
"ம்... ம்... சற்றுப் பொறு! எல்லாம் விளக்கமாகச் சொல்கிறேன். இப்போது இதை சாப்பிடு. ரொம்ப பசியோடு இருப்பாய்" என்று சொல்லி ஒரு சிறிய சிவப்பு நிறப் பழமொன்றை அவனிடம் கொடுத்தது. கந்தனும் மிகுந்த ஆவலுடன் அதை வாங்கி தன் வாயில் போட்டுக் கடித்தான். அவனது பெரும்பசியை அச்சிறு பழம் தணித்ததைக் கண்டு வியந்து போனான். பழத்தைத் தின்று முடித்ததும் கந்தனுக்குப் பழைய நினைவுகள் வரத்தொடங்கின.
பழுதடைந்த விமானம் அங்குமிங்கும் ஆடி திக்குத் தெரியாமல் பறந்து இறுதியில் கடலுக்குள் விழுந்தது. விழுந்ததும் இடியோசை போன்ற ஒரு பெருத்த சத்தத்துடன் விமானம் வெடித்துச் சிதறியது. பயணிகள் எல்லோரும் ஆளுக்கொரு மூலையில் போய் விழுந்தனர். அப்போது கடலுக்குள் மூழ்கிய கந்தனை ஏதோ ஒன்று கையைப்பிடித்து உள்ளே இழுத்தது. கந்தனும் கடலின் ஆழத்திற்குள் சென்றான். சென்றது தான் தெரியும். அதன்பின் நடந்தது ஒன்றும் அவனுக்குத் தெரியவில்லை. இப்போது தான் தன்கையைப் பிடித்து இழுத்தது நாகராஜன்தான் என்பது அவனுக்குப் புரிந்தது.
"என்ன கந்தா! இப்போது உனக்கு உண்மை தெரிந்ததா? நீ என் தலைமேல் ஏறி உட்கார். நான் உனக்கு என் நாட்டைச் சுத்திக்காட்டுகிறேன்" என்றது அந்தப் பாம்பு. கந்தனும் மிகுந்த மகிழ்ச்சியோடு சிறுவர்கள் யானைமீது ஏறி சவாரி செய்வது போல் அதன் தலை மீது ஏறி உட்கார்ந்து கொண்டு நாகர் உலகைச் சுற்றிப் பார்த்தான். பல இடங்களில் கண்ணைப்பறிக்கும் ஒளியுடன் புக்கிட்தீமா குன்றைப்போலக் காட்சி அளிக்கும் உயரமான குன்றுகளைப் பார்த்து இவை என்னவென்று நாகராஜனிடம் கேட்டான்.
"இவை எல்லாம் வெறும் மலைக்குன்றுகள் இல்லை. பொற்குவியல்கள். தங்க நாணயங்கள். இவைதாம் எங்கள் நாட்டின் பொக்கிஷங்கள்" என்றது அந்தப் பாம்பு.
"ஆ! இவ்வளவும் பொன்னா?" என்று ஆச்சிரியத்தில் வாயைப் பிளந்தான் கந்தன்.
"ஆம். நீ இப்போது எங்கள் நாட்டு விருந்தினன். ஆகவே உனக்கு வேண்டியதை நீ எடுத்துக்கொள்ளலாம்," என்று கூறியவாறே கந்தனை ஒரு பொற்குவியலுக்கு அருகே இறக்கிவிட்டது நாகராஜன்.
தன் வாழ்க்கையில் தங்கக்காசுகளையே பார்த்தறியாத கந்தன் அவ்வளவு பெரிய தங்க மலையையே நேரில் கண்டதும் அனைத்தையும் தானே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டான். எவ்வளவு முடியுமோ அவ்வளவு காசுகளை அள்ளி மூட்டையாகக் கட்டிக்கொண்டான். அவனது ஆசை பூர்த்தியானதைக் கண்டதும் நாகராஜன் கந்தனையும் அவனது தங்கக்காசு மூட்டையினையும் தன் தலையில் சுமந்தபடியே கடலுக்கு மேலே வந்தது. கடலின் மேற்பரப்பை அடைந்ததும் அவனைக் கரையில் இருந்து சற்றுத்தூரத்திலேயே இறக்கிவிட்டு, "கந்தா! இதற்கு மேல் என்னால் வரமுடியாது. ஆகவே நீயே நீந்திக் கரை சேர். நான் திரும்பவும் நாகலோகத்திற்குச் செல்கிறேன்" என்று கூறிவிட்டு விருட்டென்று கடலின் ஆழத்திற்குள் சென்று மறைந்துவிட்டது அந்த ஐந்துதலை நாகம்.
கந்தனுக்குப் பரம சந்தோஷம். காசு மூட்டையைத்தன் தோளில் கட்டிக்கொண்டு கரையை நோக்கி நீந்தினான். பாரம் அதிகமாக இருந்ததால் அவனால் வேகமாக நீந்த முடியவில்லை. அப்போது திடீரென மிகப்பெரிய அலை ஒன்று வந்து அவனைத்தாக்கியது. அதனால் நிலை தடுமாறிய கந்தன் மீண்டும் கடலின் ஆழத்திற்கே சென்றான். அவன் தோளில் இருந்த தங்கக்காசு மூட்டையும் அவிழ்ந்து கடலுக்குள் விழுந்தது. அவற்றைத் தடுக்க முடியாத கந்தன், "ஐயோ! என் பேராசையால் கிடைத்ததை எல்லாம் இழந்துவிட்டேனை!" என்று கண்விழித்தவாறே சுற்றுமுற்றும் பார்த்தான் கந்தன்... 'கண்டது கனவா?'
(முற்றும்)