

தினேஷ், தனது புத்தகப் பையில் எதையோ தேடிக்கொண்டிருந்தான்.
பக்கத்தில் உட்கார்ந்திருந்த மதன், எதுவும் பேசாமல் வேறு எங்கேயோ பார்த்துக்கொண்டிருந்தான்.
பின் பெஞ்சில் உட்கார்ந்திருந்த சேயோன், “என்னடா... தேடுறே...?” என்று கேட்டான்.
பதில் சொல்லாத தினேஷ், மீண்டும் மீண்டும் தேடிக்கொண்டே இருந்தான்.
“என்னடா, தொலைஞ்சு போச்சு. நீ சொன்னா, நானும் தேடுவேன்”
அவனைத் திரும்பிப் பார்க்காமல் பையைப் பார்த்தபடியே, “புது ஜியாமட்ரி பாக்ஸ் வச்சிருந்தேன்டா....! அதைத்தான் காணல்லை...” என்றான்.
“காலையில எங்கிட்ட காட்டி, பெருமையடிச்சிக்கிட்டியே...! அந்த பாக்ஸா....? வேணும்.... வேணும்..... ஒனக்கு நல்லா வேணும்....!” என்று தனது பொறாமையைத் தீர்த்துக்கொண்டான் சேயோன்.
“என்னடா...., இப்பிடிச் சொல்றே....? இன்னைக்குத்தான் எங்க அப்பா தந்தாங்க. புது ஜியாமெட்ரி பாக்ஸ்..டா....! நான் என்ன பண்றதுன்னு தெரியல்லடா....” என்று தினேஷ் சொன்னதைக் கேட்டதும் உண்மையிலேயே சேயோனும் வருத்தப்பட்டான்.
“நானும் ஒங்கூட சேர்ந்து தேடுறேன்” என்று சொல்லித் தேடிக்கொண்டிருந்தான்.
அவர்கள் தேடிக்கொண்டிருக்கும்போது மூன்றாவது பீரியடுக்கு வரும் பத்மினி மிஸ் வந்தாங்க.
மதனும் மற்றவர்களும் எழுந்து நின்று, “குட்மார்னிங் மிஸ்” என்று கோரஸாகச் சொன்னார்கள்.
அதுவரை உட்கார்ந்திருந்த தினேஷும் சேயோனும் வேக வேகமாக எழுந்து நின்றார்கள்.
அவர்கள் இருவரும் தாமதமாக எழுந்து நின்றதைக் கவனித்துவிட்டார் பத்மினி.
“ரெண்டு பேரும் என்ன பண்றீங்க...?” என்று அவர்களைப் பார்த்துக் கேட்டார்.
“மிஸ்....! இவனுக்க புது ஜியாமெட்ரி பாக்ஸைக் காணல்லை...! அதுதான் தேடிக்கிட்டிருந்தோம்” என்றான் சேயோன்.
தலை குனிந்தபடி நின்றான் தினேஷ்.
“எப்போ காணாம போச்சு...” என்றார் பத்மினி.
“ரீசெஸ் போகும்போது இருந்துது மிஸ். போய்ட்டு வந்து பார்த்தா காணல்லை....!” என்றான் தினேஷ்.
அந்த வகுப்பில் இருந்த எல்லோருடைய முகத்தையும் உற்றுப் பார்த்தார் பத்மினி மிஸ்.
“ஜியாமெட்ரி பாக்ஸை எடுத்தது யாருன்னு சொல்லிடுங்க. ஒங்க கிளாஸ்லதான் யாரோ எடுத்திருக்கீங்க...? யாரு எடுத்தது?” என்று மிரட்டினார் பத்மினி மிஸ்.
யாரும் பதில் சொல்லவில்லை. பக்கத்தில் இருந்த மதன் மிரட்சியாகப் பார்த்தான்.
“தினேஷ், சேயோன்... நீங்க ரெண்டு பேரும் எல்லாருடைய பேக்கையும் நல்லா பாருங்க...! இங்க தான் இருக்கும்” என்றவுடன் மதனின் பேக்கை முதலில் சோதித்துப் பார்த்தான் தினேஷ்.
மதனே அந்தப் பையை எடுத்துக் காட்டினான். அதன் உள்ளே இல்லை. மற்றவர்களின் பையையும் சோதித்தார்கள். எங்கும் இல்லை.
சிறிது நேரம் யோசித்த பத்மினி மிஸ், “நீ கொண்டு வந்தியான்னு நல்லா யோசிச்சுப் பாரு....” என்று தினேஷிடம் கேட்டார்.
“கொண்டு வந்தேன் மிஸ்....!” என்ற தினேஷ், பின்னால் இருந்த சேயோனைப் பார்த்தான்.
“ஆமா மிஸ். கொண்டு வந்திருந்தான். நானும் பாத்தேன். ரொம்ப ஆடினான் மிஸ். சிங்கப்பூர் ஜியாமெட்ரி பாக்ஸ்னு அலட்டிக்கிட்டான் மிஸ்...” என்றான் சேயோன்.
எங்கே தேடியும் அந்த ஜியாமெட்ரி பாக்ஸ் கிடைக்கவில்லை. அதற்கு மேல் எதுவும் செய்ய இயலாத பத்மினி மிஸ், பாடத்தைத் தொடங்கினார்.
நான்கு மணிக்கு பெல் அடித்தது.
வேனில் ஏறி வீட்டிற்குப் போனான் தினேஷ்.
புத்தகப் பையை மேஜையில் வைத்துவிட்டு அமைதியாக இருந்தான்.
“என்னடா..., இன்னைக்கு எந்தச் சத்தமும் போடாம உட்கார்ந்திருக்கிறே...? ஜியாமெட்ரி பாக்ஸ் எங்கே?” என்று கேட்டார், தினேஷின் அம்மா வீணா.
“பேக்குல தான்மா இருந்துச்சு. ரீசெஸ் போய்ட்டு வந்தா காணல்லை. பத்மினி மிஸ்ஸும் தேடினாங்க. எல்லா பேக்கையும் சோதிச்சுப் பாத்தோம். எங்கேயுமே இல்லை” என்று சொன்னதும் வீணாவுக்குக் கோபம் வந்தது. கோபப்பட்டு என்ன செய்வது என்று நினைத்த அவர், “ஒனக்குப் பக்கத்துல யாரு இருக்கிறது?” என்று கேட்டார்.
“மதன் தான் பக்கத்துல இருக்கான். அவனுக்க பேக்குலயும் இல்லை” என்றான் தினேஷ்.
இரவு எட்டு மணிக்குத் தான் தினேஷின் அப்பா வந்தார்.
ஜியாமெட்ரி பாக்ஸ் தொலைந்து போனது பற்றி அவரிடம் சொன்னார் தினேஷின் அம்மா.
“பரவாயில்லை. யாராவது எடுத்துருப்பாங்க...! சரி.... விடு. இன்னொரு பாக்ஸ் இருக்கு. ஒரு வாரத்துக்குப் பெறகு அதை நீ கொண்டு போகலாம்” என்று அவனைச் சமாதானப் படுத்தினார் தினேஷின் அப்பா.
“நம்ம தினேஷுக்குப் பக்கத்துல மதன்னு ஒரு பையன் இருக்கான். அவனுக்க வீடு ஸ்கூலுக்குப் பக்கத்துலதான் இருக்கு. ரீசெஸ் டைம்லதான் ஜியாமெட்ரி பாக்ஸ் காணாம போயிருக்கு. மதனே எடுத்து, வீட்டில கொண்டுபோய் வச்சிருப்பானோ....” என்று வீணா சொன்னதற்குப் பதில் சொல்லாமல் இருந்தார் தினேஷின் அப்பா.
அடுத்த வாரம் ஞாயிற்றுக் கிழமை.
அன்று மதனுக்குப் பிறந்த நாள்.
தினேஷிடம் இன்னொரு ஜியாமெட்ரி பாக்ஸைக் கொடுத்து, “இதை மதனுக்கு பர்த்டே கிஃப்டா குடு” என்றார் வீணா. அந்தப் புது ஜியாமெட்ரி பாக்ஸை எடுத்துக் கொண்டு மதன் வீட்டுக்குப் போனான்.
ஏழு மணிக்குக் கேக் வெட்டினார்கள்.
தன்னிடமிருந்த ஜியாமெட்ரி பாக்ஸை மதனிடம், “ஹாப்பி பர்த்டே” என்று சொல்லிவிட்டுக் கொடுத்தான் தினேஷ்.
அந்தப் புது ஜியாமெட்ரி பாக்ஸை வாங்கிய மதனின் முகத்தில் சந்தோஷம் வரவில்லை. தலையைக் குனிந்து கொண்டான்.
எல்லோருக்கும் கேக்கும் சிற்றுண்டியும் கொடுத்தார் மதனின் அம்மா.
ஒவ்வொருவராகப் புறப்பட்டனர்.
தினேஷும் புறப்படப் போனான்.
“கொஞ்சம் பொறுடா...! உட்கார்” என்றான் மதன்.
உள்ளே போனான்.
அவனது மேஜையின் உள் அறையைத் திறந்தான். அதற்குள் இருந்து, தினேஷின் ஜியாமெட்ரி பாக்ஸை எடுத்தான்.
கொண்டு வந்து தினேஷிடம் நீட்டினான்.
“சாரிடா....! நான் தான், ஒனக்க ஜியாமெட்ரி பாக்ஸைத் திருடினேன். திருடின பிறகுதான் தெரிஞ்சுது, அதை என்னால ஸ்கூலுக்குக் கொண்டு வர முடியாது என்பது. நல்ல வேளை நீ எனக்கு அதைப் போலவே ஒரு ஜியாமெட்ரி பாக்ஸை என்னோட பர்த்டே கிஃப்டா குடுத்துட்டே....! இந்தா, ஒனக்க ஜியாமெட்ரி பாக்ஸ். இனிமேல் இது போல தப்பு செய்யவே மாட்டேன்” என்று மதன் சொன்னதை அவனுடைய அம்மாவும் கேட்டுக்கொண்டுதான் நின்றார்.
மகனுடைய மனத்தின் தெளிவு அவருக்கும் திருப்தியாக இருந்தது.
“இனிமேல் தைரியமா நான் இந்த ஜியாமெட்ரி பாக்ஸை ஸ்கூலுக்குக் கொண்டு வருவேன்” என்று சொன்ன மதனுக்கு “பை..பை..” சொல்லிவிட்டுப் புறப்பட்டான் தினேஷ்.