

குளிக்கும் போது பல விஷயங்களை கவனித்துச் செய்வது நல்லது. குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி குளிக்க வேண்டும். கர்மம் செய்தபிறகு மட்டும் தெற்கு நோக்கி குளிக்கலாம். மேற்கு திசை நோக்கி குளித்தால் உடல் சோர்வு ஏற்படும். நாம் வீட்டிலேயே கங்கா ஸ்னானம் செய்யமுடியும். ஒரு குவளை நீரில் மோதிர விரலால் ஓம் என்று தியானம் செய்து எழுதுங்கள். அந்த நீர் கங்கை நீராக மாறும். ஒரு நிமிட தியானத்தில் இந்த உடலுக்குள் நீங்களே வந்திருந்து இதை உங்களுக்குச் செய்யும் அபிஷேகமாக ஏற்றுக் கொள்ளுங்கள் என்று இறைவனிடம் வேண்டிக் கொண்டு குளித்தால் உள்பூஜையின் அங்கமாக இறைவனுக்கு அபிஷேகம் ஆகிவிடும்.
தண்ணீரை கால் முதல் மேல் நோக்கி நனைத்து வந்து கடைசியில் தலையில் ஊற்றிக் கொள்ள வேண்டும். நம் மண்டை ஓட்டுக்கு எப்படிப்பட்ட அக்னியையும் தாங்குகிற சக்தி உண்டு. காலிலிருந்து பரவும் குளிர்ச்சி மேல் நோக்கி பயணிக்கும் போது உள் அக்னியானது தலையை நோக்கி பயணிக்கும்.
இதுவே சரியான முறை. தலை முதல் கால் வரை உள்ள பின் பாகத்தை பிருஷ்டம் ஏற்பார்கள். அதில் நம் முதுகு பாகம் தான் பெரியது. அங்குதான் அக்னியின் வீச்சம் கூடுதல் வேகமாகப் பரவும். அதனால் குளித்து முடித்தபிறகு முதலில் முதுகு பாகத்தை தான் துடைக்க வேண்டும்.
அனேகமாக எல்லோரும் ஈரம் படாத துண்டை தான் உபயோகிப்பீர்கள். உலர்ந்த துணியானது உள்ள சூட்டை வேகமாகப் பரவச் செய்து பலவித உள்நோவுகளை உருவாக்கும். பிறருடன் வாய் திறந்து பேசக்கூடாத மூன்று நேரங்களில் ஒன்று குளிக்கும் நேரம். அப்போது மௌனத்தை கடைப்பிடிக்கலாம் அல்லது ஜபம் செய்யலாம். குளிக்கும் போது வாயில் நீர் வைத்து கொப்பளிப்பதால் கழுத்துக்கு மேல் வருகின்ற நீர் சம்பந்தமான தட்டுக்களை மற்றும் நோய்களை தவிர்க்கலாம்.
வாயில் இருக்கும் நீர் மேல் நோக்கி எழும் போது அக்னியின் வேகத்தை எடுத்துவிடும். நீர்நிலைகள், குளம், ஆறு, கடல் ஆகியவற்றில் எல்லா தேவதைகளும் பெரியவர்களும் அரூபமாக ஸ்நானம் செய்வதாக கூறுகிறார்கள்.
அதனால் ஓடிச் சென்று அதில் குதிக்காமல், கரையில் நின்று சிறிது நீரை தலையில் தெளித்து நீர்நிலையில் மெதுவாக குளிக்க வேண்டும். நீரில் உமிழ்வதோ துப்புவதோ கூடாது. நீரை விரயம் செய்தால் கடன் ஏற்படும்.
உப்புநீர் ஸ்நானம் திருஷ்டி தோஷங்களை நீக்கும். வெள்ளியன்று குளிப்பது நல்லது. அசுத்தமான நீரை நாம் வசிக்கும் இடத்தில் சேர்த்து வைக்கக் கூடாது. சுத்தமான நீரில் ஒருபோதும் அசுத்த நீரை கலக்கக் கூடாது. ஒருபோதும் நீரை காலால் உதைத்து விளையாடக் கூடாது. குளிக்கும் போது குவளையில் இருந்து நிதானமாக எடுத்து குளிக்க வேண்டும் வேகவேகமாக குவளையில் இருந்து எடுத்து குளிக்கக் கூடாது. அப்படி குளிப்பது தண்ணீரை பழிப்பதற்குச் சமம்.
வாரத்தில் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிப்பதால் உடல் சூட்டை குறைக்கலாம். ஆண்கள் புதன் மற்றும் சனி கிழமைகளில், பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் எண்ணெய் தடவி குளிக்க வேண்டும். தலையின் பின்புறமாக வழியும் நீர் ‘நரக நீராதாரம்’ என்று அழைக்கப்படுகிறது; அதை அந்த வகையில் ஒருபோதும் வெளியேற்றக் கூடாது.
பொது இடங்களானஆறு குளம் இவற்றில் குளிக்கும் போது அடுத்தவர் மீது நாம் குளிக்கும் நீர் தெளிக்க கூடாது. கடலிலோ நதியிலோ நீராடும் போது ஒற்றை ஆடையில்லாமல் இரண்டு ஆடையுடன் குளிக்க வேண்டும். தீர்த்தத்தில் மூழ்குவதற்கு முன் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி இடுப்பளவு நீரில் நிற்க வேண்டும்.
மூன்றுமுறை நீரை எடுத்து ஆசமனம் செய்ய வேண்டும். பின்தலையில் புரோட்சனம் செய்ய வேண்டும். பின் மூன்று முறை மூழ்கி குளிக்க வேண்டும். எண்ணெய் நீராடலுக்கு நல்லெண்ணையில் சீரகத்தை சேர்த்து லேசாக சூடாக்கி வடிகட்டி தேய்த்து குளிக்கலாம்.
காலை 6 மணியிலிருந்து 8 மணிவரை எண்ணெய் தேய்த்துக் குளிக்க உகந்த நேரமாகும். சுடுநீரில் குளிப்பது நல்லது. எண்ணெய் குளியல் ஆனபிறகு பழைய சாதம், இளநீர் தயிர் போன்ற குளிர்ச்சியான பொருட்கள் ஆகாது. தொடர்ந்து 48 சனிக்கிழமைகள் எண்ணெய் தேய்த்துக் குளிக்க தேகம் தங்கம் போல் மின்னும்.