

கர்ணணே தானம் செய்வதில் சிறந்தவன் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. கர்ணனுடைய தாய், தந்தை, குரு அனைவரும் அவனைக் கைவிட்ட போதிலும் அவன் தன்னை நாடி வருபவர்களுக்கு தானம் செய்வதில் இல்லை என்ற சொல்லை கூறாதவன். இக்காரணத்தினாலே கர்ணன் தானத்தில் சிறந்து விளங்கினான். இருப்பினும் அவன் ஏன் இடது கரத்தால் தானம் செய்தான் என்பதை பற்றி இக்கதை கூறுகிறது.
இது மகாபாரத காலத்தில் நடந்த ஒரு நிகழ்வாகும். மகாபாரதத்தில் ஒரு உணவருந்தும் நேரத்தில் கர்ணனும், கிருஷ்ணனும் ஒன்றாக சேர்த்து உணவருந்திக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு ஒரு முதியவர் வந்தார். அவர், கர்ணனிடம் தன்னுடைய கஷ்டத்தை கூறி தாமே தானத்தில் சிறந்தவர் தனக்கு தானம் வழங்குமாறு கேட்டார்.
அந்த நேரத்தில் கர்ணன் சற்றும் யோசிக்காமல் அவனுடைய இடது பக்கத்தில் இருந்த வெள்ளி பாத்திரத்தை இடது கையால் எடுத்து அந்த முதியவருக்கு தானமாக அளித்தான். இதனைக் கண்ட கிருஷ்ணர் கர்ணனிடம், "நீயே கொடையில் சிறந்து விளங்கியவன் வலது கரத்தினாலே தானம் செய்ய வேண்டும்.
இது கூட நீ அறிய மாட்டாயா கர்ணா? இடது கரத்தால் செய்யும் செயலால் எப்பயனும் இல்லை என்று தெரிந்தும் ஏன் இடது கரத்தினால் வெள்ளி பாத்திரத்தை தானமாக அளித்தாய்". அதற்கு கர்ணன் கிருஷ்ணரிடம், "எனக்கு அவர் தானம் கேட்ட பொழுது அந்த வெள்ளி பாத்திரத்தை கொடுக்க வேண்டும் என்று எண்ணம் தோன்றியது இருப்பினும் “மனித மனம் குரங்கு போன்றது கிருஷ்ணரே“ நான் உணவு அருந்திவிட்டு கைகளை கழுவி விட்டு வருவதற்குள் என்னுடைய மனம் மாறிவிட்டால். அதனால் தான் இடது கரத்தால் வெள்ளி பாத்திரத்தை எடுத்து அந்த முதியவருக்கு தானமாக தந்து விட்டேன்.
நான் செய்யும் தானத்தால் அதனை பெறுபவர்களுடைய பலனை மேலானதாக இருக்க வேண்டும் செய்த தானத்தினால் எனக்கு எந்தப் பலனும், புகழும் தேவையில்லை தானம் பெறுபவரின் மனம் மகிழ்வடைவதே சிறந்த தர்மம் ஆகும். நான் செய்ய விரும்பும் தானத்தை வேண்டுபவர் கேட்ட மாத்திரமே செய்ய வேண்டும். இல்லையேல் காலம் அனைத்தையும் மாற்ற வல்லது. மனிதனுடைய மனநிலையும் அது மாற்றிவிடும்". இவ்வாறு கர்ணன் கிருஷ்ணரிடம் தான் தானம் செய்வதற்கான விளக்கத்தை கூறினான்.
கிருஷ்ணன் கர்ணன் உடைய விளக்கத்தைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். செய்யும் தானத்தினால் ஒருவர் பலனடைவதே முக்கியம் எம்முறையில் தானம் செய்தால் என்ன என்பதை கிருஷ்ணருக்கு கர்ணன் உணர்த்தினான். இக்காரணத்தினாலேயே தானத்தில் கர்ணன் சிறந்து விளங்கினான்.
*********
மகாபாரத யுத்தத்தில் அரவான் என்ற வீரன் பலியானது பலருக்கும் தெரியாத வரலாறு. மகாபாரதத்தில் ஓர் தண்டனையின்படி அர்ஜுனன் திரௌபதியை பிரிந்து 12 ஆண்டுகள் வனவாசம் மேற்கொண்டான். அப்பொழுது அவன் கங்கை நதி கரையில் நீராடிக் கொண்டிருந்த போது நாக கன்னிகையான உழிப்பியை பார்த்தான். அவளுக்கு அர்ஜுனன் மீது காதல் ஏற்பட்டது.
இதனை கூறிய போது அர்ஜுனன் தனக்கு திரௌபதி என்ற மனைவி இருப்பதையும் மேலும் தான் வனவாசம் மேற்கொண்டிருப்பதையும் கூறினான். இருப்பினும் உழிப்பி அர்ச்சுனனிடம் பிடிவாதமாக தம்மை காதலிப்பதாக கூறினார். இதனை மறுக்க முடியாமல் அர்ஜுனனும் உழிப்பியை திருமணம் செய்து கொண்டான்.
இருவருக்கும் அரவான் என்ற மகன் பிறந்தான். மகாபாரத யுத்தம் தொடங்கிய பொழுது பாண்டவர்கள் வெற்றி பெறுவதற்காக ஓர் மனிதனை பலி கொடுக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. அவன் 32 லட்சணங்கள் பொருந்திய ஒரு வீரனாக இருக்க வேண்டும். மகாபாரத காலத்தில் கிருஷ்ணர், அர்ஜுனன் மற்றும் அரவான் இந்த மூவர் மட்டுமே 32 லட்சங்கள் பொருந்திய வீரர்களாக இருந்தனர்.
இருப்பினும் அர்ஜுனனும், கிருஷ்ணரும் போரில் பங்கு பெறுபவர்கள் அவர்களை பலி கொடுக்க முடியாது. இதனால் அரவான் இடம் சென்று கேட்டபோது அவன் பலியாவதற்கு ஒப்புக்கொண்டான். இருப்பினும் அவனுக்கு இரு நிபந்தனை இருந்தது. அவன் திருமணம் ஆகாதவன் அதனால் ஒரு நாள் திருமணம் ஆன பிறகு நான் பலியாகிறேன். என்னுடைய தலையை குருச்சேத்திர யுத்தம் நடைபெறும் இடத்தில் வைக்க வேண்டும்.
நான் யுத்தத்தின் முடிவை பார்க்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தான். இருப்பினும் ஒரே நாளில் இறக்கும் ஓர் வீரனை யாரும் மணக்க முன்வரவில்லை. இதனால் கிருஷ்ணர் மோகினி அவதாரம் எடுத்து அரவானை திருமணம் செய்து கொண்டார். ஒருநாள் அவர்கள் இல்லற வாழ்வை வாழ்ந்தனர்.
மறுநாள் அரவான் தன்னுடைய தலையை தானே வெட்டி காளி தேவிக்கு பலியாக கொடுத்தான். அப்பொழுது மோகினி அவதாரம் எடுத்த கிருஷ்ணர் அரவானை கட்டி அணைத்து தன்னுடைய தாலியை அறுத்து விதவை கோலத்தில் மனம் நொந்து அழுதார்.
வெட்டப்பட்ட அவனுடைய தலை மகாபாரதயுத்தம் நடைபெறும் இடத்தில் வைக்கப்பட்டது. யுத்தத்தின் முடிவுகளை அவன் பார்த்து தெரிந்து கொண்டான். இவ்வாறு அரவான் மகாபாரத காலத்தில் தர்மத்தை நிலை நாட்டுவதற்காக நரபலியாக தம்முடைய தலையை தானே கொய்து வெற்றியை ஈட்டிய முதல் வீரனாக இருந்தால். அரவானின் இந்த தியாகத்தை போற்றும் வகையில் இன்றும் அவருக்கு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கூவாகத்தில் கூத்தாண்டவர் கோவிலில் ஆண்டுதோறும் 18 ஆம் நாள் திருவிழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
மகாபாரதம் நாம் அனைவரும் அறிந்த ஒரு புராணமாகும். இதில் வரும் திருதாஷ்ட மன்னர் பார்வையற்றவராக இருப்பார். மகாபாரதப் போர் முடிவுற்ற பிறகு திருதராஷ்டிரர் கிருஷ்ணரிடம் நான் பார்வையற்றவனாக இருந்தாலும் பீஷ்மர் மற்றும் விதுரனின் ஆலோசனைக்கிணங்கவே ஆட்சி செய்தேன்.
இருப்பினும் தன்னுடைய 100 புதல்வர்களில் ஒருவர் கூட இல்லாமல் இறப்பதற்கு காரணம் என்ன என்று கிருஷ்ணரிடம் கேட்டார்? அதற்கு திருதரஷ்டனிடம் கிருஷ்ணர், "நான் உனக்கு ஒரு கதை சொல்கிறேன். அதற்கான பதிலே உன்னுடைய கேள்விக்கான பதில்" என்று கூறி ஆரம்பித்தார். ஒரு காலத்தில் ஒரு மன்னன் ஆட்சி செய்து வந்தான்.
அவனுடைய சமையலாளி அந்த மன்னனுக்கு சுவை மிகுந்த உணவுகளை சமைத்து தந்தான். அதனால் மனம் மகிழ்ந்த மன்னர் அவனை தலைமைச் சமையலாளியாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டார். இதனை அறிந்த சமையல்காரனும் புதுவிதமான சுவையில் ஓர் உணவை சமைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு அந்த அரண்மனையில் குளத்தில் நீந்தி கொண்டிருந்த ஒரு அன்னப்பறவையின் ஒரு குஞ்சை பிடித்து சமைத்து அதனை மன்னருக்கு பரிமாறினான்.
அந்த சுவையில் மயங்கிய மன்னன் அவனுக்கு பரிசுகளை தந்து, இந்த உணவை அடிக்கடி சமைக்குமாறு ஆணையிட்டான். அவனும் தினமும் குளத்தில் இருக்கும் அன்னத்தின் குஞ்சுகளை ஒன்றொன்றாக பிடித்து சமைத்து மன்னனுக்கு பரிமாறினான்.
இக்கதையில் குற்றவாளி யார் என்று? கிருஷ்ணர் கேட்டபோது, அதற்கு திருதராஷ்டிரர் இதே போல் வசிஷ்டருடைய சமையல்காரரும் புலால் கலந்த உணவை வசிஷ்டருக்கு பரிமாறிய போது அவர் அதனை கண்டுபிடித்து அந்த சமையல்காரனுக்கு சாபத்தை வழங்கினார்.
அதேபோல் இந்த மன்னனும் புலால் கலந்த உணவை கண்டுபிடித்திருக்க வேண்டும். அதனை அறியாமல் தினமும் அன்னக் குஞ்சுகளை அவர் உட்கொண்டார். அவரே குற்றவாளி என்று திருதராஷ்டிரர் கூறினார். கிருஷ்ணர் இதனை கேட்ட பின்பு சிறிதாக புன்னகைத்து பீஷ்மர் மற்றும் விதுரனின் ஆணைக்கிணங்க ஆட்சி செய்ததால் தான் இதற்கு சரியான பதில் கூறியிருக்கிறீர்கள்.
அந்த மன்னரே நீங்கள்தான் என்றார் தம்முடைய முற்பிறவியில் அன்னக் குஞ்சுகள் (புலால்) என்றும் பாராமல் ஒரு அன்னத்தின் 100 குழந்தைகளை தான் உணவாக உட்கொண்டீர்கள். இரு கண்கள் இருந்தும் தங்களால் அது புலால் கலந்த உணவு என்று கண்டுபிடிக்க தெரியவில்லை. அந்த அன்னத்தின் வேதனையை தாங்கள் புரிந்த துண்டா... அந்த சாபத்தினாலே இப்பிறவியில் பார்வை இல்லாமலும் அந்த அன்னத்தின் குஞ்சுகளை போல தம்முடைய 100 புத்திரர்களும் இறந்தார்கள்.