
நாகமணியைக் கண்டீர்களா என்றால் உடனே, 'அதோ இருக்கிறாரே' என்று அப்பெயர்க் கொண்டவரைச் சுட்டிக் காட்டி விடுவர். நாகரத்தினம், நாக மணி, நாக மாணிக்கம், நாக ஜோதி, நாகமுத்து என்றெல்லாம் பெயர்களைக் கொண்டவர்கள் ஏராளம் உண்டு.
நமது கேள்வி நிஜமான நாகமணியைக் கண்டிருக்கிறீர்களா என்பது தான்.
தமிழ்நாடு முழுவதும் 'நிஜமான' நாகமணியை பல லட்சம் ரூபாய்க்கு விற்க அலைபவர்களைப் பற்றிய ‘ஏமாற்றுத்’ தகவல்கள் பல உண்டு. போலீஸாரிடம் சொன்னால் உடனே அவர்கள், 'இதற்குத் தானே காத்திருந்தோம்' என்று அவர்களைப் பிடிக்கப் படையுடன் கிளம்பி விடுவர்.
புராணங்கள் விவரிக்கும் நாகமணி
சுயமாக ஒளியை உமிழும் நாகரத்தினக் கல், குழாய் போன்ற வடிவில் இருக்கும். ஒரு நாகமானது நூறாண்டுகளுக்குப் பிறகு தனது ஜீவ சக்தியை இப்படி ஒளி உமிழும் மாணிக்கமாக மாற்றுவதை நமது புராணங்கள் நன்கு விவரிக்கின்றன.
தேவி பாகவதத்தில் எட்டாம் ஸ்காந்தத்தில் பதினெட்டாவது அத்தியாயத்தில் நாராயணர் நாரதருக்கு ஒவ்வொரு மண்டலமாக விவரிக்கிறார். அதில் பூமியின் கீழ் உள்ள அதலம், விதலம், சுதலம், தராதலம், மகாதலம், ரஸாதலம், பாதாளம் என்னும் ஏழு லோகங்களைப் பற்றி விவரிக்கையில், "அங்கு இராப்பகல் எப்போதும் கிடையாது. ஏனெனில் அங்குள்ள பாம்புகளின் தலைகளிலிருந்து வரும் ரத்ன காந்தியால் இருள் நீங்கி விடுகிறது," என்கிறார்.
அப்படிப்பட்ட ஒளி நாக மணி கல்லின் ஒளி என்பதை அறிகிறோம்.
அடுத்து, சுந்தர காண்டத்தில் கம்பன், ஊர்தேடு படலத்தில், இலங்கையில் பெண்மணிகள் சூதாட்ட விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் போது, “பாம்புகளின் தலைவனான ஆதிசேஷனின் சிவந்த நிறம் மிக்க படத்து மணியினை வலிமையால் கவர்ந்து எனக்கு ராவணன் அளித்தான்” என்று ஒரு பெண்மணி கூறுவதாகப் பாடியுள்ளார். (பன்னக அரசர் செங்கேழ்ப் பணா மணி வலிதின் பற்றி இன் உயிர்க் கணவன் ஈந்தான் – பாடல் 183)
அவனே உருக்காட்டு படலத்தில் (பாடல் 65) சீதை கணையாழியைப் பார்த்தவுடன் அவள், “தவற விட்ட மாணிக்கத்தை தன் எதிரில் கண்ட புற்றில் உள்ள பாம்பு போல இருந்தாள்" – (இழந்த மணி புற்று அரவு எதிர்ந்தது எனல் ஆனாள்) என்றும் பாடுகிறான்.
ஆக இப்படி இலக்கியம் கொண்டாடும் நாக மணி எங்கே?
பாம்புகளைப் பற்றி நன்கு ஆராய்ந்த ம.வீ.இராசேந்திரன் உலகில் 2000 பாம்பு வகைகள் உண்டு என்றும் இந்தியாவில் மட்டும் 390 வகைகள் உண்டு என்றும் கூறி பற்பல வியக்க வைக்கும் தகவல்களை ‘நம் நாட்டுப் பாம்புகள்’ என்ற தனது நூலில் விவரிக்கிறார்.
ஆனால் "நாகமணி கவிஞனின் கற்பனையில் உதித்த மணியான சிந்தனைச் சிற்பம். கவிஞனுக்குக் களிப்பூட்டும் கருந்தனம்” என்கிறார் அவர்.
"பாம்பின் நஞ்சே முத்தாக மாற வேண்டுமானால் அது பல ஆண்டுகளாக விளைந்து கொண்டே இருக்க வேண்டும். பாம்பின் நச்சுப்பை நமக்கு இருப்பது போல ஓர் உமிழ் நீர்ப்பை தான்,” என்கிறார் அவர்.
ஆக அறிவியல் ரீதியாக நாகமணி இல்லை என்பது தான் உண்மை.
ஆனால் கற்பனை ரீதியாக? 1986ல் எடுத்த ஶ்ரீ தேவி நடித்த நாகின் படத்தின் முழுக்கருத்தே நாகமணியை அடிப்படையாகக் கொண்டது தான். படம் சக்கை போடு போட்டது!
2008ல் வெளியான நீல் கைமன் எழுதிய ‘தி க்ரேவ்யார்ட் புக்’ என்ற நாவல் நாகமணி அரிதாகவே கிடைக்கும் ஒரு ரத்தினம் என்றது. புத்தகம் பிரபலமானது.
2017ல் வங்காள நாவலான ‘சர்ப மானவ்: நாகமணி ரஹஸியம்’, நாகமணியை அடிப்படையாகக் கொண்டே எழுதப்பட்ட நாவல்.
நாகமணியை விஷம் முறிவுக்காகத் தரும் நாட்டு வைத்தியர்கள் ஏராளம் பேர் உண்டு. 'இவர்கள் நாகமணியைக் கொண்டிருக்கவில்லை. மிருக எலும்புகளையோ அல்லது நாகத்தின் பாகங்களையோ வைத்து இப்படி நாகமணிக் கல்லை உருவாக்குகிறார்கள்' என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
ஆக நாகமணி இலக்கியத்தில் பொக்கிஷம்; கற்பனைக்கு கருப்பொருள்; நிஜமான வாழ்க்கையிலோ ஏமாற்றுபவரின் தகிடுதத்தம்!