இருப்பது நல்லது. அக்டோபர் முதல் மார்ச் அல்லது ஏப்ரல் வரை நீடிக்கும் இலையுதிர் மற்றும் குளிர்காலம் ஜம்முவுக்குச் செல்ல சிறந்த நேரம்.
ஜம்முவில் பருவமழை ஜூலை முதல் செப்டம்பர் வரை நீடிக்கும். இது இப்பகுதியில் மிதமான முதல் கனமழையைக் கொண்டுவருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கான வாய்ப்புகள் காரணமாக இந்த நேரத்தில் கோயிலுக்குச் செல்வது நல்லதல்ல.
வைஷ்ணோ தேவி கோவிலுக்கு எப்படி செல்வது:
வைஷ்ணோ தேவி கோவிலுக்கு நீங்கள் இரண்டு வழிகளில் பயணம் செய்யலாம் - 15 கிமீ மலையேற்றம் அல்லது ஹெலிகாப்டர் சவாரி.
வைஷ்ணோ தேவி கோவிலுக்கு மலையேற்றம்:
உங்கள் வேகம் மற்றும் நீங்கள் எடுக்கும் இடைவெளிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து, மலையேற்றம் மூன்று முதல் ஆறு மணி நேரம் வரை நீடிக்கும். நீங்கள் முழு வழியிலும் நடக்கத் தேர்வு செய்யலாம் அல்லது பால்கி அல்லது போனி சவாரியைத் தேர்வுசெய்யலாம். எல்லோரும் இந்த சவாரிகளை தொடக்கப் புள்ளியிலும், சஞ்சி சாட்டிலும் வழங்குகிறார்கள்.
நடைபாதை, பாதுகாப்பான பாதையில் மிதமான ஏறுவரிசையைக் கொண்டுள்ளது. நீங்கள் மேலே நடக்கிறீர்கள் என்றால், பால்கிஸ் மற்றும் குதிரைவண்டிகளைக் கவனித்துக் கொள்ளுங்கள் - அவை மிக வேகமாக நகரும், மேலும் நீங்கள் அவர்களின் வழியில் இருந்து விலகி இருப்பது நல்லது.
வைஷ்ணோ தேவி கோவிலுக்கு ஹெலிகாப்டரில் செல்ல:
ஹெலிகாப்டர் சவாரி உங்களை கத்ராவில் உள்ள ஹெலிபேடிலிருந்து சஞ்சி சாட் வரை அழைத்துச் செல்கிறது. மணிக்கணக்கான மலையேற்றத்தை 5 நிமிட விரைவான பயணமாக குறைக்கிறது. சஞ்சி சாட்டில் இறங்கிய பிறகு, நீங்கள் சன்னதியை அடைய சுமார் 2.5 கிமீ தூரம் உள்ளது - நீங்கள் மேலே நடக்கலாம் அல்லது குதிரைவண்டி/பால்கி சவாரியைத் தேர்வு செய்யலாம்.
டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் - சில நேரங்களில் அவை 2-3 மாதங்களுக்கு முன்பே விற்றுத் தீர்ந்துவிடும். ஹெலிகாப்டர்களில் பைலட்டுடன் 4-5 பேர் அமர்ந்துள்ளனர். வைஷ்ணோ தேவி ஆலய வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.
வைஷ்ணோ தேவியின் கதை:
முன்னொரு காலத்தில் விஷ்ணு மற்றும் பிரும்மாவின் மனைவிகளான லஷ்மி, சரஸ்வதி மற்றும் பார்வதியின் அவதாரமான காளி தேவி என்ற மூவரும் இந்த உலகில் அதர்மத்தை ஒழித்து உலகை நல் வழிப்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் தமது சக்திகளில் சிலவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு ஹோம குண்டத்தில் வைத்தபோது அந்த சக்திகள் ஒன்றிணைந்து பெரிய தீப்பிழம்பாக மாறியது. அந்த தீப்பிழம்பின் ஒளி வெள்ளத்தில் இருந்து அழகிய பெண் ஒருவள் தோன்றினாள். அவள் அந்த மூன்று தேவிகளின் முன்னிலையில் சென்று ‘என்னை எதற்காகப் படைத்தீர்கள். நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டாள். அவர்கள் அந்த தேவி, தென் இந்தியப் பகுதியில் இருந்த ரத்னாகர் என்பவரின் மகளாகப் பிறந்து, அந்த மனிதப் பிறப்பில் அனைவரும் ஏற்கும் பெண்ணாக இருந்து கொண்டு மக்களை நல்வழிப் படுத்தி, உலகில் ஆன்மீக எண்ணத்தை மக்களிடையே வலுப்படுத்த வேண்டும் என்றும், அதன் பின் அவள் விஷ்ணுவை காணுவாள் என்றும் அப்போது அவருடன் அவள் கலந்து விடுவாள் என்றும் கூறினார்கள்.
அதற்கு அடுத்த நிமிடமே பூமியில் அவர்கள் குறிப்பிட்ட ரத்னாகரின் மனைவி கர்ப்பம் அடைந்தாள். அந்த கர்பத்தில் இருந்த அணுவில் வைஷ்ணவி கலந்துவிட அவளே பத்து மாதத்திற்குப் பின்னர் அவர்களுக்குப் பெண்ணாகப் பிறந்தாள். சிறு வயது முதலேயே ஒரு வித்யாசமானப் பெண்ணாகவே வளர்ந்து வந்தவள் ஆன்மீக விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி வந்தாள்.
இப்படியாக இருக்கையில் ஒரு கட்டத்தில் தனியே அமர்ந்து வீட்டின் ஒரு மூலையில் தியானம் செய்யத் துவங்கியவள், ஒரு நாள் வனப் பகுதிக்குச் சென்று அங்கேயே தங்கி தியானம் செய்யலானாள். அவளது பிறப்பின் ரகசியத்தை அறியாத அவளுடையப் பெற்றோர்கள் அவள் செயலைக் கண்டு மனம் ஒடிந்து போனார்கள். ஆனால் எத்தனை முயன்றும் அவர்களால் அவளை சம்சார வாழ்க்கைக்கு திரும்ப கொண்டு வர இயலவில்லை. பண்டிதர்கள் சிலரிடம் அது பற்றிக் கேட்டபோது அவர்கள் ஜாதகங்கள் மற்றும் தாந்த்ரீக மந்திர முறைகளில் அனைத்தையும் ஆராய்ந்து பார்த்தப் பின் அவள் ஒரு தெய்வப் பிறவியாகவே இருக்க வேண்டும் என்றும் ஆகவே அவள் செல்லும் வழியிலேயே விட்டு விடுமாறும் அவளது செய்கைகளை தடுக்க வேண்டாம் எனவும் அறிவுரைக் கூறினார்கள். அதன் பின் கானகத்திற்குச் சென்ற வைஷ்ணவி வீட்டிற்கு திரும்பி வரவே இல்லை. அங்கேயே தங்கி விட்டாள். பெற்றோர்களால் அவளைக் கண்டு பிடிக்கவும் முடியவில்லை.
வைஷ்ணவி காட்டில் தங்கி இருந்த நேரத்தில், தனது மனைவியான சீதையை தூக்கிக் கொண்டு போய் விட்ட ராவணனுடன் யுத்தம் செய்ய லங்காவிற்குக் கிளம்பிச் சென்ற ராமபிரான், அந்த வழியே சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரைக் கண்ட வைஷ்ணவி விஷ்ணுவின் அவதாரமான ராமரை அடையாளம் கண்டு கொண்டு தன்னை மணந்து கொள்ளுமாறு கேட்டாள். ஆனால் ராமபிரானோ அவள் வந்த வேலை முடியவில்லை என்பதினால் அவளை மணந்து கொண்டு அவள் மனிதப் பிறவி வாழ்க்கைக்கு முடிவு கொடுக்க தகுந்த நேரம் அது அல்ல என்பதைக் கருத்தில் கொண்டு அவளிடம் தான் இலங்கைக்குச் சென்றுவிட்டு திரும்பும்போது தன்னை மீண்டும் அடையாளம் கண்டு கொண்டால் அவளை மணப்பதாக உறுதி கொடுத்துவிட்டுச் சென்றார்.
அதன்படி அவர் ராவணனை வதம் செய்துவிட்டு திரும்பி வந்தார். திரும்பும் வழியில் காட்டில் தங்கி இருந்தவர், சீதை மற்றும் லக்ஷ்மணனிடம் தான் அழைக்கும்வரை வெளியில் வர வேண்டாம் எனக் கூறி விட்டு ஒரு கிழவரைப் போல வெளியில் அமர்ந்து கொண்டார். அப்போது அந்த வழியே சென்று கொண்டு வைஷ்ணவியிடம் அந்த கானகத்தில் அவள் ஏன் தனியே சுற்றித் திரிகிறாள் என கேட்க, அவள் ராமரின் அங்க அடையாளங்களைக் கூறி விட்டு அவரை தேடிக் கொண்டு அலைவதாகக் கூறினாள். உடனே தன்னுடைய சுய உருவைக் காட்டிய ராமபிரான் வைஷ்ணவியால் தன்னை அடையாளம் கண்டு பிடிக்க முடிவில்லை என்பதினால், இனி கலியுகத்தில் வந்து அவளை மணப்பதாகவும், அதுவரை அவள் தன்னுடைய ஆன்மீக சக்தியைப் பெருக்கிக் கொண்டு மக்களை நல்வழிப்படுத்திக் கொண்டு இருக்குமாறும் கூறினார்.
அதனால் மனம் வருந்திய வைஷ்ணவி உடனே அங்கிருந்து கிளம்பி ஜம்முவைத் தாண்டி கட்ரா எனும் பகுதியில் இருந்த திரிகூட மலைப் பகுதிக்குச் சென்றாள். அங்கு ஒரு ஆஸ்ரமத்தை அமைத்துக் கொண்டு அங்கு தவம் புரியலானாள். அவளிடம் சீடர்கள் பலரும் வந்து சேர்ந்தார்கள். அவள் தனது ஆன்மீக ஆற்றலினால் பலரது மனத் துயரங்களை தீர்க்கும் வலிமைக் கொண்டவள் ஆயினாள். ஆகவே அவளை நாடி பலரும் வரத் துவங்கினார்கள்.
அதே நேரத்தில் அதே மலைப் பகுதியில் கோரக்னாத் எனும் முனிவரும் தம் சீடர்களுடன் இருந்தவாறு தவம் செய்து வந்தார். ஆகவே வந்துள்ளவள் யார், அவளுடைய சக்தி என்ன என்பதையெல்லாம் அறிந்து வருமாறு அவருடைய பிரதான சீடரான பைரோன்னாத் என்பவரை அனுப்பினார். வைஷ்ணவியின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்த பைரோன்னாத் அவளிடம் வாள், வில், அம்பு போன்றவை இருந்ததையும், சர்வ சாதாரணமாக அவளை மிருகங்கள் சுற்றி அலைவதையும், முக்கியமாக சிங்கம் அவளிடம் நெருக்கமாகப் பழகுவதையும் கண்டு அவள் மீது ஆசைக் கொண்டு அவளை தானே மணக்க விரும்பி அவளை சுற்றித் திரியத் துவங்கினாள்.
அடுத்த சில நாட்களில் ஒரு விருந்து நடந்தது. அதில் அனைவரும் கலந்து கொண்டார்கள். அப்போது அங்கு வந்த வைஷ்ணவியின் கையை பிடிக்க பைரோன்னாத் விரும்பியபோது அவரிடம் இருந்து தப்பி ஓடிய வைஷ்ணவி காஷ்மீரத்தில், தற்போது வைஷ்ணோ தேவி ஆலயம் உள்ள குகையில் சென்று புகுந்துக் கொண்டாள். அங்கும் அவளைத் தொடர்ந்து சென்ற பைரோன்னாத்தை வேறு வழி இன்றி அவள் அவரது தலையை சீவிக் கொன்று விட, அவருடைய துண்டிக்கப்பட்ட தலை அங்கிருந்து சற்று தூரத்தில் சென்று விழுந்தது. துண்டிக்கப்பட்ட அவருடைய தலை மரணம் அடையும் தருவாயில் பைரோன்னாத் அவளிடம் மன்னிப்புக் கேட்க, அதே சமயத்தில் அவளுக்கும் காளி, லஷ்மி மற்றும் சரஸ்வதி தேவிகள் படைத்த தன்னுடைய சுய உருவம் கிடைக்கபெற்றாள்.
‘இனி அந்த குகையிலேயே தங்கி இருந்தவாறு தன்னிடம் வந்து சரண் அடையும் மக்களை நல்வழிப் படுத்திஉலகில் அமைதியை ஏற்படுத்துவேன்’ என்று அருள் மொழியைக் கூறினாள். அதன் பின் பைரோன்னாதிற்கு முக்தி கிடைக்க அருளி விட்டு, அவருடைய தலை விழுந்த இடமும் ஒரு வழிபாட்டுத் தலம் ஆகும் என்றும் இனி அங்கு வந்து தன்னை தரிசிக்கும் மக்கள் பைரோன்னாத் சன்னதிக்கும் சென்று வணங்காவிடில் அவர்களின் பயணம் பலனுள்ளதாக அமையாது என்றும் கூறி அங்கே வைஷ்ணோ தேவியாக அமர்ந்து கொண்டாள்.
இப்படியாக வைஷ்ணோ தேவி ஆலயம் ஜம்மு காஷ்மீர் பகுதியில் அமைந்ததாகக் கூறுகிறார்கள். அந்த ஆலயத்தின் கருவறையில் சுமார் ஐந்தரை அடி உயர பாறையில் மூன்று தலைகளுடன் மட்டும் காட்சி அளிக்கும் தேவியே வைஷ்ணோ தேவி என்றும் அந்த மூன்று தலைகளும் லஷ்மி, சரஸ்வதி மற்றும் காளி தேவியைக் குறிக்கின்றன என்றும் கூறுகிறார்கள்.