

சமீப காலத்தில் உலகம் கண்ட ஒரு பேரருள் சக்தியே, அன்னை என்ற உருவில், புதுவையில் அருளாசி தந்து வந்த தெய்வ மாதா. அவர் குழந்தைகள் பால் எல்லையற்ற அன்பு கொண்டவர். இளைஞர்களுக்கு இடைவிடாது வழி காட்டியவர். பக்தர்களின் சந்தேகங்களுக்கு உரையாடல் மூலமாகவும், வாழ்ந்து காட்டுவதன் மூலமாகவும் வியக்கத்தக்க வகையில் பதில் அளித்தவர். குழந்தை முதல் முதியோர் வரை அவரது அன்புக் கடலுள் நீராடியவர்கள் பல்லாயிரக்கணக்கானோர் ஆவர். அவரது உணர்வூக்கம் தரும் அருளுரைகளில் (Sri annai advice) சிலவற்றை இங்கே காணலாம்.
1. இறைவனது அருளில் நம்பிக்கை வை!
இறைவனது அருளில் நம்பிக்கை வை. எவ்வளவு தடைகள், கஷ்டங்கள் இருப்பினும் அது உன்னை உனது இலட்சியத்திற்கு, இறைவனிடத்திற்கு அழைத்துச் செல்லும். யாரும் “எனக்கு நம்பிக்கைக்கே இடம் இல்லை” என்று சொல்ல முடியாது. ஏனெனில் இறைவனது அருள் உள்ளது.
2. குழந்தைகளிடம் ஆற்றிய உரை: ஒழுங்கே ஒருவரை உயர்த்தும்!
சிலர் வசிக்கும் அறைகள் வெளிப்பார்வைக்குச் சீராக சுத்தமாக இருக்கும். ஆனால், ஒரு அலமாரியையோ மேஜை அறையையோ பார்த்தால் அங்கு ஒரு போர்க்களமே காட்சி அளிக்கும். எல்லாம் கீழது மேலும், மேலது கீழுமாயிருக்கும். அவர்கள் தலைக்குள்ளும் நிலைமை அப்படித்தான் இருக்கும். அந்தச் சின்னத் தலைக்குள் கருத்துக்களெல்லாம் அலமாரியில் சாமான் கிடந்தது போலவே இறைந்து கிடக்கும்.
நீங்கள் மாறாத விதியாகக் கொள்ளலாம். சாமான்களைத் தாறுமாறாக வைத்துக் கொண்டு அதே சமயத்தில் தர்க்கரீதியாக வேலை செய்யும் மூளையை உடைய ஒரு மனிதனை நான் இதுவரை பார்த்ததில்லை. அவனிடம் அந்தச் சாமான்களைப் போலவே கருத்துக்களும் தாறுமாறாக கிடக்கும். ஒன்றுக்கொன்று பொருந்தாத, எதிரிடையான கருத்துக்களெல்லாம் ஒன்றாய் குழம்பி நிற்கும். அவை ஒழுங்கு செய்யப்பட்டு, சுருதி சேர்ந்து மேலான ஒரு இணைப்பைப் பெற்றிராது.
ஆகவே, ஒரு மனிதனுடைய குணத்தை அறிந்து கொள்ள அவனிடம் பேசி நீ பொழுதைப் போக்கத் தேவையில்லை. நேரே போய் அவனுடைய மேஜை அறையையோ, அலமாரியையோ திறந்து பார்த்தால் போதும், தெரிந்து விடும்.
3. என் துணை உனக்கு என்றும் உண்டு. 27-9-1933 அன்று கூறியது,
நம் பயணமோ மிகவும் நீண்டது. இலட்சியம் இன்னும் எவ்வளவு தூரம் என்று கணக்கிடாதபடி முன்னேறியவாறு இரு. நீ விடாது முயன்றால், காரிய ஸித்தி நிச்சயம். என் துணை பற்றி ஐயுற வேண்டாம். அது உனக்கு என்றும் உண்டு. தெய்வத்தின்பால் செய்யும் முறையீடு என்றும் வீண் போவதில்லை.
4. கர்மத்தின் விளைவும் கடவுளின் அருளும்!
இறைவனது அருள் கர்மத்தின் விளைவுகளை முற்றிலுமாக மாற்றி விடுகிறது. வெய்யிலில் வைத்த வெண்ணெயைப்போல் அது கர்மத்தின் விளைவுகளை உருக்கி விடுகிறது.
உன்னுடைய ஆர்வம் உண்மையாக இருந்தால் அல்லது உனது பிரார்த்தனையில் கனல் இருந்தால், உண்மையாகவே எல்லாவற்றையும், மாற்றக்கூடிய ஒன்றை உன்னுள் இறங்கச் செய்ய முடியும். மிக மிகச் சிறிய உதாரணம் ஒன்று சொல்லுகிறேன். அப்பொழுது நான் சொல்லுவது உனக்கு நன்றாகப் புரியும். கூரையிலிருந்து ஓர் ஓடு விழுகின்றது என்று வைத்துக் கொள். அப்படியே விட்டு விட்டால் அது தரை மீது விழும், அல்லவா? இது ஜட நிர்ணயம்.
இப்பொழுது, அந்த ஓடு விழும்பொழுது அங்கு ஒரு மனிதன் வருகிறான். அவன் அதைக் கீழே விழாதபடி தடுக்க நினைக்கிறான். பிராண, மன நிர்ணயங்கள் குறுக்கிட்டுவிட்டன. அவன் அவ்வோட்டைப் பிடித்துக் கொள்கிறான். ஓடு தரையில் விழவில்லை. அந்த மனிதன் இந்த ஓட்டின் விதியை மாற்றிவிட்டான்.
வேறு ஒரு உணர்வுத் தளத்தைச் சேர்ந்த சக்தி, தன்னுணர்வு உடைய சக்தி குறுக்கிட்டு, அநேகமாக உணர்வே இல்லாத ஜட நிர்ணயத்தை, ஜட விதியை மாற்றியதை இங்கு கண்டோம்.
இப்படித் தெள்ளத் தெளிவாக இறையருள் எப்படி எல்லாம் வேலை செய்யும், அதைப் பெறுவது எப்படி என்பதை இடைவிடாது ஆன்மீகத் தேடல் உள்ளவர்களுக்கு தன் அருளுரைகளை ஶ்ரீஅன்னை அவர்கள் வழங்கி வந்தார்கள். அவரது அருளுரைகள் அடங்கிய நூல்களை பாண்டிச்சேரி அரவிந்த ஆசிரமத்தில் வாங்கிப் பயனடையலாம்.