'உண்ண உணவும், உடுக்க உடையும், உறங்க இடமும் இருந்தால் மட்டும் போதா...து...' என கே.பி. சுந்தராம்பாள் ஸ்டைலில் நீட்டி முழக்கி அப்பத்தா பாடிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டே வந்த அன்பான பேத்தி ஆண்டாளு.....
"உணவு, உடை, இடம் மூணும் போதாதா அப்பத்தா? வேறென்ன வேணும்...? காசா?" எனக் கேட்டாள்.
"காசும் தேவைதான். காசில்லாட்டி ஒண்ணும் நடக்காது. ஆனா...! அதுக்கும் மேல...." என்று இழுத்த அப்பத்தா, தனது கைகள் மற்றும் கால்களை மேலும் கீழும் மெதுவாக சுற்றியவாறே, இடுப்பை அசைத்தவாறே,
"ஒடம்புல இருக்கற கொளுப்பு கரைய, ஆரோக்கியமா வாழ, சந்தோசமா இருக்க, இது மாதிரி யோகா செய்யணம். புரிஞ்சிச்சா?" என்றாள்.
" நல்லா புரிஞ்சிச்சு. ஆனா அப்பத்தா! யோகா பத்தித்தான் எல்லாருக்கும் தெரியுமே. நீ என்ன புச்சா கை-காலை அசைச்சு சொல்ல வரே. அது புரியலையே!"
"அடியே ஆண்டாளு! எனக்கும் இது தெரியும். ஆனாக்க, பல சமயங்கள்ல, நீ சொல்ற அந்த எல்லாருக்கும் யோகா மறந்து போகுது. அப்படியே நெனவு இருந்தாலும், நேரமில்லை; அது - இதுன்னு ஏதோ நொண்டி சாக்கு சொல்றாக..."
" அதுக்கு என்ன அப்பத்தா செய்யப் போற...?""
"ஆண்டாளு! யாராச்சும் யோகாவை நினவு படுத்தினாக்கதான் செய்றாங்க. வருசத்துக்கு ஒரு வாட்டி வர யோகா நாள மட்டும் நெனவு வெச்சுக்கிட்டா போதுமா? வருசம் முழுசும் தினம் கொஞ்ச நேரம் யோகா செய்ய வேணாமா..?"
"வருசம் முளுக்க யோகா செஞ்சா என்ன கெடைக்கும் அப்பத்தா?" என்று கேட்டவாறே ஆண்டாளுவின் சிநேகிதி வள்ளி உள்ளே வந்தாள்.
"வாடீம்மா வள்ளி! சொல்லுறேன். கேளு! அதிகமான கொளுப்பு குறையும். துங்கற சோறு செரிமானமாகும். ரத்த ஓட்டம் சீராகும். மொத்தத்துல, நல்ல ஆரோக்கியம் கெடைக்கும். தெரிஞ்சுக்கிட்டயா..?"
"அடேங்கப்பா! இம்புட்டு கெடைக்குமா? சூப்பர் அப்பத்தா! "
" ஆண்டாளு, வள்ளி ! நல்லா கேட்டுக்கிடுங்க. நின்னுக்கிட்டு, டான்ஸ் ஆடிக்கிட்டு, உக்காந்துக்கிட்டு, சிரிச்சுக்கிட்டுன்னு யோகாவை வித-விதமா செய்யலாம். டீ.வி பொட்டீலதான் காட்டறாங்களே!"
"அப்பத்தா! நீங்க எங்கயோ போய்ட்டீங்க. பட்டமே கொடுக்கலாம் "
"சரி! சரி! உங்களுக்கு யோகாவுல என்ன புடிச்சுதோ, அதை நெதமும் பத்து நிமிசம் என்னை மாதிரி பண்ணுங்க!. மொபைலே கதியா கெடக்காதீங்க!"
"ஏன் அப்பத்தா! நீ நெதம் யோகா பண்ணுறியா..? நான் பாக்கவேயில்ல! "
" வூட்ல என்ன நடக்குன்னு எங்க பாக்கே ஆண்டாளு..? எப்போதும் மொபைலு, அரட்டை. மனசு வெச்சா எங்கிட்டுன்னாலும் யோகா செய்யலாம். நான் சமையல் கட்டுல கூட, கை- கால்-உடம்பு எல்லாம் அசைச்சிக்கிட்டு, மெதுவா அப்பப்ப யோகா பண்ணிக்கிட்டு இருக்கறதாலதான், என்னோட 80 ஆவது வயசுலயும் இப்படி பிட்டா இருக்கேன்.
சரி ! ஒண்ணு பண்ணுங்க! வர்ற 21 ஆந் தேதி உலக யோகா நாள். சோம்பேறியா இருக்காம, யோகா செய்ய ஆரம்பிச்சிடுங்க. சாக்கு போக்கு சொல்லாம, நெதமும் கண்டிப்பா கொஞ்ச நேரமாவது யோகா செய்யணும். சரியா...?"
"ஓகே அப்பத்தா!" கைகளை உயர்த்தி இருவரும் கோரஸாக குரல் கொடுத்தனர்.