

தமிழ் மொழியில் இசை பற்றியும், பண்பு பற்றியும், குறிப்பு பற்றியும் அடிச்சொல் இரட்டித்து நிற்பது இரட்டைக்கிளவி எனப்படும். இதே போன்று, ஒரே சொல் இரட்டித்து அல்லது இரண்டு, மூன்று முறை இணைந்து வந்து பொருள் தருமாயின் அது இரட்டைக்கிளவி எனப்படுகிறது. அதாவது, இரட்டைக்கிளவி என்பது இரட்டைச் சொற்களாய்ச் சேர்ந்து ஒரு தன்மைப்பட்டு நின்று, வினைக்கு அடைமொழியாய்க் குறிப்புப் பொருள் உணர்த்தி வருவதாகும். இது இரட்டைச் சொல்லாகவே வரும். பிரித்தால் பொருள் தராது.
இங்கு இரட்டைக்கிளவிச் சொற்களைக் கொண்ட சில வாக்கியங்களைப் பார்க்கலாம்.
* ஆற்று நீர் சலசல என ஓடிற்று
* அந்த மரம் மடமட என முறிந்தது
* அவனுக்கு கசகச என வியர்த்தது
* அவன் கலகல எனச் சிரித்தான்
* தண்ணீரை கடகட என்று குடித்தான்
* முல்லைப்பூ கமகம என மணந்தது
* பாட்டிக்கு கிச்சுக்கிச்சு மூட்டினாள் பேத்தி
* வழியில் கிடுகிடு பள்ளம் பார்த்தேன்
* அவனுக்கு கிறுகிறு என்று தலை சுற்றியது
* வயதான குடுகுடு கிழவர் வந்தார்
* காயம்பட்ட இடத்திலிருந்து குபுகுபு என குருதி கொட்டியது
* குளுகுளு உதகை சென்றேன்
* அவனுக்குள் குறுகுறுத்தது குற்ற நெஞ்சம்
* கன்றுக்குட்டி கொழுகொழு என்று இருந்தது.
* எறும்புகள் சாரைசாரையாக வந்தன
* சிலுசிலு என காற்று வீசியது
* அவன் அவளைத் தரதர என்று இழுத்து சென்றான்
* அவன மனது திக்குத்திக்கு என்று அடித்துக் கொண்டது
* பதில் தெரியாமல் திருதிரு என விழித்தான்
* குழந்தை துறுதுறு என்றிருந்தது.
இதே போன்று இன்னும் எவ்வளவோ இரட்டைக்கிளவி பயன்படுத்திய வாக்கியங்கள் இருக்கின்றன.
கீழிருக்கும் இரட்டைக்கிளவிகளைக் கொண்டு தங்களுக்குத் தெரிந்த இரட்டைக்கிளவி வாக்கியங்களை அமைத்துப் பாருங்களேன்!
தடதட , சுடசுட, தொளதொள, நறநற, நைநை, பக்குப்பக்கு, படபட, பரபர, பளபள, பேந்தப்பேந்த, பொதபொத, பொலபொல, மசமச, மடக்கு மடக்கு, மலங்க மலங்க, முணுமுணு, மொழுமொழு, மொறுமொறு, லபக்லபக், லொடலொட, விறுவிறு, விறுவிறு, வெடவெட, தொபு தொபு, வெலவெல...