

ஊட்டி. புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி. ராஜன் அந்தப் பள்ளியில் இறுதி வருடம் படித்து வந்தார். டிசம்பரில் ஊட்டியில் விஞ்ஞானக் கண்காட்சி நடந்தது.
ராஜன் தனது நண்பன் குமாருடன் இணைந்து ஒரு சூரிய மண்டலத்தின் விஷயங்களை நன்கு தெரியும்படி… சூரிய மண்டலத்தில் உள்ள 8 கிரகங்களை வைத்து ‘மாதிரி சூரிய மண்டலம்’ செய்தார். அதை ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கி சூழல வைத்தார்கள். இது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. எல்லா பள்ளி மாணவ, மாணவிகள் பெரிதும் விரும்பினார்கள்.
எல்லோருக்கும் ஆங்கிலத்தில் ராஜன் சூரிய மண்டலத்தின் விஷயங்களை புட்டு புட்டு வைத்தார். வந்த மாணவ, மாணவிகளுக்கு புளூட்டோ ஒரு கிரகம் அல்ல என்று இப்போதுதான் தெரிந்தது.
ராஜனின் விளக்கவுரை எல்லோரையும் ஈர்த்தது. முக்கிய விருந்தினர் கலெக்டர், ராஜன் விளக்கவுரை கேட்டு பிரமித்துப் போனார். போகும்போது ராஜனின் கை குலுக்கிவிட்டு பாராட்டுகளைத் தெரிவித்தார். 3 நாட்களில் ராஜன் பள்ளி மாணவர்களை ஈர்த்துவிட்டான். விஞ்ஞானக் கண்காட்சி முடிந்தது.
அடுத்த வாரம் சென்னையில் விஞ்ஞானக் கண்காட்சி. பள்ளி முதல்வர் ஃபாதர் ராஜனை சென்னைக்கு வரும்படி கேட்டார். அதற்கு ராஜன், “ஃபாதர்… என்னால் முடியாது. பணப் பிரச்னை” என்று சொன்னார்.
சென்னை விஞ்ஞானக் கண்காட்சிக்கு மதியம் புறப்பட வேண்டும். ஃபாதர் ராஜனை அழைத்துகொண்டு ராஜன் வீட்டிற்கு வந்தார்.
“நீங்கள் பணம் எதுவும் தர வேண்டாம். ராஜனுக்கு நல்ல வாய்ப்பு. பள்ளி, ராஜனுக்குத் தேவையான பணத்தைக் கொடுத்துவிடும். ராஜனை புறப்படச் செய்து அனுப்பி வையுங்கள். இன்று 3 மணிக்கு நீலகிரி எக்ஸ்பிரஸ் புறப்பட உள்ளது… பயம் வேண்டாம். இவருடன் 4 ஆசிரியர்கள் உடன் சொல்லுகிறார்கள். என்ன சொல்றீங்க…?”
“ஃபாதர்… உங்கள் விருப்பம். அவன் வெளியூர் போனது இல்லை…!”
“கவலை படாதீங்க… நாங்கள் கவனித்துக்கொள்வோம்…!”
ராஜனுக்கு சந்தோஷம். தான் அதிர்ஷ்ட மாணவன் என்று யோசித்தார். சாப்பிட்டுவிட்டு ஒரு பையில் தனது உடைகள், டூத் பிரஷ், பேஸ்ட் எல்லாம் எடுத்துக்கொண்டார். அம்மா ‘ஓகே’ சொன்னதுமே ஃபாதர் கிளம்பிவிட்டார்.
அம்மா… ராஜனுக்கு முத்தம் கொடுத்து கையில் ஒரு ₹ 10 கொடுத்தார். ராஜன் முதன்முறையாக குட்டி ரயிலில் ஆசியர்களுடன் பயணம் செய்தார். பிறகு மேட்டுப்பாளையத்திலிருந்து நீலகிரி எக்ஸ்பிரஸ் பயணம்.
ராஜன் பயணத்தை மிகவும் ரசித்தார். மறுநாள் காலை சென்னை. விஞ்ஞான கண்காட்சி 3 நாட்கள். 3 நாளும் ராஜன் யார் வந்தாலும் உணர்வுபூர்வமாக தனது சூரிய மண்டலத்தின் இயக்கத்தைக் காட்டி விளக்கினார். எல்லாம் ஆங்கிலத்தில். மாநில கவர்னர் ராஜனுக்கு ஒரு பென்செட் பரிசாக கொடுத்து வாழ்த்தினார்.
விஞ்ஞான கண்காட்சியில் சுமார் 350 மாணவர்கள் பங்கு கொண்டார்கள். எல்லோரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். நிறைவு விழாவில் கண்காட்சி. முதல் பரிசு ராஜனின் சூரிய மண்டலத்திற்குக் கிடைத்தது.
கவர்னர் தம் கையால் ராஜனுக்கு ஒரு காசோலையும், பரிசு பெட்டியும் கொடுத்தார். ராஜனுக்கு சந்தோஷம்.. இன்பம்.. மாலை ஆசிரியர்களுடன் மெரினா பீச். ராஜனுக்கு ரொம்பப் பிடித்து இருந்தது. அவன் கடலைப் பார்ப்பது இதுவே முதல்முறை.
அம்மா கொடுத்த ₹ 10ல்… ஒரு சிவன், பார்வதி, பிள்ளையார் மற்றும் முருகன் உள்ள குடும்பப் படத்தை வாங்கினார். எல்லாம் அம்மாவிற்காக.
மறுநாள் காலை. ஊட்டி. வீட்டுக்குப்போய் குளித்துவிட்டு பள்ளி போனார். அசெம்பிளியில் ஃபாதர் ராஜனை புகழ்ந்து தனது கையால் பரிசு கொடுத்தார்.
பலே..! சபாஷ்…!! ராஜன்..!!!