

கல்கியில் 'ஒரு நிருபரின் டைரி' என்கிற தலைப்பில் சந்திரமெளலி தொடர் கட்டுரையினை எழுதி வந்தார். கல்கி 02-09-2022 இதழில் காலம் சென்ற ஏவிஎம் சரவணன் அவர்களின் நேர்காணல் வெளியாகியுள்ளது. சினிமா சம்பந்தமான பல சுவாரஸ்யமான விஷயங்களை அப்போது கல்கி வாசகர்களோடு பகிர்ந்து கொண்டுள்ளார் AVM சரவணன். சமீபத்தில் மறைந்த சரவணன் சாருக்கு அஞ்சலியாக அன்று கல்கி வார இதழில் வெளியான கட்டுரையிலிருந்து இங்கே...
*பல்வேறு மனிதர்களையும் பற்றி "மறக்க முடியாத மனிதர்கள்" என்ற தலைப்பில் நான்கு பாகங்களில் புத்தகங்கள் எழுதி இருக்கிறார் ஏவி.எம்.சரவணன்.
*சரவணன் சாரை ஒரு "சம்பவ ஸ்பெஷலிஸ்ட்" என்றால் அது மிகை இல்லை.
எம்.ஜி.ஆர், சிவாஜி, கலைஞர், எஸ்.எஸ்.வாசன், கே.பாலசந்தர், ரஜினி, கமல், சின்னப்பா தேவர், ஏ.சி.திருலோக்சந்தர், விசு, எம்.எஸ்.வி, சோ, நாகேஷ், மனோரமா, அசோகன், தென்கச்சி சுவாமிநாதன், நாகிரெட்டி, வாலி, டிடி வாசு, டாக்டர் பத்ரிநாத், வைரமுத்து, சிவசங்கரி, எஸ்.பி.முத்துராமன், ஜெய்சங்கர், பிலிம் நியூஸ் ஆனந்தன் என்று சுமார் நூற்றுக்கும் அதிகமான மனிதர்களைப் பற்றி எத்தனை, எத்தனை சுவாரசியமான சம்பவங்களை அந்த புத்தகங்களில் அவர் சொல்லி இருக்கிறார் தெரியுமா?
*அவர் தன் தந்தையாரிடமிருந்து கற்றுக்கொண்ட விஷயங்கள் ஏராளம்.
எனவே, 'மனதில் நிற்கும் மனிதர்கள்' புத்தகத்தின் நான்கு பாகங்களிலும் கடைசி அத்தியாயமாக தன் தந்தையாரைப் பற்றி ஏராளமான விஷயங்களைப் பதிவு செய்திருக்கிறார்.
ஒரு முறை ஏவி.எம். எடுத்திருந்த பெண்மை போற்றும் குறும்படம் பற்றிய சுவாரசியமான பின்னணித் தகவல் ஏதாவது சொல்லும்படிக் கேட்டபோது, சிறிது நேரம் யோசித்தார். "நாங்கள் "அன்பே வா" படம் எடுத்தபோது ஊட்டியில் படப்பிடிப்பு. ஒருநாள் மாலை சூரியன் மறையும் நேரம். பாடல் காட்சியின் ஷூட்டிங்கை முடித்துவிட்டார் இயக்குனர் ஏ.சி.திருலோக்சந்தர். அதன் பிறகு, என்ன தோன்றியதோ, திடீரென்று எம்.ஜி.ஆர். சரோஜா தேவி இருவரையும் கை கோர்த்தபடி சூரியனை நோக்கி நடக்கவைத்து, பின்னால் இருந்து சில அவுட்டாக சில ஷாட்கள் எடுத்து, அவற்றை பாடல் காட்சியின் கடைசியில் பயன்படுத்தினார்.
இப்போது எடுத்திருக்கும் இந்தக் குறும்படத்தின் இயக்குனர், என்னிடம் ஒரு ஆணும், பெண்ணும் கைகோர்த்தபடி சூரியனை நோக்கி நடக்க, பின்னால் இருந்து அதை ஷூட் பண்ணி, படத்தின் ஃபினிஷிங் ஷாட் ஆக வைக்க விரும்புகிறேன்! அதற்கு இரண்டு மாடல்கள் வேண்டும்!" என்று கூறினார்.
நான், அப்படி ஒரு ஷாட்டை புதுசாக எடுக்க வேண்டிய அவசியமே இல்லை. நீங்கள் விரும்பிய மாதிரியே, தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார்களான எம்.ஜி.ஆரும், சரோஜா தேவியும் இடம்பெறும் ஷாட் எங்களிடம் இருக்கிறது என்று சொல்லி, அன்பே வா பாடல் காட்சியின் கடைசி ஷாட்களைக் காட்டினேன். அந்த இயக்குனர் மிகுந்த ஆச்சரியப்பட்டு, அந்த ஷாட்களையே பயன்படுத்திக் கொண்டார்" என்று ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.
*ஆரம்பம் முதலே அனைத்து தகவல்களையும், புகைப்படங்களையும் ஆவணப்படுத்துவதில் ஏவி.எம். நிறுவனத்தை மிஞ்ச வேறு யாருமில்லை என்றே சொல்லலாம். 1935ல் ஏவி.எம் தயாரித்த முதல் படம் 'அல்லி அர்ஜுனா'. அதில் தொடங்கி இன்று வரை பல்வேறு மொழிகளிலும் எடுத்த எல்லா படங்களைப் பற்றிய தகவல்கள், ஸ்டில்கள் என எல்லாம் அவர்களிடம் பத்திரமாக ஆவணப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. தவிர ஏவி.எம். எடுத்த படங்கள், ஏவி.மெய்யப்ப செட்டியார் வாழ்க்கை வரலாறு எல்லாம் புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. அவை பற்றி தொலைக்காட்சித் தொடராகவும் எடுக்கப்பட்டு, விஷுவலாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன.
*இன்று ஏவி.எம் ஸ்டுடியோவினுள்ளே சென்றால், செட்டியார் முதன் முதலில் பயன்படுத்திய கார், அந்தக் கால சினிமா கேமராக்கள், இதர திரைப்படத் தயாரிப்பு தொடர்பான உபகரணங்கள் என்று எல்லாமே அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
*அவ்வளவு ஏன், ஏவி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்துக்கு போனால், அங்கே நூற்றுக்கும் அதிகமான ஏவி.எம் தயாரித்த பல்வேறு மொழி திரைப்படங்களின் விளம்பரங்களை அழகாக ஃப்ரேம் போட்டு மாட்டி வைத்திருப்பார்கள். அவற்றைப் பார்க்கிறவர்களுக்கு, அந்தந்தப் படங்களில் இடம்பெற்ற காட்சிகள் நெஞ்சில் நிழலாடும்.
*மக்களின் ரசனையை மிகச்சரியாக கணிக்கத் தெரிந்தவர் சரவணன். விசு இயக்கத்தில் ஏவி.எம் தயாரித்த "சம்சாரம் அது மின்சாரம்" படம் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்று, தேசிய விருதும் பெற்றது. அனைவரும் அறிந்ததுதான். ஆனால், ஒரு பத்து, பதினைந்து வருடங்கள் கழித்து, ஒரு நண்பர், " 'சம்சாரம் அது மின்சாரம்' படத்தின் இரண்டாம் பாகத்தைத் தயாரிக்கலாம்" என்று சொன்னபோது, சரவணன் சார் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்குக் காரணம், "இன்று மக்கள் தியேட்டருக்கு வருவது குறைந்துவிட்டது; ரசிகர்களின் ரசனையும் மாறிவிட்டது. இரண்டாம் பாகம் எடுத்தால் ஓடாது! வேண்டுமானால் டிவி சீரியலாக எடுக்கலாம்" என்று சொன்னார்.
*தனியார் டெலிவிஷன் சேனல்கள் முளைத்து, அவற்றுக்கு எதிர்காலத்தில் அசுர வளர்ச்சி இருக்கும் என்பதைக் கணித்து, சரியான நேரத்தில் தொலைக்காட்சி தொடர்களை எடுக்க ஆரம்பித்தார் சரவணன். அதில் வெற்றியும் பெற்றார். அப்படி எடுக்கும் தொலைக்காட்சித் தொடர்களில் கூட சமுதாயத்துக்கு தவறான கருத்துக்களைச் சொல்லும் சில குறிப்பிட்ட வகையான காட்சிகளை இடம்பெறச் செய்யக்கூடாது என்பதில் தெளிவாக இருப்பார். இதுபோல சமூக அக்கறை கொண்ட சினிமா, தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பாவர்களை இன்று காண்பது மிக அரிது.
*திருட்டு விசிடி, படம் ரிலீஸ் ஆகும்போது ஆன்லைனில் சட்டத்துக்குப் புறம்பாக படங்களை வெளியிடுவது போன்ற திரையுலகப் பிரச்னைகளை மையமாக வைத்து "தமிழ் ராக்கர்ஸ்" என்று ஒரு வெப் சீரிஸ் எடுத்து ஓடிடி தளத்தில் வெளியிட்டிருப்பது "மாற்றம் ஒன்றே நிலையானது" என்ற தத்துவத்தை ஏவி.எம். பரம்பரை எத்தனை சரியாக புரிந்துகொண்டிருக்கிறது என்பதற்கு ஓர் உதாரணம்.
*சிவாஜி கணேசன் நடித்த 'பராசக்தி' படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் ஏவி.எம். என்பது அனைவருக்கும் தெரியும். அந்தப் படத்தின் ஷூட்டிங் ஏவி.எம். ஸ்டூடியோவில்தான் நடந்தது என்பதும், அதன் நினைவாக இன்று ஏவி.எம். வளாகத்தில் அந்த படப்பிடிப்பு நடைபெற்ற அரங்கம் இருந்த இடத்தில் சரவணன் சார் ஒரு நினைவுச் சின்னம் எழுப்பி சிவாஜியை மட்டுமின்றி தமிழ் சினிமா உலகத்தையே கௌரவித்திருக்கிறார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
*பத்திரிகையாளர்களுக்கும், திரு. சரவணனுக்கும் நெருங்கிய நட்பு உண்டு. எத்தனையோ பத்திரிகையாளர்கள் இக்கட்டான சமயங்களில் அவரை அணுகி, உதவி பெற்று பயனடைந்திருக்கிறார்கள். அது மட்டுமில்லை, பத்திரிகைகளில் ஏவி.எம். நிறுவனம் பற்றியோ, தனிப்பட்ட முறையில் சரவணன் சார் பற்றியோ பெரிய பேட்டிகள், கட்டுரைகள் என்று இல்லாமல் சிறிய துணுக்கு வெளியானால் கூட உடனே அந்தப் பத்திரிகைக்கும், சம்பந்தப்பட்ட பத்திரிகையாளருக்கும் நன்றி தெரிவித்துக் கடிதம் எழுதும் பழக்கம் கொண்டவர் அவர்.
*"சாப்பிட்டால் நல்லா செரிக்கணும்; படுத்தால் நிம்மதியா தூங்கணும்" இதுதான் சார் வாழ்க்கையில் நான் கடைபிடிக்கும் தத்துவம்" என்று அவர் ஒரு முறை என்னிடம் பேசும்போது குறிப்பிட்டார்.
என்ன அர்த்தம் பொதிந்த வாழ்க்கை தத்துவம்!