

தஞ்சை மாவட்டம் , பட்டுக்கோட்டைப் பகுதியில் பல்வேறு சித்து விளையாட்டுகள் புரிந்தும், மக்களின் பல வகைப்பட்ட நோய்களைக் குணப்படுத்தியும் , அந்தப் பகுதி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து, இவ்வூரில் ஜீவசமாதி அடைந்தவர் ஸ்ரீ வெங்கிடு சுப்பையா ஸ்வாமிகள்.
ஸ்வாமிகள் பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள புக்கரம்பை என்ற கிராமத்தில், சாதாரணமான, எளிமையான பிராமண குடும்பத்தில் 1800ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் பிறந்தார். இளம் வயது முதல் ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டவர், சிறு வயதிலேயே, வட இந்தியாவில் உள்ள சித்தர்களுடன் சேர்ந்திருந்தார்.
அவர்களிடம் ஆழ்நிலைத் தியானம், சித்துகள் முதலியவைகள் பயிற்சி பெற்று, பல ஆண்டுகளுக்குப் பிறகு , பட்டுக்கோட்டைக்குத் திரும்பி வந்தார்.
இப்பகுதிகளில் பதினைந்து ஆண்டுகள் பல சித்துகள் புரிந்தார். வயிற்று வலி, தீராத உடல் உபாதைகள் போன்ற பல நோய்களுக்குத் தன்னை நாடி வந்தவர்களுக்குத் திருநீறு கொடுத்து நோய்களைக் குணமாக்கினார்.
அவருடைய சிஷ்யர் மாணிக்க முதலியாரின் நாட்டுமருந்துக் கடையிலிருந்து நவபாஷாணங்கள் வாங்கி சாப்பிடுவாராம். அதன் விளைவாக அவரது உடலில் எந்த பாதிப்போ, மாற்றமோ ஏற்பட்டதில்லை. அந்தக் குறிப்பிட்ட நாட்டு மருந்துக் கடை 4 அல்லது 5 தலைமுறைகளாக இன்றளவும் இருந்து வருகிறது.
தன்னுடைய மற்றொரு சிஷ்யர் நரிவிழிக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரைத் தன்னுடன் ஆகாய மார்க்கமாக அழைத்துச் சென்று ராமேஸ்வரம் உள்ளிட்ட பல கோயில்களை தரிசனம் செய்ய வைத்துள்ளார். மண்ணை உருண்டையாக உருட்டி அவரது குடும்பத்தினரிடம் கொடுத்து, வீட்டில் யாருக்கேனும் உடம்பு சரியில்லாமல் போனால் இதிலிருந்து சிறிது மண்ணை எடுத்து, நீரில் சேர்த்து குடித்தால் எந்த நோயும் குணமாகும் என்று அருளுரை கூறினார்.
குளிர் ஜுரம் (ஜன்னி) வந்து இறக்கும் தருவாயில் இருந்தவரை தயிரைக் கொடுத்து உயிரைக் காப்பாற்றியுள்ளார்.
பட்டுக்கோட்டை தாசில்தார் வயிற்று வலியால் அவதிப்பட்டு துடித்தார். அவர் ஸ்வாமிகளைப் பார்க்க வந்தார். ஸ்வாமிகள் தாசில்தாரைக் கண்டதும் வேறு வழியில் ஓட ஆரம்பித்தார். தாசில்தாரும் ஸ்வாமிகள் பின்னால் ஓடினார்.
ஸ்வாமிகள் ஓடி நின்ற இடம் மீன் மார்க்கெட். ஒரு கருவாட்டுத்துண்டை எடுத்து அவரைக் கடிக்கச் சொன்னார். அப்படி அவர் கடித்த சில நிமிடங்களில், வயிற்று வலி பூரணமாகக் குணமாகிவிட்டது.
ஸ்வாமிகள் ஜாதி - மதம், ஏழை - பணக்காரன், சைவம் - அசைவம் போன்ற பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டவர்.
1873 ம் ஆண்டு , தான் ஜீவசமாதி அடையும் நாளை, நாற்பது தினங்களுக்கு முன்பே, ஆவணி மாத மூலம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி அடைவேன் என்று தன் பக்தர்களிடம் கூறியவர், தான் சொன்ன அதே நாளில், உட்கார்ந்த நிலையில், தற்போது ஆலயம் அமைந்திருக்கும் இடத்தில் ஜீவ சமாதி அடைந்தார்.
இன்றும் தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளைத் தீர்த்து, அருள்பாலித்து வருகிறார். தினசரி பூஜை நடந்து வருகிறது. ஆண்டுதோறும் குரு பூஜை பத்து நாட்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
பட்டுக்கோட்டை வியாபாரிகளுக்கு ஸ்வாமிகள் பேரில் அபார பக்தி, நம்பிக்கை. அதன் காரணமாக, ஸ்ரீ வெங்கிடு சுப்பையா ஸ்வாமிகள் துணை என்ற பெயரில் லாரிகள், வியாபார ஸ்தலங்களில் பெயர்ப் பலகைகள் இருப்பதைக் காணலாம்.
இவரது ஜீவசமாதி, பட்டுக்கோட்டை பெரியகடைத் தெருவில் மேற்குக் கோடியில் ,தஞ்சாவூர் செல்லும் பஸ் ரூட்டில் அமைந்துள்ளது. அந்தப் பகுதிக்கு சாமியார் மடம் என்று பெயர். இந்தப் பகுதி பட்டுக்கோட்டையில் முக்கியமான லேண்ட் மார்க் ஆகும்.