

மூன்றாம் வகுப்பில் இருந்து கண்ணுசாமி கடைசி பெஞ்சில் தான் உட்காருவான். அவனுக்கு வகுப்பில் குறும்பு செய்ய அது தான் சரியான இடம்.
பாடம் கவனிக்க முடியாது. ஆசிரியர்களும் அதிகம் கேள்வி கேட்டுத் தொந்தரவு தர மாட்டார்கள். பசித்தாலும் டிபன் பாக்ஸை நைஸாகத் திறந்து சாப்பிடலாம்.
முதல் பெஞ்சில் பக்கத்து வீட்டு போஸ்ட்மேன் பையன் ரமேஷ் உட்கார்ந்திருப்பான். ரமேஷ் படிப்பில் சுட்டி. எல்லா பாடத்திலும் 100/100 வாங்குவான்.
கண்ணுசாமிக்கும் படிப்புக்கும் வெகு தூரம். என்னவோ இந்த கணக்கு, இங்கிலீஷ் பாடங்கள் அவனுக்கு ஆகாமல் போய்விட்டது.
பள்ளி தலைமையாசிரியர் மிகவும் நல்லவர். கண்ணுசாமி அப்பா அந்த கிராமத்து பஞ்சாயத்து பிரசிடெண்ட். ஆகையால் கண்ணுசாமியை பாஸ் போட்டு விடுவார்.
ஆனால் கண்ணுசாமி விளையாட்டில் ஆர்வம் காட்டினான்.
ஓட்டம், லாங் ஜம்ப், ஹை ஜம்ப் இதில் எல்லாம் முதலில் வருவான்.
அந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வந்ததும் ஹெட்மாஸ்டரால் கண்ணுசாமிக்கு உதவ முடியவில்லை. ஃபெயில் ஆகிவிட்டான்.
ரமேஷ் மாநிலத்திலேயே இரண்டாவதாக வந்தான்.
இனி படிப்பு வராது எனத் தீர்மானித்த கண்ணுசாமி தகப்பனார் அவனுக்கு ஒரு மோட்டார் சைக்கிள் மெக்கானிக் கடை வைத்துத் தந்தார்.
கடையிலும் அவன் உட்காரவில்லை. நாலைந்து நண்பர்கள் எப்போதும் கூட இருக்க அரட்டை, டீ, சினிமா என பொழுதைப் போக்கினான். வாலிபால், கிரிக்கெட், ஜிம் என உடம்பை சிக்ஸ் பேக் வைத்தான்.
ஒரு முறை ரயில்வே ரோடில் ஒரு திருடன் ஒரு மூதாட்டியின் கழுத்துச் செயினை அறுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் பறந்தான். பாட்டி அலறினாள்.
பின்னால் நடந்து வந்த கண்ணுசாமி திருடன் பின்னால் ஓடினான். திருடனை மறித்து அறை விட்டு செயினை மீட்டான்…
கூட்டம் கூடிவிட்டது.
போலீஸ் திருடனைப் பிடித்தது. மறு நாள் பேப்பரில் கண்ணுசாமி போட்டோவுடன் நியூஸ் வந்தது. கலெக்டர் ஒரு விழாவில் கண்ணுசாமியை வரவழைத்து பரிசு வழங்கினார்.
“பொது மக்கள் அலர்ட்டாக இப்படி நடந்து கொண்டால் குற்றங்கள் குறையும்”, என போலீஸ் டி. எஸ். பி பேசினார்.
கண்ணுசாமி தகப்பனாருக்கு வயசாகி விட்டது. அந்த ஊர் பிரச்னைகளை வீட்டில் தீர்த்து வைப்பார்.
இப்போது கண்ணுசாமிக்கு வயசு முப்பது ஆகிவிட்டது. திருமணம் ஆகி ஒரு குழந்தை. கிராமத்து மக்கள் சின்ன ஐயா என அவனை அழைத்தார்கள்.
பஞ்சாயத்து தேர்தல் வந்தது. ஒரு கட்சி இவனுக்கு சீட் தந்து நிற்க வைத்து ஜெயித்து கவுன்சிலர் ஆனான் கண்ணுசாமி.
பக்கத்து வீட்டு ரமேஷ் பிளஸ் 2 வில் நல்ல மார்க் எடுத்து பி. எஸ். ஸி ஃபிஸிக்ஸ் படித்தான். டெல்லியில் ஒரு வேலை கிடைத்தது.
அங்கே பணி புரிந்துகொண்டே ஐ. ஏ. எஸ் பரிட்சை எழுதினான்.
இரண்டாவது அட்டெம்ப்டில் தேர்ச்சி ஆகி கலெக்டர் ஆகிவிட்டான்.
எல்லை அருணாசல பிரதேசத்தில் ஒரு மாவட்டக் கலெக்டர் ஆக போஸ்டிங் கிடைத்து போய் பணி புரிந்தான்.
கண்ணுசாமி இப்போது அவன் கட்சியில் மாவட்டச் செயலாளர். இந்த முறை எம். பி க்கு சீட் கிடைத்து ஜெயித்து எம். பி ஆகிவிட்டான்.
கூட்டணி ஆட்சி அமைந்த போது கண்ணுசாமியின் நேர்மை மற்றும் அவனுடைய பழைய வரலாற்றை ஆய்வு செய்து உள் துறை அமைச்சராக்கி விட்டார் பிரதமர்.
திறம்பட அந்தத் துறையை நிர்வாகம் செய்தார் கண்ணுசாமி.. ஆமாம் இப்போது அவருக்கு வயது 50.
(நாமும் இனி கண்ணுசாமிக்கு மரியாதை கொடுத்தே எழுத வேண்டும்.)
அவருக்கு பி. ஏ ஆக புதிதாக ஒருவரைப் போடத் தேடினார்கள். திறமையான அதிகாரிகள் லிஸ்ட் கண்ணுசாமியிடம் தரப்பட்டது.
கண்ணுசாமி காஷ்மீர் மற்றும் எல்லை பிரதேசப் பிரச்சினைகளை அலசி ஆராய, தனக்கு உதவ ஒரு நல்ல ஐ. ஏ. எஸ் அதிகாரியைத் தேர்ந்தெடுத்தார்.
கடைசியில் அருணாசல் பிரதேசத்தில் பணிபுரியும் ரமேஷ் வந்து சேர்ந்தார் கண்ணுசாமிக்கு உதவியாளராக.
பணியில் சேர்ந்த அன்று கண்ணுசாமியை வணங்கி பொறுப்பேற்றார் ரமேஷ் ஐ. ஏ. எஸ்.
மாலை இருவரும் டீ சாப்பிட பார்லிமெண்ட் கேண்டீனுக்கு நடந்து போனார்கள்… “எப்படிடா இருக்கே ரமேஷ்.”
“நல்லா இருக்கேன் சார்.”
“சாரா.. இங்கே நாம இருவரும் தான்.. வாடா போடா என்றே பேசலாம்.”
இருவரும் பழைய பள்ளி நாட்களை நினைவு கூர்ந்தார்கள்.
சில மாதங்கள் கழித்து கண்ணுசாமிக்கு ரமேஷ் அப்பா போன் செய்தார்.
“தம்பி கண்ணுசாமி.. எனக்கு ரொம்ப உடம்புக்கு முடியலே.. என் மகன் கொஞ்ச நாள் கிட்டே இருந்தால் நல்லா இருக்கும். கொஞ்சம் தயவு பண்ணுங்க”
“என்ன அங்கிள் இப்படிச் சொல்லிட்டீங்க.”
அடுத்த வாரத்தில் ரமேஷ் தஞ்சாவூருக்கு மாவட்ட கலெக்டராக மாற்றலாகி வந்து சேர்ந்தான்.
கலெக்டரை ஒருநாள் ஓய்வு பெற்ற ஹெட் மாஸ்டர் பார்க்க வந்தவர் சொன்னார்..
“கடைசி பெஞ்ச் கண்ணுசாமி இன்னிக்கு எங்கோ இருக்கார்.. முதல் பெஞ்ச் ரமேஷ் நீயும் முன்னுக்கு வந்திட்டே.. உன்னையாவது பார்க்க முடியுது. கண்ணுசாமியை பார்க்கணும்ன்னா எதுக்கு ஏன் காரணம் ஆயிரம் கேட்கிறாங்க போலீஸ்… முதல் பெஞ்ச் மாணவர்கள் பலரும் இன்னிக்கு டாக்டர்கள்… அமெரிக்காவில் நாஸா, மைக்ரோ சாஃப்ட், கூகுளில் இருக்காங்க.. கடைசி பெஞ்ச் ஆட்கள் பலர் சொந்த பிஸினஸ் வைத்து பலரும் பெரிய கோடீஸ்வரர் ஆகி விட்டார்கள்.. கண்ணுசாமி இருக்கும் லெவலே வேறே.. ஹும்.. காலத்தைப் புரிந்து கொள்வது கடினம்” என்றார்.
ரமேஷ் சிரித்தபடி “கரெக்ட் சார்.. நூத்துக்கு நூறு உண்மை” என்றார்.