
மூக்குக்கொம்பன் என்னும் விலங்கு நிலத்தில் வாழும் மிகப்பெரிய விலங்குகளில் ஒன்று. மூக்குக்கொம்பனுக்கு உச்சிக்கொம்பன், கொந்தளம் என்னும் பெயர்களும் உண்டு. ஆனால் காண்டாமிருகம் என்று சொன்னால்தான் பலருக்கும் தெரியும், புரியும். 'காண்டா' என்னும் சொல் மிகப் பெரிய என்னும் பொருள் கொண்டது. எனவேதான், இதனை காண்டாமிருகம் என்றேப் பலரும் அழைக்கின்றனர்.
இவ்விலங்கானது, 1.5 முதல் 5.0 செமீ தடித்த தோலும், பருத்த உடலும், 1 முதல் 1.8 மெட்ரிக் டன் எடையும் கொண்ட இப்பெரிய விலங்கு மணிக்கு 40 கிலோமீட்டர் எனும் வேகத்தில் விரைவாக ஓட வல்லது. இது இலை தழைகளை உண்ணும் தாவர உண்ணியாகும். 60 ஆண்டுகள் வரை உயிர் வாழக் கூடியது. எளிதில் சினமுற்று, கொந்தளிப்புடன் கடுமையாக எதிரிகளைத் தாக்க வல்லது. எனவே, இந்த விலங்கிற்கு கொந்தளம் என்று பெயர் ஏற்பட்டிருக்கிறது.
மூக்குக் கொம்பன் இயற்கையில் ஆப்பிரிக்காவிலும், இந்தியாவிலும், சாவா சுமத்ரா தீவுகளில் மட்டுமே இன்று இருக்கின்றன. ஆப்பிரிக்க மூக்குக் கொம்பன்களுக்கு இரண்டு கொம்புகள் உண்டு, ஆசிய மூக்குக் கொம்பன்களில் இந்திய, சாவா வகைகளுக்கு ஒரே ஒரு கொம்புதான் உண்டு. ஆனால், ஆசியாவில் உள்ள சுமத்ரா மூக்குக் கொம்பன்களும் இரட்டைக் கொம்புகள் கொண்டவை. ஆப்பிரிக்க மூக்குக் கொம்பனை சுவாகிலி மொழியில் கிஃவாரு (Kifaru) என்று அழைக்கின்றனர். 'கறுப்பு ரைனோ' (Black Rhino) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இரட்டை மூக்குக்கொம்பன், ஆப்பிரிக்க விலங்கைக் குறிக்கும்.
மூக்குக்கொம்பன்கள் ஒற்றைப்படைக் கால் விரல்கள் கொண்ட விலங்குகள் வகையைச் சேர்ந்தவை. இன்றும் உயிர் வாழும் மொத்தம் ஐந்து வகையான மூக்குக்கொம்பன்களை மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். முதல் பிரிவு, ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 'வெள்ளை', 'கறுப்பு' மூக்குக் கொம்பன்கள் ஆகிய இரண்டும் அடங்கும். இவை 5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பிளியோசீன் (Pliocene) என்னும் ஊழிக்காலத்தில் வெவ்வேறு இனமாகப் பிரிந்தன. இவை இரண்டுக்கும் உள்ள முதன்மையான வேறுபாடு இவற்றின் வாயின் அமைப்பே ஆகும். 'வெள்ளை' மூக்குக்கொம்பனுக்கு வாயின் உதடுகள் பரந்து விரிந்து புல் மேய ஏதுவாக உள்ளன. ஆனால் கறுப்பு மூக்குக்கொம்பனின் வாய் சற்று குவிந்து கூராக இருக்கும். மூக்கின் மீது இரட்டைக் கொம்புகள் கொண்ட இரண்டு வகைகளும் ஆப்பிரிக்க இனத்தைச் சேர்ந்தவை.
மீதி உள்ள மூன்றில், இந்திய மூக்குக்கொம்பனும், சாவாத் தீவு மூக்குக்கொம்பனும் ஒற்றை கொம்புள்ள ஆசிய வகை மூக்குக்கொம்பன்கள். இவை இரண்டாவது பிரிவு ஆகும். இந்திய மூக்குக்கொம்பனும், சாவா மூக்குக்கொம்பனும் ஏறத்தாழ 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தனி இனங்களாகப் பிரிந்தன.
இவ்வெல்லா மூக்குக்கொம்பன்களைக் காட்டிலும் மிகச் சிறியதான சுமத்ரா மூக்குக்கொம்பன் மூன்றாவது வகை ஆகும். இந்த சுமத்ரா வகைக்கு, ஆப்பிரிக்க மூக்குக்கொம்பனைப் போல் இரட்டைக் கொம்புகள் உண்டு. இது உயரமான மலைப்பகுதிகளும் வாழ வல்லதாகையால் இதன் உடலில் முடி அதிகமாக இருக்கும். வேட்டையாடிக் கொல்லப்படுவதால் இன்று மிகவும் அழியும் தருவாயில் இருக்கும் சுமத்ரா மூக்குக்கொம்பனின் உலக எண்ணிக்கை 275 என்று கணக்கிட்டுள்ளார்கள்.
எல்லா மூக்குக்கொம்பன்களும் அழிவுறும் தீவாய்ப்புடன் உள்ளன. இந்தியக் காண்டாமிருகங்களில் ஏறத்தாழ 2700 மட்டுமே இன்றுள்ளன. அதே போல ஆப்பிரிக்க 'வெள்ளை' காண்டாவிருகமும் 9000 மட்டுமே இருக்கின்றன.
காண்டாமிருகத்தின் உடல் பருமனை ஒப்பிடும் பொழுது, இதன் மூளையின் எடை பாலூட்டிகளில் மிகச் சிறியது என்று கருதுகிறார்கள். இதன் மூளையின் எடை 400 முதல் 600 கிராம் வரை இருக்கும்.
மூக்குக்கொம்பனின் கொம்பு சிறு புதர்களை வேரோடு பிடுங்கி எறிய உதவுகின்றது. இந்த கொம்புப் பகுதி நகமியம் (கெரட்டின்) என்னும் பொருளால் ஆனது. நகம், மயிர் போன்ற பகுதிகளும் இதேப் பொருளால் ஆனதே.