ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26 ஆம் நாளன்று, 'பன்னாட்டு போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோதக் கடத்தலைத் தடுக்கும் நாள்' (International Day against Drug Abuse and Illicit Trafficking) கடைப்பிடிக்கப்படுகிறது.
உலகம் முழுவதும் போதைப்பொருள் கடத்தல், விற்பனை இன்று மிகப்பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. போதைப்பொருள் வணிகம் எப்போதும் விவாதத்திற்குரியதாகவே இருந்து வருகிறது. போதைப்பொருள் தொடர்பான முதல் பன்னாட்டு மாநாடு 1909 ஆம் ஆண்டு ஷாங்காயில் நடைபெற்றது. படிப்படியாக, போதைப்பொருள் உற்பத்தி, கடத்தல் மற்றும் முறை தவறியப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த ஒரு பலதரப்பு அமைப்பு உருவாக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்பில் 1961, 1971 மற்றும் 1988 என்று மூன்று ஆண்டுகளில் நடைபெற்ற கூட்டங்களில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு மரபுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
1987 ஆம் ஆண்டு டிசம்பர் 7 ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தின் மூலம், போதைப்பொருள் முறை தவறிய பயன்பாடு மற்றும் சட்டவிரோதக் கடத்தலுக்கு எதிரான பன்னாட்டு நாளினைக் கடைப்பிடிக்க ஐக்கிய நாடுகள் சபை முடிவு செய்தது. அந்தவகையில் போதைப்பொருள் முறைதவறிய பயன்பாடில்லாத ஒரு பன்னாட்டுச் சமூகத்தின் இலக்கைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கை மற்றும் ஒத்துழைப்பைத் தூண்டுவதற்காக, 1988 ஆம் ஆண்டு முதல் இந்த நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
ஐக்கிய நாடுகள் அவையின் போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான அலுவலகத்தால் வெளியிடப்பெற்ற போதைப்பொருள் அறிக்கை 2024-ல், உலகளவில் கிட்டத்தட்ட 300 மில்லியன் போதைப்பொருள் பயனர்கள் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினை, போதைப்பொருள் பயன்பாட்டுக் கோளாறுகள் உள்ள தனி நபர்கள் முதல் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களால் பாதிக்கப்பட்ட சமூகங்கள் வரை பரவியுள்ளது.
போதைப் பொருள் பிரச்சினை, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம், ஊழல், பொருளாதாரக் குற்றம் மற்றும் பயங்கரவாதத்துடன் ஆழமாக இணைக்கப்பட்டுள்ளது. இந்தச் சவாலை திறம்பட எதிர்கொள்ள, தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு முன்னுரிமை அளிக்கும் அறிவியல் அடிப்படையிலான, சான்றுகள் சார்ந்த அணுகுமுறையை ஏற்றுக்கொள்வது மிகவும் முக்கியம் என்றும் குறிப்பிடுகிறது.
சட்டப்பூர்வ மருந்துகள் நோயிலிருந்து மீள்வதற்கு உதவுகின்றன. ஆனால், அவை முறை தவறிய பயன்பாடுகளால் சட்டவிரோத மருந்துகள் மிகவும் தீங்கு விளைவிக்கும் என்று கருதப்படுகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் மாநாடுகளின் கீழ் பன்னாட்டுச் சட்டங்கள், அவற்றின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்துகின்றன. இதனால் அவற்றை வைத்திருப்பது, பயன்படுத்துவது அல்லது விற்பனை செய்வது சட்டவிரோதமானது.
சட்டவிரோத மருந்துகள் பெரும்பாலும் பல்வேறு உள்ளூர்ப் பெயர்களைக் கொண்டுள்ளன. அவை, ஒவ்வொரு பகுதிக்குமேற்ப மாறுபடலாம் மற்றும் காலப்போக்கில் மாறலாம். மிகவும் பொதுவான சட்டவிரோத மருந்துகளாக, கஞ்சா, கோகோயின், ஹெராயின், எல்எஸ்டி (டி-லைசெர்ஜிக் அமிலம் டைஎதிலமைடு) மற்றும் மெத்தம்பேட்டமைன் போன்றவை இருக்கின்றன.
நைடசீன்கள் போன்ற அதிக சக்தி வாய்ந்த ஓபியாய்டுகள் உட்பட செயற்கை மருந்துகளின் அதிகரிப்பு ஒரு புதிய மற்றும் ஆபத்தான சவாலை முன்வைக்கிறது. இந்தப் பொருட்கள் அதிகப்படியான இறப்புகளுக்கு வழி வகுக்கின்றன மற்றும் ஏற்கனவேப் பலவீனமான சுகாதார அமைப்புகளில் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. சட்டவிரோதப் போதைப்பொருள் வர்த்தகம் மனிதக் கடத்தல், சட்டவிரோதச் சுரங்கம் மற்றும் சுற்றுச்சூழல் அழிவு உள்ளிட்ட பிற குற்றங்களுடன் ஆழமாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட குற்றங்கள் அனைத்தும் வறுமை, சுரண்டல், நிறுவன பலவீனம் மற்றும் போதைப் பழக்கத்தை வளர்க்கும் ஒரு தீய சுழற்சியின் ஒரு பகுதியாகும்.
போதைப்பொருள் கடத்தலை நிறுத்துவதற்கு விநியோகம் மற்றும் தேவையை நிவர்த்தி செய்வதற்கும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் குழுக்கள் பாதிப்புகளைப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கும் நீண்டகால ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவைப்படுகிறது. இந்த 2025 ஆண்டு உலக போதைப்பொருள் நாளிற்கான கருத்துருவாக, ”ஆதாரம் தெளிவாக உள்ளது: தடுப்பில் முதலீடு செய்யுங்கள். சுழற்சியை உடைக்கவும்” (The evidence is clear: invest in prevention. Break the cycle) என்ற கருத்துரு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கருத்துரு வழியாக, நீதி, கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் மாற்று வாழ்வாதாரங்கள் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளில் முதலீடு செய்யவும் ஐக்கிய நாடுகள் அவை அழைப்பு விடுக்கிறது.
மனித சமூகத்தைச் சீர்கெடுப்பதில் போதைப்பொருள் பயன்பாடே முதலிடம் வகிக்கிறது. போதைப்பொருள் பயன்பாடு மனித அறிவை மழுங்கச் செய்து, சிந்திக்கும் திறனை அழித்து, குடும்பம் மற்றும் சமூகத்தைத் தவறான பாதையில் கொண்டு போய் விட்டுவிடுகிறது. எனவே, இன்றைய நாளில் அனைவரும் ஒன்றிணைந்து போதைப் பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிரான நல்ல கருத்துகளைப் பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து, அதன் மூலம் போதைப் பொருட்கள் பயன்பாட்டுக்கு எதிரான பெரும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.