ஒரு படம் எடுத்துப் பெட்டிக்குள் பன்னிரண்டு ஆண்டுகள் தூங்கி இருக்கிறது. யாரும் எதிர்பாராமல் பொங்கலுக்கு வருகிறது எனப் பேச்சு வந்தது. இன்னதென்று தெரியாமல் ஒரு எதிர்பார்ப்பு கூடி வாய் வார்த்தையாக ஒரு நல்ல பேச்சு வளர்கிறது. அது கூடி வந்ததா. இந்த மத கஜ ராஜா ஜெயித்தானா என்று பார்ப்போம்.
விஷால், சந்தானம், சடகோபன் ரமேஷ், நிதின் சத்யா, அஞ்சலி, வரு சரத் குமார் (ஆமாம் அப்படித் தான் டைட்டிலில் போடுகிறார்கள்), சோனு சூத், என நட்சத்திரப் பட்டாளம். இதைத் தவிர மறைந்த இயக்குனர் நடிகர்கள் மணிவண்ணன், மனோபாலா, காமடியன் சிட்டி பாபு. இவர்கள் தவிர சரத் சக்சேனா, அஜய் ரத்னம், சுந்தர் சி படங்களில் நடிக்கும் அனைவரும் நடித்திருக்கும் படம் தான் மத கஜ ராஜா. விஷால் தான் அந்த எம்ஜிஆர்.
இயக்குனர் சுந்தர்ராஜன் காவல் துறை அதிகாரியாக வருகிறார். அவரது மகன் விஷால். ஒரு சிரிப்பு ரவுடியான அஞ்சலியின் தந்தையை காப்பாற்றும் வேலை விஷாலுக்கு வருகிறது. அதோடு காதலும். ஒரு சிறிய மனக்கசப்பில் அது முறிகிறது. மனமுடைந்து போயிருக்கும் விஷாலுக்கு அவரது சிறுவயது ஆசிரியர் மகளின் திருமண அழைப்பு வருகிறது. நண்பர்கள் அனைவரும் அங்கே சந்திக்கின்றனர். அப்போது தான் ரமேஷும், சத்யாவும் பெரிய பிரச்சினையில் மாட்டிக் கொண்டிருப்பது தெரிய வருகிறது. இதற்குக் காரணமான சோனு சூதை மோதி நண்பர்களைக் காக்க நண்பர்கள் மற்றும் வரு சரத்குமார் சகிதம் சென்னை வருகிறார் விஷால். சுபம்.
சுந்தர் சி படத்தில் கதையைத் தேடுவது திருப்பதியில் மொட்டையைத் தேடுவதற்கு சமம். அவரே ஒரு கதை சொல்லுவார். மாற்றுவார். வசதியாகக் காட்சியமைப்புகள்மூலம் அதைச் சரிக்கட்டியும் விடுவார். இதிலும் அது தான் நடந்திருக்கிறது. ஒரு நகைச்சுவைக் காட்சி. ஒரு பாடல். ஒரு சண்டை. ஒரு கவர்ச்சி நடனம். அதாவது டூயட். இது படம் முழுதும் இதே வரிசையில் தொடர்ந்து வருகிறது.
சந்தானம் காமடியனாக நடிக்கும்பொழுது எடுக்கப்பட்ட படம் என்பதால் மனிதர் பின்னிப் பெடலெடுக்கிறார். எதிரில் நிற்பவர்கள்பற்றிக் கவலையே இல்லாமல் கவுண்டர் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். இடைவேளை வரை படம் எப்படிப் போகிறது எண்பது பற்றியே யோசிக்க முடியாமல் செய்வதில் இவரும் சுந்தர் சி யும் இணைந்து அடித்து விளையாடுகிறார்கள். அது எப்படி சுந்தர் சி படங்களில் மட்டும் நாயகியர் கவர்ச்சிக்கு தயக்கமே இல்லாமல் ஒத்துக் கொள்கிறார்கள் என்பது பரம ரகசியம். இளைஞர்கள் மட்டுமன்றி பெரியவர்களும் ரசித்துக் கைதட்டுகிறார்கள்.
காமெடிக்கு எப்படி சந்தானமோ அப்படித் தான் இசைக்கு விஜய் ஆண்டனியும். மனிதர் இசையமைப்பாளராக மட்டும் இருந்திருக்கக் கூடாதா நடித்துக் கஷ்டப்படுத்த, கஷ்டப்பட வேண்டுமா எனக் கேட்க வைக்கிறார். சிக்கு புக்கு புக்கு ரயிலுவண்டி, மை டியர் லவ்வரு, தும்பாக்கி தும்பா எனப் பாடல்கள் திரையரங்கில் விசில் பறக்க வைக்கின்றன. ஒரு முன்னணி நடிகரும், நடிகையும் கேமியோ ரோலில் வந்து அட என்று சொல்ல வைக்கின்றனர். மறைந்த மனோபாலா பிணமாக நடிக்கக்கூடிய ஒரு காட்சிக் கோர்வை வருகிறது. பதினைந்து நிமிடங்கள். அதில் அவரது நடிப்பும் சிரிப்பும் ஒப்பனையும் ஒரு நல்ல நடிகரை இழந்து விட்டோம் என்று நினைக்க வைக்கிறது. தியேட்டர் முழுதும் ஆரவாரம் அமர்க்களப்படுகிறது.
ஒரு நல்ல படம், ரசிகர்களை ஈர்க்கும் படம் இப்படித்தான் எடுக்க வேண்டும் என்ற பார்முலா நன்கு அறிந்தவர் சுந்தர் சி. இல்லையென்றால் ஒரே கான்செப்ட்டை வைத்துக் கொண்டு இவ்வளவு ஆண்டுகளாகக் காலம் தள்ள முடியுமா? அவரது கலகலப்பு, அரண்மனை படங்களில் இருக்கும் அதே பாணி தான். பெருசா நானும் அலட்டிக்க மாட்டேன். நீங்களும் ரொம்ப அலட்டிக்காதீங்க. வாங்க. பாருங்க. சிரிச்சுட்டு சந்தோஷமா வெளியே போங்க. இது தான் எனது வெற்றிக்கான சூத்திரம் என்கிறார் சுந்தர் சி. அது உண்மை என்று மீண்டும் நிருபித்து பொங்கல் வின்னர் என்று அடித்துச் சொல்லக்கூடிய படமாக வந்திருக்கிறது மத கஜ ராஜா.