ஆன்மீக கதை: திருநீலகண்ட நாயனார்!

ஆன்மீக கதை: காணாமல் போன திருவோடும், தில்லை அந்தணர்கள் சபையில் நடந்த ஈசனின் திருவிளையாடலும்!
ஆன்மீக கதை | Thiruneelakanda Nayanar and his wife
ஆன்மீக கதை | Thiruneelakanda Nayanar and his wifeImage credit: Gemini AI
ஸ்ரீவித்யா பசுபதி

எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுகதைகள் கவிதைகள், பதினைந்து தொடர்கதைகள் எழுதியுள்ளார். மூன்று நூல்கள் வெளியிடபட்டுள்ளன. பல சிறுகதைப் போட்டிகளில் வெற்றி பெற்ற இவருக்கு, சராசரி மக்களின் உணர்வுகள் சார்ந்த சிறுகதைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம். புதுமைப்பித்தன் விருது, கி.ஆ.பெ. விஸ்வநாதம் விருது, நம்பிக்கை நாயகி, தமிழினியாள் போன்ற பல விருதுகளைப் பெற்றவர். ஆன்மீக கட்டுரைகள், கதைகள், ஆலயத் தகவல்கள் திறம்பட வழங்குவதில் தனி ஆர்வம்.

Updated on: 
deepam strip
deepam strip

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய திருத்தொண்டத் தொகையில் 63 நாயன்மார்களின் வரிசையில் முதலாவதாகக் குறிப்பிடப்பட்டிருப்பவர் திருநீலகண்ட நாயனார்.

குயவர் குலத்தில் தில்லையில் பிறந்தவர் இந்த நாயனார். இவர் சிறந்த சிவபக்தராகவும் தர்மநெறியில் வாழ்பவராகவும் விளங்கினார். தில்லையில் கூத்தாடும் நடராஜரை நாளும் வழிபடும் நாயனார், மண் கலங்களைச் செய்து விற்று வாழ்க்கையை நடத்தினார். பக்தியில் சிறந்த சிவனடியார்களுக்குத் திருவோடுகளைச் செய்து கொடுத்தார். அவர்களுக்கு உணவளித்து, தொண்டாற்றி வந்தார். அவரின் மனைவியும் சிவத்தொண்டிற்கு உறுதுணையாக இருந்தார்.

உலக உயிர்களைக் காக்கும் பொருட்டு ஆலகால விஷத்தை உண்டு, அதை தன் கண்டத்தில் நிறுத்திய ஈசனின் அருளாற்றலை நினைந்து உருகி “திருநீலகண்டம்” என்று சொல்லி நெகிழ்வார் நாயனார். எப்போதும் திருநீலகண்டம் என்று போற்றி வந்ததால் இவருக்கு “திருநீலகண்டர்” என்ற காரணப் பெயரிட்டு அனைவரும் அழைக்கலானார்கள்.

ஒரு நாள், அவர் மனம் தடுமாறி தன் மனைவியை விடுத்து வேறு ஒரு பெண்ணுடன் கூடினார். கணவன் வீடு திரும்பியதும் இதனை அறிந்துணர்ந்த அவரின் மனைவி, தன்னை நெருங்கிய கணவரிடம் கோபம் கொண்டார்.

“நீர் எம்மைத் தீண்டுவீராயில் திருநீலகண்டம்,” என்று கோபத்துடன் கூறினார்.

திருநீலகண்டத்தின் மீது ஆணையிட்டுக் கூறியதும் பதறினார் நாயனார். அவர் மனைவி ‘என்னை’ என்று ஒருமையில் குறிக்காமல், ‘எம்மை’ என்று பன்மையில் குறித்ததால், இனி தன் மனைவி மட்டுமல்லாது மற்ற எந்தப் பெண்ணையும் மனதாலும் தீண்டுவதில்லை என்று உறுதிகொண்டார் நாயனார்.

அன்று முதல் நாயனாரும் அவரின் மனைவியும் இல்லறத்தின் மற்ற கடமைகளை ஒன்றிணைந்து செயல்படுத்தினர். ஆனால் திருநீலகண்ட நாயனார் தன் மனைவியை நெருங்காமல், தீண்டாமல் வாழ்ந்துவந்தார். வருடங்கள் பல கடந்தும் இதே நிலை நீடித்தது. இளமை தேய்ந்து முதுமை எட்டிப் பார்த்த பிறகும், இருவரும் இணைந்து சிவத்தொண்டாற்றி வந்தனர். ஆனால் கணவன் மனைவியாக வாழவில்லை.

சிவபெருமான், இவர்களின் பக்தியை, மகிமையை உலகறியச் செய்ய திருவுளம் கொண்டார். சிவயோகி வடிவம் தாங்கி நாயனாரின் வீட்டிற்கு வந்தார். வழக்கம்போல் மற்ற சிவனடியார்களை வரவேற்று உபசரிப்பது போலவே, இவரையும் வரவேற்று உபசரித்தார் திருநீலகண்ட நாயனார். ஆசனத்தில் அவரை இருத்தி பூஜைகள் செய்து தொழுதார். அடியாராக வந்த சிவபெருமானும் நாயனாரின் உபசரிப்பை ஏற்று அருளினார். தன் கையில் இருந்த திருவோட்டை நாயனாரிடம் கொடுத்தார்.

“இந்தத் திருவோட்டை வைத்திருந்து நாம் கேட்கும்போது தா. இந்த ஓடு தனக்கு ஒப்பில்லாதது. தன்னிடத்தில் சேர்ந்த பொருட்களை எல்லாம் சுத்தி செய்யக்கூடியது. பொன்னைவிட மேலாகப் பாதுகாக்கப்பட வேண்டியது. இதை பத்திரமாக வைத்திரு,” என்று எச்சரித்து கொடுத்தார்.

இதையும் படியுங்கள்:
ஆன்மிகக் கதை: குழந்தை வடிவில் வந்து முனிவரைச் சோதித்த மகாவிஷ்ணு!
ஆன்மீக கதை | Thiruneelakanda Nayanar and his wife

அந்தத் திருவோட்டை பக்தியுடன் வாங்கி தன் வீட்டில் பத்திரமாக வைத்தார் நாயனார். சில நாட்கள் கழிந்தபின், சிவபெருமான் தான் கொடுத்து வைத்திருந்த திருவோடை வாங்கிச் செல்ல வந்தார். ஆனால் வீட்டில் அந்தத் திருவோடு இருந்தால்தானே? நாயனார் பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. எப்படிக் கிடைக்கும்? ஈசனின் திருவிளையாடல் தானே இதுவும்.

பத்திரமாக வைத்திருக்கும்படி சிவனடியார் ஒப்படைத்த திருவோட்டைக் காணாமல் தவித்தார் நாயனார். சிவனடியாரோ தன் திருவோட்டை எடுத்து வருமாறு மீண்டும் அறிவுறுத்தவே, நாயனார் தயங்கித் தயங்கி நிலைமையை விளக்கினார்.

“சுவாமி! தாங்கள் தந்த திருவோட்டை வைத்த இடத்தில் காணவில்லை. பிற இடங்களிலும் தேடிவிட்டேன். மிகவும் பழையதாகிய அந்தத் திருவோட்டைவிட புதியதாக நானே செய்த வேறு ஒரு திருவோடு தருகிறேன். பிழையைப் பொறுத்தருளி இந்தப் புதிய திருவோட்டை ஏற்றுக் கொள்ளுங்கள்,” என்று பணிந்து நின்றார் நாயனார்.

அடியார் உருவில் இருந்த சிவபெருமான் வெகுண்டார்.

“நீ யாது சொன்னாய்? நான் தந்த மந்திர ஓடன்றி பொன்னால் செய்த திருவோடையே நீ தந்தாலும் நான் வாங்கமாட்டேன். நான் உன்னிடத்தில் கொடுத்து திருவோடையே எடுத்து வா,” என்றார்.

“நீங்கள் என்னிடம் தந்த ஓடு காணவில்லை. அதற்கு ஈடாக புதிதாக வேறு ஓட்டைத் தருகிறேன் என்கிறேன். நீங்கள் இப்படிப் பேசினால் நான் என்ன செய்வது சுவாமி?” என்று செய்வதறியாது தவித்தார் நாயனார்.

சிவபெருமானும் விடுவதாக இல்லை.

“நான் உன்னிடம் தந்த அடைக்கலப் பொருளை நீ கவர்ந்துகொண்டு, பாவத்துக்கு அஞ்சாமல் பொய் சொல்கிறாய். சகலரும் அறியும்படி இதைத் தெரிவித்து, என் திருவோட்டை வாங்கிக்கொண்டு தான் நான் போவேன்,” என்று மடக்கினார் சிவனடியார்.

தன்மேல் சுமத்தப்படும் களவுப் பழியை எப்படித் துடைப்பது என்று நடுங்கினார் நாயனார்.

“சுவாமி! தங்களின் திருவோடை நான் எடுக்கவில்லை. நான் கள்வன் அல்ல என்று எப்படித் தங்களிடம் நிரூபிப்பது?”

“உன் புத்திரனின் கையைப் பிடித்துக்கொண்டு குளத்தில் மூழ்கி சத்தியம் செய்,” என்றார் அடியார்.

கலங்கி நின்ற நாயனார், தனக்கு புத்திரன் இல்லை என்று சொன்னதும், மனைவியின் கையைப் பிடித்து சத்தியம் செய்யுமாறு கூறினார் சிவபெருமான். மனைவியைத் தீண்டுவதில்லை என்று அவர் செய்த சபதத்தை எடுத்துச் சொல்லி, அவர் மட்டும் குளத்தில் மூழ்கி சத்தியம் செய்வதாகச் சொன்னார் நாயனார். ஆனால் சிவனடியார் அதை ஒத்துக்கொள்ளவில்லை.

ஆன்மீக கதை | Thiruneelakanda Nayanar and his wife
ஆன்மீக கதை | Thiruneelakanda Nayanar and his wifeImage credit: Chatgpt

“தில்லைவாழ் அந்தணர்கள் கூடியிருக்கும் சபையில் இந்த விஷயத்தைச் சொல்லி நியாயம் கேட்கப் போகிறேன். என் திருவோடையும் திருப்பித் தராமல், சத்தியம் செய்யச் சொன்னால் அதையும் செய்யாமல் சமாளிக்கிறாய். இதற்கு ஒரு முடிவு தெரிய வேண்டும்,” என்று சபையை நோக்கி நடந்தார் சிவனடியார். திருநீலகண்ட நாயனார் அவரைத் தொடர்ந்து சென்றார்.

சபையில் கூடியிருந்த அந்தணர்களிடம் தன் தரப்பு நியாயத்தை உரைத்தார் சிவனடியார். அந்தணர்கள் நாயனாரிடம் நடந்ததை விவரிக்குமாறு கேட்டனர். திருநீலகண்ட நாயனார் விவரத்தைச் சொல்லி, அவர் மட்டும் குளத்தில் மூழ்கி சத்தியம் செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஆனால் சிவபெருமான் இதற்கு ஒத்துக்கொள்ள வேண்டுமே. அவரின் இந்தத் திருவிளையாடலின் நோக்கம் நிறைவேற வேண்டுமே. எனவே அவர் தன் கருத்தில் உறுதியாக இருந்தார். நாயனார் அவரின் மனைவியின் கையைப் பிடித்தபடி குளத்தில் மூழ்கி சத்தியம் செய்யவேண்டும் என்றே எதிர்பார்த்தார்.

திருநீலகண்ட நாயனார் ஒரு முடிவுக்கு வந்தார். மனைவியைத் தீண்டுவதில்லை என்ற சபதத்தைப் பற்றி சபையில் தெரிவிக்க விரும்பவில்லை. எனவே தன் மனைவியை அழைத்துவரச் செய்தார். திருப்புலீச்சரம் கோவிலுக்கு முன்னே இருக்கும் திருக்குளத்தில், ஒரு மூங்கில் தண்டின் ஒரு புறத்தை மனைவியைப் பிடித்துக் கொள்ளச் செய்து, அடுத்த முனையை நாயனார் பிடித்துக்கொண்டு குளத்தில் இறங்கினார்கள்.

சிவனடியார் விடுவதாக இல்லை.

“உன் மனைவியின் கையைப் பிடித்துக்கொண்டு மூழ்கு,” என்றார்.

வேறு வழியில்லாமல், தன் மனைவியைத் தீண்டுவதில்லை என்ற சபதத்தையும், அதற்கான காரணத்தையும் சொல்லி, குளத்தில் மூழ்கி எழுந்தனர். இருவரும் முதுமை நீங்கி இளமையோடு வெளியே வந்தனர். கூடியிருந்த அனைவரும் மருண்டு நிற்க, சிவனடியார் மாயமானார்.

தங்கள் மூப்புப் பருவம் நீங்கி இளமைப் பருவம் மீண்டதைக் கண்ட நாயனார், குழப்பத்துடன் சிவனடியாரைத் தேடினார். சிவபெருமான் பார்வதி தேவியுடன் ரிஷப வாகனத்தில் காட்சி அளித்து அருளினார்.

“ஐம்புலன்களை வென்றதால் மேன்மை அடைந்த அன்பர்களே! எக்காலத்திலும் இந்த இளமை நீங்காமல் என்னை அடைந்து இன்புற்றிருங்கள்,” என்று கூறி மறைந்தார்.

இதையும் படியுங்கள்:
ஆன்மீகச் சிறுகதை: சிறந்த தர்மம்!
ஆன்மீக கதை | Thiruneelakanda Nayanar and his wife

திருநீலகண்ட நாயனாரும் மனைவியும் இளமையுடனேயே சிவலோகம் அடைந்து நிலைத்திருந்தார்கள்.

சிதம்பரம் நடராஜர் கோயிலின் மேற்கு கோபுரத்திற்கு எதிர் தெருவில் இரண்டாவது திருப்பத்தில் உள்ளது இந்தத் திருப்புலீச்சரம் கோயில். வியாக்ரபாதர் லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து, பூஜை செய்ததால் திருப்புலீச்சரம் என்ற பெயர் வந்தது. இக்கோவில் திருக்குளத்தின் படிகளில், திருநீலகண்ட நாயனார் தன் மனைவியின் கையைப் பிடித்து மூழ்கும் சிலாரூபம் இப்போதும் உள்ளது. திருநீலகண்ட நாயனாரையும் அவர் மனைவியையும் மீண்டும் இளமையாக்கியதால் இக்கோயிலுக்கு “இளமையாக்கினார் கோவில்” என்ற பெயரும் உண்டு.

“சொல்லைச் சிவன் திரு ஆணைதன்

தூம்மொழி தோள் நசையால்

ஒல்லைத் துறந்து உரு மூத்தற் பின்

உமைகோன் அருளால்

வில்லைப் புரைநுத லாளொடு

இளமை பெற்று இன்பம் மிக்கான்

தில்லைத் திருநீல கண்டக்

குயவனாம் செய்தவனே”

- (திருத்தொண்டர் திருவந்தாதி)