
ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிக்கும் போக்குவரத்து மிக இன்றியமையாதது! வான், நீர் மற்றும் நில வழிப் போக்குவரத்து வளர்ந்து வரும் நிலையில், உள் நாட்டுப் போக்குவரத்தில் உயரிய இடம் சாலைப் போக்குவரத்துக்கே!
’பயணங்கள் முடிவதில்லை!’ என்ற நிலைதான் தொடரவேண்டுமேயொழிய, பயணத்தில் வாழ்வே முடிந்து போவது ஏற்றுக் கொள்ளக் கூடியதன்று! விபத்து என்பது ஒரு வாகனத்தால் ஏற்படுத்தப்படுவது! வாகனமும் வாகனமுமோ, வாகனமும் பாதசாரியுமோ, வாகனமும் விலங்குமோ அல்லது வாகனம் பூகோள அமைப்பிலோ அல்லது கட்டப்பட்ட சில கட்டுமானங்களுடன் மோதுவதாலோ ஏற்படுவது!
2008 ல் மட்டும், உலகத்தில் அதிக மக்கள் இறப்புக்குக் காரணமான முக்கியக் காரணிகளில் நான்காவது இடத்தைப் பிடித்தது சாலை விபத்துக்களே!
ஆண்டுதோறும் சுமார் 13 லட்சம் பேர் இறக்கவும், 2 கோடி முதல் 5 கோடி பேர் காயங்களடையவும், அதன் மூலம் ஊனமுற்றவர்களாகவும் ஆக வழி வகுப்பது இந்த சாலை விபத்துக்களே! அது மட்டுமல்ல!
15 லிருந்து 29 வயதுடைய இளவயதுக்காரர்களின் இறப்புக்கு சாலை விபத்துக்கள் காரணமாகி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒன்றிலிருந்து மூன்று விழுக்காடு குறைவதற்கும் காரணமாகின்றன! இவற்றைக் கருத்தில் கொண்டுதான், சாலைப் பாதுகாப்பை மையமாகக்கொண்டு ஐக்கிய நாடுகள் சபை, 2011-2020 க்கான பத்தாண்டு திட்டத்தின் முக்கியக் கருப்பொருளாக ‘ஐம்பது லட்சம் உயிர்களைக் காப்பாற்றுவோம்!’ என்று அறிவித்தது!
இருநூற்றுக்கும் மேற்பட்ட உலக நாடுகளில், சாலைப் போக்குவரத்தினால் அதிக மனித உயிர்களை இழக்கும் சில நாடுகளில், நமது இந்திய நாடும் ஒன்று என்பது வருத்தந்தரும் ஒரு செய்தியாகும்! ஆண்டிற்கு, சராசரியாக 1.5 லட்சம் இன்னுயிர்களை இழந்து வருகிறோமென்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன! விபத்துக்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் குறைந்து வந்தாலும், விபத்தால் இறப்போர் எண்ணிக்கையில், எதிர்பார்க்கும் மாற்றங்கள் இன்னும் ஏற்படவில்லை!
இந்தியாவில், மக்கட்தொகையையும்,பொருளாதார வளர்ச்சியை விடவும் அதிக வேகமாக மோட்டார் வாகனங்களின் வளர்ச்சி கூடி வருவதும், அதற்கேற்றாற் போன்று சாலை வசதிகள் மேம்படுத்தப் படாததுமே விபத்துக்களுக்கு மிகமுக்கியக் காரணம்! உலகச் சுகாதார நிறுவனம் (WHO), இந்தியாவில் ஏற்படும் மொத்த உயிரிழப்பில், சாலை விபத்துகள் மூலம் ஏற்படும் உயிரிழப்பு ஆறாவது முக்கிய இடத்தை வகிப்பதாகக் கூறியுள்ளது.
இந்திய அளவில், 2015 ஆம் ஆண்டு 5 லட்சத்து 10423 என்ற விபத்துகளின் எண்ணிக்கை, 2016 ல் 4 லட்சத்து 80652 ஆகவும், 2017 ல் 4 லட்சத்து 64910 ஆகவும் குறைந்து வந்தாலும், 2018 ஆம் ஆண்டில் விபத்து காரணமாக இறந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 49 ஆயிரம் என்கிறது ஒரு புள்ளி விபரம்! 2023 ல் ஒவ்வொரு நாளும் சராசரியாக 1317 விபத்துக்களும், 474 இறப்புகளும் நிகழ்ந்துள்ளனவாம். அதாவது ஒவ்வொரு மணி நேரமும், 55 விபத்துக்கள் மற்றும் 20 சாவுகள் நிகழ்கின்றனவாம்.
தமிழ் நாட்டின் நிலை: இந்தியாவில் அதிக விபத்துக்கள் நடைபெறும் மாநிலங்களுள் நமது மாநிலமே முதலிடம் வகிக்கிறது! இந்தியாவில் நடைபெறும் சாலை விபத்துக்களில் 15 விழுக்காடு தமிழகத்தில் நடைபெறுகிது! விபத்துக்கள் அதிகம் நடந்தாலும், அதிக உயிரிழப்பு ஏற்படும் மாநிலமாக உத்தரப் பிரதேசம் உள்ளது!இறப்பவர்களில் பெரும்பாலானோர் 18-60 வயதிற்கிடைப்பட்ட உழைக்கும் வயதினர் என்பது கூடுதல் சோகத்திற்கு வழி வகுக்கிறது! இதோடு நில்லாது, தீவிரக் காயங்களும், சிறு காயங்களும் அடைவோர் பல்லாயிரக் கணக்கானோர்!
விபத்தும், மோட்டார் வகைகளும்: மாநில போக்குவரத்துத்துறை, 2013 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மொத்தமாக 66 ஆயிரத்து 238 சாலை விபத்துக்கள் ஏற்பட்டதாகக் கூறி, வாகன வகை வாரியாகவும் விபரங்களைத் தந்துள்ளது!
டூ வீலர்கள் 36 விழுக்காடு; ’லைட் மோட்டார் வெஹிகிள்’ என்றழைக்கப்படும் கார், ஜீப் போன்றவை 30 விழுக்காடு; லாரிகள் 15 விழுக்காடு; அரசுப் பேருந்துகள் 6 விழுக்காடு; மூன்று சக்கர வாகனங்களும் மற்றவையும் 13 விழுக்காடு! இந்த விபரப்படி, மூன்றில் இரண்டு பங்கு விபத்துக்கள், இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் கார், ஜீப் போன்றவற்றால்தான்!
விபத்தும், சாலை வகைகளும்: சாலைகளின் தன்மையைப் பொறுத்தும், விபத்துக்களின் எண்ணிக்கை மற்றும் இறப்போர் எண்ணிக்கையில் மாறுபாடுகள் ஏற்படுவதுண்டு! அவ்விதத்தில் பார்க்கையில், முடிவுகள் கீழ்க்கண்டவாறு உள்ளன!
தேசீய நெடுஞ்சாலைகள் 31 விழுக்காடு ; மாநில நெடுஞ்சாலைகள் 32 விழுக்காடு; மாவட்டச் சாலைகள் 26 விழுக்காடு; கிராமச் சாலைகள் 11விழுக்காடு! முன்பே கூறியது போலவே, ஏறக்குறைய மூன்றில் இரு பங்கு விபத்துக்கள், தேசீய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளிலேயே நிகழ்கின்றன!
விபத்துக்கான காரணங்கள்:
1) சாலைகளின் அமைப்பு மற்றும் தன்மை:
இந்தியச் சாலைகளின் தரம் சமீப காலத்தில் உயர்த்தப்பட்டு வந்தாலும், மேலை நாடுகளின் சாலைகளுடன் ஒப்பிடுகையில், நாம் இன்னும் முன்னேற்றம் காண வேண்டியுள்ளது என்பதே உண்மை! திரு வாஜ்பாய் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட தங்க நாற்கர சாலைகள், இந்தியச் சாலை வரலாற்றின் மணி மகுடம்! ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான புதிய வாகனங்கள் சாலைகளுக்கு வருகையில், அவற்றுக்குச் சரியான வழியேற்படுத்தும் வகையில் நமது சாலைகள் இல்லை! பல இடங்களில் அடிக்கடி வளைந்து செல்லும் சாலைகளால் எரிபொருளும், கால விரயமும் ஏற்படுவதுடன், எதிர்பாரா விபத்துக்களும் ஏற்படுகின்றன! தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையைப் போல!
நமது நகர்ப்புறச் சாலைகளில் உள்ள சாக்கடைத் திறப்புகள் (man holes) பெரும்பாலும் ஒன்று மேடாக உள்ளன அல்லது பள்ளமாக உள்ளன! சாலையின் சமதளத்தில் போடக் கூடாதென்றே நமது பொறியாளர்கள் நினைப்பர் போலும்! வேண்டிய இடங்களில் பாலங்களோ, சுரங்க நடைபாதைகளோ அமைப்பதில்லை; அப்படி அமையும் ஒரு சிலவற்றையும் ஒழுங்காகப் பயன்படுத்துவதில்லை! சுரங்க நடைபதைகளில் கடை விரிக்கும் கயவர்களைக் காவல் துறை கண்டு கொள்வதேயில்லை.
இருக்கும் சாலைகளையும் தகுந்த முறையில் பராமரிப்பதில்லை! முன்பெல்லாம், சென்னைச் சாலைகளில் மண் தங்குவதால் வாகனங்கள் செல்லும்போது அது மேலெழும்பி, வாகன ஓட்டிகளுக்குச் சிரமத்தையும், சுற்றுச் சூழலுக்கு இடைஞ்சலையும் ஏற்படுத்துமென்பதால் மண்ணைக் கூட்டிச் சுத்தம் செய்வார்கள். அந்த முறையெல்லாம் விடைபெற்று நீண்ட நாட்களாகி விட்டன!
அமைக்கப்படும் சாலைகளை அரசின் ஸ்பெசிபிகேஷன்படி அமைப்பதில்லை! ஒப்பந்ததாரர்கள், அமைச்சர் வரை கமிஷன் கொடுக்க வேண்டியிருப்பதால் அது சாத்தியமில்லை என்று ஓபனாகவே கூறுகிறார்கள்!
2) வாகனங்களின் தன்மை:
தற்கால வாகனங்கள் நல்ல தரம் கொண்டவையாகவே உள்ளன! ஆனால் நம்மவர்கள் அதன் பணிக்காலம் முடிவுற்ற பின்னருங்கூட அவற்றைப் பயன்படுத்துவதால், அவற்றால் சுற்றுச்சூழல் மாசு படுவதுடன், விபத்துக்கும் வழி வகுக்கின்றன
3) ஓட்டுனரின் திறமை மற்றும் மனநிலை:
நமது ஓட்டுனர்களில் பெரும்பாலானோர் திறமைசாலிகள்தான். ஆனால் ஓட்டுனர் உரிமம் பெறுவதில் பெருவாரியான முறைகேடுகள் நடப்பதும் இங்குதான்.
உரிமம் பெற்றவர்களில் 25 விழுக்காட்டினர், வீட்டில் இருந்தபடியே அதனைப் பெற்றுள்ளார்கள் என்கிறது ஓர் ஆய்வு!
ஓட்டுனர்களின் மனநிலையில் மாற்றம் வர வேண்டுமென்பதே ஆய்வாளர்களின் கருத்து. வெளி நாடுகளில் மோட்டார் வாகனச் சட்டங்களைச் செவ்வனே மதித்து நடக்கும் அதே ஓட்டுனர்கள், நமது சாலைகளில்தான் விதிகளை மீறி, விபத்து ஏற்படக் காரணமாகி விடுகிறார்கள்! குடித்து விட்டு வாகனங்களை இயக்குவதும் நம்நாட்டில்தான் அதிகம்!
4) சாலை விதிகளும் செயல்பாடும்:
எங்கள் துறையின் இயக்குனர் ‘குரங்குகள் நன்றாகத்தான் உள்ளன! குரங்காட்டிகள்தான் சரியில்லை!’ என்று அடிக்கடி கூறுவார்! அதே நிலைதான் இங்கும். சட்டங்களும், விதிகளும் நன்றாகத்தான் உள்ளன! செயல்படுத்தலில்தான் குறைகள் உள்ளன!
5) பருவ நிலை மாற்றங்கள்:
குளிர்ப் பிரதேசங்களைக் கொண்ட ஐரோப்பிய நாடுகளில், கோடை காலத்திற்கென்று தனி டயர்களையும், குளிர் காலத்திற்கென்று பிரத்யேக டயர்களையும் தங்கள் வாகனங்களில் பொருத்திக் கொள்கிறார்கள்! நமது நாட்டைப் போன்ற வெப்ப மண்டலங்களில் அது தேவையில்லையென்றாலும் பருவ நிலை மாற்றத்திற்கேற்ப வாகனங்களின் வேகத்தை அட்ஜஸ்ட் செய்துகொள்வது அவசியமாகிறது!
6) அரசுகளின் செயல்பாடு:
நாட்டு மக்களின் ஒட்டு மொத்தக் கட்டுப்பாடும் அரசின் வசம்தான் உள்ளது! ’சாலை விபத்துக்களில் தமிழ்நாடு முதன்மை பெறுகிறது!’ என்ற செய்தி வந்ததுமே அரசு உரியவர்களை அழைத்து இது குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தியிருக்க வேண்டும். விபத்துக்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருக்கவேண்டும். தமிழ் நாட்டில் அதிகமாக லஞ்சம் விளையாடும் இடத்தில் முதன்மை பெறுவது, ஆர்டிஓ என்றழைக்கப்படும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள்தான். ’தரகர்களின் சாம்ராஜ்யம்’ என்று கூட இவ்வலுவகங்களை அழைக்கலாம். ஏனெனில் இங்கு தரகர்களின் உதவியுடன் எதையும் எளிதாகச் செய்து கொள்ளலாம்!
சரி! விபத்துக்களைக் குறைக்க என்னதான் செய்ய வேண்டும்?
அரசு, ஓட்டு அரசியல் நடத்தாமல், உண்மையிலேயே மக்கள் நலங்காக்க முன்வர வேண்டும்!
உயர்நீதி மன்றம் ஹெல்மெட் அணியாதவர்கள் மீது கண்டிப்பு நடவடிக்கை எடுக்க ஆணையிட்டும், தேர்தலைக் கருத்தில் கொண்டு, காவல் துறைக்கு 'பார்த்து நடந்து கொள்ளுமாறு' வாய்மொழி உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் கசிகின்றன! இந்நிலை மாற வேண்டும்!
காவல்துறை பாரபட்சம் காட்டாமல், விதியை மீறுவோர் மீது அதிக பட்ச தண்டனை வழங்க முன்வர வேண்டும்!
கடந்த பத்தாண்டுகளில் ஆர்.டி.ஓ-வாகப் பணியாற்றி வருபவர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களின் வருமானங்களை உரிய விதத்தில் ஆய்வு செய்து, குறுக்கு வழியில் சேர்க்கப்பட்டிருப்பின் அவற்றை அரசு பறிமுதல் செய்ய வேண்டும்!
சாலைகளில் ஏற்படும் குறைகளுக்கு, உரிய ஒப்பந்ததாரர்களையும், பொறியாளர்களையும் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும்!
சாலையின் எந்த இடத்திலும், மேன் ஹோல்கள் மேடாகவோ, பள்ளமாகவோ அமையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்!
சிக்னல்களை மீறுவோர் மீது கடுந்தண்டனை விதிக்க வேண்டும்!
எல்லாவற்றுக்கும் மேலாக, ஓட்டுனர்கள் சட்ட விதிகளை மதித்து நடப்பதுடன், பொறுமை, நிதானம் இவற்றைக் கடைப்பிடிக்க, ஸ்டீரிங்கைப் பிடிக்கும் ஒவ்வொரு நாளும், மனதுக்குள் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்!
இவ்வாறெல்லாம் செய்வதன் மூலம், சாலை விபத்துச் சாவுகளைத் தடுக்கலாம்! அற்பாயுளில் எந்த மனிதரும், சாலை விபத்துக்கள் மூலம் இறப்பதேயில்லையென்ற உயர்நிலையை உருவாக்க, ஒவ்வொருவரும் கங்கணம் கட்டிக்கொண்டு முன்வர வேண்டும்!