சிறுவர் சிறுகதை: சுட்டி அணிலின் நற்செயல்!

சிறிய விதை தரும் பெரிய மாற்றம்: குழந்தைகளின் மனதைக்கவரும் விழிப்புணர்வு சிறுகதை!
சிறுகதை | Squirrel plant the tree
சிறுகதை | Squirrel plant the treeImage credit: Gemini AI
பெரெரிக்கா லெ

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

ஒரு அடர்ந்த பெரிய காட்டில் சுட்டி என்றொரு குட்டி அணில் வாழ்ந்து வந்தது.

சுட்டி எப்போதுமே சுறுசுறுப்பாக இருக்கும். ஆனால் அதற்கு ஒரு கெட்ட பழக்கம் இருந்தது. அது காட்டில் உள்ள பழங்களை சாப்பிட்டு விட்டு, விதைகளை அங்கேயே கண்டபடி தூக்கி எறிந்துவிடும்.

ஒரு நாள், அது ஒரு பெரிய மரத்தின் அடியில் உட்கார்ந்து சுவையான பழங்களை சாப்பிட்டு கொண்டிருந்தது. சாப்பிட்டு முடித்ததும், வழக்கம் போல அதன் விதைகளை அங்கேயே கண்டபடி தூக்கி வீசியது.

அப்போது, அந்த மரத்தில் இருந்த வயதான காகம் ஒன்று கீழே பறந்து வந்தது.

அந்த காகம் சுட்டியிடம், "சுட்டி! விதைகளை இப்படி கண்டபடி தூக்கி வீசாதே. அவற்றை மண்ணில் புதைத்து வை," என்று அன்போடு கூறியது.

சுட்டி குழப்பத்துடன், "ஏன் காகமே? இந்த வெறும் விதையை மண்ணில் புதைத்து நான் என்ன செய்யப் போகிறேன்?" என்று கேட்டது.

சிறுகதை | The squirrel buries the nut in the ground
சிறுகதை | The squirrel buries the nut in the groundImage credit: Gemini AI

காகம் புன்னகைத்து, "நீ மண்ணில் புதைக்கும் இந்தச் சிறிய விதைக்குள் தான் ஒரு பெரிய மரமே ஒளிந்திருக்கிறது! நீ விதையைப் புதைத்தால், மழை பெய்யும்போது அது முளைத்து, பெரிய மரமாக வளரும். அந்த மரம் நாளை உனக்கும், உன் நண்பர்களுக்கும் சுவையான பழங்களையும், தங்குவதற்குப் நிழலையும் தரும்," என்று விளக்கியது.

காகம் சொன்னதைக் கேட்ட சுட்டிக்கு அது ஒரு புதிய விளையாட்டாகத் தெரிந்தது. அன்றைய தினத்திலிருந்து, தான் சாப்பிடும் பழங்களின் விதைகளை ஆங்காங்கே மண்ணைத் தோண்டிப் புதைக்கத் தொடங்கியது.

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: காக்கைகளின் நல் உதவி!
சிறுகதை | Squirrel plant the tree

சில மாதங்கள் கழித்து, மழைக்காலம் வந்தது. காடு முழுவதும் மழை பொழிந்தது. மழை நின்ற பிறகு, சுட்டி தான் விதைகளைப் புதைத்த இடங்களுக்குச் சென்று பார்த்தது. ஆச்சரியம்! நிலத்திலிருந்து சிறிய பச்சை நிறத் துளிர்கள் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன.

வருடங்கள் உருண்டோடின. சுட்டி நட்ட விதைகள் எல்லாம் பெரிய மரங்களாக வளர்ந்து நின்றன.

அம்முறையில் காட்டுக்கு ஏராளமான பழங்களும், அடர்ந்த நிழலும் கிடைத்தன. காட்டு விலங்குகள் அனைத்தும் சுட்டியைப் பெரிதும் பாராட்டின. சிறிய விதைகளுக்குள் எவ்வளவு பெரிய சக்தி இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்ட சுட்டி, பெருமிதத்தோடு தொடர்ந்து விதைகளை நட்டுக்கொண்டே இருந்தது.

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: கிணற்றுத் தவளையும், ஏரித்தவளையும்..!
சிறுகதை | Squirrel plant the tree

கதை உணர்த்தும் உண்மை: நாம் செய்யும் சிறிய நற்செயல்களும், முயற்சியும் எதிர்காலத்தில் மிகப் பெரிய நன்மையைத் தரும்.

மரங்களை நடுவோம்; இயற்கையைக் காப்போம்!

இந்தக் கதையை வாசிப்பதன் மூலம், உங்கள் குழந்தைகளுக்கு இயற்கையின் மீதான நேசத்தையும், எதிர்காலத்துக்கான பொறுப்புணர்வையும் எளிய முறையில் ஊட்டி, அவர்களைச் சுற்றியுள்ள சூழலை மேம்படுத்தும் நற்பண்புகளை வளர்க்கலாம்.

logo
Kalki Online
kalkionline.com