சிறுகதை: ஒரு நீல நிற சாப்பாட்டு பை!

ஒரு சிறுவனின் சாப்பாட்டுப் பைக்காக ஒட்டுமொத்த மினி பஸ்ஸும் இணைந்த நெகிழ்ச்சி அனுபவம்.
சிறுகதை
சிறுகதைGemini image
வை. கோபி சுவாமிநாதன்

புதுச்சேரியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு தலைமை தகவல் தொழில்நுட்ப அதிகாரி. முப்பது ஆண்டுகளுக்கும் மேலான அரசு சேவைக்குப் பிறகு, தற்போது எழுத்து, தொழில்நுட்பம், சமூகப் பார்வை ஆகியவற்றில் ஆர்வத்துடன் இயங்கி வருகிறார். தொழில்நுட்பம், சமூக மாற்றங்கள், புதிய இயல்பு நிலை (new normal), மனித உறவுகளின் உணர்வுகள் போன்ற பல தலைப்புகளில் கதை, கட்டுரைகள் எழுத ஆர்வமாக உள்ள கோபி சுவாமிநாதன், வாசகர்களுடன் நெருக்கமாகப் பேசும் எளிய நடையில் எழுத எழுத வல்லவர்.

Updated on: 
Kalki Strip
Kalki Strip

மடுகரையிலிருந்து பாண்டி வருவது வரைபடத்தில் பார்த்தால் இருபத்தைந்து கிலோ மீட்டர் தான். ஆனால், மதியம் மூன்று மணிக்கு மினி பஸ்ஸில் ஏறினால், அது வெறும் தூரம் இல்லை. பல மனிதர்கள் சேர்ந்த ஒரு சிறிய உலகம் என்றே சொல்வேன்.

அன்று மடுகரையில் நண்பனைப் பார்த்துவிட்டு, பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தேன். முன்பெல்லாம் பைக்கோ, காரோ எடுத்திருப்பேன். ஆனால், பைக்கில் போனால் முதுகு முதலில் எதிர்ப்பு தெரிவிக்கிறது. காரில் போனால் போக்குவரத்து நெரிசல் முதலில் வரவேற்கிறது.

மினி பஸ் ஏற்கெனவே பாதி நிரம்பியிருந்தது. முன்புறத்தில் கண்டக்டர் ஒரு கையில் பல நிறங்களின் டிக்கெட்டுகள். இன்னொரு கையில் சில்லறை, வாயில் ஆல் இண்டியா ரேடியோ அறிவிப்பாளர் மாதிரி குரல்.

“பாண்டி… பாண்டி… கரிக்கலாம்பாக்கம், தவளக்குப்பம், அரியாங்குப்பம் ...பாண்டி!”

நான் ஏறியதும் அவர் என்னைப் பார்த்தார்.

“எங்கே சார்?”

“பாண்டி.”

பஸ் நகர்ந்தது. மடுகரையின் மதிய வெயில் ஜன்னல் வழியாக உள்ளே வந்து ஒவ்வொருவரையும் தனித்தனியாக விசாரித்தது. என் பக்கத்தில் ஒரு பாட்டி உட்கார்ந்திருந்தார். கையில் பழைய துணிப் பை. முகத்தில் சோர்வு இருந்தாலும், கண்களில் ஒரு அமைதி இருந்தது. அந்த அமைதி மட்டும் பஸ்ஸின் சத்தத்தோடு சேராமல் தனியாகப் பயணம் செய்தது.

கரியமாணிக்கம் அருகே ஒரு அம்மா ஏறினார். அவருடன் இரண்டு பைகள். ஒன்றில் காய்கறி. இன்னொன்றில் காய்கறிக்கு உரிய மரியாதை.

“கொஞ்சம் உள்ளே போங்கம்மா,” என்றார் கண்டக்டர்.

“நான் போயிடலாம். இந்த முருங்கைக்காயை எங்க போடுறது?” என்றார் அவர்.

அந்த முருங்கைக்காய் கட்டு, இரண்டு பேருக்கு நடுவே தனக்கான இடத்தைத் தானே கண்டுபிடித்துக்கொண்டு நிமிர்ந்து நின்றது.

நல்லாத்தூர் வந்தபோது ஒரு பள்ளிப் பையன் ஏறினான். வயது பன்னிரண்டு இருக்கும். அதிகபட்சம் பதின்மூன்று. முதுகில் இருந்த புத்தகப்பை அவனைவிட இரண்டு வயது பெரியதாகத் தோன்றியது. கையில் ஜியோமென்ட்ரி பாக்ஸ். முகத்தில் பள்ளி முடிந்த மகிழ்ச்சி இல்லை; ட்யூஷன் ஆரம்பிக்கப் போகிற மிதமான கவலை இருந்தது.

“எங்கேடா?” கண்டக்டர் கேட்டார்.

“முருங்கம்பாக்கம்.”

“ட்யூஷனா?”

பையன் தலையசைத்தான்.

“உனக்கு பாதி டிக்கெட்.”

அவனுக்கு பாதி டிக்கெட். ஆனால் அவன் புத்தகப்பைக்கு முழு டிக்கெட் வாங்கினால்கூட யாரும் ஆச்சரியப்பட மாட்டார்கள்.

கரிக்கலாம்பாக்கம் வரை வழியில் வயல்கள், புதிய வீடுகள், பழைய காலத்துச் சுற்றுச்சுவர்கள், “plot for sale” பலகைகள், கோயில் வளைவுகள், டீ கடைகள், ஆடுகள் — எல்லாம் தங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தன. பஸ்ஸின் உள்ளே மட்டும் எல்லாரும் மற்றவர்களின் வேலையையும் கவனித்துக்கொண்டிருந்தார்கள்.

ஒரு இளைஞன் போனில் பேசிக்கொண்டிருந்தான்.

“ஹலோ... ஹலோ... சிக்னல் போயிடுச்சு… நான் பஸ்லதான் இருக்கேன். ஆபீஸ் போன்கால்டா...”

அவனுடைய போன் மட்டும் smart. நெட்வொர்க் மிகவும் நேர்மையானது; அது வர வேண்டிய நேரத்தில் வரவில்லை.

கோர்க்காடு அருகே ஒரு பெரியவர் ஏறினார். அவர் உட்காருவதற்குள் நாட்டின் நிலைமையைப் பற்றி கவலைப்பட்டுவிட்டார்.

“ரோடு பாத்தீங்களா சார்? போனுக்குள்ள ரோடு போட்ட மாதிரி இருக்கு.”

யாரும் பதில் சொல்லவில்லை. ஆனால் அவர் தனியாகப் பேசத் தயார். சிலர் ரேடியோ வாங்குவார்கள்; சிலர் ரேடியோவாகவே பிறப்பார்கள்.

அபிஷேகப்பாக்கம் கடக்கும்போது பஸ்ஸில் நெரிசல் அதிகமானது. ஒரு கல்லூரி மாணவி எழுந்து, பாட்டிக்கு இடம் கொடுக்க முயன்றாள். பாட்டி சிரித்தார்.

“நான் உட்கார்ந்துதான் இருக்கேன்மா. நீயே உட்கார்.”

அந்த ஒரு வாக்கியத்தில் வயதும், அன்பும், தன்னம்பிக்கையும் மூன்றும் இருந்தன.

அப்போதுதான் பள்ளிப் பையன் திடீரென்று தன் அருகிலிருந்த இடத்தைப் பார்த்தான். முதலில் இடது பக்கம். பிறகு வலது பக்கம். பிறகு இருக்கையின் கீழ். அடுத்த நொடி அவன் முகத்தில் இருந்த ட்யூஷன் கவலை போய், வேறு ஒரு பயம் வந்தது.

பாட்டி கவனித்தார்.

“என்னடா? ஏதாவது விழுந்துதா?”

பையன் பதில் சொல்லவில்லை. கண்கள் மட்டும் கலங்க ஆரம்பித்தன.

“சொல்லுபா. என்ன ஆச்சு?”

அவன் உதட்டை கடித்துக்கொண்டு, “என் சாப்பாட்டு பை… பஸ் ஸ்டாப்பில விட்டுட்டேன்போல,” என்றான்.

“எந்த ஸ்டாப்?” கண்டக்டர் உடனே கேட்டார். கண்டக்டர்களுக்கு சத்தம் மட்டும் இல்லை; அந்த சத்தத்துக்குள் ஒரு கவனமும் இருக்கும்.

“நல்லாத்தூர்… பெஞ்ச் மேல வைத்திருந்தேன்… எடுத்துக்கல.”

அவன் அமைதியாக அழ ஆரம்பித்தான். சத்தமாக அழும் குழந்தைகளைச் சமாதானப்படுத்தலாம். அமைதியாக அழும் குழந்தைகள்தான் பெரியவர்களை கொஞ்சம் வெட்கப்பட வைக்கும்.

“பைல என்ன இருக்கு?” காய்கறி அம்மா கேட்டார்.

“சாப்பாடு… தண்ணீர் பாட்டீல்… அம்மா பழம் வைத்திருந்தாங்க…”

“நல்லாத்தூர் நிறுத்தத்துல யாராவது தெரிஞ்சவங்க இருக்காங்களா?” கண்டக்டர் கேட்டார்.

அப்போது சிக்னல் தேடிக்கொண்டிருந்த இளைஞன் திடீரென்று சமூகப் பொறுப்புடன் எழுந்தான்.

“சார், நல்லாத்தூர் டீகடையில என் நண்பனோட சொந்தக்காரரு இருக்காரு. அவருக்குப் போன் பண்ணுறேன்”

இளைஞன் போன் போட்டான்.

“டா, நல்லாத்தூர் பஸ் நிறுத்தம் பக்கத்துல நீல நிற சாப்பாட்டு பை இருக்கா பாரு… ஸ்கூல் பையன் விட்டுட்டான்… ஆமா டா, முக்கியம்… அதுல சப்பாத்தி, பழம் இருக்கு.”

அந்த கடைசி வரி அவசியமா என்று தெரியவில்லை. ஆனால் மறுபுறம் இருந்தவரும் விஷயத்தின் தீவிரத்தைப் புரிந்திருப்பார்.

பஸ் தவளக்குப்பம் நோக்கி நகர்ந்தது. பையன் இன்னும் அழுகையை அடக்கிக்கொண்டிருந்தான். பாட்டி அவன் தோளைத் தொட்டார்.

“கிடைக்கும். நீ கவலைப்படாதே.”

“அம்மா திட்டுவாங்க,” என்றான்.

“அம்மாக்கள் திட்டுறது பாதி. கவலைப்படுறது மீதி,” என்றார் பாட்டி.

அந்த வரியை யாரும் எதிர்க்கவில்லை.

சிறிது நேரத்தில் போன் வந்தது.

“சாப்பாட்டு பை கிடைச்சிடுச்சாம்!” இளைஞன் அறிவித்தான்.

பஸ் முழுவதும் ஒரு நிமிடம் திருவிழா மாதிரி ஆனது.

“அப்போ எப்படி அனுப்புறது?” கண்டக்டர் கேட்டார்.

“டவுன்சைடு வர்ற பைக் ஒருத்தன் இருக்கான். அவன்கிட்ட கொடுத்து அனுப்புறாங்க. முருங்கம்பாக்கம் முன்னாடி கேச் பண்ணலாம் சொல்றாங்க.”

கண்டக்டர், டிரைவரிடம் “அண்ணே, கொஞ்சம் ஸ்லோ பண்ணிக்கோங்க. ஒரு national importance சாப்பாட்டு பை வருது,” என்றார்.

டிரைவர் முதலில் கவனிக்காத மாதிரி இருந்தார். ஆனால் பின்பார்வை கண்ணாடியில் சிரிப்பு தெரிந்தது.

சுண்ணாம்பாறு கடக்கும்போது பஸ்ஸில் ஒரு மாறுபட்ட அமைதி வந்தது. ஜன்னல் வழியாக காற்று உள்ளே வந்தது. அந்தக் காற்று பையனின் கண்ணீரை மெதுவாக உலர்த்தியது. பாலம், நீர், படகு, வெயிலின் சாய்வு — எல்லாம் சேர்ந்து அந்த மினி பஸ்ஸை இரண்டு நிமிடம் சினிமா காட்சியாக மாற்றின.

அரியாங்குப்பம் வந்ததும் மீண்டும் டிராஃபிக்...கடைகள் — எல்லாம் நகரத்தின் முன்னோட்டம் காட்டின. ஆனாலும் பஸ்ஸில் இருந்தவர்களின் கவனம் ஒரே விஷயத்தில்தான் — நீல நிற சாப்பாட்டு பை.

“பைக் வந்துடுச்சா?” காய்கறி அம்மா கேட்டார்.

“இப்போ வருமாம்,” என்றார் இளைஞன்.

அரசியல் பெரியவர்கூட நாட்டின் நிலைமையைத் தற்காலிகமாக ஒதுக்கிவிட்டு, சாப்பாட்டு பை நிலைமையைப் பற்றியே கவலைப்பட்டார்.

முருங்கம்பாக்கம் நெருங்கும் முன் பஸ் சற்று மெதுவானது. எதிரே ஒரு பழைய பைக்கில் ஒருவர் வந்தார். கையில் ஒரு நீல நிற சாப்பாட்டு பை. அந்தப் பேக் அப்போது பேகாக இல்லை; வேகமாக வந்ததில் பேக் கலர் மாறியிருந்தது.

“கண்டக்டர் அண்ணே!” என்று அவர் கத்தினார்.

சிறுகதை
சிறுகதைGemini image

பஸ் நின்றது. ஜன்னல்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் திரும்பின. அந்த நொடியில் அந்த மினி பஸ்ஸில் இருந்த எல்லோரும் அந்தப் பையனின் உறவினர்களாகிவிட்டார்கள்.

கண்டக்டர் இறங்கி நீல நிற பேக்கை வாங்கினார்.

“டேய், உன் பேக்தானா பாரு.”

பையன் எழுந்து வந்தான். இரண்டு கைகளாலும் பேக்கை வாங்கினான். திறந்தான். எவர்சில்வர் டிபன் பாக்ஸ் இருந்தது. வாட்டர் பாட்டில் இருந்தது. பக்கத்தில் சிறிய வாழைப்பழமும் இருந்தது.

அவன் முகத்தில் மெதுவாக ஒரு சிரிப்பு வந்தது. அது பள்ளி மாணவனின் சிரிப்பு இல்லை; பெரிய ஆபத்திலிருந்து மீண்ட குடும்பத் தலைவனின் சிரிப்பு.

“நன்றி,” என்றான்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: கண்ணன் - முதிர் கண்ணன்!
சிறுகதை

யாரிடம் சொன்னான் என்று தெளிவாகத் தெரியவில்லை. கண்டக்டரிடமா? பாட்டியிடமா? போன் செய்த இளைஞனிடமா? பைக்கில் வந்த ஊர்க்காரரிடமா? இல்லையென்றால் பஸ் முழுவதிடமா?

பாட்டி அவன் தலையைத் தடவினார்.

“சாப்பாட்டு பை கிடைச்சுடுச்சு. இப்ப சாப்பிடும்போது சிரிச்சுக்கிட்டு சாப்பிடு. இல்லேன்னா சாப்பாட்டுக்கே மனசு வராது,” என்றார்.

பஸ் முழுவதும் சிரித்தது.

கண்டக்டர் பைக்கில் வந்தவரிடம், “ரொம்ப தேங்க்ஸ்பா...” என்றார்.

அவர் சுலபமாகச் சொன்னார்:

“பரவாயில்லை. பையன் சாப்பாட்டு பைன்னா நம்ம ஊர் சாப்பாட்டுபைதான்.”

அந்த ஒரு வாக்கியத்தில் ஊர் இருந்தது. வழி இருந்தது. மனிதர்கள் இன்னும் முழுக்க முழுக்க கெட்டுவிடவில்லை என்ற நம்பிக்கையும் இருந்தது.

பாண்டி பஸ் ஸ்டாண்ட் வந்தது. எல்லோரும் தங்கள் தங்கள் அவசரத்துக்குள் திரும்பத் தயாரானார்கள். காய்கறி அம்மா முருங்கைக்காயை மீண்டும் பாதுகாப்பாக எடுத்தார். அரசியல் பெரியவர் இறங்கும்போது, “இந்த மாதிரி ஒற்றுமை நாட்டுக்குத் தேவை,” என்று தேசிய முடிவொன்றை அறிவித்தார். போன் இளைஞன் மீண்டும் அலுவலுகத் தொடர்புக்கு திரும்பினான். கண்டக்டர் சில்லறையைச் சிணுங்கவிட்டார்.

இதையும் படியுங்கள்:
தொடர்கதை: ஜாலியா ஒரு கொலை - அத்தியாயம் 1
சிறுகதை

நான் இறங்கும்போது என் டிக்கெட்டைப் பார்த்தேன். அது ஒரு சின்னக் காகிதம்தான். மடுகரை முதல் பாண்டி வரை அச்சடிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அந்த நாளில் அந்த டிக்கெட்டில் மினி பஸ் செல்லும் வழி மட்டும் இல்லை. நல்லாத்தூர் பெஞ்ச்சில் மறந்துபோன ஒரு நீல நிற சாப்பாட்டு பை இருந்தது. அமைதியாக அழுத ஒரு பையன் இருந்தான். கவனமாகக் கேட்ட ஒரு பாட்டி இருந்தார். சத்தமாக இருந்தாலும் மனசுள்ள கண்டக்டர் இருந்தார். சிக்னல் இல்லாத போனி்ல் மனிதத் தொடர்பை கண்டுபிடித்த இளைஞன் இருந்தான். பைக்கில் வந்து பேக் கொடுத்த தெரியாத ஊர்க்காரன் இருந்தான்.

காரில் வந்திருந்தால், நான் பாண்டி மட்டும் வந்திருப்பேன்.

அன்று மினி பஸ்ஸில் வந்ததால், மனிதர்களையும் சேர்த்து வீட்டுக்கு கொண்டு வந்தேன்.