

திவாகர முனிவர் என்பவர் தீவிரமான திருமால் பக்தர். எப்படியேனும் பரந்தாமனின் தரிசனம் பெறவேண்டும் என்பதற்காக தினமும் பூஜைகள் செய்து கடுமையான தவம் செய்துவந்தார். அவரின் தவத்தையும், பக்தியையும் மெச்சிய மஹாவிஷ்ணு, இரண்டு வயதுக் குழந்தையாக அவர் முன் தோன்றினார்.
குழந்தையின் அழகும் தேஜசும் கண்ட முனிவர், அந்தக் குழந்தையைத் தன்னுடனேயே வைத்துக்கொள்ள விரும்பினார். குழந்தையும் அவருடன் தங்குவதற்கு ஒத்துக்கொண்டது. ஆனால் முனிவரிடம் ஒரு நிபந்தனை வைத்தது குழந்தை.
“நான் உங்களுடனே தங்குகிறேன். ஆனால் நான் எது செய்தாலும் அதை கண்டிக்கவும், தடுக்கவும் கூடாது. இதற்கு ஒத்துக்கொண்டால் நான் உங்களுடன் இருக்கிறேன்,” என்று அந்த தெய்வக் குழந்தை சொன்னதும், முனிவரும் அதற்கு ஒப்புக்கொண்டார்.
அதன்பின் முனிவர் வழக்கம்போல தினமும் பெருமாளுக்கு பூஜைகள் செய்வதும், தவத்தில் ஈடுபடுவதுமாக இருந்தார். அவர் பூஜை செய்யும் வேளைகளில் அவ்வப்போது குழந்தை அவரைத் தொந்தரவு செய்யும். சிறுபிள்ளை தானே என்பதால் செல்லமாகக் கடிந்துகொள்வார் முனிவர்.
இப்படியிருக்க, ஒருநாள் முனிவர் பூஜை செய்துகொண்டிருந்த சாளக்கிராமத்தை எடுத்து விளையாட்டாக வாயில் போட்டுக்கொண்டது குழந்தை. பதறிய முனிவர் குழந்தையைக் கடிந்துகொண்டார். இப்படியெல்லாம் செய்யக்கூடாது என்று எச்சரித்தார்.
“நான் எது செய்தாலும் கண்டிக்கவோ, தடுக்கவோ கூடாது என்ற நிபந்தனையுடன்தான் உம்முடன் தங்க சம்மதித்தேன். இப்போது என்னை திட்டுகிறீர்களே. முற்றும் துறந்த முனிவருக்கு பொறுமை மிகவும் அவசியம். பெருமாளிடம் பக்திகொண்டிருக்கும் உமக்கு, ஒரு குழந்தையிடம் இத்தனை கோபம் வரலாமா? உம்மை சோதிக்கவே நான் குழந்தையாக உம்முடன் இருந்தேன். இனி என்னைக் காணவேண்டுமென்றால் அனந்தன் காட்டிற்கு வா,” என்று கூறி மறைந்துவிட்டது குழந்தை.
திவாகர முனிவர் தன் தவறை உணர்ந்தார். தன்னுடன் குழந்தையாக இருந்தது பரந்தாமனே என்பதை உணர்ந்தவர், அவரைத் தேடி அலைந்தார். அனந்தன் காடு எங்கே இருக்கிறது என்று பலரையும் விசாரித்தார். பல நாள் திரிந்தும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஒருநாள் மிகவும் தளர்ந்துபோய், ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்தார். அந்த வீட்டிலிருந்த கணவன் மனைவி இடையே பயங்கரமான வாக்குவாதம் நடந்துகொண்டிருந்தது. மனைவியிடம் கோபப்பட்ட கணவன்,
“இனியும் நீ என்னுடன் சண்டை போட்டுக்கொண்டிருந்தால் என்னால் பொறுக்கமுடியாது. உன்னை அடித்து அனந்தன் காட்டில் விட்டுவிட்டு வந்துவிடுவேன்,” என்று மிரட்டினான்.
இதைக் கேட்டதும் திவாகர முனிவர் மிகவும் மகிழ்ச்சியுடன் அந்த வீட்டிற்குள் சென்று, அவர்களை சமாதானம் செய்தார். அனந்தன் காடு எங்கிருக்கிறது என்பது பற்றி விவரங்களைக் கேட்டறிந்து, அங்கிருந்து கிளம்பினார்.
கல்லும் முள்ளும் நிறைந்திருந்த அந்தக் காட்டில், எப்படியாவது பகவானைத் தேடிக் கண்டறிந்துவிட வேண்டும் என்ற ஆவலில் தேடிய முனிவர், ஒருவழியாக பரந்தாமனைக் கண்டறிந்தார்.
குழந்தையாக, தன்னிடம் இருந்த பரந்தாமன் அதேபோல் அனந்தன் காட்டில் இருப்பார் என்று எதிர்பார்த்து வந்த திவாகர முனிவருக்கு ஏமாற்றமாக இருந்தது. அங்கே திருமால் உன்னிக் கண்ணனாக, குழந்தையாக இருக்கவில்லை. இலுப்பை மரத்தில் சயனக் கோலத்தில் பெரிய திருமேனியுடன் இருந்தார் இறைவன். அவரது தலைப்பகுதி திருவல்லத்திலும், பாதம் திருப்பா புறத்திலும் இருப்பதைக் கண்ட முனிவர் வியப்பும் அச்சமும் அடைந்தார்.
முனிவரால் அத்தனை பெரிய சயனக் கோலத்தைக் கண்ணார தரிசித்து, வலம் வந்து வணங்கமுடியவில்லை. அதனால் தன் கையில் வைத்திருக்கும் தண்டத்தின் மூன்று மடங்கு அளவில் சுருங்கி காட்சியளிக்குமாறு வேண்டிக்கொண்டார். இறைவனும் முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க, அவர் கூறியது போலவே அவர் கையில் உள்ள தண்டத்தின் மூன்று மடங்கு அளவுக்காக சுருங்கிக் காட்சியளித்தார்.
முனிவர் மிகவும் மகிழ்வுடன் பெருமாளை வணங்கி சிலிர்த்தார். ஆனால் பரந்தாமன் மீண்டும் முனிவரை சோதிக்க விரும்பினார் தனக்கு மிகவும் பசியெடுப்பதாகவும், சாப்பிட ஏதாவது வேண்டும் என்று கேட்டார். அவ்வளவு பெரிய காட்டில் இறைவனுக்கு எதைக் கொடுப்பது? முனிவர் ஒரு தேங்காய் சிரட்டையில் கொஞ்சம் மாங்காயும் உப்பு சேர்த்துக் கொடுத்தார்.
பின்னர் திருவிதாங்கூர் மன்னருக்கு அனந்தன் காட்டில் திருமால் இருக்கும் தகவலைத் தெரிவித்தார். ஆனால் மன்னர் வந்து பார்க்கும்போது பெருமாள் அங்கே இல்லை. இருந்தாலும் முனிவர் கூற்றில் நம்பிக்கை வைத்த மன்னன், அங்கே பத்மநாபனுக்கு கோவில் கட்ட ஏற்பாடு செய்தார்.
ஆதிசேஷன் மீது பள்ளி கொண்ட பரந்தாமனின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பத்மநாபசுவாமி என்ற திருநாமம் சூட்டப்பட்டது. மரத்தால் ஆன இறைவனின் திருமேனி பெரிதாக இருப்பதால் மூன்று வாயில்கள் வைத்து, பக்தர்கள் தரிசிக்கும் வண்ணம் அமைத்தனர். அதன் பின்னர் கோவில் பலமுறை புதுப்பிக்கப்பட்டது.
1686ல் கோயில் வளாகத்தில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டபோது இலுப்பை மரத்தால் ஆன அனந்த பத்மநாப சுவாமியின் மூர்த்தி ஒரு பாகம் எரிந்து அழிந்தது. அதன் பின்னர் மன்னர் மார்த்தாண்டவர்மரின் முயற்சியால் 1729 ஆலயம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.
அப்போது 12008 சாளக்கிராமக் கற்களாலும், கடுசர்க்கரா என்ற அஷ்டபந்தன கலவையாலும் இறைவனின் திருமேனி நிறுவப்பட்டு, அனந்த சயன மூர்த்தியாக பிரதிஷ்டை செய்யப்பட்டது.
மகாவிஷ்ணுவின் 108 திவ்யதேசங்களில் ஒன்றாக உள்ள திருஅனந்த பத்மநாப சுவாமியின் திருமேனி, நேபாள நாட்டிலுள்ள கண்டகி நதிக்கரையில் உள்ள சாளக்கிராமக் கற்களால் செய்யப்பட்டதாகும்.