

தேசிய கீதங்கள் (National Anthems) ஒரு நாட்டின் வரலாறு, பண்பாடு மற்றும் தேசபக்தியைப் பறைசாற்றும் அதிகாரப்பூர்வ இசைப் பாடல்களாகும். நாட்டுப் பற்றை வளர்ப்பதில் தேசிய கீதம் முக்கிய பங்கு வகிக்கிறது.
இவை பாடும் சந்தர்ப்பம், வடிவம் மற்றும் உள்ளடக்கத்தின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. உலகெங்கும் நான்கு வகையான தேசிய கீதங்கள் வழக்கில் உள்ளன. அவை அணி வகுப்பு வகை, கடவுள் துதி பாடல் வகை, வாத்திய இசை வகை, நாட்டுப்புற பாடல்கள் வகை.
தேசிய கீதம் எப்போது தோன்றியது என்பதற்கு தெளிவான சான்றுகள் இல்லை. ஆனால், ஜப்பானில் 9 ம் நூற்றாண்டில் பாடப்பட்டு வந்த 'கிமி கயோ (Kimigayo)' பாட்டே உலகின் முதல் தேசிய கீதமாகும்.
ஜப்பானின் தேசிய கீதம் தான் உலகிலேயே மிகச் சிறிய தேசிய கீதம் அதில் 4 வரிகள் தான் உள்ளது.
இசையுடன் சேர்த்து பாடுவதற்கு எடுத்துக் கொள்ளும் நேர அடிப்படையில் உலகின் பெரிய தேசிய கீதம் உருகுவே நாட்டின் தேசிய கீதம். இதை முழுவதும் பாடி முடிக்க 6 நிமிடங்கள் ஆகும்.
உலகிலேயே மிக நீளமான தேசிய கீதம் கிரீஸ் நாட்டின் தேசிய கீதம் தான். இது158 பத்திகளை கொண்டது. 1823 ம் ஆண்டு இயற்றப்பட்டது. இதை பாடி முடிக்க 55 நிமிடங்கள் ஆகும் என்பதால் முதல் இரண்டு பத்தியை மட்டும் தேசிய கீதமாக அந்நாடு அதிகாரபூர்வமாக பயன்படுத்தி வருகிறது.
முதல் பிரிட்டிஷ் தேசிய கீதமான 'காட் ஷேவ் த க்வின்' 1619 ல் பாடப்பட்டது. 'ஜான் புல்' என்ற கவிஞர் இயற்றிய இந்த பாடல் முதலில் பொதுக் கூட்டத்தில் தான் பயன்படுத்தப்பட்டது. தற்போது 'கடவுள் மன்னரை காப்பாற்றுவார்' என்ற பொருளில் இசைக்கப்படும் ஹம்மிங் வகை தான் இங்கிலாந்து நாட்டின் தேசியகீதம். 1700 ம் ஆண்டு 'ஹென்றி கேரே' என்பவர் இசையமைத்த இந்த ஹம்மிங் 1825 ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் தேசிய கீதமானது.
பிரான்ஸ் நாட்டின் தேசிய கீதம் அணி வகுப்பு வகையைச் சேர்ந்தது.
'லா மார்செலாய்ஸ்' (La Marseillaise) என்ற அவர்களின் தேசிய கீதத்தை 1792 ம் ஆண்டு நடைபெற்ற பிரெஞ்சு புரட்சியின் போது, 'கிளவுடி ஜோசப் ரோகட் டி லைசெல்' என்ற என்ஜினியர் இயற்றினார். அதுவே 1795 ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது.
1879 ம் ஆண்டு இந்த அணி வகுப்பு கீதம் பிரான்ஸ் நாட்டின் தேசிய கீதமாகியது. வரலாற்றில் அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்ட முதல் தேசிய கீதம் இது தான். சிங்கப்பூரின் தேசிய கீதமும் அணி வகுப்பு வகையைச் சேர்ந்தது தான்.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, நியூசிலாந்து, ரஷ்யா, தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் ஹம்மிங் எனும் 'கடவுள் துதிபாடும் பாடல்கள்' அந்த நாடுகளின் தேசிய கீதங்களாக உள்ளன.
1917 ம் ஆண்டு ஏற்பட்ட கம்யூனிஸ்ட் புரட்சியின் போது 'குடியரசு ஆட்சியை உடைக்க முடியாது' என்ற பொருளில் இசைக்கப்பட்ட ஹம்மிங் தான் 1943 முதல் ரஷ்யாவின் தேசிய கீதமானது. சில நாடுகளில் வாத்திய இசை மட்டுமே தேசிய கீதங்களாக கருதப்படுகிறது.
சில மேற்கத்திய நாடுகள் மற்றும் அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளில் பித்தளையால் செய்யப்பட்ட ஒரு வத்தியத்தில் இசைக்கப்படும் இசையே அவர்களின் தேசிய கீதம்.
இந்தியா, தென்னாப்பிரிக்கா, பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இசைத் திறன் கொண்ட பாடல்களே தேசிய கீதங்களாக உள்ளன. ரவீந்தரநாத் தாகூர் எழுதிய 'ஜனகனமன' பாடலை நமது தேசிய கீதமாக 1950 ம் ஆண்டு அங்கீகரித்தனர்.
இது முதல் முறையாக 1911 ம் ஆண்டு டிசம்பர் 27 ம் தேதி கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்டது.
1971 ம் ஆண்டு ஐ. நா நடத்திய ஆய்வில் 172 நாடுகளின் தேசிய கீதங்களில் சிறந்ததாக தேர்வானது எது தெரியுமா? நம் இந்திய தேசிய கீதம் தான்.
இரண்டு தேசிய கீதங்கள் கொண்ட நாடுகள் நியுசிலாந்து, ஆஸ்திரேலியா, செக்கோஸ்லோவகியா, டென்மார்க்.
சுவிட்சர்லாந்து நாட்டின் தேசிய கீதம் அங்குள்ள 4 மொழிகளில் ஒவ்வொரு விதமாக பாடப்படுகிறது. தென் ஆப்பிரிக்காவின் தேசிய கீதம் தனித்துவமானது. அங்குள்ள 11 அதிகார மொழிகளில் 5 மொழிகள் அதன் தேசிய கீதத்தில் உள்ளது.
பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த தேசிய கீதங்களும் உலகில் உண்டு. அதில் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாட்டின் தேசிய கீதங்கள் உள்ளது. ஆஸ்தியா நாட்டின் தேசிய கீதத்தில் ஒரு வரியில் 'சன்ஸ்' என்று இருந்தது.
தேசிய கீதத்தில் இருபாலருக்கும் இடமிருக்க வேண்டும் என்று சில பெண் எம்பிக்கள் போராடவே 2012 ம் ஆண்டு அது தன்னுடைய தேசிய கீதத்தில் உள்ள வரிகளில் 'சன் அன்டு டாட்டர்ஸ்' என்று மாற்றியது. இதே போல கனடா நாட்டு தேசிய கீதத்திலும் நடந்தது.
ஒரு நாடு பிற நாட்டிடம் பணம், பொருளை கடனாக பெறும். ஆனால், 'சைப்ரஸ்' என்ற நாடு, துருக்கி மற்றும் கிரீஸ் நாட்டினுடைய தேசிய கீதங்களை கடனாக வாங்கி தன் நாட்டு தேசிய கீதமாக பயன்படுத்தி வருகிறது.
நேபாளத்தின் கீதம் தோன்றி, இன்னும் பத்து ஆண்டுகள்கூட ஆகவில்லை! உலகிலுள்ள தேசிய கீதங்களில், மிக இளமையான தேசிய கீதம் இது.