சிவாலயங்களில் ஏன் 5 வகையான நந்திகள்? அதிகார நந்தி தோன்றிய கதை தெரியுமா?

ஈசனின் அருளால் அதிகார நந்தியாக மாறிய ஜப்பேசரின் மெய்சிலிர்க்கும் ஆன்மிகப் பயணம்.
நந்திகள்
நந்திகள்Gemini image
ஸ்ரீவித்யா பசுபதி

எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுகதைகள் கவிதைகள், பதினைந்து தொடர்கதைகள் எழுதியுள்ளார். மூன்று நூல்கள் வெளியிடபட்டுள்ளன. பல சிறுகதைப் போட்டிகளில் வெற்றி பெற்ற இவருக்கு, சராசரி மக்களின் உணர்வுகள் சார்ந்த சிறுகதைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம். புதுமைப்பித்தன் விருது, கி.ஆ.பெ. விஸ்வநாதம் விருது, நம்பிக்கை நாயகி, தமிழினியாள் போன்ற பல விருதுகளைப் பெற்றவர். ஆன்மீக கட்டுரைகள், கதைகள், ஆலயத் தகவல்கள் திறம்பட வழங்குவதில் தனி ஆர்வம்.

Updated on: 
Deepam strip
Deepam strip

சிவாலயங்களுக்கு செல்லும்போது முதலில் நந்தி பகவானைத்தான் நாம் வணங்குவோம். நந்தியின் அனுமதி பெற்றே சிவபெருமானை வணங்க வேண்டும் என்று ஆகம விதிகள் தெரிவிக்கின்றன. சிவாலயங்களில் ஆகம விதிப்படி ஐந்து வகையான நந்திகள் இருக்கும். 

1. மூலவர் அருளும் கருவறைக்கு அருகில் அமைந்திருக்கும் நந்தி கைலாச நந்தி எனப்படுகிறார். கைலாயத்தில் எப்போதும் சிவபெருமானுடன் இருப்பதால் இவர் கைலாச நந்தி என்று அழைக்கப்படுகிறார். இவர் எப்போதும் தன் மூச்சுக் காற்றால் சிவபெருமானைக் குளிர்விக்கிறார். சிவபெருமானின் ஆலயத்திற்குள் பிரதிஷ்டை செய்யப்படும் ஒரே நந்தி இவர்தான். 

2. சிவலிங்கத்திற்கு அருகிலேயே இருக்கும் நந்தி அவதார நந்தி என்று அழைக்கப்படுகிறார். தேவர்களைக் காக்க சிவபெருமான் அசுரர்களுடன் போரிட தேரில் கிளம்பிச் சென்றார். அசுரர்களை நெருங்கும் போது, தேரின் அச்சு முறிந்தது. தேர் நிலை தடுமாறாமல் இருக்கவும், போரில் பின்தங்காமல் இருக்கவும், திருமால் காளை வடிவெடுத்து சிவபெருமானைத் தன் முதுகில் ஏற்றிச் சென்றார் என்று புராணங்கள் சொல்கின்றன. சிவபெருமானின் வாகனமாக திருமால் மாறியதால் இவர் அவதார நந்தி என்றும், விஷ்ணு நந்தி என்றும் போற்றப்படுகிறார். நான்கு நந்திக்கும் குறைவாக அமைக்கும் சிவாலயங்களில் அவதார நந்தி பிரதிஷ்டை செய்யப்படுவதில்லை. 

3. மூன்றாவதாக இருக்கும் நந்தி அதிகார நந்தி. கைலாயத்தின் வாயிலில் காவலாக நிற்கும் நந்தி அதிகார நந்தி எனப்படுகிறார். ஆகம விதிகளின்படி சிவாலயங்களில் கொடிமரத்திற்கு அருகில் அதிகார நந்தி அமைக்கப்படுகிறார். சிவபெருமானைத் தரிசிக்க வருபவர்களை அனுமதிக்கும் அதிகாரம் கொண்டவராக அதிகார நந்தி விளங்குகிறார். இவர் இரு கைகளைக் கூப்பி வணங்கிய நிலையில் இருப்பார். 

அதிகார நந்தி தோன்றிய வரலாற்றைத் தெரிந்து கொள்ளலாமா?

சிலாதர் என்ற முனிவருக்கு நெடுங்காலமாகக் குழந்தை பாக்கியம் அமையவில்லை. சிலாதரும் அவர் மனைவி சாருலக்ஷணையும் மிகவும் வருந்தினர். திருவையாற்றில் உள்ள ஜப்பேச மண்டபத்தில் அமர்ந்து, பஞ்சாட்சர மந்திரத்தை ஜபித்தபடி, ஐயாறப்பரை நோக்கித் தவமிருந்தார் சிலாதர். அவரின் தவத்தில் மகிழ்ந்த ஈசன், புத்திர காமேஷ்டி யாகம் செய்யும்படியும், பதினாறு வயதுவரை மட்டுமே உயிரோடிருக்கும் மகன் பிறப்பான் என்றும் சிலாதருக்கு வரம் அருளினார்.

நந்திகள்
நந்திகள்Gemini image

முனிவரும் அவ்வாறே செய்தார். யாகம் முடிந்ததும், யாக பூமியை உழுத போது, பூமியிலிருந்து ஒரு பெட்டி கிடைத்தது. பெட்டிக்குள் நான்கு தோள்களும், மூன்று விழிகளும், தலையில் சந்திரப் பிறையும் தாங்கிய குழந்தையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார் முனிவர். பெட்டியை மீண்டும் மூடித் திறக்கும்படி அசரீரி ஒலித்ததும், சிலாதர் பெட்டியை மூடித் திறந்தார். இப்போது அழகான குழந்தை பெட்டிக்குள் இருந்தது கண்டு மகிழ்ந்தார். 

குழந்தைக்கு ஜப்பேசன் என்று பெயரிட்டு சகல வித்தைகளும் கற்பித்து வளர்த்தனர். குழந்தை வளர வளர, அவன் ஆயுள் பதினாறு வயது வரைதானே என்ற கவலையும் பெற்றோர்களைத் தொற்றிக்கொண்டது. தாய் தந்தையை சமாதானம் செய்து தேற்றினான் ஜப்பேசன். சிவபெருமானை எண்ணித் தவமிருந்து ஆயுளை நீடித்து வரம் பெற்று வருவதாகச் சொல்லி, தன் பதினான்காவது வயதில், சூரிய புஷ்கரிணியின் மத்தியில், ஒற்றைக் காலில் நின்று தவம் செய்ய ஆரம்பித்தான் ஜப்பேசன். 

உணவும் நீரும் இன்றி அவன் தவம் தொடர்ந்தது. சதைகள் வற்றி எலும்புக்கூடாக ஆனபோதும் தவத்தைக் கைவிடவில்லை. நீர்வாழ் உயிரினங்கள் அவன் கால் சதைகளை உணவாக உட்கொண்டன. எதற்கும் கலங்காமல் தவம் புரிந்தான் ஜப்பேசன். சிவபெருமான் அங்கு தோன்றி, “நீ எனக்கு ஒத்தவனாக விளங்குவாய்” என்று அருளினார்.  மேலும் பஞ்ச நதிகளை அங்கே வரவழைத்து, ஜப்பேசனுக்கு திருமஞ்சனம் செய்ய, பொலிவான தேகம் பெற்று பழையபடி வந்தான் ஜப்பேசன்.

இதையும் படியுங்கள்:
சிதம்பரம் முதல் கங்கைகொண்ட சோழபுரம் வரை: ஆன்மிகப் பயணம் தந்த ஆனந்த அனுபவம்!
நந்திகள்

சிவபெருமான் ஜப்பேசனுக்கு அருளி, ‘அதிகார நந்தி’ என்ற பெயர் சூட்டி, சிவ கணங்களுக்குத் தலைவராக்கினார். மேலும் சிவகலை ஆகமங்களையும் அவற்றின் உட்பொருளையும் நந்திக்கு உபதேசித்தார் ஈசன். நந்தியின் விருப்பத்தை ஏற்று, அவருக்கு ரிஷப உருவம் கொடுத்து, எப்போதும் சிவபெருமானையும், அன்னை பார்வதியையும் தாங்கி வலம்வரும் பெரும்பேறையும் வரமாக அருளினார் சிவபெருமான்.

திருக்கைலாயத்தின் வாயிலைக் காக்கும் மிகப்பெரும் பணியை அதிகார நந்திக்கு வழங்கினார். வியாக்ரபாத முனிவரின் மகளான சுயம்பிரகாசையை நந்திக்குத் திருமணம் பேசி முடித்து, பங்குனி மாதம் புனர்ப்பூச நட்சத்திரத்தில் திருமழப்பாடியில் சிறப்பாக விவாகமும் செய்து வைத்தார் சிவபெருமான். திருவிழாக் காலங்களில் சிவபெருமான் அதிகார நந்தி வாகனத்தில்தான் வீதியுலா வருவார். சிதம்பரம் நடராஜர் ஆலயத்தின் நான்கு கோபுரங்களிலும் அதிகார நந்தியின் திருவுருவத்தைக் காணலாம். 

இதையும் படியுங்கள்:
சபரிமலை ஆன்மீக அனுபவ கட்டுரை: அழைத்ததும் அவனே… அருளியதும் அவனே!
நந்திகள்

4. சாதாரண நந்தி சிவாலயங்களில் அமையப்பெறும் ஐந்து நந்திகளில் நான்காவதாக இடம் பெறுகிறார். எல்லா சிவாலயங்களிலும் இந்த நந்தி அமைக்கப்படுவதில்லை. சிவாலயங்களில் காணப்படும். 

5. ஐவகை நந்திகளில் ஐந்தாவதாக இருக்கும் பெரிய நந்தி, ஆலயத்தின் நுழைவாயிலில் அமைக்கப்படுகிறார். கைலாயத்தில் எந்த நேரமும் போர்க்கோலம் பூண்டு காவலனாக இருப்பவர் இவர். மகா நந்தி, விஸ்வரூப நந்தி என்றும் இவரைக் குறிப்பிடுவதுண்டு. பெரிய நந்தி என்றதும் நமக்கு சட்டென்று நினைவுக்கு வருவது தஞ்சை பெரிய கோவிலில் உள்ள ஒரே கல்லால் ஆன பெரிய நந்திதான். சிவாலயங்களுக்குச் செல்லும்போது மறக்காமல் முதலில் நந்திதேவரை வணங்கிவிட்டு, சிவபெருமானை வணங்குவதே சிறப்பு. 

சிவாலய வழிபாட்டில் நந்தியின் முக்கியத்துவத்தையும், ஆகம விதிகள் காட்டும் ஐந்து வகையான நந்திகளின் ரகசியங்களையும் அறிந்துகொண்டு முழுமையான தரிசனப் பலனைப் பெறுவீர்கள்.