
புழல் என்றதும் சட்டென்று நம் நினைவுக்கு வருவது புழல் மத்திய சிறைதான். ஆனால் இங்கே கோட்டை அமைத்து குரும்பர்களின் தலைவர் ஆட்சி செய்ததாக வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின்றன. அதற்கும் முன்பாக தொண்டைமான் ஆட்சிக் காலத்தில் ஓணன், காந்தன் என்ற இரண்டு அசுரர்கள் இங்கு கோட்டை கட்டி ஆண்டதாகக் கூறப்படுகிறது. பாலாற்றின் கிளை ஆறு ஓடிய பகுதியில் அவர்கள் அமைத்த அந்தக் கோட்டையில், வெள்ளெருக்குத் தூண்கள், பவளத் தூண்கள், வெண்கலக் கதவுகள் எல்லாம் அமைத்திருந்தனர்.
(அசுர வேந்தனான வாணாசுரனின் படைத் தலைவர்களாக விளங்கிய ஓணன், காந்தன் இருவரும் காஞ்சியில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து, வழிபட்டு, பல வரங்களைப் பெற்றனர். பின்னர் புழலில் கோட்டை அமைத்து ஆண்டனர். காஞ்சியில் அவர்கள் பூஜித்த தலமே ஓணகாந்தன்தளி ஆகும்.)
காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு அரசாண்ட தொண்டைமான், ஒருமுறை திக்விஜயம் மேற்கொண்டபோது, ஓணன், காந்தன் இருவராலும் போரில் தோற்கடிக்கப்பட்டான். இதனால் மனம் வருந்திய தொண்டைமான், தன் யானையின் மீது கவலையுடன் திரும்பி வந்துகொண்டிருந்தான். அப்போது யானையின் கால்களை முல்லைக் கொடிகள் சுற்றிக்கொண்டன.
மேற்கொண்டு நடக்க முடியாமல் யானை சிரமப்படுவதைக் கண்ட தொண்டைமான், தன் வாளால் முல்லைக் கொடிகளை வெட்டி, யானை செல்ல வழி ஏற்படுத்தினான். அப்போது வெட்டப்பட்ட முல்லைக் கொடிகளின் கீழிருந்து ரத்தம் பீறிட்டு வருவதைக் கண்டு துணுக்குற்ற மன்னன், யானை மேலிருந்து கீழே இறங்கி அங்கே ஆராய்ந்தான். அங்கு ஒரு சிவலிங்கம் இருப்பதைக் கண்டான்.
மனம் பதைத்து இறைவனை வணங்கி, தான் அறியாமையால் செய்த செயலுக்கு மன்னிப்பு கேட்கிறான் அரசன். சிவபெருமான் அரசன் முன் தோன்றி வாழ்த்தி அருள்புரிகிறார். தொண்டைமானுக்குத் துணையாக நந்தியம்பெருமானை அனுப்பி, போரில் வாகை சூட வாழ்த்துகிறார்.
அரசன் நந்திதேவரின் உதவியுடன் மீண்டும் அசுரர்களுடன் போரிட்டு, அவர்களை வெற்றி கண்டான்.
தக்க சமயத்தில் தனக்கு அருளிய இறைவனுக்கு, அவ்விடத்தில் ஆலயம் அமைத்தான். ஓணன், காந்தனின் புழல் கோட்டையில் இருந்த இரண்டு வெள்ளெருக்குத் தூண்களை எடுத்து வந்து, தான் எழுப்பிய ஆலயத்தில் இறைவனின் கருவறை முன்பு பொருத்தினான்.
இந்தக் கோவிலே வட திருமுல்லைவாயில் என்று அழைக்கப்படுகிறது. சீர்காழி அருகே உள்ள திருமுல்லைவாயில் தென் திருமுல்லைவாயில் என்றும், சென்னை அம்பத்தூர், புழல் அருகில் உள்ள இந்தக் கோவில் வட திருமுல்லைவாயில் என்றும் அழைக்கப்படுகிறது. இப்போதும் கருவறை முன்பு அந்த வெள்ளெருக்குத் தூண்களைக் காணலாம்.
தொண்டைமானுக்கு உதவி செய்யப் புறப்படும் நிலையில் நந்தி பகவான் கோவில் வாசலை நோக்கித் திரும்பியவாறு உள்ளார். இத்தலத்தில் இறைவன் நிர்மலமணீஸ்வரர், பாசுபதேஸ்வரர், மாசிலாமணீஸ்வரர் என்ற திருப்பெயர்களுடன் அருள்புரிகிறார். சதுர வடிவமான ஆவுடையார் மீதுள்ள உயரமான லிங்கத்தின் மேற்புறம் வெட்டுப்பட்டுள்ளது. அதனால் குளிர்ச்சி வேண்டி, எப்போதும் சந்தனக் காப்புடன் காட்சி தருகிறார் இறைவன். வருடத்திற்கு ஒருமுறை பழைய சந்தனக் காப்பை நீக்கிவிட்டு புதிதாகச் சாத்துகிறார்கள்.
அன்னை கொடியிடை நாயகி என்ற பெயரில் அருள்கிறார். சென்னை மீஞ்சூருக்கு அருகே மேலூரில் அருளும் திருவுடையம்மன், திருவொற்றியூர் வடிவுடையம்மன், வட திருமுல்லைவாயில் கொடியிடை அம்மன் ஆகிய மூன்று அன்னையரும் ஒரே சிற்பியால் செதுக்கப்பட்டவர்கள். வெள்ளிக்கிழமையில் பௌர்ணமி வரும் நாட்களில் காலை, நண்பகல், மாலை என ஒரே நாளில் மூன்று அம்மனையும் வழிபடுதல் சிறப்பு என்ற மரபு இப்போதும் பின்பற்றப்படுகிறது.
இத்தலத்து இறைவனை சுந்தரமூர்த்தி சுவாமிகள் மனம் உருகிப் பாடியுள்ளார். அந்தப் பதிகம் பாடுவதற்கு முன் நிகழ்ந்தவை சுவாரஸ்யமானவை.
திருவெண்ணைநல்லூரில் தடுத்தாட்கொண்ட சிவபெருமானின் அருளுடன் பரவையாரை மணந்த சுந்தரர், சிறிது காலத்திற்குப் பிறகு திருவொற்றியூர் வருகிறார். அங்கு ஞாயிறு என்ற ஊரில் உள்ள சங்கிலியார் என்ற பெண்ணைக் கண்டு காதல்கொண்டார்.
“உன்னைவிட்டுப் பிரிய மாட்டேன். திருவொற்றியூரிலேயே உன்னுடன் வாழ்வேன்,” என்று சிவபெருமான் சாட்சியாக சங்கிலியாருக்கு வாக்களித்து, அவரை மணக்கிறார்.
சிறிது காலத்திற்குப் பிறகு, பரவையாரின் நினைவு வந்து அவரை வாட்டுகிறது. அதனால் அவரைப் பார்ப்பதற்காக, தான் கொடுத்த வாக்கை மறந்து திருவொற்றியூரில் இருந்து புறப்படுகிறார். இறைவன் சாட்சியாக சங்கிலியாருக்கு அளித்த வாக்கை மீறியதால், திருவொற்றியூர் எல்லையைத் தாண்டியதும் சுந்தரர் தன் கண் பார்வையை இழக்கிறார்.
தவறை உணர்ந்த சுந்தரர், வட திருமுல்லைவாயில் வந்தடைந்து, தன் துயர் களைய மனம் உருகிப் பாடுகிறார்.
“திருவும்மெய்ப் பொருளும் செல்வமும் எனக்குன்
சீருடைக் கழல்கள் என்(று) எண்ணி”
எனத் தொடங்கும் ஏழாம் திருமுறையில் உள்ள பதிகத்தைப் பாடி பார்வை பெற வேண்டுகிறார். ஒவ்வொரு பதிகத்தின் இறுதியிலும் “பாசுபதா பரஞ்சுடரே” என்று இத்தலத்து இறைவனைப் போற்றுகிறார்.
ஏழாம் திருமுறையில் 62ஆவது பதிகமாக இது உள்ளது. இங்கிருந்து திருவெண்பாக்கம், திருவாலங்காடு என்று ஒவ்வொரு திருத்தலத்து இறைவனையும் வணங்கி, பதிகம் பாடி திருவாரூர் வந்தடைந்து, 69ஆவது பதிகம் பாடி பார்வை பெறுகிறார் சுந்தரர்.