ஜெர்சி விலங்கியல் பூங்கா முதல் சென்னை முதலைப்பண்ணை வரை: அழியும் இனங்களை காக்கும் போராட்டம்!

ஜெர்சி முதல் சென்னை வரை: வனவிலங்கு பாதுகாப்பின் அவசியத்தை உணர்த்தும் ஒரு பதிவு.
Wildlife Conservation - வனவிலங்கு பாதுகாப்பு
Wildlife Conservation - வனவிலங்கு பாதுகாப்புAI Image
Updated on
Kalki Strip
Kalki Strip

-Article written in English by Zai Whitaker

-Tamil Translation by Priyanka R

எனக்கு சிறுவயதிலிருந்தே வனஉயிரினங்கள் மீதும் விலங்கியல் பூங்காக்கள் மீதும் மிகுந்த ஆர்வம் உண்டு. அது தொடர்பான புத்தகங்களை, குறிப்பாக இயற்கை ஆர்வலர் மற்றும் எழுத்தாளரான ஜெரால்டு டுரெல் (Gerald Durrell) புத்தகங்களை விரும்பி படிப்பதுண்டு. பல வருடங்களுக்கு முன்பு, ஜெரால்டு டுரெல் அவர்களின் ஜெர்சி விலங்கியல் பூங்காவில், பாலூட்டி விலங்குகளின் பராமரிப்பாளராக பணிபுரிந்துவந்த குவென்டின் பிளாக்சாம் இந்தியாவிற்கு வருகை தந்திருந்தார். அவர் மும்பையிலுள்ள அந்தேரியில் எங்களுடன் சில காலம் தங்கி இருந்தார்.

நவீன சூழலியல் சவால்களுக்கு மத்தியில் வனவிலங்கு பாதுகாப்பு ஏன் அவசியம்?

ஜெரால்டு டுரெல் மற்றும் அவரது குழுவினர் உலகெங்கிலும் அழிந்து வரும் நிலையிலுள்ள உயிரினங்களைக் கொண்டு வனஉயிரின பாதுகாப்புக் களஞ்சியம் ஒன்றை உருவாக்கிக் கொண்டிருந்தனர். அதன் ஓர் அங்கமாக, 300க்கும் குறைவான எண்ணிக்கையில் இருந்த இந்திய கிர் சிங்கங்களை, குஜராத் ஜூனாகத்திலிருந்து ஜெர்சி விலங்கியல் பூங்காவிற்கு எடுத்துச்செல்வதே அவரது வருகையின் நோக்கமாக இருந்தது.

ஜெரால்டு டுரெல் குறித்து குவென்டினிடம் தொடர் கேள்விகளை கேட்டுக்கொண்டே இருந்ததாலும் எனது மிகுந்த ஆர்வத்தாலும் டுரெல், குவென்டினுக்கு கொடுத்திருந்த அருமையான பருத்தியாலான சட்டை ஒன்றை அவர் எனக்கு பரிசளித்திருந்தார். அச்சட்டை, அளவில் என்னைவிட பத்துமடங்கு பெரியதாக இருந்தாலும் அதை பொக்கிஷமாக வைத்திருந்தேன்.

ஜெர்சி விலங்கியல் பூங்காவிற்கு எடுத்துச்செல்லப்பட்ட அந்த ஆண் சிங்கத்திற்கும் பெண் சிங்கத்திற்கும் என் அப்பாவின் பெயரும் என் பெயரும் சூட்டப்பட்டிருந்தது. சில நாட்கள் கழித்து, ஜாஃபர் மிக சாதுவான சிங்கம் என்றும், என் பெயர் கொண்டிருந்த சிங்கம் சமாளிக்கவே முடியாத ஒன்றாக இருப்பதாகவும் குவென்டினிடம் இருந்து பல தகவல்கள் எங்களுக்கு கிடைத்தன.

இதையும் படியுங்கள்:
வெளிநாடு வாழ் இந்தியர்கள் கவனத்திற்கு! OCI கார்டு பற்றி நீங்கள் அறியாத உண்மைகள்!
Wildlife Conservation - வனவிலங்கு பாதுகாப்பு

ஜூனாகத்திலிருந்து இங்கிலாந்திற்கு அனுப்பப்படுவதற்கு முன் அவ்விரு சிங்கங்களும், மும்பையிலுள்ள விக்டோரியா கார்டன் விலங்ககத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தன. பொதுவாக வனத்திலிருந்தோ அல்லது ஒரு விலங்கியல் பூங்காவிலிருந்தோ மற்றொரு பகுதிக்கு விலங்குகளை இடமாற்றம் செய்யும்போது, அவற்றிலிருந்து மற்ற விலங்குகளுக்கு தொற்றுநோய் பரவாமலிருக்க சிலநாட்களுக்கு இவ்வாறு தனிமைப்படுத்தி வைப்பது வழக்கம்.

வனவிலங்கு பாதுகாப்பு முயற்சிகளில் விலங்கியல் பூங்காக்களின் பங்கு:

இக்காலகட்டத்தில் குவென்டின் எங்களுடன் தங்கி இருந்ததால் அவருடன் உரையாடுவதற்கும், குறிப்பாக ஜெர்சி விலங்கியல் பூங்காவின் பல்வேறு பாதுகாப்புத் திட்டங்கள் குறித்து அறிந்துகொள்வதற்கும் அது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது.

பின்னாட்களில், டுரெல் வனவிலங்கு பாதுகாப்பு அறக்கட்டளை (Durrell Wildlife Conservation Trust), கலபகோஸ் தேசிய பூங்காவிலுள்ள ப்ஃளோரியானா தீவை மீட்டுருவாக்கம் செய்தது, மற்றும் வனஉயிரினங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த அறிமுகப் படுத்தப்பட்ட வேட்டையாடி விலங்குகளை அங்கிருந்து அகற்றியது உட்பட மகத்தான பல செயல்கள் பற்றி அறிய நேர்ந்தது.

Wildlife Conservation - வனவிலங்கு பாதுகாப்பு
Wildlife Conservation - வனவிலங்கு பாதுகாப்பு

வனவிலங்கு பாதுகாப்பு முயற்சிகளில் விலங்கியல் பூங்காக்களின் பங்கு அளப்பரியது. அழிவின் விளிம்பு நிலையிலிருந்து பல்வேறு உயிரினங்கள் மீட்கப் பட்டுள்ளன. ஜோகன்னஸ்பர்க் விலங்கியல் பூங்காவானது, அருகிவரும் பறவையினமான கேப் பாறு (Cape vulture) இனங்களை இனப்பெருக்கம் செய்து, அவற்றை வனங்களில் மீள அறிமுகப்படுத்தும் முயற்சிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

நம் இந்தியாவிலும் கூட பல்வேறு விலங்கியல் பூங்காக்கள், பனிச்சிறுத்தை, எல்க் மான், ஃபேரின் இலைக்குரங்கு (Phayre’s leaf macaque) போன்ற அருகிவரும் வனஉயிரினங்களை பாதுகாப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இதையும் படியுங்கள்:
'அம்மா, அப்பா பிரிவால் அழும் குழந்தைகள்': உச்ச நீதிமன்றத்தின் மனநலப் பரிசோதனை!
Wildlife Conservation - வனவிலங்கு பாதுகாப்பு

இனக்கலப்பற்ற சயாமிஸ் முதலைகள்

மனித-வனவிலங்கு முரண்பாடு அதிகரித்துவரும் இந்நாட்களில் இவ்வகையான பங்களிப்புகள் மிகவும் முக்கியமானவையாகும். அழிவின் விளிம்பு நிலையிலுள்ள (Critically Endangered) முதலையினமான சயாமிஸ் முதலைகள் சென்னை முதலைப்பண்ணையில் வெற்றிகரமாக காப்பினப்பெருக்கம் செய்யப்பட்டு வருகின்றன. இவை 2008-லிருந்து வருடந்தோறும் இரண்டுமுறை முட்டையிட்டு வருகின்றன.

சயாமிஸ் முதலைகள் கம்போடியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்ற தென்கிழக்கு ஆசியாவின் நன்னீர் பகுதிகளை வாழ்விடமாகக் கொண்டவை. அங்குள்ள வனப்பகுதிகளில், இவற்றின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவருவதால் காப்பகங்களில் அல்லது முதலைப் பண்ணைகளில் இனப்பெருக்கம் செய்து, அவற்றை மீண்டும் வனங்களில் விடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இருப்பினும், பெரும்பாலான இடங்களில், சயாமிஸ் முதலைகள், பிறவகை முதலையினங்களுடன் செயற்கை இனக்கலப்பு செய்யப்படுவதால் இம்முயற்சிகளை செயல்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன.

சென்னை முதலைப்பண்ணையில் செய்யப்பட DNA பகுப்பாய்வுகள் இங்குள்ள சயாமிஸ் முதலைகள் இனக்கலப்பற்றவை என்பதை உறுதிப்படுத்தியது. இம்முதலைகளின் தூய சந்ததிகள் பிற்காலங்களில் வனப்பகுதிகளில் விடுவதற்கு பயன்படலாம்.

இதையும் படியுங்கள்:
வெளிநாடு வாழ் இந்தியர்கள் கவனத்திற்கு! ஆரோக்கியமான இந்திய உணவு முறையை பின்பற்றுவது எப்படி?
Wildlife Conservation - வனவிலங்கு பாதுகாப்பு

மத்திய உயிரியல் பூங்கா ஆணையம்

இதைப்போன்று பல்வேறு வனவிலங்கு பாதுகாப்பு முயற்சிகளில் விலங்கியல் பூங்காக்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. இந்தியாவிலுள்ள அனைத்து விலங்கியல் பூங்காக்களையும் நிர்வகித்து அவற்றுக்கு வழிகாட்டுதல்களை வழங்கும் தலைமை அமைப்பு மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் (Central Zoo Authority) ஆகும்.

சர்வதேச விலங்கியல் பூங்காக்களிடையேயான முக்கியத்துவம் வாய்ந்த வனவிலங்கு பரிமாற்றங்களையும் இவ்வமைப்பு ஆதரிக்கிறது.

மேலும், அனைத்து பூங்காக்களிலும் வனவிலங்குகள், அவற்றின் வாழ்விடங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பார்வையாளர்களுக்கும், மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு, ஒரு கல்வியாளர் அவசியம் இருக்கவேண்டுமென வலியுறுத்துகிறது. CZA-வின் இம்முயற்சிகள், இந்தியாவிலுள்ள விலங்கியல் பூங்காக்களுக்கான தொலைநோக்கு பார்வையைச் சுட்டிக்காட்டுகிறது.

அதுமட்டுமன்றி பூங்காக்கள், மக்கள் ஓய்வெடுத்து இளைப்பாறக்கூடிய வெகுசில புகலிடங்களில் முக்கியமான ஒன்றாக உள்ளது. மேலும், அவை தமது வளாகங்களில் கணிசமான அளவு பசுமையான இடங்களை பராமரிப்பது மிகவும் அவசியமான தொன்றாகும்.

இயற்கை என்னும் அருமருந்து

இயற்கைக்கும் மனிதர்களுக்குமான பிணைப்பைப் பற்றி கவிஞர்கள் காலங்காலமாக பேசிவருகிறார்கள். வால்ட் விட்மன் தனக்கு ஏற்பட்ட பக்கவாதத்திலிருந்து தன்னை மீளச் செய்தது, வெளியெங்கிலும் நிரம்பியுள்ள காற்றும் மரங்களும் நட்சத்திரங்களும்தான் என்கிறார். தன் வாழ்வின் கடினமான தருணங்களை கீட்ஸ் இயற்கையுடன் செலவழிப்பதையே விரும்பினார். நானும் எனது தங்கை ஷாமாவின் மரணத்திலிருந்து மீண்டு வருவதற்கு இயற்கை எவ்வாறு உதவியது என்பதை “Chicken Soup for the Indian Spiritual Soul” புத்தகத்தில் விரிவாக குறிப்பிட்டுள்ளேன்.

இதையும் படியுங்கள்:
Amazon Kindle முதல் ISBN வரை: புத்தக வெளியீட்டின் ரகசியங்கள்...
Wildlife Conservation - வனவிலங்கு பாதுகாப்பு

சமீபத்தில் மறைந்த Dr. ஜேன் குடால் (Dr.Jane Goodall) அவர்கள், ஒரு நேர்காணலின்போது, விலங்கியல் பூங்காக்களின்  முக்கியத்துவம் குறித்து பேசியிருந்தார். அதில் டால்பின் மற்றும் யானை போன்ற சில விலங்குகள், அவற்றை முறையாக பராமரிப்பதற்கு பரந்த இடங்கள் இருந்தால் மட்டுமே, அவற்றை விலங்ககங்களில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்பதை குறிப்பிட்டுருந்தார்.

Wildlife Conservation - வனவிலங்கு பாதுகாப்பு
Dr.Jane Goodall

“நம் குழந்தைகளுக்கு வனவிலங்குகள் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தொலைக்காட்சி நிகழ்ச்சியிலோ அல்லது திரைப்படங்களிலோ விலங்குகளைக் கண்டு இரசிப்பதைவிட, அதன் இருப்பிடத்தில், மிக அருகில், நேரில் அவற்றின் கண்களைக் கண்டு இரசிக்கும் அந்த அனுபவத்திற்கு வேறெதுவும் ஈடாகாது” என்பதே அந்த நேர்காணலின் முக்கிய சாராம்சம் ஆகும்.

நம் காலத்தில் வாழ்ந்த ஆகச்சிறந்த இயற்கை ஆர்வலர்களில் ஒருவரின் வார்த்தைகளைக் கொண்டுமுடிப்பதைவிட சிறந்த குறிப்பு வேறென்ன இருக்கமுடியும்?

இந்தத் தொகுப்பை வாசிப்பதன் மூலம், விலங்கினக் காப்பகங்கள் வெறும் பொழுதுபோக்கு இடங்கள் அல்ல, அவை பூமியின் பல்லுயிர்ப் பெருக்கத்தைக் காக்கும் இறுதிப் புகலிடங்கள் என்பதை உணர்வீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com