

பொன்னிநாடு என்று அழைக்கப்பட்ட அந்தப் பெரும் தேசத்தின் அரசனாக மன்னர் தென்னரசேந்திரன் ஆட்சி செய்து வந்தார்.
அவரது ஆட்சியில் மக்கள் பசியின்றியும், வறுமையின்றியும், அமைதியுடனும் வாழ்கிறார்கள் என்று எல்லோரும் கூறினர்.
விவசாயம் செழித்தது. வணிகம் வளர்ந்தது. வீடுகள் எழுந்தன. சாலைகள் அமைக்கப்பட்டன. மக்கள் தங்கள் தொழில்களைச் செய்து வந்தனர்.
மன்னருக்கு எட்டு முக்கிய அமைச்சர்கள் இருந்தனர்.
அருள்மொழிவர்மன் – தலைமை அமைச்சர், வீரசேகரன் – கிழக்கு மண்டலம், மாறவர்மன் – மேற்கு மண்டலம், சதாசிவன் – வடக்கு மண்டலம், இளங்கோவன் – தெற்கு மண்டலம், குணசேகரன் – வடகிழக்கு மண்டலம், வாணபதி – தென்மேற்கு மண்டலம், தனஞ்செயன் – வடமேற்கு மண்டலம்.
ஒவ்வொரு அமைச்சருக்கும் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. அவர்கள் மன்னரிடம், “எங்கள் பகுதிகளில் மக்கள் அனைவரும் நலமாக இருக்கிறார்கள்” என்று தொடர்ந்து அறிக்கை அளித்து வந்தனர்.
எட்டு பகுதிகள்
பொன்னிநாடு எட்டு பெரிய நிர்வாகப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.
அவை:
பொன்னிவளநாடு – கிழக்கு, மருதவனம் – மேற்கு, வெண்மலைநாடு – வடக்கு, செங்கதிர்நாடு – தெற்கு, நிலவொளிநாடு – வடகிழக்கு, காவிரிப்புனல் நாடு – தென்கிழக்கு, முல்லைவனம் – தென்மேற்கு, வானமலைநாடு – வடமேற்கு.
ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் மன்னர் தனது ரதத்தில் பயணம் செய்து மக்களை நேரில் சந்திப்பது வழக்கம். அந்த ஆண்டும் அதேபோல் மக்கள் மன்னரை வானவேடிக்கை, மேளம், நடனம், இசை, ஆரத்தி ஆகியவற்றுடன் வரவேற்றனர்.
மக்கள் அழகான ஆடைகளை அணிந்திருந்தனர். வீடுகளும் வெளிப்புறமாக சீராகத் தோன்றின. அனைவரும் மன்னரைப் பார்த்து சிரித்தனர்.
மன்னரின் மனம் மகிழ்ந்தது.
“என் மக்கள் இவ்வளவு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். என் ஆட்சியில் குறை ஒன்றுமில்லை” என்று பெருமிதப்பட்டார். ஆனால், அந்த இரவு அரண்மனைக்குத் திரும்பியபோது, அவருடைய மனதில் ஒரு கேள்வி மட்டும் எழுந்தது. மக்கள் உதட்டில் இருந்த சிரிப்பு உள்ளத்தின் வெளிப்பாடாக உள்ள கண்களில் இல்லையே என்று.
'மக்கள் உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா?' - மன்னனின் சந்தேகம். மக்களின் முகங்களில் அவர் கண்ட சிரிப்பு, அவர்களின் கண்களில் இல்லை. அவர்களின் உடை சிறப்பாக இருந்தது.
ஆனால், அவர்களின் வாழ்க்கையில் ஏதோ ஒன்று குறைந்திருந்தது. அதை மன்னனால் புரிந்துகொள்ள முடியவில்லை.
அமைச்சர்களை அவர் சந்தேகிக்கவில்லை, ஏனென்றால் பல ஆண்டுகள் தன்னுடன் பல சூழ்நிலையிலும் மற்றும் நாட்டின் முக்கிய முடிவுகள் எடுக்கும் போதும் உடன் இருந்தவர்கள் அவர்கள்.
எனவே, உண்மையை அறிய நான்கு ஒற்றர்களை நாட்டின் நான்கு திசைகளுக்கும் அனுப்பினார்.
அந்த நான்கு ஒற்றர்கள்:
வீரநாதன், மாறன், சோமசுந்தரன், அறிவழகன்.
நான்கு பகுதிகளும் சென்று மக்களின் வாழ்கைச் சூழல் மற்றும் நிறை குறைகளைத் தெரிந்துகொண்டு பொன்னி ராஜியத்துக்கு திரும்பிய மூன்று ஒற்றர்களும் தனித்தனியே முறையாக தாங்கள் கண்டதை மன்னரிடம் தெரிவித்தனர். ஆனால் அனைவரும் ஒரே பதிலை அளித்தனர்.
“மக்கள் அனைவரும் நலமாகவே வாழ்கிறார்கள், மன்னா.”
ஆனால் நான்காவது ஒற்றனான அறிவழகன் மட்டும் அந்தப் பதிலைச் சொல்லும்போது தடுமாறினான். மன்னனின் சந்தேகம் அதிகரித்தது.
ஆனால், மன்னன் அவனிடம் ஒன்றும் பேசாமல் மற்றவர்கள் சொல்லும்போது அமைதியாக பதிலைக் கேட்டு அனுப்பியது போன்று அறிவழகனையும் அனுப்பினார் மன்னர்.
நாற்பத்தெட்டு நாள் ஆன்மிகப் பயணம் மூன்று நாட்கள் கழித்து மன்னர் அரசவையைக் கூட்டினார்.
அவர் கூறினார்:
“நான் நாற்பத்தெட்டு நாட்கள் ஆன்மிகப் பயணம் செல்கிறேன். அந்தக் காலத்தில் யாரும் என்னைத் சந்திக்க வேண்டாம்" என்று அரசகட்டளையிட்டார் மன்னர்.
மூத்த அமைச்சரான அருள்மொழிவர்மனிடம் நாட்டின் தற்காலிக ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தார்.
மற்ற ஏழு அமைச்சர்களையும் அவரவர் பகுதிகளுக்குச் செல்லுமாறும் அங்கு மக்களின் நிறை குறைகளைப் போக்கவும் அமைச்சர்களுக்கு அரசர் உத்தரவிட்டார்.
மறுநாள் சூரிய உதயத்துடன் மன்னர் தனது பயணத்தைத் பொன்னி தேசத்தின் கிழக்கு நோக்கி தொடங்கினார்.
பன்னிரு புனிதத் தீர்த்தங்கள். மன்னர் தன்னுடன் வந்த பன்னிரு வீரர்களிடம் ஒரு ரகசிய உத்தரவு பிறப்பித்தார்.
"பொன்னிநாட்டின் ஆன்மிக மரபின் அடையாளமாக, பன்னிரு புனிதத் தலங்களிலிருந்து தீர்த்தம் கொண்டு வரவேண்டும்" என்று கூறினார்.
அவர் தேர்ந்தெடுத்த பன்னிரு திவ்யதேசங்கள்:
கைலாயம், திருவரங்கம், திருக்கோழி, திருக்கரம்பனூர், திருவெள்ளறை, திருவிண்ணகர், திருக்குடந்தை, மருத சுனை, திருநீர்மலை, சேஷன் மலை, நாகமாலை, பொதிகை மலை
"ஒவ்வொருவரும் ஒவ்வொரு தலத்திற்குச் சென்று புனிதத் தீர்த்தத்தை எடுத்து, நாற்பத்தெட்டாம் நாளில் பொன்னிநாட்டிற்கு திரும்ப வேண்டும்" என்று கட்டளையிட்டார்.
மன்னனின் மாறுவேடம்...
அரச உடைகளைக் கழற்றிய மன்னர், ஒரு சாதாரண சந்நியாசியைப் போன்ற ஆடை அணிந்தார்.
அவர் தனது பயணத்தைத் தொடர்ந்தார்.
முதலில் வடகிழக்குப் பகுதியான நிலவொளிநாட்டிற்கு சென்றார். அங்கு அவர் தேடியது அந்த நான்காவது ஒற்றனான அறிவழகனின் வீடு. அறிவழகன் வாழ்ந்த வீடு பெரிய மாளிகை அல்ல. ஒரு சிறிய கூரை வீடு. அவனுடன் வயதான தாய், தந்தை மட்டுமே வாழ்ந்து வந்தனர்.
அன்றிரவு மன்னர் ஒரு வழிப்போக்கனைப் போல அந்த வீட்டின் வாசலில் நின்றார்.
“அம்மா... பசிக்கிறது. கொஞ்சம் உணவு கிடைக்குமா?” என்று கேட்டார்.
வயதான தாய் அவரை உள்ளே அழைத்தாள்.
அந்த வீட்டில் மூன்று பேருக்கே போதுமான அளவு பழைய சாதம் இருந்தது.
ஆனால், அந்தத் தாய் தன்னுடைய பங்கில் இருந்து ஒரு பகுதியை அந்த வழிப்போக்கனுக்குக் கொடுத்தாள்.
அதைப் பார்த்த மன்னனின் கண்களில் கண்ணீர் வந்தது. இப்படி கொடுத்து உதவும் குணம் கொண்ட தன் குடிகளை நினைத்து பெருமை ஒரு பக்கம் என்றால் அவர்களை பொருளாதார வசதி இல்லாத நிலையினை தன் ஆட்சி உருவாக்கிவிட்டதை நினைத்து கண்ணீர் வடித்தார்
பொன்னிநாட்டில் உணவு இல்லாத ஒரு குடும்பம் இருந்தது. ஆனால், அந்தக் குடும்பத்தில் மனிதநேயம் நிறைந்திருந்தது.
ஒற்றனின் உண்மை.
அந்த நேரத்தில் வீட்டிற்குள் வந்த அறிவழகன், மாறுவேடத்தில் இருந்த மன்னனின் குரலைக் கேட்டதும் அதிர்ந்தான். அவன் அந்தக் குரலை அடையாளம் கண்டுவிட்டான்.
“மன்னா!” என்று கூறி அவரது காலில் விழுந்தான்.
மன்னர் அவனை எழுப்பினார்.
"உன் குடும்பம் சேர்த்து அனைத்து மக்களின் இந்த உண்மை நிலைமையை ஏன் முன்பே சொல்லவில்லை?” என்று கேட்டார்.
அறிவழகன் கண்ணீருடன் பதிலளித்தான்:
“மன்னா, மூன்று ஒற்றர்களும் அமைச்சர்களிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு சாதகமான தகவல்களை மட்டுமே உங்களிடம் தெரிவித்தனர்.”
“நான் மட்டும் உண்மையைச் சொல்ல முயன்றேன். ஆனால் அரசின் உள்ளே இருக்கும் அதிகாரம் என்னை அச்சப்படுத்தியது.”
பின்னர் அவன் உண்மையை முழுவதுமாக வெளிப்படுத்தினான். ஏழு அமைச்சர்கள் மக்களின் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தி வந்தனர்.
அரசுத் திட்டங்களின் பணம் அமைச்சர்களின் உறவினர்களிடம் சென்றது. ஏழைகளுக்காக ஒதுக்கப்பட்ட பொருட்கள் மறைக்கப்பட்டன. மக்களின் புகார்கள் அமைச்சர்களின் அலுவலகத்திலேயே முடக்கப்பட்டன. மன்னரிடம் சென்ற அறிக்கைகள் பொய்யாக மாற்றப்பட்டன.
மற்றும் மக்களை தங்களை வருடம் ஒருமுறை வரவேற்று உண்மை சொல்ல நினைத்தாலும் அமைச்சர்கள் மீது உள்ள பயத்தால் உதவும் குணம் கொண்ட மன்னர் தங்களைப் பார்த்தால் போதும் என்ற மன நிறைவுடன் சோகத்துடன் சென்றதும் தெரியவந்தது. மன்னனுக்கு இதனாலேயே தன் மீது அன்பு உள்ள குடிகளுக்கு இனியும் இது போன்ற ஒரு சூழல் எதிர்காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் வராதாவண்ணம் சரியான முடிவு எடுக்க அவர் சிந்தித்த ஒரு முடிவை எடுத்தார்.
ஆனால் அதை இப்போது சொல்ல வேண்டாம். 48 ஆம் நாள் தனது பொன்னி ராஜியத்தின் அரசவையில் அனைவர் முன் அறிவிப்பை வெளியிட முடிவு செய்தார். மன்னர் மேலும் ஒற்றன் சொல்வதை பொறுமையாகவும் கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்தார்.
அறிவழகன் மேலும் கூறினான்:
“மன்னா, உங்களை ஏமாற்றுவது மட்டுமல்ல. பல தலைமுறைகளாக மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட செல்வம் அமைச்சர்களின் குடும்பங்களுக்குச் சென்றிருக்கிறது.”
மன்னர் இதையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.
அவரது மனதில் கோபத்தைவிட அப்பாவி நாட்டு மக்களின் கடந்த கால துன்பங்களை நினைத்து வருத்தமே அதிகமாக இருந்தது.
உண்மையை நேரில் காணும் மன்னன்
மன்னர் அறிவழகனிடம் கூறினார்: “நீ என்னுடன் வர வேண்டும்.”
இருவரும் மாறுவேடத்தில் ஏழு பகுதிகளுக்கும் சென்றனர். ஒவ்வொரு பகுதியிலும் மன்னர் பல நாட்கள் மக்களுடன் வாழ்ந்தார். அவர்களுடன் உணவு உண்டார். விவசாயிகளுடன் வயலுக்குச் சென்றார். தொழிலாளர்களுடன் வேலை செய்தார். பெண்களின் வாழ்க்கையைப் பார்த்தார். வயதானவர்களின் நிலையை அறிந்தார். குழந்தைகளின் கல்வி நிலையை அறிந்தார். அரசுத் திட்டங்களின் பயன் உண்மையில் மக்களிடம் சென்றதா என்று பார்த்தார். அப்போது தான் மன்னனுக்கு ஒரு உண்மை தெரிய வந்தது. அமைச்சர்கள் கூறிய அறிக்கைகளுக்கும் மக்களின் உண்மையான வாழ்க்கைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று.
நாற்பத்தெட்டாம் நாள்:
நாற்பத்தெட்டாம் நாள் காலை வந்தது. ஆதவன் உதித்தான். அங்கு ஆதவன் மட்டும் உதிக்கவில்லை மன்னரிடம் மறைக்கப்பட்ட உண்மைகளும் அரசவையின் அறியாமையும் நீங்கி அறிவோளி தோன்றியது.
மன்னர் அரண்மனைக்குத் திரும்பினார். அவருடன் அறிவழகனும் நான்கு ஒற்றர்களும் வந்தனர். அரசவையில் எட்டு அமைச்சர்களும் அமர்ந்திருந்தனர். மன்னர் எதுவும் நடக்காதது போல் அமைதியாக இருந்தார்.
அப்போது ஒவ்வொரு பகுதியிலிருந்தும் மிகுந்த துன்பத்தில் வாழ்ந்த குடும்பங்கள் அரசவைக்கு அழைக்கப்பட்டனர். அவர்கள் வந்ததும் ஏழு அமைச்சர்களின் முகங்களில் பயம் தெரிந்தது.
மன்னர் ஒவ்வொரு குடும்பத்தையும் அவர்கள் சார்ந்த அமைச்சரின் முன் நிறுத்தினார். அமைச்சர்கள் தங்களின் குற்றத்தை மறுக்க முடியவில்லை.
பன்னிரு கலசங்களின் ரகசியம்:
பன்னிரு புனிதத் தலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தக் கலசங்கள் அரசவையின் நடுவில் வைக்கப்பட்டன. மன்னர் கூறினார்:
“இந்த நீர் புனிதத் தலங்களிலிருந்து வந்தது. ஆனால் இன்று முதல் இது ஒரு நினைவுச் சின்னம்.”
அவர் ஏழு பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கைகளில் ஏழு கலசங்களை வழங்கினார். ஒரு கலசத்தை அறிவழகனிடம் கொடுத்தார். மற்றொரு கலசத்தை மூத்த அமைச்சர் அருள்மொழிவர்மனிடம் கொடுத்தார். மீதமிருந்த மூன்று கலசங்களை பொதுமக்கள் முன்னிலையில் அமைக்கப்பட்ட நினைவிடத்தில் வைத்தார்.
மன்னர் கூறினார்: “இந்த கலசங்கள் நீரைக் குறிக்கவில்லை. உண்மையை குறிக்கின்றன.”
“மக்களின் கண்ணீரை மறைத்து வைத்த ஆட்சிக்கு இனி இங்கே இடமில்லை.”
தீர்ப்பு
மூன்று ஊழல் ஒற்றர்களும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். அவர்களிடம் இருந்து பெற்ற பணமும் செல்வமும் பறிமுதல் செய்யப்பட்டது. ஏழு அமைச்சர்களும் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். அவர்கள் முறைகேடாகப் பெற்ற செல்வங்கள் அனைத்தும் அரசின் கணக்கில் சேர்க்கப்பட்டன.
அந்தச் செல்வத்தின் ஒரு பகுதி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக வழங்கப்பட்டது. மற்றொரு பகுதி பள்ளிகள், குடிநீர், மருத்துவம், வீடுகள் மற்றும் விவசாயத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டது.
மன்னர் கூறினார்: “அரசனுக்கு பொய்யான அறிக்கை கொடுப்பது அரசனை மட்டும் ஏமாற்றுவது அல்ல. அது ஒரு முழு நாட்டையே ஏமாற்றுவதாகும்.”
புதிய அமைச்சரவை:
மன்னர் ஒரு அதிரடியான முடிவை எடுத்தார்.
"பதவிகள் இனி பிறப்பு, செல்வம் அல்லது உறவின் அடிப்படையில் வழங்கப்படாது" என்று அறிவித்தார்.
மக்களின் துயரத்தை நேரில் அறிந்திருந்த அந்த ஏழு குடும்பங்களில் இருந்து தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து புதிய நிர்வாகப் பொறுப்புகளில் அமர்த்தினார்.
அவர்களில் ஐந்து ஆண்களும் இரண்டு பெண்களும் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.
அவர்கள்:
மருதன், செம்பியன், இளவரசன், வெற்றிவேல், நல்லதம்பி, அரும்பொன், மங்கையர்க்கரசி ஆகியோர்.
அவர்களுக்கு ஒரு கட்டளை மட்டுமே வழங்கப்பட்டது:
“முதலில் மக்களைப் பாருங்கள். பிறகு கோப்புகளைப் பாருங்கள்.”
அறிவழகனின் உயர்வு:
மன்னர் அறிவழகனை அரசவையின் நடுவில் அழைத்தார்.
“நீ ஏன் உண்மையைச் சொன்னாய்?” என்று கேட்டார்.
அறிவழகன் பதிலளித்தான்:
“மன்னா, நான் உங்களுக்குப் பயந்திருந்தால் ஒரு மனிதனாக இருந்திருப்பேன். ஆனால் மக்களின் கண்ணீருக்குப் பயந்ததால்தான் உண்மையைச் சொன்னேன்.”
மன்னர் அவனை அணைத்துக்கொண்டார்.
“இனி நீ என் ஒற்றன் அல்ல.”
அனைவரும் ஆச்சரியமாகப் பார்த்தனர்.
மன்னர் சொன்னார்
“இனி நீ என் நாட்டின் தலைமை அமைச்சன்.”
அறிவழகனுக்கு புதிய பெயர் வழங்கப்பட்டது:
அறிவொளி அறிவழகன் – பொன்னிநாட்டின் தலைமை அமைச்சர்
அவரது முதல் உத்தரவு:
“மன்னரிடம் செல்லும் ஒவ்வொரு அறிக்கைக்கும் கீழே, அதை நேரில் ஆய்வு செய்த குறைந்தது மூன்று மக்களின் சாட்சிகள் இருக்க வேண்டும்.”
மன்னனின் புதிய அரசாணை
அந்த நாளிலிருந்து பொன்னிநாட்டில் ஒரு புதிய அரசாணை வெளியிடப்பட்டது.
“மக்களின் முகத்தில் தெரியும் சிரிப்பே அரசின் வெற்றியின் அளவுகோல் அல்ல; அவர்கள் பயமின்றி தங்கள் குறைகளைச் சொல்ல முடிகிறதா என்பதே நல்ல ஆட்சியின் முதல் அடையாளம்.”
மன்னர் ஆண்டுதோறும் தை மாதத்தில் மட்டும் மக்களைச் சந்திப்பதை நிறுத்தினார். அவர் வேடமிட்டு மக்களிடையே செல்வதை வழக்கமாக்கினார். அரசர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் யாரும் முன்கூட்டியே அறியாமல், அவர் கிராமங்களுக்குள் செல்வார்.
இறுதிக் காட்சி:
ஒரு வருடம் கழித்து மீண்டும் தை மாதம் வந்தது.
மன்னர் பொன்னிநாட்டின் ஒரு சிறிய கிராமத்திற்குச் சென்றார். அங்கு அவர் ஒரு வயதான பெண்ணைக் கண்டார். அவள் முகத்தில் சிரிப்பு இருந்தது.
இந்த முறை மன்னர் அவளிடம் கேட்டார்:
“அம்மா, இப்போது எப்படி இருக்கிறாய்?”
அந்தப் பெண் கூறினாள்:
“மன்னா, இப்போது எங்களுக்கு அரண்மனை தேவையில்லை. எங்கள் வீட்டில் பசி இல்லை. எங்கள் குழந்தைகள் படிக்கிறார்கள். எங்கள் குறையைச் சொல்ல யாரும் பயப்பட வேண்டியதில்லை. அதுவே எங்களுக்கு அரசாட்சி.”
மன்னர் அந்த வார்த்தைகளைக் கேட்டதும் அமைதியாகத் தலை குனிந்தார். அவரது கண்களில் கண்ணீர் வந்தது. ஆனால், இந்த முறை அது வருத்தத்தின் கண்ணீர் அல்ல. ஒரு அரசன் உண்மையான அரசனாக மாறியதன் மகிழ்ச்சிக் கண்ணீர்.
அந்த நாளில் பொன்னிநாட்டின் அரண்மனை வாசலில் ஒரு புதிய வாசகம் பொறிக்கப்பட்டது:
“அரசனின் கண்கள் அரண்மனையில் இருந்தால், உண்மை மக்களிடம் மறைந்து போகும்.
அரசனின் கால்கள் மக்களிடம் சென்றால், நாட்டின் உண்மை அரசனிடம் வந்து சேரும்.”
அதன் பின்னர் பொன்னிநாட்டில் ஆட்சி மாறியது.
மக்கள் வாழ்க்கையும் நல்ல நிலைக்கு மாறியது.
அவர்களைப் பார்க்கும் அரசனின் நடவடிக்கைகளும் மாறியது.
அதுவே பொன்னிநாட்டின் உண்மையான மக்கள் நல அரசாட்சியின் தொடகம்.
கதையின் கருப்பொருள்:
இந்தக் கதையின் முக்கியக் கருப்பொருள்:
“மக்களின் உண்மையான நிலையை அறியாமல், அதிகாரிகளின் அறிக்கைகளை மட்டும் நம்பும் ஆட்சி முழுமையான நல்லாட்சி ஆகாது.”
இதில் பல அடுக்குகள் உள்ளன. வெளிப்புற வளர்ச்சி மற்றும் உண்மையான வளர்ச்சி வேற்றுமை, மக்களுக்கு நல்ல ஆடைகள், வீடுகள், சாலைகள் இருந்தாலும், அவர்களின் மனதில் பாதுகாப்பும் நம்பிக்கையும் இல்லையென்றால் அந்த வளர்ச்சி முழுமையானது அல்ல. அதிகாரம் கண்காணிக்கப்பட வேண்டும்.
மன்னர் நல்லவர் என்பதால் மட்டும் நல்லாட்சி உருவாகாது. கீழ்நிலையில் இருப்பவர்கள் தவறு செய்தால், அந்தத் தவறை கண்டுபிடிக்கும் அமைப்பும் இருக்க வேண்டும்.
உண்மையைச் சொல்பவரின் மதிப்பு:
அனைவரும் பொய் சொல்லும்போது ஒருவன் மட்டும் உண்மையைச் சொல்வது அவனை பலவீனமானவனாக அல்ல; நாட்டின் உண்மையான காவலனாக மாற்றுகிறது.
மக்களே நல்லாட்சியின் மையம்:
அமைச்சர்களின் அறிக்கைகள் அரசின் வெற்றியை நிர்ணயிக்காது.
மக்களின் வாழ்க்கைதான் அரசின் உண்மையான அறிக்கை.
ஏழை வீட்டின் கஞ்சி – கதையின் மிகப்பெரிய குறியீடு.
வயதான தாயிடம் மூன்று பேருக்கே உணவு இருந்தது. இருந்தாலும் அவள் தன்னுடைய பங்கை வழிப்போக்கனுக்குக் கொடுத்தாள். இதன் மூலம் கதை சொல்லும் மிகப்பெரிய உண்மை:
செல்வம் இல்லாத வீட்டிலும் மனிதநேயம் இருக்கலாம்; செல்வம் நிறைந்த அரண்மனையிலும் நேர்மை இல்லாமல் போகலாம்.
கலசத்தின் அடையாளம்:
பன்னிரு புனிதத் தீர்த்தக் கலசங்கள் இறுதியில் வெறும் ஆன்மிகப் பொருளாக இல்லாமல், “மக்களின் கண்ணீரை இனி மறைக்கக் கூடாது” என்ற உறுதிமொழியாக மாறுகின்றன.
கதையின் ஒரு வரி நீதிக்கதை
“மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று அறிய விரும்பும் அரசன், அரண்மனையின் ஜன்னலைத் திறந்து பார்க்கக் கூடாது; மக்களின் வீட்டுக் கதவைத் தட்ட வேண்டும்.”
இதுதான் 'பொன்னிநாட்டின் மறைந்த உண்மை' கதையின் உயிர்.