

உணவு, உடை, வீடு என்ற மூன்று அடிப்படை தேவைகளுக்கு அடுத்ததாக நான்காவது அவசியமாக தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் ‘நான்’ யார் என்ற புதிர் வடிவில் இந்தக் கட்டுரை நகர்கிறது. கடிதம், தபால், மின்னஞ்சல் காலத்திலிருந்து இன்று வரை தகவல் பரிமாற்றம் எப்படி மாறியது, 2009-இல் இந்தியாவில் அறிமுகமாகி, கொரோனா காலத்துக்குப் பிறகு மனிதர்களின் வாழ்வில் பிரிக்க முடியாத அங்கமாக மாறிய WhatsApp-ன் (வாட்ஸ்அப்) பயணத்தை சுவையாக விளக்குகிறது.
உணவு, உடை, வீடு இதை தவிர நான்காவதாக நான் இருக்கிறேன்... நான் இல்லாமல் இப்போது வாழ்க்கையே ஓடாது? நான் யார்? கண்டுபிடியுங்கள்.....
உங்கள் எல்லோருக்கும் என்னுடைய வணக்கங்கள்.. என்னை பற்றி சில விஷயங்களை நான் சொல்கிறேன்.. நான் யார் என்று நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்!
மனிதர்கள் வாழ்வதற்கு மூன்று பொருட்கள் தான் மிக மிக அவசியம். உணவு, உடை மற்றும் இருக்க இடம். ஆனால் இப்போதோ நான்காவதாக நான் முளைத்து விட்டேன். நான் இல்லை என்றால் ஒன்றுமே இயங்காது என்ற நிலைமை இப்போது வந்துவிட்டது. எனக்கு இத்தனை மதிப்பை கொடுத்து என்னை போற்றி என்னோடு இணைந்ததற்காக முதலில் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...
உங்களுக்கு ஒன்று தெரியுமா? நான் வருவதற்கு முன்னால் எல்லோரும் தன் நண்பர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ எதாவது சொல்ல வேண்டும் என்றால் அதை கடிதத்திலே எழுதி தபால் பெட்டியில் தான் போட்டு கொண்டிருந்தார்கள்.
இன்டர்வ்யூ லெட்டர், வங்கி சம்பந்தமான லெட்டர், கல்லூரியின் அல்லது பள்ளியின் சேர்க்கை லெட்டர் என இப்படி எல்லா விதமான செய்திகளையும் மக்கள் கடிதங்களின் மூலமாக அதாவது தபால் வழியாக தான் பகிர்ந்து கொண்டார்கள்.
ஐயா, அதற்குப் பிறகு என்னோட அண்ணன் வந்தாருங்க.. யாரென்று கேட்கிறீர்களா..
அதாங்க... மின்னஞ்சல்..
1995 இல் என்னோட மின்னஞ்சல் அண்ணன் இந்தியாவில் அறிமுகமானார்.
யாருக்காவது செய்திகளை உடனடியாக பரிமாறிக் கொள்ள வேண்டுமென்றால் யாரிடம் இணையதள வசதி இருந்ததோ அவர்கள் இதை உபயோகப் படுத்தினார்கள். அதுவும் எல்லோரும் இதை பயன்படுத்த வில்லை. அலுவலகம், மருத்துவம், கல்லூரி, அரசாங்கத் துறை என இப்படி முக்கியமான துறைகளில் மட்டுமே இந்த மின்னஞ்சலை பயன்படுத்தினார்கள்.
மற்றபடி எல்லோருமே தொலைபேசியின் மூலமாகவோ அல்லது கடிதம் மூலமாக தான் செய்திகளை பரிமாறிக் கொண்டிருந்தார்கள்.
இந்த மின்னஞ்சல் வசதி எல்லோரிடமும் அப்போது இருக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் இப்போது கூட எல்லோரிடமும் இந்த மின்னஞ்சல் இருப்பதில்லை.
ஆனால், இன்றைக்கு நீங்கள் பார்த்தீர்களேயானால், என்னை வைத்திருக்காத அல்லது உபயோகப்படுத்தாத மக்களே இல்லை... இல்லவே இல்லை...
படித்தவர், படிக்காதவர் என எல்லோரிடமும் நான் இருக்கிறேன். யாருக்காவது எதையாவது அனுப்ப வேண்டும் என்றாலோ அல்லது ஏதாவது சொல்ல வேண்டுமென்றாலோ அல்லது ஏதாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றாலோ உடனடியாக அவர்கள் என் மூலமாக தான் அதை செய்கிறார்கள்.
காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை எல்லோருடைய வாயில் இருந்து வருவது என்னுடைய பெயர் தான்.
என் மூலமாகத்தான் காலை வணக்கத்தை பகிர்ந்து கொள்கிறார்கள்... அன்றாட நிகழ்ச்சிகளை பகிர்ந்து கொள்கிறார்கள். குழு ஒன்று அமைத்துக் கொண்டு அதிலே அந்தக் குழுவின் நிர்வாகியோ அல்லது வேறு ஒரு உறுப்பினரோ ஒரு செய்தியை போட்டாலே போதும்.. அந்தக் குழுவில் உள்ள அனைவருக்கும் அந்த செய்தி சென்றடைந்து விடும்.
அலுவலகம் மருத்துவமனை கல்லூரி என எல்லா இடங்களிலுமே முதன்மையாக இருப்பது நான்தான்.
வீட்டில் இருக்கும் நோயாளி மருத்துவருக்கு ரிப்போர்ட் அனுப்ப வேண்டும் என்றால் உடனடியாக சட்டென்று என் மூலமாக அனுப்பி விடுகிறார்கள். அதைப்போல மருத்துவரும் என் மூலமாக மருந்துகளை எழுதி அனுப்பி விடுகிறார்...
பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர் கூட என் மூலமாகத் தான் மாணவர்களுக்கு கேள்வித் தாள், முக்கியமான குறிப்புகள், நோட்டீஸ் போன்றவற்றை அனுப்புகிறார்கள்.
சரி, நான் எப்போதிலிருந்து இந்த மக்களிடம் அறிமுகமானேன் என்று தெரியுமா உங்களுக்கு?
2009 ஆம் ஆண்டில் தான் நான் இந்தியாவில் அறிமுகமானேன். 2020 வருடம் தொடங்குவதற்கு முன்னாலேயே பல விதமான வசதிகளை என்னுள் சேர்த்ததன் காரணமாக மக்களின் கவனம் முழுவதுமாக என் பக்கம் திரும்பி விட்டது. கொரோனா காலத்திற்கு பிறகு மக்கள் முழுவதுமாக என் வசமே ஆகி விட்டார்கள். இல்லை இல்லை என்னிடம் சிக்கி விட்டார்கள்!
இப்படி மக்களின் மனதில் ஒரு நீங்கா இடம் பிடித்த என்னை கண்டுபிடித்தவர்கள் யார் தெரியுமா? அமெரிக்காவை சேர்ந்த ஜான் கௌம் மற்றும் பிரையன் ஆக்டன் என்கிற computer prgrammers ஆவார்கள்.
இத்தனை clue கொடுத்து விட்டேனே, இன்னுமா புரியவில்லை, நான் யாரென்று? நான் தான் உங்களுடைய கைபேசிகளில் எப்போதும் online ல் இருக்கக் கூடிய உங்களுடைய உற்ற நண்பன்..
'WhatsApp..' (வாட்ஸ்அப்)
அன்றாடச் சவால்களைச் சமாளிக்க நவீன தொழில்நுட்பக் கருவிகளைத் துல்லியமாகப் பயன்படுத்தி, உங்கள் நேரத்தைச் சேமிப்பதோடு வேலைகளில் அபாரமான வேகத்தையும் பெறுகின்றீர்கள்.