சிறுவர் சிறுகதை: ஆணவம் அழிவை தரும்!

குட்டீஸ்களா ஆணவம் கொள்ளக் கூடாது என்று அறிவுரை தரும் ஒரு கதை படிப்போமா!
The Hunter and the Quails
The Hunter and the Quails Tamil children's story Img credit: AI Image
Updated on

வேடன் ஒருவன் தான் கொண்டு வந்திருந்த வலையை காட்டின் ஒரு பகுதியில் விரித்தான். அருகில் இருந்த புதரில் மறைந்து கொண்டான். அங்கே இருந்தபடியே காடை பறவையைப் போல குரல் எழுப்பினான் அவன். அந்தக் குரல் கேட்டு கூட்டமாக வந்த காடை பறவைகள் வலைக்குள் சிக்கிக் கொண்டன. அந்த பறவைகளின் அரசன் அவற்றிற்கு சொன்ன அறிவுரை ஆபத்தான அந்த சூழலில் அவற்றின் நினைவுக்கு வந்தது.

"நீங்கள் கூட்டமாக வலையில் சிக்க நேரிடும். அப்படி நேர்ந்தால் ஒவ்வொருவரும் வலையில் உள்ள கண் வழியாக தலையை வெளியே நீட்டுங்கள். எல்லோரும் ஒற்றுமையாக வலையை தூக்கிக்கொண்டு பறந்து செல்லுங்கள். பிறகு அந்த வலையை முள் மரத்தின் மீது இறக்கி தொங்க விடுங்கள். பிறகு வலையின் அடிப்பகுதி வழியாக வெளியே வந்து தப்பித்து செல்லுங்கள்" என்பது தான் பறவை அரசன் சொன்ன அறிவுரை.

அதன்படி எல்லா பறவைகளும் வலையில் உள்ள கண் வழியாக தலையை வெளியே நீட்டின. வலையை தூக்கிக்கொண்டு ஒற்றுமையுடன் பறந்து சென்றன. முள் மரத்தின் மீது வலையை சிக்க வைத்து விட்டு தப்பிச் சென்றன.

இப்படியே தொடர்ந்து மூன்று முறை நடந்தது. ஒவ்வொரு முறையும் வேடன் காடு எங்கும் அலைந்து முள் மரத்தில் சிக்கியிருந்த வலையை அவிழ்த்தான். அதை எடுத்துக்கொண்டு ஏமாற்றத்துடன் வீடு வந்து சேர்ந்தான்.

வேடன் தொடர்ந்து வெறுங்கையுடன் வருவதை கண்ட அவன் மனைவி கோபம் கொண்டாள். "அன்பே..! என் திறமையில் ஐயம் கொள்ளாதே. வலையில் சிக்கிய காடை கூட்டம் ஒற்றுமையுடன் வலையை தூக்கிக்கொண்டு பறந்து செல்கின்றன. முள்மரத்தில் வலையை தொங்க வைத்துவிட்டு அவை தப்பி விடுகின்றன. பறவைகளின் ஒற்றுமை நீண்ட நாள் நீடிக்காது. அப்பொழுது எல்லா காடைகளையும் நான் பிடித்து வருவதை நீ பார்க்கத்தான் போகிறாய்" என்றான்.

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: வீரா
The Hunter and the Quails

சில நாட்கள் சென்றன. காடைகள் இரை எடுப்பதற்கு கூட்டுமாக தரையில் இறங்கின. அப்பொழுது ஒரு காடையின் கால் இன்னொரு காடையின் தலையில் பட்டது. "யார் என் தலையை மிதித்தது?" என்று கோபத்துடன் கேட்டது அந்த காடை.

"வேண்டும் என்றா மிதித்தேன்? தெரியாமல் பட்டுவிட்டது. இதற்குப் போய் பெரிதாக கோபித்துக் கொள்கிறாயே.. நான் வலையை தூக்கிப் பறந்ததால் தான், நீ உயிர் பிழைக்க முடிந்தது. இதை நினைவில் வைத்துக்கொள்" என்று திமிராகச் சொன்னது முதல் காடை.

"நீ மட்டுமா தூக்கி கொண்டு பறந்தாய். நானும் தான் தூக்கிக்கொண்டு பறந்தேன். என்னால்தான் நீ பிழைத்தாய்" என்றது இரண்டாம் காடை.

யாரால் யார் தப்பித்தது? யார் வலையை தூக்கிக் கொண்டு பறந்தது? என்று காடைகள் கூட்டம் இரு குழுவாகப் பிரிந்தது. தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டன. அடுத்த நாள் எல்லா காடைகளும் வேடனின் வலையில் சிக்கிக் கொண்டன. "நீதான் எங்களை தூக்கிக்கொண்டு பறந்தேன் என்று பெருமை பேசினாயே.. இப்பொழுது தூக்கிக் கொண்டு பற பார்ப்போம்" என்றது இரண்டாவது காடை.

"போன முறை நான் தூக்கிப் பறந்தேன். இப்பொழுது உன் முறை திறமையை காட்டு பார்ப்போம்" என்றது முதல் காடை.

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: குருவிக்கு கடன் பட்ட காகம்!
The Hunter and the Quails

வலைக்குள் சிக்கியிருந்த எல்லா கடைகளும் இப்படியே சண்டையிட்டுக் கொண்டிருந்தன. தொலைவில் இருந்தபடியே அவற்றின் சண்டையைப் பார்த்த வேடன் மகிழ்ச்சியுடன் அங்கு வந்தான். எல்லா காடைகளையும் பிடித்துச் சென்றான்.

'ஆணவம் அழிவை தரும்' என்பதை இந்த கதையின் மூலமாக தெரிந்து கொண்டீர்களா குட்டிஸ்! ஒற்றுமையாக இருந்தால் என்றுமே பகைவர் கையில் அகப்படாமல் சந்தோஷமாக வாழலாம்.

logo
Kalki Online
kalkionline.com