

மலர்கள் என்றாலே மணமும் அழகும் மட்டும்தானா? இல்லை! மலர்களின் வழியாகவும் மனதுக்கு உயர்ந்த சிந்தனைகளை உணர்த்த முடியும் என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டியவர் பாண்டிச்சேரி அன்னை. ஸ்ரீ அரவிந்தரின் ஆன்மிகப் பாதையில் இணைந்து, மலர்களுக்குத் தனித்துவமான ஆன்மிகப் பொருள்களை வழங்கிய அன்னையின் வாழ்க்கையும் ஆன்மிக மலர்கள் மகத்துவமும் வியப்பூட்டுபவை.
ஸ்ரீ அரவிந்தர் 1910-ஆம் ஆண்டு புதுச்சேரிக்கு வந்து ஆன்மிகச் சாதனையில் ஈடுபட்டார். பின்னர் அன்னையின் துணையுடன் 1926-ஆம் ஆண்டு ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம் உருவானது. அன்னை என்று அழைக்கப்படும் மிர்ரா அல்ஃபாஸா, ஆசிரமத்தில் மலர்களை ஆன்மிக உணர்வுகளை வெளிப்படுத்தும் அழகிய மொழியாகப் பயன்படுத்தினார்.
1927-ஆம் ஆண்டு முதல் மலர்களுக்குச் சிறப்புப் பெயர்களையும் ஆன்மிகக் குறியீடுகளையும் வழங்கத் தொடங்கிய அன்னை, நூற்றுக்கணக்கான மலர்களின் தனித்துவமான செய்திகளை எடுத்துரைத்தார். இவை பின்னர் Flowers and Their Messages, The Spiritual Significance of Flowers போன்ற நூல்களாகத் தொகுக்கப்பட்டன.
ஒவ்வொரு மலரும் உணர்த்தும் செய்தி என்ன?
தாமரை:
வெள்ளைத் தாமரை அன்னையின் உணர்வுநிலையையும், சிவப்புத் தாமரை தெய்வீக அவதாரத்தையும் குறிப்பதாக அன்னையின் மலர் மரபில் விளக்கப்படுகிறது. தாமரை சேற்றில் மலர்ந்தாலும் தூய்மையாக இருப்பதால், உலகின் சவால்களுக்கு மத்தியிலும் மனத்தூய்மையுடன் வாழ்வதற்கான நினைவூட்டலாகவும் அமைகிறது.
சிவப்பு ரோஜா:
அன்பையும் சரணாகதியையும் குறிக்கிறது. வெள்ளை ரோஜா தூய்மையான ஆன்மிக அன்பின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
செம்பருத்தி:
தெய்வீக சக்தியைக் குறிக்கும் மலராக அன்னையின் மலர் விளக்கங்களில் இடம்பெறுகிறது.
வெள்ளை காகித மலர்கள்:
தூய்மை, அமைதி, பாதுகாப்பு, மனத்தெளிவு போன்ற உயரிய பண்புகளை நினைவூட்டுகின்றன. எனினும், ஒவ்வொரு வெள்ளை மலருக்கும் ஒரே பொருள் என்று கூறமுடியாது; அன்னையின் மரபில் மலரின் வகைக்கு ஏற்ப அதன் குறியீடு மாறுபடும்.
எருக்கம் பூ:
மன உறுதியையும் தடைகளையும் எதிர்கொள்ளும் துணிவையும் நினைவூட்டுவதாகக் கருதப்படுகிறது..
நாகலிங்க பூ:
அதன் தனித்துவமான தோற்றத்தால் இறைச் சிந்தனையை தூண்டுகிறது.
பாரிஜாத மலர்கள்;
தெய்வீக அருளையும் மனநிறைவையும் தருகிறது.
செண்பகப்பூ;
இனிய மணத்தால் மனதிற்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் தருகிறது.
துளசி இலைகள்;
தூய்மையின் அடையாளமாகப் போற்றப்படுகிறது..
அல்லி பூ:
செல்வம் மற்றும் வளம் தருகிறது.
பூவரசம் பூ:
உடல் ஆரோக்கியம் தருகிறது..
சாமந்தி:
தெய்வீக சக்தி தருகிறது.
நந்தியாவட்டை;
மனதை தூய்மையாக வைத்திருக்கிறது...
சிவப்பு செம்பருத்தி;
ஆன்மிக சக்தி தருகிறது.
அன்னைக்கு மலர்களைச் சமர்ப்பிப்பதன் தத்துவம்;
நாம் அன்னைக்கு மலர்களைச் சமர்ப்பிக்கும்போது அந்த மலரின் மலர்ச்சி மற்றும் புத்துணர்ச்சி நமது உள்மனதின் பக்தியையும், அன்னை மீதான நமது ஈடுபாட்டையும் பிரதிபலிக்கிறது. அதேபோல அன்னை ஆசிரமத்தில் நமக்கு கொடுக்கும் மலர்கள் வெறும் பூக்கள் அல்ல. அவை அன்னை நமக்கு வழங்கும் உள் மனஉணர்வுகள் மற்றும் ஆசிகள் ஆகும்.
எந்த மலராக இருந்தாலும் அன்புடனும் தூய மனத்துடனும் சமர்ப்பிப்பதே வழிபாட்டின் உண்மையான சிறப்பாகும்.
இந்த மலர்களை அன்னைக்கு சமர்ப்பிக்கும்போது, அவற்றின் அழகை மட்டும் ரசிக்காமல், அவை உணர்த்தும் அன்பு, தூய்மை, அமைதி போன்ற பண்புகளையும் நம் வாழ்க்கையில் வளர்த்துக்கொள்ளலாம்.
அன்னையின் பார்வையில் மலர்களின் பொருள் என்பது வெறும் நம்பிக்கை சார்ந்த பட்டியல் மட்டுமல்ல; மனிதனின் உள்ளத்தைச் செம்மைப்படுத்தும் ஓர் ஆன்மிகப் பயிற்சியும் ஆகும். மலரைத் தேர்ந்தெடுப்பதைவிட, அது உணர்த்தும் நல்ல பண்பை மனத்தில் ஏற்றுக்கொள்வதே முக்கியம்.
மல்லிகை தூய்மையையும், செம்பருத்தி சக்தியையும், தாமரை ஆன்மிக உயர்வையும் குறிக்கும் மலர்களாகப் போற்றப்படுகின்றன. மலர்களின் நிறத்தையும் மணத்தையும் ரசித்தபடி அன்னைக்கு சமர்ப்பிப்பது மன அமைதியையும் பக்தி உணர்வையும் வளர்க்கும் அழகிய வழிபாட்டு அனுபவமாக அமைகிறது.
அன்னையின் சமாதியும் ஆரோவில்லும்;
புதுச்சேரி ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள வெள்ளைச் சலவைக் கல் சமாதி அங்கு செல்லும் பலருக்கும் அமைதியையும் தியான உணர்வையும் தரும் புனித இடமாக விளங்குகிறது.
இந்த சமாதியில் வைக்கப்பட்டுள்ள மலர்கள் அருகே பக்தர்கள் தியானம் செய்ய அமைதி கிடைக்கும். வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத மனஅமைதியை மௌனத்தின் வழியாக உணரமுயல்வதே இங்கு வரும் பலரின் அனுபவமாக இருக்கிறது.
அன்னையின் தொலை நோக்கும் பார்வையில் உருவான மற்றோர் அற்புதமான முயற்சி ஆரோவில்! 1968 பிப்ரவரி 28 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்தச் சர்வதேச நகரம் நாடு,மொழி, மதம் ஆகிய வேறுபாடுகளைக் கடந்து மனித ஒற்றுமையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டது.. இங்கு உள்ள மாத்ரி மந்திர் தியான மையம் உள் நோக்கிய அமைதியையும் ஆன்மிகத் தேடலையும் நினைவூட்டுகிறது.
பாண்டிச்சேரி அன்னையும் ஸ்ரீ அரவிந்தரும் உணர்த்திய ஆன்மிகப் பாதை, வெளிப்புற வழிபாட்டுடன் உள்ளத்தின் மாற்றத்தையும் வலியுறுத்துகிறது. ஒரு சிறிய மலர்கூட அன்பையும் அமைதியையும் நினைவூட்ட முடியும். மலர்களை இறைவனுக்குச் சமர்ப்பிக்கும்போது, நம் மனத்திலுள்ள அகந்தை, கோபம், பொறாமை ஆகியவற்றையும் கைவிட முயல்வோம். அப்போதுதான் மலரின் மணம் நம் வாழ்க்கையிலும் பரவும்!