சிறுகதை: ‘மனசிருக்கணும்… மனசிருக்கணும்…!’

humanity short story
humanity short storyImage credit - AI image
Published on
kalki strip
kalki strip

அதிகாலையே எழுந்து குளித்து முடித்து ஊட்டிக்குக் கிளம்ப உத்தேசம். பிளான் பற்றி ஆர்வமாய் விடியவிடிய பேசிக் கொண்டிருந்ததில் எல்லாரும் அசந்து தூங்கிவிட்டார்கள்.

கேசவ் மட்டும் வண்டி ஓட்டணுமே..? எத்தனைதான் ‘ஹில்ஸில்’ ஓட்டியிருந்தாலும் இப்ப, குடும்பத்தோடு போகையில், ஒரு எச்சரிக்கை உணர்வு விழிப்பூட்ட, சீக்கிரமே எழுந்து வாசலில் நிறுத்தியிருந்த காரின் ‘வின்ஷீல்டு கிளாஸை’ முன்னும் பின்னும் ‘கிளீன்’ பண்ண, ஒரு பக்கெட் தண்ணியை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தான்.

‘திக்கென்றது!

வாசலில் நிறுத்தியிருந்த காரைக் காணோம்!. புதிதாய் வாங்கியது…! நிறம் விரும்பிச் சொன்னதால், ‘புக்’ பண்ணி ஒருமாசம் கழிச்சுத்தான் வண்டி வந்தது!. முழுப்பணமும் கட்டியாகிவிட்டது!. எல்லாரும் மகிழ்ச்சியாய் 'டூர்’ போக நினைத்திருக்கையில், கார் காணோமென்றால் என்ன செய்வது?

படபடவென அடித்துக் கொண்டது மனது.

யாரிடம் கேட்பது ? போலீஸுக்குப் போன் பண்ணலாமா?வேண்டாமா? ராத்திரி இடையில், பாத்ரூம் போக எழுந்து வந்த போதுகூட, வாசலில் கார் நிற்பதைப் பார்த்ததாக ஞாபகம்! சரியாய் நினைவில்லை! இப்போது இல்லை!! பாத்ரூம் போய்வந்து, அதிகநேரம் ஆகவில்லை! அப்படியானால்.. எடுத்தவன் அதிக தூரம் போயிருக்க முடியாது!

அப்ப, டூவீலரை எடுத்துப் போய், அந்த ‘அஞ்சுமுக்கு’ வரை பார்த்துவரலாமா? யோசித்தான். டூவீலரை எடுத்து ஸ்டார்ட் பண்ணினா, ‘இப்ப எங்க போறீங்க?’ன்னு யாரவது சப்தம் கேட்டு, எழுந்து வந்து கேட்டால் என்ன செய்வது?

ஒன்றும் ஓடவில்லை! எதுக்கும் சதாவை எழுப்பிக் கூட கூட்டிக் கொண்டு போகலாம். காரை, எடுத்துப்போனவர்கள் கும்பலாய் இருந்தால்? இவன் இருந்தால், கொஞ்சம் உதவியாய் இருக்குமே?என்று எண்ணிக்கொண்டு, அவனை எழுப்பி, உதட்டில் கைவைத்து ‘வாயை மூடச் சொல்லி’, ‘உஸ்!’ சைகைபண்ணி, அவனோடு அரைக் கிலோமீட்டர் போனால்…

இதையும் படியுங்கள்:
சிறுகதை; கேட்டாளே ஒரு கேள்வி..!
humanity short story

அஞ்சு முக்குக்கு முன்னாடியே ரோடு ஓரப் புளியமரத்தில் அந்தப் புது கார் மோதி முன் கதவு வாயைப் பிளந்திருக்க, வாசல் வழியே தலை நீட்டிக் கிடந்தான் ஓட்டிப்போனவன்! டூவீலரை நிறுத்திவிட்டு, இறங்கிப்போய் அவனைப் பார்க்க, சின்னச் சின்னக் காயங்கள்தான் அடிபட்ட வேதனையில் முனகிக் கொண்டிருந்தான்.

மனுஷத் தன்மைனு ஒண்ணு இருக்கே? அடிபட்டவனை கார் எடுத்துப் போனதற்காக அடிப்பது, செத்த பாம்பை அடித்த மாதிரி ஆகாதா? முதலுதவிக்கு அருகிலுள்ள ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப் போக நினைத்து அவனைத் தோள்கொடுத்துத் தூக்க…

‘சார்.. எ… என் … என்னை மன்னிச்சுடுங்க…!’ என்று சொல்லிக் கதறி அழுதான். கால்களில் விழப்போனான்.

‘அட, அதெல்லாம் இருக்கட்டும். ஒரு ‘டிடி’ போட்டுட்டு., டாக்கர்ட செக் பண்ணிக்கலாம் வா!’ கூப்பிட, அவன் சொன்ன பதில்தான் ஆச்சரியம்!

‘வேண்டாம்.. சார்..! வேண்டாம்..! என்னைப் போலீஸ்லெலாம் மாட்டிவிட்டுடாதீங்க! புண்ணியமாப் போகட்டும்! உங்க கார்தான் எனக்குப் புத்தி கொடுத்தது! இனி, நான் திருட மாட்டேன்!’ என்று கைகூப்பினான்.

குடிகாரனும், திருடனும் ’இனி மாட்டேன்!' னு சொல்வதை நம்ப முடியாது போல! "சரி சரி! இனி திருட மாட்டேன். கார் காப்பாத்துச்சுன்னு சொல்றயே எப்படி?" கேசவ் கேட்க,

"சார், உங்க கார்ல இருக்கிற ‘ஏர்பேக்’ கார் சொந்தக்காரரான உங்களைக் காப்பாத்தத்தானே? ஆனால், பாருங்க அது எத்தனை பெருதன்மையான மனசோட, திருடுன என்னையே மரத்தில் மோதினபோதும் ஓபனாகி எனக்கு பெரிசாய் அடிபடாம காப்பாத்திருக்கு? ‘மனசிருக்கணும்., மனசிருக்கணும்!’ பச்சைப் புள்ளையாட்டம்னு.. யாரோ எழுதினதன் மகிமை இப்ப புரியுது…சார்!" (humanity short story) என்றான் முணங்கலின் ஊடே!

இவ்வளவு சொன்னதுக்குப் பின்னால், அவனை போலீஸில் ஒப்படைக்க வேண்டாம் என்றான் சதா.

'ஏண்டான்னு?' கேட்க,

'புத்தியிருக்கணும் புத்தியிருக்கணும் கத்தி மொனையாட்டம்., அதை வச்சுப் பொழைக்கணும் வச்சு பொழைக்கணும் சொத்து சுகமாட்டம்'னு அவன் வரிகளைத் தொடர்ந்து சொல்ல, "இந்த இன்சிடெண்ட்டுக்குப் பிறகு அவன் திருடாம இருந்தா சரி!" என்று தோன்றியது.

இதையும் படியுங்கள்:
சிறுகதை; மாற மாட்டார்கள்!
humanity short story

மனசில்.. 'சீக்கிரம் டிடி இஞ்செக்ஷன் போடக் கூட்டீட்டுப் போ!'னு எதோ குரல் கொடுக்க, டூவீலரில் அவனை உக்கார வைத்து சதாவைப் போகச்சொல்லிவிட்டு, காரை டிங்கரிங் சதீஷிடம் போன் பண்ணி எடுத்துப் போகச் சொன்னான் கேசவ். அதிகமாய் அடிகள் இல்லை என்பதால், அப்புறமா போலீஸுக்குச் சொல்லிக்கலாம்னு முடிவு பண்ணினான் கேசவ். வண்டி கிடைத்த நிம்மதி அவனுக்கு!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com