108 திவ்ய தேசங்களையும் ஒரே இடத்தில் தரிசிக்க, திருவடிசூலம் போவோமா?

ஒவ்வொரு திவ்ய தேசக் கோவிலிலும் பெருமாள் எந்த வடிவத்தில் எழுந்தருளி இருக்கிறாரோ, அதே வடிவத்தில் திருவடிசூலம் ஆலயத்திலும் பிரதிஷ்டை ஆகியுள்ளது.
Perumal
Perumal
ரேவதி பாலு

சென்னை தொலைபேசி அலுவலகத்தில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றிருக்கும் ரேவதி பாலு முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறுகதை, நாடகம், குறுநாவல், ஆன்மிகம் என்று எல்லா துறைகளிலும் தடம் பதித்து பல்வேறு பரிசுகளை வென்றிருக்கிறார். இதுவரை ஏழு சிறுகதைத் தொகுப்பு நூல்கள், இரண்டு ஆன்மிகக் கட்டுரைத் தொகுப்பு நூல் மற்றும் ஒரு பல்சுவை கட்டுரை தொகுப்பு நூல் வெளியாகியுள்ளன. இவருடைய நாடகங்கள் சென்னை வானொலி, பொதிகை தொலைக்காட்சியில் ஒலி, ஒளி பரப்பாகியுள்ளன. சமீபத்தில் ஒரு நாடகம் மெரீனா தியேட்டர்ஸால் மேடையேற்றப்பட்டது. சென்னை வானொலியில் ஐந்து வருடங்கள் தொடர்ந்து 'நகர்வலம்' நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருக்கிறார்.

Updated on
deepam strip
deepam strip

திருப்போரூரிலிருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் திருவடிசூலம் என்னும் ஊர் அமைந்துள்ளது. இங்கே ஏழு மலைகளுக்கு நடுவில் இயற்கை எழில் சூழ சுயம்பு தேவியாக வெளிப்பட்டவள் தேவி கருமாரி. இதே இடத்திலேயே மிகப்பிரம்மாண்டமான சிலை வடிவமைப்புடன் ஸ்ரீ தேவி கருமாரியம்மனுக்கு ஒரு ஆலயம் எழும்பிக் கொண்டிருக்கிறது.

இந்த ஆலய வளாகத்திற்குள்ளேயே ஆழ்வார்களால் பாடப்பெற்ற 108 திவ்ய தேச பெருமாளுக்கும் தனித் தனி சந்நிதி பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது.

திவ்ய தேசம் என்பது 108 வைணவத் திருத்தலங்களை குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இடம் பெற்ற சிறப்பு மிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களை பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன.

ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும். இவற்றில் 105 தலங்கள் இந்தியாவிலும் ஒன்று நேபாளிலும் உள்ளன. இரண்டு தலங்கள் வானுலகில் உள்ளன.

வைணவத் திருத்தலங்கள் 108 என்று தொகுத்து காட்டியவர் அழகிய மணவாள தாசர். இவர் இந்த திருத்தலங்களை குறித்து பாடிய பாடல்கள் 108 திருப்பதி அந்தாதி என்னும் நூலாக வெளிவந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
ஒரே கோவிலில் நான்கு திவ்ய தேசங்கள் எந்த கோவிலில்? வாங்க தெரிஞ்சுக்கலாம்!
Perumal

இவர் இந்த தலங்களை,

சோழ நாட்டு திருப்பதிகள்.. 40

நடுநாட்டு திருப்பதிகள்....2

தொண்டை நாட்டு திருப்பதிகள்.. 22

வட நாட்டு திருப்பதிகள் ..11

மலை நாட்டு திருப்பதிகள்...13

பாண்டிய நாட்டு திருப்பதிகள்.. 18

நில உலகில் காண முடியாத திருப்பதிகள்.....2

என்று வகைப்படுத்தியுள்ளார்.

இந்த 108 வைணவ திருத்தலங்களில்

84 திருத்தலங்கள் தமிழ் நாட்டிலும்,

11 திருத்தலங்கள் கேரளாவிலும்,

2 திருத்தலங்கள் ஆந்திராவிலும்,

4 திருத்தலங்கள் உத்திரபிரதேசத்திலும்,

3 திருத்தலங்கள் உத்தரகாண்டத்திலும்,

1 திருத்தலம் குஜராத்திலும்,

1 திருத்தலம் நேபாளிலும்,

2 திருத்தலங்கள் வானுலகத்திலும்,

அமைந்துள்ளன.

ஒவ்வொரு திவ்ய தேசக் கோவிலிலும் பெருமாள் எந்த வடிவத்தில் எழுந்தருளி இருக்கிறாரோ, அதே வடிவத்தில் திருவடிசூலம் ஆலயத்திலும் பிரதிஷ்டை ஆகியுள்ளது மிக சிறப்பானதாக கருதப்படுகிறது. இதில் 106 திவ்ய தேசங்கள், பூமியில் உள்ளவை, இந்தக் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. 107-ஆவது திவ்ய தேசம் ‘பாற்கடல்’ ஒரு ஓவிய ரூபத்தில் காட்சியளிக்கிறது. 108-ஆவது திவ்ய தேசம், வானுலகில், ஸ்ரீ வைகுண்டம்.

ஸ்ரீ வேங்கடேச பெருமாள், இங்கே திருப்பதியில் இருப்பது போலவே, சாட்சாத் அதே ரூபத்தில் ஒரு தனி சந்நிதி கொண்டுள்ளார். திருப்பதி செல்ல இயலாதவர்கள் இங்குள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதியை வணங்கி மன நிறைவு பெறலாம். இந்த திருவடிசூலம் ஆலயம் செங்கல்பட்டிலிருந்து 10 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. பேருந்தில் வருவோர் திருவடிசூலம் என்ற இடத்தில் இறங்கி 2 கி.மீ. உள்ளே வர வேண்டும்.

இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரே இடத்தில் உருவாக்கப்பட்ட 108 திவ்ய தேசக் கோவில் இதுவேயாகும். இந்த கோவிலுக்கு அஸ்திவாரம் தோண்டும்போது திருமாலுக்குரிய திருமண் கட்டி பாறைகள் பூமிக்கு அடியில் இருந்தனவாம்.

இதையும் படியுங்கள்:
திருப்பாவையில் திவ்ய தேசங்கள்!
Perumal

108 திவ்ய தேசங்கள் என்பது ஆழ்வார்களால் பாடப்பெற்ற 108 விஷ்ணு கோவில்களின் தொகுப்பு என்பதால், இவை வைணவத்தில் மிகப் புனிதமாகக் கருதப்படுகிறது. இந்த திவ்ய தேசங்களை ஒரே இடத்தில் தரிசிப்பதும் மிகப் பெரிய வாய்ப்பாக கருதப்படுவதால், பக்த கோடிகள் இங்கே திரளாக வந்து தரிசனம் செய்து வாழ்வில் எல்லா நலன்களையும் பெறுகிறார்கள்.

logo
Kalki Online
kalkionline.com