

புண்டரீக மகரிஷி வைணவ திருத்தலங்களுக்குச் சென்று தரிசித்து, மகாவிஷ்ணுவின் அருளைப் பெற விரும்பி, ஒவ்வொரு திருத்தலமாக தரிசித்து வந்தார். யாத்திரை பல நாட்கள் தொடர்ந்தது. இப்படி, அவர் ஒவ்வொரு தலத்திலும் திருமாலைத் தரிசித்து வரும்போது, வழியில் வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்திலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருப்பாற்கடல் (Thiruppaarkadal Ranganathar temple) என்னும் கிராமத்திற்கு வந்து சேர்ந்தார். திருப்பாற்கடலில் சிவன், விஷ்ணு இருவருக்கும் ஆலயம் உள்ளது.
புண்டரீக மகரிஷி கோவிலுக்குச் செல்லும் வழியை ஒருவரிடம் கேட்க, அவரும் வழி சொன்னார். மகரிஷி விஷ்ணு கோவிலுக்கு மட்டும்தான் செல்வார் என்பது வழி சொன்னவருக்குத் தெரியாது. அன்று ஏகாதசி. அதனால் ஏகாதசி முடிவதற்குள் திருமாலை தரிசித்து விடவேண்டும் என்ற பேரார்வத்தோடு ஆலயத்திற்கு விரைந்தார் மகரிஷி. கோவிலுக்குள் நுழைந்ததும் உள்ளே நந்தி இருப்பதைப் பார்த்ததும் அதிர்ந்தார்.
திருமாலின் தீவிர பக்தனான மகரிஷிக்கு, சிவபெருமானின் ஆலயத்திற்குள் நுழைந்துவிட்டோமே என்ற அதிர்ச்சி ஏற்பட்டது. உடனே அங்கிருந்து கிளம்பினார். அப்போது எதிரில் ஒரு முதியவர் வந்தார்.
மகரிஷி அவரிடம், “இங்கே பெருமாள் கோவில் எங்கே இருக்கிறது?” என்று கேட்டார்.
“நீங்கள் இப்போது நின்றுகொண்டிருப்பது பெருமாள் கோவில்தான்,” என்றார் முதியவர்.
மகரிஷியால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆலயத்திற்குள் சென்று நந்தி பகவானை, தன் கண்களால் கண்டு திரும்பியவர் இதை எப்படி உடனே ஏற்றுக் கொள்வார்.
“பெரியவரே, நீங்களும் குழப்பமடைந்து என்னையும் குழப்புகிறீர்களே! இது சிவன் கோயில் தானே?” என்றார்.
முதியவரும் விடுவதாக இல்லை.
“இல்லையே, இது பெருமாள் அருளும் ஆலயம்தானே. வாருங்கள் காட்டுகிறேன்,” என்று கோவிலுக்குள் நடந்தார்.
மகரிஷிக்கு நம்பவும் முடியவில்லை, நம்பாமலும் இருக்க முடியவில்லை. வேறுவழி இல்லாமல் கண்களைக் கட்டிக்கொண்டு, (தவறுதலாகக்கூட சிவபெருமானின் திருவுருவத்தைப் பார்த்து விடக்கூடாது என்பதற்காக) முதியவரின் கையைப் பற்றியபடி அவரைப் பின்தொடர்ந்தார். வயதில் முதியவராக இருந்தாலும் அவர் வேக நடைபோட்டுச் சென்றார்.
கருவறைக்குள் நுழைந்ததும் முதியவர் மறைந்தார். கருவறையில் சிவலிங்கம் இருந்தது. மகரிஷி, கட்டப்பட்ட கண்களோடு இறைவனின் திருவுருவத்தைக் கைகளால் தடவிப் பார்த்தார். தலையில் மகுடம், கைகளில் சங்கு, சக்கரம், கதை (Gada) என ஒவ்வொன்றையும் தொட்டுப் பார்த்து உணர்ந்த புண்டரீக மகரிஷி, அங்கே அருள்வது மகாவிஷ்ணுவே என்று தெரிந்தால், கண்களைக் கட்டியிருந்த துணியைக் களைந்தார். எதிரே, சிவபெருமானின் லிங்கத்திருமேனி இருக்கும் ஆவுடையார் மீது நின்ற கோலத்தில் மகாவிஷ்ணு காட்சி தந்தார்.
சிவம் வேறு விஷ்ணு வேறு இல்லை என்பதை மகரிஷிக்கு உணர்த்தவே இறைவன் இந்தத் திருவிளையாடலை நிகழ்த்தினார். புண்டரீக மகரிஷியும் தன் தவறை உணர்ந்து, அரியும் அரனும் ஒன்று என்று தெளிவு பெற்றார்.
புண்டரீக மகரிஷிக்காக இறைவன் பிரசன்னமானதால், இத்தலத்தில் திருமால் பிரசன்ன வெங்கடேச பெருமாள் என்னும் திருநாமத்தோடு, இப்போதும் ஆவுடையார் மீது நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்கிறார்.
பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கும்போது உற்சவமூர்த்தி அதன் வழியாக வருவார். ஆனால் இக்கோவிலில் சொர்க்கவாசலுடன் சேர்ந்து மூன்று வாசல்கள் உள்ளன. மூலவர் இருக்கும் கருவறைக் கதவுகளே சொர்க்கவாசல் கதவுகளாக உள்ளன. இதை நித்திய சொர்க்கவாசல் என்று அழைக்கிறார்கள். எனவே, வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் கதவுகள் திறந்ததும் மூலவரையே நேரடியாகத் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும்.
அருகிலேயே அரங்கநாதர் ஆலயமும் உள்ளது. வைணவ நூற்றியெட்டு திவ்யதேசங்களில் 107வது திவ்யதேசம் திருப்பாற்கடல். திருப்பாற்கடலை மனித உடலுடன் தரிசிக்க இயலாது. அதற்கு ஈடாக, இந்த திருப்பாற்கடலில் உள்ள அரங்கன் ஆலயத்தை 107ஆவது திவ்ய தேசமாகச் சொல்கிறார்கள்.
காஞ்சிபுரத்தில் உள்ள அத்திவரதரைப் போலவே, இந்த ஆலயத்திலும் மிக அற்புதமான அத்தி மரத்தால் ஆன ரங்கநாதர் சயனத்தில் இருக்கிறார். 2000 வருடம் பழமையான இந்த ஆலயத்தில், ஒன்பதடி நீளமும் மூன்றடி உயரமும் கொண்ட ஆதிசேஷன் மீது பள்ளிகொண்ட கோலத்தில் பெருமாள் அருள்கிறார். இவரின் திருமுடி அருகில் ஸ்ரீதேவி தாயாரும், திருவடி அருகே பூமாதேவி தாயாரும், நாபிக்கமலத்திலிருந்து எழுந்த தாமரை மலர்மீது பிரம்மாவும் அமர்ந்து அருள்கின்றனர். இவை அனைத்துமே அத்திமரத்தால் ஆனவை என்பதே தனிச் சிறப்பு.
படைப்புத் தொழிலைச் செய்கின்ற பிரம்மாவுக்கு, ஒருமுறை அகங்காரம் உண்டாயிற்று. அதனால் அவரால் திருமாலைத் தரிசிக்க முடியவில்லை. இதனால் வருந்திய பிரம்மா, பூலோகம் வந்து காஞ்சிபுரத்தில் யாகம் செய்ய விரும்பினார். சரஸ்வதியை தன்னுடன் வரும்படி அழைத்தார். பிரம்மாவுடன் இருந்த பிணக்கு காரணமாக சரஸ்வதி யாகத்தில் கலந்துகொள்ள மறுத்துவிட்டார். ஆனால், பிரம்மா அதற்காக யாகத்தை நிறுத்துவதாக இல்லை.
இதனால் கோபமடைந்த சரஸ்வதி, வேகவதி நதியாக உருவெடுத்து, யாகம் நடக்கும் இடத்தை நோக்கி ஓடி வந்தார். பிரம்மா கலக்கத்துடன் திருமாலை வணங்கினார். யாகத்திற்கு எந்தத் தடங்கலும் வந்துவிடக்கூடாது என்று மனமுருகி வேண்டினார். பிரம்மாவின் பிரார்த்தனைக்கு மனம் இரங்கிய திருமால், பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் சயனக் கோலத்தில், வேகவதி நதியின் குறுக்கே படுத்துக்கொண்டார். இதனால் பிரம்மாவின் யாகம் தடங்கலின்றி முடிந்தது.
பிரம்மா கேட்டுக்கொண்டதற்கு இணங்க, இத்தலத்தில் அப்படியே தங்கிவிட்டார் திருமால். பாற்கடலில் உள்ளது போலவே இங்கும் சயனக் கோலத்தில் அருள்வதால் இவருக்கு “ஷீராப்திநாதர்” என்றும் பெயர் ஏற்பட்டது.
இத்தல பெருமாளை தரிசிக்க, சித்திரகுப்தர் எழுதி வைத்த நம்முடைய பாவக் கணக்குகள் நீங்கும் என்பது ஐதீகம். அத்திமரத்தால் ஆனவர் என்பதால் இவருக்கு திருமஞ்சனம் செய்யப்படுவதில்லை.