சிறுகதை; எனக்கென்று என்ன தந்தாய் அம்மா...

Tamil short stories
Short Story
Published on

-அனுராதா ரமணன்

கூடம் வெறிச்சிட்டிருந்தது. அம்மா படுத்திருந்த சுவர் மூலையில் அகல் விளக்கு ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. துக்கத்துக்கு வந்திருந்தவர்கள் எல்லாரும் சொல்லிக் கொள்ளாமல் ஒரு பக்கம் விடைபெற்றுக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் அம்மாவைத் தெரிந்தவர்கள் யார் யாரோ வந்து துக்கம் விசாரித்துக்கொண்டிருந்தார்கள்.

லலிதா எதிலும் பட்டுக்கொள்ளாமல் பின்கட்டு வாசற் படியில் தலைவைத்துப் படுத்திருந்தாள்.

"மகாலட்சுமி மாதிரி உங்க அம்மா... யாருக்கும் இல்லையின்னு சொன்னதே இல்லீங்க... எந்த நேரத்துல வந்தாலும், தயிர் சாதமும், மாவடுவும் எடுத்துட்டு வந்து வயிறு குளிரப் போடுவாங்க... போயிட்டாங்கன்னு கேள்விப்பட்டவுடனே 'பக்'குனு ஆயிடுச்சுங்க..."

"இன்னிக்கு என் பிள்ளை இன்ஜினீயரா இருக்கான்னா அதுக்குக் காரணம் உங்க அம்மாதான்... அவனோட படிப்புச் செலவு முழுக்க உங்க அம்மாதான் கவனிச்சுட்டது... எனக்கு இன்னொரு பிள்ளை இருந்தாச் செய்ய மாட்டேன்னான்னு சொல்லுவா... மகராசி..."

"இன்னும் இந்த சேதி என் பொண்ணுக்குத் தெரியாதுங்கறேன். பம்பாய்லேருந்து ஒவ்வொரு கடுதாசியிலேயும் மாடி வீட்டம்மா சௌக்கியமா... அவருக்கு என் நமஸ்காரத்தைச் சொல்லுன்னு மறக்காம குழந்தை... எழுதிண்டிருக்கா... மாடி வீட்டம்மாவை இனிமே பார்க்க முடியாதுன்னு நான் எழுதினா கதறிடுவாளாக்கும்...”

வந்தவர்கள் அம்மாவுக்கு செலுத்தும் புகழ் அஞ்சலியைக் கேட்பதற்காகவே லலிதாவின் அண்ணன் தம்பிகளும், அக்கா, தங்கைகளும் கூடத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்.

அழுகை வருகிறதோ இல்லையோ, மோட்டு வளையையாவது வெறித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள். லலிதா மட்டும் இவர்களுடன் சேரவில்லை.

'எதற்காகச் சேர வேண்டும்? தானம் பண்ணினது போக, மிச்சமிருந்ததை எல்லாம் அம்மா, இவர்களுக்குத்தானே கொடுத்தாள்? எனக்கா கொடுத்தாள்...'

இந்த நினைப்பே அருவருக்கத்தக்கதுதான் என்றாலும், லலிதாவினால் இப்படி நினைக்காமல் இருக்க முடியவில்லை.

பெற்ற தாயாரிடம் கணக்குப் பார்ப்பது மகா பாவம்தான் என்றாலும், என்னவோ தான் மட்டும் ஏமாந்த சோணகிரியாகி விட்டோமோ என்கிற தன்னிரக்கம் லலிதாவை அலைக்கழித்தது.

இதையும் படியுங்கள்:
'சர்வேயர்' விண்கலத்தில் பயணித்த தமிழ் ஒலிச் சுருள்!
Tamil short stories

பத்து நாள் இருந்து, அம்மாவின் ஆன்மாவைக் கடைத்தேற்ற வேண்டுமே என்பதற்காக இருக்கிறாள். இல்லாவிட்டால் கணவரோடு நேற்றே ரயிலேறி இருப்பாள்.

ஏதோ காரியமாய் உள்ளே வந்த அக்காள் சரயு - லலிதாவின் காதுபடச் சொன்னாள் :

"பால்கார கோவிந்தன் அழறான்... சத்தம் காதுல விழறதா..."

"உம்...உம்..."

"அம்மா போனதுலே அவனுக்குத்தான் நிறைய நஷ்டம். இருக்கோ, இல்லையோ அவன் கேட்டப்ப எல்லாம் அம்பதும். நூறுமா அம்மா கணக்கே இல்லாம வாரி விட்டுட்டிருந்தா. இப்ப எங்கே போய் கேட்பான். அதான் நெஞ்சுலேயும், மாருலேயும் அடிச்சிட்டு அழறான்..."

லலிதா இதற்குப் பதிலேதும் பேசவில்லை.

கோவிந்தன் ஐம்பதும், நூறுமாய் வாங்கினான் என்றால், இந்த சரயு ஐயாயிரமாகவும் பத்தாயிரமாகவும் அம்மாவிடமிருந்து வாங்கிக்கொண்டு போனதில்லையா என்ன?

இத்தனைக்கும் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்றால் லலிதாவுக்குத்தான் கடிதம் வரும்.

'இப்பவும் தங்கள் தாயாருக்கு தேக அசெளக்கியமாக இருக்கிறபடியால், தாங்கள் ஒரு வாரம், பத்து நாள் போல கும்மோணம் வந்து தங்கினால் சிலாக்கியம் என்று நான் நினைக்கிறேன். மாப்பிள்ளைக்கு தனது ஆசீர்வாதத்தைத் தங்கள் தாயார் சொல்லச் சொன்னார்'

- இப்படி அம்மாவின் வீட்டில் குடியிருக்கும் கணக்கு வாத்தியார் சீனுவாசன் ஒரு தபால் கார்டு எழுதிப் போட்டால், அடுத்த ரயிலிலேயே ஓடிவருவது லலிதாதான்.

சரயுவினால் முடியாது. கோபக்காரக் கணவன். நாலைந்து குழந்தைகள். பொழுதுக்கும் குற்றம் கண்டுபிடித்துக் கொண்டே இருக்கும் மாமியார்.

சரயு வந்து விட்டுப் போனாள் என்று அம்மா சொன்னாலே போதும். அம்மாவின் கைக் காப்போ, இரட்டை வடச் சங்கிலியோ பணமாக மாறி, சரயுவின் குடும்பத்துக்குப் போய்ச் சேர்ந்திருக்கும் என்பது அவளுக்குத் தெரியும்...

இருந்தாலும் அம்மாவின் மூளியாகிப் போன தளர்ந்த கரத்தைப் பிடித்துக் கொண்டு, வெகு நேரம் உட்கார்ந்திருப்பாள் அவள். அம்மாவே மெதுவாய் -பஞ்சினால் ஒத்தி எடுத்தாற் போன்ற குரலில் சொல்லுவாள்:

இதையும் படியுங்கள்:
சிறுகதை: புத்தருக்கு போதி மரம்; ரகுவுக்கு பேருந்து நிறுத்தம்!
Tamil short stories

''பாவமடி... பஞ்சானக் குஞ்சுகள்... உன் அத்திம் பேருடைய துர்வாச குணத்துக்கு, போகிற எடமெல்லாம் பகை... ஆறு மாசம் ஒரு உத்தியோகத்துல நிலைச்சிருந்தா பெரிசு... ரோஷப் பட்டுட்டு, வீட்டோட உட்கார்ந்திருந்தா வெங்கலப் பானை என்ன - அட்சய பாத்திரமா..."

"இப்ப நான் உன்னை ஒண்ணுமே கேட்கலையே அம்மா... எதுக்காக இத்தனை நீள விளக்கம்..."

அம்மா, உதடுகள் கோணப் புன்னகைப்பாள். பஞ்சடைந்த கண்களில் கூட அந்த நேரத்தில் கீற்றாய் வெளிச்சம் மின்னலிடும்.

''நீ ஒண்ணும் என்னைக் கேட்டதில்லைதான். ஆனா, நான் சொல்லணுமில்லையா...''

சரயு இப்படி என்றால் - சின்னவள் காயத்ரி அக்காவோடு சண்டை போட்டே பொருட்களைப் பறித்துச் செல்வாள்.

லலிதாவுக்கு இன்றைக்கும் நினைவிருக்கிறது..

கடைக்குட்டியான காயத்ரிக்குப் போட்ட புலி நகம் கோத்த சங்கிலியை சரயு, தனது மூத்த பெண் வயசுக்கு வந்தும் வெறுங் கழுத்தோடு இருக்கிற அவலத்தைச் சொல்லி அம்மாவிடமிருந்து வாங்க முயற்சிக்க, காயத்ரி, லங்கா ராட்சஸி மாதிரி கத்தினது...

"ஆமா... இவ வரிசையாய் பெத்து வச்சிருக்கற பொண் குழந்தைகளைக் காட்டியே ஒவ்வொண்ணா வாங்கிட்டுப் போவா... மத்தவங்க எல்லாரும் வாயில விரலை வச்சிட்டுப் பார்த்துட்டு நிற்கணுமாக்கும்..."

"உனக்குத்தான் ரெண்டும் பையனாச்சே...எதுக்கு சங்கிலி?"

"அது சரி... பாட்டியோட ஆசீர்வாதமா மைனர் செயினாய் போட்டுக்கறான்கள். இதப் பாரு... உனக்குத்தான் அம்மாவோட நகையெல்லாம் சொந்தம்னு நினைக்காதே. நாங்களும் இருக்கோம்."

காயத்ரி 'நாங்களும்' என்று சொன்னதில் லலிதா சேர்த்தியில்லை. இது மாதிரி சண்டை எல்லாம் அவளுக்கு  போடத் தெரியாது என்பதினால் தானோ என்னவோ அவளுக்குக் குழந்தையே இல்லை.

திருமணமாகிப் பத்து வருடங்களாகிறது. இன்று வரையில் ஒருவனும் ஒருத்தியும்தான். அதனால்தான் ஒவ்வொரு முறையும் அம்மா வுக்கு உடம்பு மோசமாகும்போதும் அவளால் வந்து தங்க முடிந்தது.

அவள் கணவன் ரகுவிற்கு மாமியாரிடத்தில் தனி பிரியம்.

"என்ன இருந்தாலும் உங்கம்மா கிரேட்தான் லலிதா... என்னிக்கோ அவங்க பண்ணின தான தருமம்தான் இன்னிக்கும் எண்பது வயசுக்கும் அவங்களைக் காப்பாத்திட்டிருக்கு. பாவம்... அம்மாவுக்கு ரொம்பவும் முடியாமப் போனால்தான் இப்படி லெட்டர் வரும். நான் எப்படியோ சமாளிச்சுப்பேன். நீ போய் இருந்துட்டு வா."

காயத்ரி அடிக்கடி சொல்வது போல லலிதாவுக்கு மாமியார், மாமனார், குழந்தைகள் போன்ற 'பிக்கு பிடுங்கல்' எதுவும் கிடையாது.

லலிதாவும் அம்மாவுக்குச் செய்வதை தன் பாக்கியமாகத்தான் கருதினாள். ஆனாலும் ஒவ் வொரு தடவை வந்து போகும்போதும், அம்மாவிடமிருந்து நாமும் எதையாவது கேட்டு வாங்கிப் போக வேண்டும் என்று நினைப்பாள். கேட்க வாய் வராது. அம்மாவும் தானாகட்டும், அவரவர் பாட்டுக்கு எதையெதையோ எடுத்துக் கொண்டு போகிறார்களே... உனக்கு எதுவும் வேண்டாமா லலிதா' என்று ஒரு பேச்சுக்காகக் கூட கேட்டதில்லை.

லலிதா பெருமூச்செறிந்தாள்.

அம்மாவிடம் பழைய கெம்பு அட்டிகை ஒன்று உண்டு. ஒவ்வொரு கல்லும், கனிந்த மாதுளம் முத்துபோல சுடர் விடும்.. கல்லும் மரட்டிகையைக் கட்டியிருக்கும் நேர்த்தியும்தான் அதிலுள்ள சிறப்பே தவிர – தங்கம் என்று பார்த்தால் நாலு பவுன் தேறாது. உள் எல்லாம் அரக்கு வைத்து...

ஒருமுறை அதை எப்படியாவது அம்மாவைக் கேட்டு வாங்கி விட வேண்டும் என்றே தீர்மானத்துடன் போனாள். அந்தத் தடவை அம்மாவின் நிலைமை கொஞ்சம் மோசமாகவே இருந்ததான்.  அண்ணன் பிரபாகரனும் அவன் பெண்டாட்டியும் வந்திருந்தார்கள். சின்னவன் கோபியும் அவன் மனைவி வசுந்தராவும் இவர்களுக்கு முன்பே வந்து டேரா அடித்திருந்தார்கள்.

அந்த நாலு பவுன் கெம்பு அட்டிகைக்கு ஒரு மௌன யுத்தமே நடந்தது அங்கே.

லலிதா எதிலும் பட்டுக்கொள்ளாமல் அவன் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்தாள்.

குழந்தைகளை எல்லாம் ஒன்று சேரப் பார்த்த உற்சாகத்திலேயே புதுத் தென்பு வந்து எழுந்து உட்கார்ந்த அம்மாவின் மடியில் இந்த கெம்பு அட்டிகையை விட்டெறிந்தான் சின்னவன்.

"ஏம்மா... இன்னிக்கெல்லாம் இருந்தா நாலு பவுன்... என் பெண்டாட்டிக்கு இதைப் போட்டுக்கத் தகுதி இல்லையா... பணம் வேணும்னா சொல்லு... எவ்வளவு மதிப்போ தந்துடறேன். பிரபாவை வேற அட்டிகை வாங்கிக்கச் சொல்லு..."

"அதான் ஏன்னு கேட்கறேன். இத்தனை நாளா கேட்பாரில்லாம கிடந்தது. என் பெண்டாட்டி கேட்கறப்ப, அதுக்கு மார்க்கெட் உசந்துதாக்கும். அவளும் ஒண்ணும் அவளுக்காகக் கேட்கலை. உன் பேத்தி ப்ரியா டான்ஸ் கத்துக்கறா... சிவப்புக் கல் அட்டிகை வேணும்னு ரொம்ப நாளாச் சொல்லிட்டிருந்தா... இந்தத் தடவை வர்றப்ப நானே உன்னை வெட்கத்தை விட்டுக் கேட்கணும்னு இருந்தேன். அதுக்குள்ளே இவன் முந்திட்டான்.."

அம்மா, அப்பொழுதே லலிதாவிடம் பிரோ சாவியைக் கொடுத்து, நகைப் பெட்டியைக் கொண்டு வரச் சொன்னாள். பழைய காலத்து நகைப் பெட்டி... இருந்த நகைகள் எல்லா காணாமல் போய், பொக்கை வாய் கிழவி போல.. அடுக்கடுக்காய் அறைகளும், நீல வெல்வெட்டின் வழுவழுப்புமே பழைய சரித்திரத்தின் ஞாபகார்த்தச் சின்னங்களாய்...

இதையும் படியுங்கள்:
முதியவர்கள் முன் விரியும் டிஜிட்டல் உலகம்!
Tamil short stories

நடுங்கும் விரல்களால் தடவித் தடவி, அதிலிருந்த அட்டிகையை எடுத்து, பெரிய மருமகளின் கையில் வைத்தாள் அம்மா. சின்னவளுக்கு அதற்கு ஈடாக சிவப்புக் கல் ராக்கொடி..

"இதுவும் கெம்புதான். ராக்கொடியை இந்தக் காலத்துல யார் வச்சுக்கறா... கல்லை எடுத்துக் கழுத்துக்கு ஏதாவது பண்ணிப் போட்டுக்கோ..."

அம்மா இப்படிச் சொன்னபோது, சின்னவன் காலியான நகைப்பெட்டியை எடுத்து வைத்துக்கொண்டான்.

"இருக்கட்டும், ஒரு காலத்துல இது நிறைய நகை வச்சிருந்தா உங்க பாட்டியின்னு என் குழந்தைகளுக்குக் காட்டுவேன்.''

அப்பொழுதும் லலிதா, அம்மாவின் தோல் வற்றிய, நரம்பு புடைத்த, பாதங்களைப் பார்த்துக்கொண்டு பேசாமல்தான் உட்கார்ந்திருந்தாள்.

மனசுக்குள் ஆற்றாமை பொங்கிப் பொங்கி வந்தது. இதே ராக்கொடியையும், அட்டிகையையும் அணிந்துகொண்டு, அவள் எத்தனை நவராத்திரி கொலுவிற்கு குங்குமச் சிமிழுடன் அலைந்திருக்கிறாள்?

அப்பொழுதெல்லாம் சரயுவுக்கும். காயத்ரிக்கும் இந்த நகைகளைப் பிடிக்காது கல் வைத்து ஜொலிக்கும் இமிடேஷன்களை மாட்டிக்கொண்டு அலைவார்கள்.

இன்றைக்கு ஒரு க்ஷண நேரத்துக்குள் இவைகளைத் தூக்கிக் கொடுத்த அம்மா, அன்றைக்கு லலிதாவுக்கு இதே நகைகளை அணிவித்து அழகு பார்த்திருக்கிறாள்.

"உன்னோட எலுமிச்சை நிறத்துக்குத்தான் இந்தக் கெம்பு அட்டிகை எடுபடறது..."

இப்படிச் சொல்லிச் சொல்லிப் பூரித்த அம்மாவிற்கு, அவைகளைக் கொடுக்கும் கடைசி நிமிஷத்திலாவது தன் நினைவு வந்திருக்க வேண்டாமோ?

அதெப்படி மறந்து போனாள்...

ம்மாவின் காரியங்கள் நடந்த பத்து நாட்களிலும் லலிதாவினால் எதிலேயும் ஒட்ட முடியவில்லை.

அம்மா தனக்கு எதையுமே தந்திருக்க வேண்டாம். ஏதாவது வேண்டுமா என்று கேட்டிருந்தால் கூடப் போதும்... மனசு குளிர்ந்து போயிருக்கும் என்றே நினைக்கத் தோன்றுகிறது அவளுக்கு.

ஒரு பக்கம் லலிதாவின் சகோதரர்கள் வைதீகக் காரியங்களில் ஈடுபட்டு,  அம்மாவைப் பித்ருக்களோடு சேர்க்க மந்திரங்களையும் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, உள்ளே அவர்களது மனைவிமார்களும், சரயுவும், காயத்ரியும் மிச்சம் மீதியிருந்த அம்மாவின் புராதன சமையல் பாத்திரங்களை உருட்டிக்கொண்டிருப்பதை தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்தாள் லலிதா.

பாத்திரங்களை உருட்டுவது போதாது என்று மாமியாரின் தலையையும் சேர்த்து உருட்டிக்கொண்டிருந்தார்கள் மருமகள்கள்

"கடைசியிலே இந்த வீட்டு மேல இருக்கர கடன் போக ஒண்ணுமே வராதுன்னு சொல்லு..."

"எங்கே... கண்டவன் கேட்டவனுக்கெல்லாம் வாரி விட்டாச்சு. இதுல பொண்கள் வேற... சுத்தமாத் துடைச்சு வச்சிருக்கு. இந்த ஈயச் சொம்பு உனக்கு வேணுமா..

"உங்க மச்சினருக்கு ஈயச்சொம்பு ரசம்னா பிடிக்கும்.  எனக்குத்தான் அது

சரிப் பட்டு வர்றதே இல்லே... மூணு ஈ சொம்பு காஸ்லே வச்சு காணாமலேயே போயிடுத்து. அப்புறம் தேடினா மேடையிலே உருகி உட்கார்ந்திருக்கு..."

"என்னமோ... இவருக்குத் தெரிஞ்சா இதையெல்லாம் எதுக்கு வாரிக் கட்டிட்டு வர்றேயின்னுதான் கத்துவார். பெரியவா ஆசீர்வாதமா இருக்கட்டுமேயின்னுதான்..."

எதிர் அறையில் சரயு, காயத்ரியிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்.

"அம்மாவுக்கு இந்தப் பத்து நாளும் பொண்கள் பிண்டம் போட்டதுக்கு வெள்ளிக் கிண்ணம் வாங்கித் தரணும் இவனுங்க. வீட்டுள் இருக்கற நசுங்கிய சந்தனப் பேளாவைத் தூக்கிக் கடையில போட்டு மூணு குங்குமச்.சிமிழ் மாதிரி கிண்ணம் வாங்கிட்டு வந்திருக்கானுங்க..."

"எல்லாம் பெண்டாட்டி சொல்லிக் கொடுத்திருப்பாளா இருக்கும்..."

"அந்தக் கிண்ணத்தைக்கூட லலிதா என்கிட்டயே கொடுத்துட்டா... அவளுக்கு என்னிக்குமே இதெல்லாம் லட்சியமே இல்லே. அவ பார்க்காத வெள்ளியா, தங்கமா..."

லலிதா குனிந்த தலைநிமிராமல் உட்கார்ந்திருந்தாள். இந்த முறை அவளுடன் அவள் கணவன் ரகுவும் சகலத்தையும் கேட்டுக்கொண்டுதான் இருந்தான்.

"ஏன் லலிதா... அந்தக் கிண்ணத்தையாவது அம்மா நினைவா வச்சிருக்கலாமில்லே?"

"சும்மாயிருங்க... எங்க அம்மா இருந்தா என்ன செய்வாளோ அதைத்தான் செஞ்சேன்.

இதையும் படியுங்கள்:
குளிர்காலத்தில் சாப்பிடக் கூடாத 7 வகை உணவுகள்!
Tamil short stories

ம்மாவை சொர்க்கத்துக்கு அனுப்பிவிட்டு, வெறுமையான மனசுடன் சென்னைக்கு வந்து நாற்பது நாட்களுக்கு மேலாகியும் அவளுள் சின்னதாய் ஓர் உறுத்தல் இல்லாமல் இல்லை...

'அம்மா கையாலே கொடுக்கலையின்னாலும் அந்த வெள்ளிக் கிண்ணத்தை வாங்கிட்டு வந்திருக்கலாமோ... செத்துப் போனவகிட்ட எதுக்காக எனக்கு இத்தனை ஆங்காரம்...'

ஊஞ்சலில் படுத்தபடி நினைத்துப் பார்த்தவளுக்கு அம்மாவின் நெளிந்த சிரிப்பும், இடுங்கிய கண்களின் பாசப் பார்வையும் நெஞ்சு கனக்கச் செய்ய...

"அம்மா... "

முதல்முறையாய் கண்கள் கண்ணீரில் கரைய... அய்யோ... இதென்ன...

லலிதா வயிற்றைப் பிடித்துக்கொண்டு எழுந்து உட்காருகிறாள். பத்து வருடங்களுக்குப் பிறகு இப்பொழுதுதான் ஒரு புதிய உணர்வு! நாவில் பித்த நீர்த் துவர்ப்பு... நெஞ்சைக் கரித்துக்கொண்டு வந்தது...

லலிதாவின் கண்கள், அவளையுமறியாமல் காலண்டரைப் பார்க்கிறது...

ஆனி பத்து... ஆடி முப்பது... ஆவணி நாப்பத்தியாறு...

அம்மா அவளுக்குள் உட்கார்ந்து, தனது நடுங்கும் விரல்களைப் பிரித்து மடக்கி கணக்குப் போட்டு, புன்னகை ததும்ப அவளைப் பார்ப்பது போல...

“அம்மா, கடைசியில கடைசியில உன்னையே எனக்குத் தர்றதுதானா உன்னோட நோக்கம். இது புரியலையேம்மா எனக்கு... லலிதா சமர்த்து, சமர்த்துன்னு சொல்லுவியே.. நான் அசடுதாம்மா..."

லலிதா... தனக்குள் சின்ன வித்தாய் வளைய வரும் தாயுடன் பேசிக்கொண்டிருக்க... இப்போதும் அவள் பக்கத்தில் ரகு புன்னகையுடன்.

பின்குறிப்பு:-

கல்கி 21  ஜூலை  1996 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com